அழகிய அரண்மனையின் கதவு திறப்பு

Previous....அலங்கார மாளிகை

அழகிய அரண்மனையின் கதவு திறப்பு

கிறிஸ்தியான் தான் இளைப்பாறும் ஸ்தலத்தில் சுருளைத் தொலைத்து விட்டதுபற்றியும், அதைத் தேடி வருவதற்காக இவ்வளவு தாமதமாகிவிட்டது என்பதையும் எடுத்துரைக்க, இதைக் கேட்டவுடன் விழித்திருப்போன் ஒரு மணியை அடித்தான். மணியோசை கேட்டவுடன் விவேகம் என்ற பெயருடைய ஒரு அழகிய பெண்மணி கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

காவல்காரன் கிறிஸ்தியானை அவளுக்கு அறிமுகம் செய்துவிட்டு, இவன் இங்கே இரவு தங்க அனுமதி கிடைக்குமா? என்று கேட்டான்.விவேகம் கிறிஸ்தியானைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டாள். கிறிஸ்தியான் தான் பயணம் புறப்பட்டதின் காரணத்தையும், வழியில் தான் அனுபவித்த சோதனைகளும் எடுத்துக் கூறினான்.இதைக் கேட்ட விவேகம் கண்ணீர்விட்டாள். இங்கே வருவதற்குள் எவ்வளவு துன்பங்களைச் சகித்திருக்கிறீர்! வாரும், வீட்டிலுள்ள மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்கிறேன் என்று கூறி விவேகம் கிறிஸ்தியானை உள்ளே அழைத்துச் செனறாள்.முன்யோசனை, பக்தி, கருணை என்ற தன்னுடைய சகோதரிகளையும் மற்றவர்களையும் அவள் கிறிஸ்தியானுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் அனைவரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, வாரும்! என்று வாழ்த்துக்கூறி அவனை வரவேற்றார்கள்!விவேகமும் அவளுடைய சகோதரிகளும் நீண்ட நேரம் கிறிஸ்தியானோடு ஆண்டவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். உணவருந்திய பின்பு அவரவர் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார்கள். சமாதானம் என்ற மேலறை கிறிஸ்தியானுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. விடியும்வரை மன அமைதியுடன் உறங்கினான் கிறிஸ்தியான்.மறுநாள் அந்தச் சகோதரிகள் மீண்டும் அவனுக்கு ஆண்டவரைப்பற்றி எடுத்துக் கூறினார்கள். அவர் தேவனுடைய ஓரே பேறான குமாரன் என்றும், அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை அவர் மன்னிக்கச் சித்தமாயிருக்கிறார் என்றும், அவரைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறின என்றும் விளக்கமாகச் சொன்னார்கள். கிறிஸ்தியான் அனைத்தையும் ஆவலோடு கேட்டு மனதில் பதிய வைத்துக்கொண்டான்.

அதன்பின்பு அந்த மாளிகையின் ஆயுதசாலைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். கச்சைகள், மார்க்கவசம், கேடகம், தலைச்சீரா, பட்டயம் (எபே.6:11-18) இவையனைத்தையும் கண்டு மகிழ்ச்சியடைந்தான் கிறிஸ்தியான்.

நீர் போகும் வழியில் பல விரோதிகளையும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியிருகக்கும். எனவே நீர் இந்த ஆயுதங்களை எடுத்துக் கொள்ளும் என்று சகோதரிகள் கேட்டுக் கொண்டார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

முன்யோசனை (விவேகம்), பக்தி, கருணை ஆகிய முக்கிய குணாதிசயங்களை சபை மக்களுக்குப் போதிக்கவேண்டும். இவைகளை போதிக்கும் போதகர்கள் மிகவும் அவசியம். விவேகமும் அவளுடைய சகோதரிகளும் நீண்ட நேரம் கிறிஸ்தியானோடு ஆண்டவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்த ஊழியர்கள் எந்த விதமான போதனைகளையும் போதித்து, தங்களை ஒரு உன்னதமான இடத்தில் வைத்து காண்பிக்கவில்லை. ஆண்டவரை பற்றி பேசினார்களே தவிர, தங்களுக்கு என்று ஒரு மேடையை அமைத்து பிரசங்கம் பண்ணவில்லை. இன்று, எல்லா சபைகளிலும் பிரசங்க மேடைகள் இருக்கிறது. ஆனால் புதிய ஏற்பாட்டின் காலத்தில் இதுபோல மேடைகள் கிடையாது. இன்று சபைகளின் பிரசங்க மேடைகள் போதகர்களின் தாலந்துகளையும் பேச்சு திறமைகளையும் வெளிப்படுத்தும்படி அமைக்கப்பட்டிருக்கின்றது.

இன்று நாம் காண்பது PULPIT MINISTERS (பிரசங்க மேடை ஊழியர்கள்)! சேவை செய்யும் மனப்பான்மை உடைய ஊழியர்கள் அல்ல. ஆலயங்களில் முதன்மையான இடங்களின் மேல் பேராசைப்படும் (Covet) போதகர்மார்கள்! ஒரு கூட்டம் நடத்தினால் அவர்களுக்கு முதன்மையான இடங்களில் உட்காரும் இருக்கைகள் கொடுக்கப்படவேண்டும். "விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தை வெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ (Pastor அல்லது போதகர்) என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்"" (மத்தேயு 23:6-7).

ஒரு சபையில் சமாதானம் என்ற மேலறை இருக்கவேண்டும். ஆலோசனை (Counselling) போன்ற தனிப்பட்ட ஊழியங்கள் நடைபெறவேண்டும். கஷ்டப்படும் மக்களுக்குப் பொருளுதவி செய்து அவர்களை சமாதானத்துடன் அனுப்பிவைக்கவும்.

"அந்த மாளிகையின் ஆயுதசாலைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். கச்சைகள், மார்க்கவசம், கேடகம், தலைச்சீரா, பட்டயம் (எபே.6:11-18) இவையனைத்தையும் கண்டு மகிழ்ச்சியடைந்தான் கிறிஸ்தியான்." இன்று நமது சபைகள் அழகான மாளிகைகளாக இல்லாமல் வெறும் பிரசங்க மேடைகளாக மாத்திரம் இருக்கிறது. அழகிய மாளிகையாக காட்சியளிக்காமல் வெறும் மளிகை வியாபாரக் கடைகளாகக் காட்சியளிக்கிறது. போதகர்கள் (Pastors) தங்களின் தாலந்துகளையும், பேச்சுத்திறமைகளையும் விற்று மக்களைக் கவர்ந்து அவர்களின் காணிக்கைகளை இச்சிப்பது (covet) ஒரு வியாபாரமே!

பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். பரிசுத்தவான்களை சீர்பொருந்தும் (equipping) வேலையை சபைகள் செய்யவில்லை. "நீர் போகும் வழியில் பல விரோதிகளையும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே நீர் இந்த ஆயுதங்களை எடுத்துக் கொள்ளும் என்று சகோதரிகள் கேட்டுக் கொண்டார்கள்". இன்று தேவ மக்களை ஆயுதம் தரிக்க எந்தவிதமான ஊழியங்களும் நடை பெறவில்லை. ஆயுதம் தரிப்பித்து இருப்பவர்கள் போதகர்மார்கள் (Pastors) மாத்திரம் தான்.

விசுவாசிகளை சீடர்களாக உருவாக்காமல், தாங்கள் அவர்களின் தலைகள் மேல் கைகளை வைத்து, அவர்களை அசுத்த ஆவிகளிடமிருந்து விடுவிப்பதுதான் தங்களின் ஊழியமாகக் கருதுகிறார்கள்.

போதகரே, உங்கள் சபையிலுள்ள தேவ மக்களை உற்சாகப்படுத்தி, பிரசங்க மேடையில் ஏற்றி பிரசங்கம் பண்ண பயிற்சி அளித்திருக்கிறீர்களா? அவர்கள் பரிசுத்தாவியானவரை பெற்று இருப்பார்களானால் அவர்களை ஏன் செய்தி கொடுக்க பயிற்சி கொடுக்காமல் நீங்கள் மட்டும் பிரசங்க மேடையை சொந்தமாக்கி க்கொள்கிறீர்கள்? கொரிந்திய சபையிலே பவுல் எல்லோரையும் தீர்க்கதரிசனம் கூற சொல்கிறாரே! தீர்க்கதரிசனம் என்றால் தேவ வார்த்தைகளைத் தியானித்து அதன் உட்பொருளை அறிவிப்பது தானே!

Next.... கிறிஸ்தியான் ஆயுதம் தரித்தல்