அப்பொல்லியோனோடு போர்

Previous......கிறிஸ்தியான் ஆயுதம் தரித்தல்

அப்பொல்லியோனோடு போர் 

பள்ளத்தாக்கில் செல்லும்போது அப்பொல்லியோன் என்ற கொடிய பிசாசானவன் அவனுக்கு எதிரே வந்தான். திடுக்கிட்டு நின்ற கிறிஸ்தியான் முன்னே போவதா பின்வாங்குவதா என்று ஒருகணம் தயங்கினான். பின்பு விசுவாசத்தோடு கேடயத்தைப் பிடித்தவனாய், கையில் பட்டயத்தை எடுத்துக்கொண்டு முன்னே சென்றான்.அப்பொல்லியோன் மிகவும் கொடுரமான தோற்றமுடையவன்! அவன் உடலெங்கும் மீனைப்போல செதில்கள் இருந்தன! கரடியைப் போன்ற பாதங்களையும், பறவையைப் போன்ற இறக்கைகளையும் கொண்டிருந்தான். சிங்கத்தின் வாயைப் போன்ற அவன் வாயிலிருந்து நெருப்பும், புகையும் புறப்பட்டு வந்தது! அழிநகரத்தின் அரசன் அவன்! தன்னுடைய நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் கிறிஸ்தியானை எப்படியாவது கொன்று போட வேண்டும் என்பதே அவன் எண்ணம்.நில்லப்பா நில். நீ என்னுடைய நகரத்தைச் சேர்ந்தவன். எனக்கு ஊழியம் செய்ய வேண்டியவன். என்னை விட்டுவிட்டு எங்கே போகிறாய்? என்று கோபத்துடன் கேட்டான் அப்பொல்லியோன்.நான் உமது நகரத்தில் பிறந்தவன் என்பது உண்மை தான். ஆனால் உமக்கு ஊழியம் செய்தால் எனக்கு என்ன கூலி கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன். பாவத்தின் சம்பளம் மரணம் அல்லவா? அதனால்தான் நான் இப்போது இராஜாதி ராஜாவின் ஊழியக்காரனாகிவிட்டேன். அவருடைய சம்பளம், அவர் உறவு. அனைத்தும் உன்னைவிட மேலானவை. என்னைத் தடுக்காதே. நான் அவரையே பின்பற்றுவேன் என்று திடமாகக் கூறினான் கிறிஸ்தியான்.

இதைக் கேட்ட அப்பொல்லியோன் கடும் கோபம் கொண்டான். ஓர் ஈட்டியை எடுத்து கிறிஸ்தியானின் மார்புக்கு நேராக வீசியெறிந்தான்! ஆனால் அவனோ தனது கேடகத்தால் அதைச் சுலபமாகத் தடுத்து வீழ்த்திவிட்டான்! ஆவியின் பட்டயத்தினால் அப்பொல்லியோனைத் தாக்க துவங்கினான் கிறிஸ்தியான்.

கிறிஸ்தியானை வெட்டி வீழ்த்தும்படி அருகே ஓடி வந்தான் அப்பொல்லியோன்! தனது பலத்தையெல்யாம் திரட்டி எழுந்த கிறிஸ்தியான் வாளை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டான்.

என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோசப்படாதே, நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன் (மீகா7:8) என்று ஆவேசமாகக் கூறியபடி பாய்ந்த கிறிஸ்தியான் அப்பொல்லியோனின் மார்பில் தனது வாளைச் சொருகினான்! படுகாயப்பட்ட அவன் புறமுதுகு காட்டியபடி ஓடிவிட்டான்! கிறிஸ்தியான் அதன்பிறகு அவனைப் பார்க்கவேயில்லை!

அப்பொல்லியோனிடமிருந்து தன்னைக் காப்பாற்றியதற்க்காக ஆண்டவருக்கு நன்றிகூறினான் கிறிஸ்தியான். அப்போது ஒரு கை தோன்றி, ஜீவ மரத்தின் இலைகளை அவனுக்கு அளித்தது! அந்த இலைகளைத் தனது காயங்களின்மீது வைத்தான் கிறிஸ்தியான். உடன்தானே அவர் பூரண குணமடைந்துவிட்டான்!

தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ரொட்டியைப் பிட்டுச் சாப்பிட்டு திராட்சை இரசத்தை அருந்தினான். அதன் பிறகு புத்துணர்வு கொண்டவனாக, பட்டயத்தைக் கையிலேந்தியபடி தனது பயணத்தைத் தொடர்ந்தான் கிறிஸ்தியான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

அப்பொல்லியோன் ஆகிய சாத்தான் ஏசுவை இரட்சகராக ஏற்று கொண்ட விசுவாசிகளை நேரடியாகத் தாக்குகிறான். நாம் அவனை விசுவாசமாகிய கேடகத்தை எடுத்து நம்மைக் காத்துக்கொண்டு, வேதமாகிய பட்டயத்தை எடுத்து அவனோடு யுத்தம் செய்யும்போது அவன் தோற்று ஓடிவிடுகிறான். அவன், நாம் எப்சிபா பியூலா தேசத்தை (மோட்சப்பட்டணத்தின் முன்னேயுள்ள தேசம், அதாவது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமி (Promised Land), அடையும் வரை ஓய்வு எடுக்கவே மாட்டான். பின்பு மூன்று அரக்கர்கள் மூலமாக நம்மை மறைமுகமாக துன்புறுத்தி, காயப்படுத்தி, ஏமாற்றி நம்மை மோட்ச பாதையிலிருந்து வழிவிலக எல்லா முயற்சிகளையும் செய்கிறான்.

தனக்கு கீழே பணிபுரியும் ஆயிரக்கணக்கான பொல்லாத வானமண்டல ஆவிகளை தொடர்ந்து அனுப்பிக்கொண்டேயிருப்பான். நீங்கள் அவைகளை கொடிய மிருகங்களாகவும், விகாரமான ஜந்துக்களாகவும் காண்பீர்கள்.

எப்சிபா பியூலா தேசத்தில் சாத்தானுக்கோ அவனின் கீழேயுள்ள சேனைக்கோ (beasts) எந்தவிதமான வல்லமையோ கிடையாது. அவனது ஆவிக்குரிய தலையானது உங்களது கால்களின் அடியில் இயேசுவின் மூலம் நசுக்கப்பட்டிருக்கும். இந்த சத்தியத்தை மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும். இதைப்பற்றி பின்னால் விளக்கி எழுதியிருக்கிறேன்.

நாம் எப்போதெல்லாம் சாத்தானால் தாக்கப்பட்டு, காயமடைகிறோமோ உடனே கல்வாரியில் போய் அங்கேயுள்ள ஜீவ மரத்தின் இலைகளை உண்ணவேண்டும். சோதனையில் விழுந்துபோனால் உடனே சிலுவையண்டை போய், மனம் திரும்பி, இயேசுவின் இரத்தத்தின் மூலம் சுத்திகரிக்கபடவேண்டும். மோட்சப்பயணத்தின் கடைசிவரை இந்த ஜீவ மரத்தின் இலைகளை தைரியமாக உபயோகம் செய்யலாம். வியாதி வந்தாலும் இந்த ஜீவ மரத்தின் இலைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஜீவ மரம் எப்போதும் வாடாமலிருக்கிறது.


Next....... மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்