காயுவின் வீட்டின் (House of Gaius) சிறப்புகள்

Home

முந்திய பகுதி...பயந்தான்கொள்ளி மனிதன்

காயுவின் வீட்டின் (House of Gaius) சிறப்புகள்

களைத்து போன கிறிஸ்டியானா மற்ற பயணிகளோடு எங்கேயாவது சத்திரம் இருக்கிறதா என் கேட்க, நேர்மை அவர்களை கூப்பிட்டுக்கொண்டு காயுவு (Gaius) என்றவரின் வீட்டை அடைகிறார். இவர் ஒரு பழைய, ஆண்டவரின் சீடர் என்றும் விருந்தோம்புதலில் நல்ல பெயர் பெற்ற பரிசுத்தவான் என்றும் நேர்மை கூறுகிறார்.

மோட்சப்பயணிகளுக்கென்று தன் வீடு எப்போதும் திறந்திருக்கிறது என்று சத்திரக்காரர் காயுவு கூறுகிறார். பின்பு அவர் ஒரு அறையை கிறிஸ்டியானா, அவளது பிள்ளைகளுக்கும் மேர்சிக்கும், ஒரு அறையை கிரேட் ஹார்ட்டிற்கும், வேறு ஒரு அறை நேர்மை என்ற வயதான பயணிக்கும் ஒதுக்கிக் கொடுக்கிறார். கிரேட் ஹார்ட், பயணிகள் சோர்ந்துபோய் பசியாக இருப்பதால் ராபோஜனம் தரும்படி வேண்டுகிறார். இந்த நேரத்தில் வெளியில் போய் உணவு அருந்துவது கடினம் என்றும், தன் வீட்டில் உணவு உண்டுபண்ண ஏற்பாடு செய்கிறேன் என்றும் காயுவு கூறுகிறார். பின்பு, தன் வீட்டிலுள்ள (Taste-that - which-is-good) சுவையாக உணவு அருந்துதல் என்ற சமையல்காரரை, உணவை தயாரிக்கும்படி கட்டளையிடுகிறார்.

உணவு தயாரிப்பதில் சமயம் எடுப்பதால், நாம் சில உரையாடலில் ஈடுபடுவோம் என்கிறார், காயுவு. கிறிஸ்டியானை பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும் கூறி, அந்தியோகியா பட்டணத்திலுள்ள கிறிஸ்டியானின் முன்னோர்களை குறித்துள்ள சரித்திரத்தை விவரிக்கிறார். ஸ்தோவான் கல்லெறியப்பட்டு கொல்லப்பட்டார் என்றும், யாக்கோபு வாளால் வெட்டிக்கொள்ளப்பட்டார் என்றும், பேதுரு பவுல் போன்ற முன்னோர்களும் இதே போல ரத்த சாட்சிகளாக மரித்தார்கள் என்றும், இக்னேஷியஸ் (Ignatius) என்பவர் சிங்கங்களுக்கு இறையானதையும், பொலிகார்ப் (Polycarp) தீக்கிரையானதையும், இதுபோல் அநேகர் சித்திரவதை செய்யப்பட்டு மரித்துப்போனதையும் காயுவு விபரமாக கூறுகிறார்.

கிறிஸ்டியானின் பிள்ளைகளுக்கு மோட்சப்பயணிகளாக மாறியிருப்பதை அறிந்து காயுவு (Gaius) மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். கிரிஸ்டியானாவின் மகன்கள் தங்களுக்கு மனைவிகளை தெரிந்துகொண்டு ஒரு தெய்வீக தலைமுறையை எழுப்பவேண்டும் என்று கூறி, கிரிஸ்டியானாவின் மூத்த மகனாகிய மாத்தியூவிற்கு மேர்சியை மணம் முடித்து கொடுக்கலாம் என்றும் கூறுகிறார்.

பின்பு பெண்கள் எவ்விதம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று விபரமாக, ஏதேன் தோட்டத்தில் மனிதகுலம் விழுவதற்கு காரணமாக இருந்தாலும், நிந்தை நீங்க உலக இரட்சகர் கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்றும், ஒரு பெண் தான் ஆண்டவரின் பாதத்தை கண்ணீரால் கழுவினாள் என்றும், ஒரு பெண் தான் ஆண்டவரின் சரீரத்திற்கு சுகந்த வாசனை திரவியங்களினால் அபிஷேகம் செய்தாள் என்றும் பெண்கள் தான் உயிர்த்தெழுந்த ஆண்டவரை முதலாம் கண்டு, சீடர்களுக்கு அறிவித்தனர் என்றும் கூறுகிறார். கடைசியாக பெண்கள் விசேஷமாக கிருபை பெற்றவர்கள் என்றும் ஆண்களோடு நித்ய வாழ்வில் பங்கு உள்ளவர்கள் என்றும் கூறிமுடித்தார்.

காயுவின் வீட்டின் உணவு பதார்த்தங்கள்

இரவு உணவு தயார் ஆனதும், சமையல்காரர் அந்த உணவை ஒரு மேசையின்மீது துணி விரித்து, உப்பும் வெண்ணெயும் கூட வைத்து, தட்டுக்களோடு வைக்கும்படி ஏற்பாடு செய்கிறார். "இந்த விரிக்கப்பட்ட துணியையும், இதற்காக செய்யப்படும் ஒவ்வொரு முன்னேற்பாடுகளைப் பார்க்கும்போது எனக்கு உணவின் மீது அதிக பசியை உண்டுபண்ணுகிறது", என்று மாத்தியூ கூறினான். காயுவு பதிலாக, "நாம் கற்றுக்கொண்ட எல்லா வேத தத்துவங்களும், மகத்தான ராஜாவின் ராஜ்யத்தில் நாம் அருந்தும் அந்த ராபோஜனத்திற்கு, நம்மில் ஒரு பெருவிருப்பதை உண்டாக்கிறது. இங்கேயுள்ள எல்லா ஆவிக்குரிய புத்தகங்களும் ஆண்டவரால் கொடுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் எல்லாம், தட்டுக்களில் பரிமாரப்படும்;உப்பும் வெண்ணெயும் சேர்த்து நமக்கு கொடுக்கப்படும் உணவு; இனி வரப்போகும் தேவனின் ராஜ்யத்தில் நமக்கென்று ஆயத்தம் பண்ணப்படும் விருந்தை ஞாபகப்படுத்தும்படி அமைந்திருக்கிறது," என்று கூறினார்.

இந்த வீட்டில் கொடுக்கும் முதல் உணவானது, லேவியருக்காக,சுத்தமான ஸ்தலத்திலே கொடுக்கப்படும் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையும் ஆகிறது (லேவியராகமம் 10:14, 15).

இரத்தம் போல சிகப்பான திராட்சை பழரச புட்டி முதலாவது வைக்கப்படுகிறது. "இதை இலவசமாக பருகுங்கள். இதுதான் மெய்யான, இறைவனின் இருதயத்தையும் மனிதனின் இருதயத்தையும் மகிழ்விக்கும் திராட்ச ரசம்," என்றார் காயுவு. பின்பு எல்லோரும் அருந்தி மகிழ்ந்தனர்.

அடுத்ததாவது, காய்த்து கட்டியான பால் (Crumbed Milk) ஒரு தட்டில் வைக்கப்படுகிறது. இதை வளரும் பிள்ளைகள் அருந்தட்டும் என சொல்கிறார்.

அடுத்து வருவது, வெண்ணையும் தேனும் நிறைந்த ஒரு தட்டு. "இதை இலவசமாக அருந்துங்கள். இதை அருந்தினால் உங்களது பகுத்தறியும் திறனையும், அறிந்துகொள்ளும் ஞானத்தையும் பலப்படுத்தும். இந்த உணவை தான் கிறிஸ்து குழந்தையாய் இருக்கும்போது அருந்தி, தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் சாப்பிட்டார்," என்று மேலும் கூறினார்.

பின்பு சீமையிலந்தப்பழங்கள் (Apples) ஒரு தட்டில் வைக்கப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிட்டுத்தான் நமது மூதாய தாய் சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள் என்று மாத்தியூ கூற, காயுவு "பழத்தினால் அல்ல. பாவத்தினால் தான் நமது ஆத்துமா தீட்டுப்படுகிறது. தடை செய்யப்பட்ட பழத்தை உண்ணும்போதுதான் நமது இரத்தம் கறைபடுகிறது. "நேசத்தால் சோகமடைந்த. கிறிஸ்துவின் மணவாட்டியான சபையே!, திராட்சரசத்தை குடித்து உன்னை தேற்றிக்கொள், கிச்சிலிப்பழங்களால் உன்னை ஆற்றிக்கொள்," என்ற வசனத்தை உன்னத பாட்டின் புத்தகத்திலிருந்து எடுத்துரைத்தார்.

மாத்தியூ, தான் இந்த தடைசெய்யப்பட்ட பழத்தை சந்துருவின் தோட்டத்திலிருந்து சாப்பிட்டு மன உளைச்சல் அடைந்ததாக, சொன்னான். "தடை செய்யப்பட்ட பழம் தான் உன்னை நோயுக்குள்ளாகிறது. ஆனால் ஆண்டவர் அனுமதித்த பழத்தை உண்ணும்போது அது நமக்கு பலத்தைத் தருகிறது", என்று காயுவு பதிலளித்தார்.

அவர்கள் உரையாடல் செய்து கொண்டிருக்கும்போது கொட்டைகள் நிரம்பிய ஒரு தட்டு வைக்கப்படுகிறது. "கொட்டைகள் சிறுவர்களின் இளம் பற்களைப் பாதிக்கிறது. தோடுகள் தானியங்களை பாதுகாத்துக்கொள்கிறது. தோடுகளை பற்களால் கடிக்காமல், உடைத்துத்தான் உள்ளிலிருக்கும் பருப்புகளை உண்ணவேண்டும்" என்று காயுவு மேலும் கூறினார்.

பின்பு பல மணி நேரங்கள் மேசையில் அமர்ந்து, உணவு உண்டுகொண்டே வேதத்தின் அடிப்படையில் புதிர் விடுகதைகளை விட்டும் அவைகளின் தீர்ப்புகளை அறிவித்தும் மகிழ்ந்தனர். சாமுவேல் தன தாயின் காதுகளில், "இது ஒரு நல்ல மனிதரின் வீடு. நாம் இந்த வீட்டில் இன்னும் கொஞ்சம் நாட்கள் தங்கலாம். எனது சகோதரனுக்கும் மேர்சிக்கும் திருமணம் நடக்கட்டும்." என்றான். இந்த வார்த்தைகளை ஒட்டுக்கேட்ட காயுவு, "இது மிக்க நல்லது" என்றார்.

காயுவின் வீட்டில் நடக்கும் இரண்டாம் கல்யாணமும், மற்ற இரண்டு பயணிகளின் வரவும்

பயணிகள் காயுவின் வீட்டில் ஒரு மாதம் தங்கினார்கள். அப்போது மேர்சிக்கும், மத்தேயூவிற்கும் (Mathew) கல்யாணம் நடந்தது. மேர்சி பயணிகளுக்கு உடைகள் தைத்துக்கொடுப்பதால் அவளுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

அங்கே ஆன்மிக உரையாடல்கள் அடிக்கடி நடக்கிறது. காயுவு தன் மகளாகிய பெபேயாளை (Phebe) யாக்கோபிற்கு (James) மணம் முடித்துவைக்கிறார்.

Mr Ready-to-halt (தங்குவதற்கு தயார்) என்ற பெயருள்ள பயணி காயுவின் வீட்டில் தனது ஊன்றுகோல்களுடன் வந்து சேர்கிறார். இந்த பயணி “வலுக்குறைந்த மனது” (Feeble Mind) பயணியைப் பார்த்து இரக்கப்பட்டு, தனது ஒரு ஊன்றுகோலை கொடுக்க முன்வருகின்றார். "நான் இனியும் தங்கி பிரயாணத்தை மேற்கொண்டால், நான் முடனாகிவிடுவேன்," என்று பயந்து வலுக்குறைந்த மனது கூறுகிறார்.

கிரேட் ஹார்ட் வாளேந்தி முன்செல்ல, கிறிஸ்டியானா, Mercy பிள்ளைகளும் அவருக்கு பின்தொடர, வலுக்குறைந்த மனதும், (Ready to Halt) தங்குவதற்கு தயார் என்ற பயணியும் பின்னால் வர, பயணம் தொடருகிறது. போகும் வழியில் ஆவிக்குரிய உரையாடல்களை கிரேட் ஹார்ட்டும் நேர்மையும் ஈடுபட்டிருக்க, பயணிகள் மாயாபுரியின் சந்தையை அடைகின்றனர்.

கற்றுக்கொள்ளும் பாடம்

யார் இந்த காயுவு?

ஜான் பண்ணியன், காயுவு என்ற கதா பாத்திரத்தை இங்கே அறிமுகப்படுத்துகிறார். யார் இந்த காயுவு? இவர் "ஒரு சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான பழைய சீடர்", என்று யோவான் தனது மூன்றாம் நிருபத்தில் எழுதுகிறார். இவர் சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாராம்.

இவரது அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சிசொன்னார்களளாம். இவர் விருந்தோம்பல் பண்பை உடையவர் (III யோவான் 1 :1 - 6).

இந்த வீட்டின் சிறப்புகள்

இவருடைய வீடு, இதற்கு முன்னால் ஜான் பண்ணியன் நமக்கு போதித்த இரண்டு வீடுகளைப் பார்க்கிலும், வித்தியாசமானது. இதை ஒரு உள்ளூர் சபைக்கு ஒப்பிடமுடியாது. இது ஒரு நல்ல தேவ மனிதனின் வீடு. அவர், தன் வீட்டை அறிமுகம் இல்லாத ஆண்டவரின் பிள்ளைகளுக்கு திறந்து கொடுத்து, தன் சொந்த செலவில் அவர்களுக்கு உணவு கொடுத்து, தங்கவைத்து, அவர்களின் சரீர பிரகமான காரியங்களைக் கவனித்து அவர்களுக்கு பணிவிடை செய்கிறார். அவர்களுக்கு ஆவிக்குரிய உணவையும் கொடுக்கிறார்.

உணவு பதார்த்தங்களின் அர்த்தங்ககள்

ஒரு மேசையின்மீது துணி விரித்து, தட்டுக்களை மேசையின் மேல் விரித்துவைத்து உப்பும் வெண்ணெயும் கொடுக்கிறார். உப்பு இல்லாத உணவு குப்பைக்குத்தான் போகும். நாம் இந்த உலகத்திற்கு உப்பாக இருக்கிறோம். நமது தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசுத்தமும், நீதியும் விளங்கவேண்டும். நமது பிரசங்கமானது நமது வாழ்க்கையிலிருந்து வரவேண்டும். தேவ நீதியும், பரிசுத்தமும் நம்மில் காணப்படவேண்டும். வெண்ணை போன்ற தூய்மையான வாழ்க்கை வாழ வேண்டும். மற்றவர்கள் காணும்படியாக (Transparency), இந்த தன்மைகள் தட்டுக்களில் இருக்கவேண்டும். நாம் கொடுக்கும் செய்திகள் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்றபடி அமைந்திருக்கவேண்டும்.

ஆவிக்குரிய புத்தகங்களும் ஆண்டவரால் கொடுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் எல்லாம், தட்டுக்களில் காணப்படவேண்டும். நமது உபதேசங்கள் வேத வசனத்திற்கு உட்பட்டிருக்கவேண்டும். வேத வசனத்திற்கு புறம்பான தத்துவங்களை நமது தட்டுக்களில் (பிரசங்கங்களில்) பரிமாறக்கூடாது.

இந்த வீட்டில் கொடுக்கும் முதல் உணவானது லேவியருக்காக,சுத்தமான ஸ்தலத்திலே, கொடுக்கப்படும் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் (Wave offering), ஏறெடுத்துப் படைக்கும் (Heave Offering) முன்னந் தொடையும் ஆகிறது (லேவியராகமம் 10:14, 15). மகா பிராதன ஆசாரியாராகிய கிறிஸ்து தனது சரீரத்தையும், இரத்தத்தையும் நம்மை மீட்கும்படி பலி செலுத்தி, நம்மை மீட்டு புரிசுத்தாவியால் அலங்காரித்து, நமது தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியிருக்கிறார் (வெளி 5 :10). தேவ சந்நிதியில் அர்ப்பணிக்கப்பட்ட இந்த உணவானது தேவனுக்கென்று தன் ஜீவனை பலிசெலுத்தி தேவனை சேவிக்கும், ஒவ்வொரு ஊழியருக்கும் உரியது. இந்த ஆவிக்குரிய உணவானது, நம்மை சாத்தானுக்கு மேலும், இந்த உலகத்தின் மேலும் ஆளுகை செய்வதற்கு அதிகாரத்தைத்தருகிறது. இந்த ஆகாரமானது நமக்காக (லேவியருக்காக), சுத்தமான ஸ்தலத்திலே, கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சத்தியத்தை அறிந்து உட்கொள்ளுவதே நமது பிரதானதும், மிக மிக முக்கியமானதுமான ஆவிக்குரிய ஆகாரம் ஆகும். இந்த ஆவிக்குரிய ஆகாரமானது கிறிஸ்து நமக்கு போதித்த மலைப்பிரசாங்கமாகும். இந்த ஆவிக்குரிய ஆகாரத்தை நாம் உண்ணவேண்டும்; கடைபிடிக்கவேண்டும். நாம் சபைகளில் இந்த ஆவிக்குரிய ஆகாரத்தை கொடுப்பது கிடையாது. இந்த ஆகாரத்தை புசிக்க, நாம் எல்லோரும் லேவியர்கள்தான்.

இரத்தம் போல சிகப்பான திராட்சை பழரச புட்டி அடுத்ததாவது வைக்கப்படுகிறது. கிறிஸ்துவின் ரத்தத்தை நமது ஆவிக்குரிய ஆகாரத்தின் மேன்மையான உணவு. தினமும் அவரின் பாடுகளை நினைவு கூறவேண்டும்.

அடுத்ததாவது காய்த்து கட்டியான பால் ஒரு தட்டில் வைக்கப்படுகிறது. இளம் விசுவாசிகளுக்கு அடிப்படையான தத்துவங்களைப் போதிக்கவேண்டும்.

அடுத்து வருவது, வெண்ணையும் தேனும் நிறைந்த ஒரு தட்டு. நமது பிரசங்கங்கள் மக்களை சிந்திக்கும்படியாவும், பகுத்தறிந்துகொள்வதற்கு தூண்டுவதாகவும் (Discernment) இருக்கவேண்டும். கள்ள உபதேசங்களை, தீமையை விளைவிக்கும் உபதேசங்களை, வெறுத்து நன்மையைத் தரும் உபதேசங்களை தெரிந்துகொள்ளவேண்டும். கிறிஸ்து குழந்தையாயிருக்கும்போதே, தீமையை வெறுத்து, நன்மையைத் தெரிந்துகொண்டார். நமக்கு முன்னால் வைக்கப்படும் ஆவிக்குரிய உணவுகளிலிருந்து, நாம்தானே தெரிந்துகொள்ளவேண்டும்.

பின்பு, சீமையிலந்தப்பழங்கள் (Apples) ஒரு தட்டில் வைக்கப்படுகிறது. ஒரே பழம், இரண்டுவிதமாக நமக்கு காட்சியளிக்கிறது. ஆண்டவர், "வேண்டாம்" என்று சொல்லும்போது, நாம் எந்த கூட்டத்திற்கும் போய் உட்காரக்கூடாது; அந்த ஆவிக்குரிய உணவை உண்ணக்கூடாது. ஆண்டவர், "சரி" என்று சொல்லும்போது, அந்த கூட்டத்திற்குப்போய் அந்த ஆவிக்குரிய உணவை உண்ணலாம். எல்லா இடங்களிலும் பழங்கள் கொடுக்கப்படுகிறது என்று ஓடக்கூடாது. இந்த பழங்கள், பரிமாறும் இடத்தில், கெட்டுவிடுகிறது. ஆனால் காயுவின் வீடு (House of Gaius) போன்ற ஆவிக்குரிய வீட்டுக்களில், பயமில்லாமல் உண்ணலாம். நேசத்தால் சோகமடைந்த. கிறிஸ்துவின் மணவாட்டியான நாம் இந்த வீட்டில், திராட்சரசத்தைக் குடித்து, கிச்சிலிப்பழங்களால் ஆற்றிக்கொள்ளலாம்.

கொட்டைகள் நிரம்பிய ஒரு தட்டு

பின்பு கொட்டைகள் நிரம்பிய ஒரு தட்டு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு தேவ வசனத்திற்கும் அந்த வசனத்தை கள்ள தீர்க்கதரிசியிடமிருந்து (False Prophet) காக்கும்படி ஒரு ஓடு இருக்கிறது. அந்த ஓட்டை உடைத்துவிட்டு, உள்ளிலிருக்கும் பருப்பை உண்ணவேண்டும். "விரைவில் புரிந்துகொள்ளாமை" என்பதுதான் கொட்டையின் ஓடு. நாம் ஜெபிக்கும்போது, பரிசுத்தாவியானவர் நமது தீர்க்கதரிசன கண்களைத் திறக்கிறார்.

அநேக பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன வசனங்கள் சரித்திர வரலாறுகளில் இடையில் பொறிக்கப்பட்டுள்ளன. அநேக தீர்க்கதரிசன வசனங்கள் இடை இடையில் சொருகப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரத்தை முதலிருந்து படிக்கும்போது, இந்த இடையில் சொருகப்பட்டிருக்கிற வசனங்களுக்கு எந்த விதமான சம்பந்தங்களும், தொடர்ச்சியும் (Continuity), இல்லாதது போலத்தோன்றும். ஆனால், நாம் தோடைக் களைந்துவிட்டு பருப்பை உட்கொள்ளும்போது, வசனத்தின் மகிமையை அறிகிறோம். இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசன வசனங்கள், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன புத்தகங்களில் அங்குமிங்கும் எழுதப்பட்டிருக்கிறது. ஆண்டவரின் முழு சரித்திரத்தை இந்த புத்தகங்களிலிருந்து எடுப்போமானால், முதலிலிருந்து கடைசிவரை, அதாவது பிறப்பு முதல், உயிர்த்தெழுந்து பரமேறுவது வரை, வரிசையாய் காண விரும்புவோமானால், தோடுகளை எடுத்துப்போட்டுத்தான் மாணிக்கத்தை எடுக்கவேண்டும்.

காயுவின் வீட்டின் சிறப்பு அம்சங்கள்

இந்த வீட்டின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால். இங்கே கிறிஸ்துவிற்கென்று மரித்த பரிசுத்தவான்களைப் பற்றிய உரையாடல் நடக்கிறது. இந்த வீடானது எல்லா கிறிஸ்தவர்களையும், அப்போஸ்தலர் காலத்திலுள்ள முதலாவது புறஜாதி மக்களுக்கென்று பவுல் ஏற்படுத்திய அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையில் கொண்டிணைக்கிறது. முன்னால் படித்த, House of Interpreter, அழகிய மாளிகை (Beautiful Palace) போன்ற சபைகளில் இதேபோல் ஒரு இணைப்பும், ஐக்கியம் இல்லை.

பெபேயாள் (Phebe) யார்?

காயுவின் தன் மகளாகிய பெபேயாளை (Phebe) வீட்டில் ஜேம்ஸ்க்கு மணம் முடித்துவைக்கிறார். பெபேயாள் (Phebe) யார்? ஜான் பண்ணியன் அருமையாக ஒரு சபைக்கு ஊழியம் செய்யும் பெண்ணின் பெயரை ரோமரின் நிருபத்திலிருந்து எடுத்து ஒரு கதா பாத்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ரோமர் 16ம் அதிகாரத்தில் ஒன்றாம் வசனத்தில், இந்த பெயருடைய ஒரு பெண்ணை பற்றி பவுல் இப்படி எழுதுகிறார். "கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை" என்று எழுதுகிறார். இந்த வீட்டில் பெண்களின் விசேஷித்த சேவைகளை வெளிப்படுத்தி காண்பிக்கிறது.இன்று நமது சபைகளில் பெண்கள் சபைகளில் போதகர்களாக இருக்கக்கூடாது என்று பவுல் கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் நிருபத்திலிருந்து 14ம் அதிகாரத்தின் 14-33 வசனங்களை குறிப்பிட்டு பெண்கள் சபைகளில் பேசக்கூடாது என்றும், போதகர்களாக இருக்கக்கூடாது என்றும் போதிக்கப்படுகிறது. பவுலின் காலத்தில் யூத மதத்தின் பழக்கவழக்கத்தின் படி ஆண்கள் தான் முதலிடத்தில் இருந்தார்கள். இது ஆண்களின் ஆதிக்கத்திலுள்ள சமூகத்தின் (Male dominated) யூத வழக்கம். ஆண்டவர் இந்த வழக்கத்தைக் கண்டுக்கொள்ளாமல் பெண்களுக்கும் அதே முக்கியத்துவத்தைக்கொடுத்தார். அவர்கூட எப்போதும் 12 ஆண் சீடர்கள் இருந்தாலும், மகதலேனாள் என்னப்பட்ட மரியாள் ஆண்டவருக்கு சீடராக இருந்தாள். "ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்" (லூக்கா 8:1-3).

சரித்திரத்தைப் படிக்கும்போது கொரிந்தியர் சபையில் பெண்கள் சபை ஆராதனைகளில் சில இடையூறுகள் உண்டாக்கியதால் அந்த குழப்பத்தை தவிர்க்கும்படியாக பவுல் இந்த கட்டளையைப் பிறப்பித்தாராம். இது ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை மேற்கொள்ளும்படி பவுல் எடுத்துக்கொண்ட நடபடிக்கையாகும். இதை நாம் ஒரு தத்துவமாக (doctrine) எடுத்து இந்த பவுலின் கட்டளையை எல்லா கிறிஸ்துவின் சபைகளுக்கும் எல்லா நூற்றாண்டுகளுக்கும், (apply) உட்படுத்தக்கூடாது. பெபேயாள் ஒரு சபையின் ஊழியக்காரி என்று பவுல் குறிப்பிடுகிறார். இந்த ரோமரின் 16ம் அதிகாரத்தைப் பாடிப்போமானால் அநேக பெண் ஊழியர்களைக் காணலாம்.

இன்று பெபேயாள் போன்ற கிறிஸ்தவ உலகத்தில் அறிமுகம் இல்லாத தனிப்பட்ட அன்பு, கருணை உள்ளம் கொண்ட அநேக பெண் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

இந்த காயுவின் வீட்டில் நடப்பது ஆன்மிக உரையாடல்கள் தான். இந்த வீட்டில் கிடைக்கும் ஆவிக்குரிய ஆகாரங்கள் முந்தின வீடுகளைப்பார்க்கிலும் (சபைகள்) மேன்மையானவைகள்.

தொடர்ந்து படிக்க.... நல்லவர்களை அழிக்கும் அரக்கனின் அரக்கனின் கையில்