மோட்ச பயணத்தின் அருமை பெருமைகள்


Home

மோட்ச பயணத்தின் அருமை பெருமைகள்

ஜெரமி வாக்கர் (Jeremy Walker) இங்கிலாந்தில் மெயிடன்போவர் பாப்திஸ்து சபையின் போதகர்களில் ஒருவராக பணிபுரிந்து வருகிறார். இளமைப் பருவத்திலேயே சீர்திருத்தவாத, பியூரிட்டன் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஞானத்தைப் பெற்றிருக்கும் வாக்கர் ஜோன் பனியன் (John Bunyan) படைத்த மோட்ச பயணத்தின் (Pilgrims progress) அருமை பெருமைகளையும் அதை நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்பதையும் இவ்வாக்கத்தில் விளக்குகிறார்.

“ஐயா இந்த விஷயத்தில் என்னுடைய முடிவு உறுதியானது. இன்று நான் சிறையில் இருந்து வெளிவந்தால் கர்த்தரின் துணையோடு நாளை மறுபடியும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன்” என்று தன்னை சிறையில் தள்ளிய வழக்குமன்ற நீதியரசர்களைப் பார்த்து ஜோன் பனியன் கூறிய வார்த்தைகள் இவை. தன்னுடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்திருந்தபோதும் பனியன் கர்த்தரின் பணியைக் கைவிட்டுவிடவில்லை. பன்னிரெண்டு வருடங்கள் சிறையில் தள்ளப்பட்டிருந்த காலங்களிலும் பனியனின் நாவு அவருடைய பேனாவின் மூலம் பேசியது. அவர் எழுதிய பல நூல்களில் குறிப்பிடத்தகுந்தது மோட்சப் பயணம் (Pilgrims Progress).

ஜாண் பனியன் (John Bunyan)

நவம்பர் 1628ல் இங்கிலாந்தில் பெட்போர்ட்சயரில் (Bedfordshire) பிறந்தார் பனியன். அவருடைய தந்தை இரும்புத் தொழில் செய்து வந்தார். குறுகிய காலத்துக்கு மட்டுமே ஆரம்பப் பள்ளிக்கு சென்ற பனியன் அங்கே வாசிக்கவும், எழுதவும் கற்றுக்கொண்டார். பின்பு தந்தையின் தொழிலை செய்ய ஆரம்பித்து தான் பள்ளியில் கற்றவைகளையும் அவர் மறக்க நேரிட்டது. சிறுவயதில் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு பலதடவைகள் கனவில் அவரைப் பயமுறுத்தியபோதும் சிறுவயதிலிருந்தே அவர் ஒழுக்கக்குறைவாக நடந்து கொண்டார். கர்த்தரின் பராமரிப்பின் மூலம் அவர் மரணத்தில் இருந்து ஒரு தடவை காப்பாற்றப்பட்டார். 1642ல் இங்கிலாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது. 1644ல் பனியனின் தாயும், சகோதரியும் மரணமடைந்தனர். அந்த வருடத்திலேயே, (பதினாறு வயதில்) பனியன் நாட்டரசனான முதலாம் சார்ள்சோடு போரிட்டுக் கொண்டிருந்த நாடாளுமன்றப் படையில் இணைந்தார். போர் காலத்திலும் கர்த்தர் அவரை மரணத்தில் இருந்து தப்பவைத்தார். 1647ல் அவர் பணிபுரிந்த படை கலைக்கப்பட்டதால் மறுபடியும் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார் பனியன். அக்காலத்தில் அவர் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மாமனார் பக்திவிருத்தியுள்ள மனிதன். வறுமையில் இருந்தபோதும் பனியனின் மனைவி தன்னோடு இரு முக்கியமான நூல்களைக் கையோடு புகுந்த வீட்டுக்குக் கொண்டு வந்தாள். அந்த நூல்களை வாசித்ததாலும், மனைவியினுடைய பேச்சு, நடத்தை ஆகியவற்றாலும் பனியனின் மனச்சாட்சி அவரை உறுத்தத் தொடங்கியதால் வெளிப்பார்வைக்கு பக்திவிருத்தியுடன் நடந்துகொள்ள ஆரம்பித்தார். இருந்தபோதும் பாவத்தின் கோரத்தைக்குறித்து தான் கவலைப்படவில்லை என்று பனியன் கூறினார். மிகவிரைவில் இந்நிலை மாறி பனியன் தன் வாழ்வில் சில வருடங்களுக்கு பாவத்தின் பாவத்தை உணர்ந்து ஆழமாக வருந்தியதோடு அதிலிருந்து விடுபட்டு இரட்சிப்பை அடைய வேண்டுமென்பதை உணர்ந்தார். பெட்போர்டில் இருந்த ஒரு சுயாதீன சபைக்கு போக ஆரம்பித்த பனியன் அச்சபைப் போதகரான ஜோன் கிபோர்டின் (John Gifford) பிரசங்களால் பயனடைய ஆரம்பித்தார். பல வருடங்களுக்கு அவருடைய மனச்சாட்சியை பாவத்தின் உணர்வு குடையத் தொடங்கியது. ஆத்மீகக் கேள்விகளும், சந்தேகங்களும், கர்த்தரின் தண்டனையைக் குறித்த பயமும் அவரை வாட்டி இரட்சிப்பிற்காக அலைந்த பனியன் தான் ஏற்கனவே தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு விட்டதாக எண்ணி மருண்டார்.

திடீரென ஒரு நாள், “கர்த்தரின் நீதி பரலோகத்தில் இருக்கிறது” என்ற வார்த்தைகள் அவருடைய கண்களைத் திறந்தன. “பரலோகத்தில் பிதாவின் பக்கத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்துவே என் நீதி, என்னுடைய பாவகரமான சரீரம் என்னை நீதிமானாகக் காட்டவில்லை. நேற்றும், இன்றும், என்றும் கிறிஸ்துவே நீதிமானாக இருக்கிறார்” (எபிரேயர் 13:8) என்று பனியன் கூறினார். அன்றிலிருந்து தன்னுடைய பாவ விலங்குகள் கழன்றதாகவும், தன்னுடைய துன்பங்களும், சோதனைகளும் தன்னைவிட்டு அகன்றதாகவும் பனியன் சொன்னார்.

கிறிஸ்துவின் நீதியின் மூலமாக இரட்சிப்பையும், ஆழமான ஆத்மீக அனுபவத்தையும் அடைந்த பனியன் சில வருடங்களுக்குள்ளாகவே பெர்ட்போர்டின் சுயாதீன சபையில் அங்கத்தவராக சேர்த்துக்கொள்ளப் பட்டார். சபை வாழ்க்கையில் வளர்ந்த அவருடைய ஈவுகளைக் கவனித்த வர்கள் அவரை பிரசங்கம் செய்ய அனுமதித்தார்கள். “நான் எதை என் வாழ்க்கையில் அனுபவித்தேனோ, எந்தளவுக்கு அவற்றை ஆழமாக உணர்ந்தேனோ அதைப்போலவே பிரசங்கம் செய்தேன் என்று பனியன் கூறியிருக்கிறார். அதிகம் படிப்பறிவில்லாதிருந்தபோதும் அவருடைய பிரசங்கங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. அந்தக் காலத்துப் பண்பாட்டு, நாட்டு நடப்புகளின் அடிப்படையில் படிப்பறிவில்லா மனிதனொருவனின் அத்தகைய பிரசங்கங்களைப் பலர் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். இரண்டாம் சார்ள்ஸ் 1660ல் அரசனாக வந்தபிறகு நாட்டின் ஆத்மீக நிலைமை மிகவும் மோசமடைந்தது.

பனியனின் முதலாம் மனைவி 1658ல் இறந்தார். 1659ல் எலிசபெத் என்ற பக்திவிருத்தியுள்ள ஒரு பெண்ணை அவர் மணந்தார். எலிசபெத்துக்கு ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். அத்தோடு பனியனின் பிள்ளையையும் வயிற்றில் அவள் சுமந்துகொண்டிருந்த காலத்தில் பனியனுக்கும் நாடாளுகிறவர்களுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. 1649ல் இருந்து 1658வரை ஒலிவர் குரோம்வெல் (Oliver Cromwell) ஆண்டபோது பனியன் இருந்த சுயாதீன சபை போன்ற சபைகளுக்கு பிரசங்கிக்கவும், ஆராதனை செய்யவும் நாட்டில் சுதந்திரம் இருந்தது. இரண்டாம் சார்ள்ஸ் பதவிக்கு வந்தபோது அந்த சுதந்திரம் பறிக்கப் பட்டது. 1660ல் பனியனை சிறை பிடிக்க உத்தரவு கொடுக்கப்பட்டது. இருந்தபோதும் அரச உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் கூடியிருந்த விசுவாசிகள் மத்தியில் பிரசங்கிக்க ஜோன் பனியன் வந்தார். தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய சிலர் கூட்டத்தைக் கலைத்துவிட ஆலோசனை கூறினார்கள். அதற்குப் பதிலளித்த பனியன், “நமது பணி நன்மையானது. அதைக்குறித்து நாம் வெட்கப்படத் தேவையில்லை. கர்த்தரின் வார்த்தை யைப் பிரசங்கிப்பது உத்தமமான ஊழியமாதலால், அந்தப்பணியில் நாம் துன்பப்பட்டாலும் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்” என்றார். அவர் பேசிக் கொண்டிருந்த போதே படைவீரர்கள் வேகமாக நுழைந்து அவரை சிறைப் பிடித்தனர். பின்பு சட்டபூர்வமான சபைகளில் ஆராதனை செய்யவில்லை யென்றும், சட்டவிரோதமான சபைகளில் பிரசங்கம் செய்தார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தி மூன்று மாதங்களுக்கு அவரை நாடாளுகிறவர்கள் சிறையில் தள்ளினார்கள். அதிகாரிகளின் பேச்சுக்கு அவர் இணங்காததால், அவருடைய மனைவியின் பரிதாபமான வேண்டுகோள்களையும் நிராகரித்து நாடாளுகிறவர்கள் பனியனைப் பன்னிரெண்டு வருடங்கள் சிறையில் வைத்திருந்தனர்.

சிறைவாசம் பனியனுக்கு இன்பத்தை அளிக்காதபோதும் அவர் அதை கர்த்தரின் பணிக்காகப் பயன்படுத்திக் கொண்டார். சிறைவாச காலத்தில் அவருடைய பேனாவில் இருந்து உதித்த முதல் படைப்பு அவருடைய வாழ்க்கை வரலாறே (Grace Abounding to the Chief of Sinners). அதுவே அவர் 1672ல் சிறையில் இருந்து வெளிவருமுன்பு அச்சிடப்பட்ட கடைசி நூலாகவும் அமைந்தது. சிறைவாசத்தின்போது பனியன் தொடர்ந்து தன்னுடைய சபையோடு தொடர்பு வைத்திருந்தார். அத்தோடு சிறையில் இருந்தபோதும் சபையும் அவரைத் தொடர்ந்து போதகராக நியமித்திருந்தது. சிறையில் இருந்து வெளிவந்த பின்பு பனியன் பல இடங்களுக்கு பிரயாணம் செய்து சுவிசேஷப் பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டார். ஆத்துமாக்களைக் கூட்டி ஆராதிக்கத் தூண்டினார். இதன் காரணமாக அவருக்கு ‘பிஸப் பனியன்’ என்ற பெயரும் சூட்டப்பட்டது. மறுபடியும் அவர் சிறைபிடிக்கப்படக் கூடிய வாய்ப்பிருந்தது. வெகுவிரைவிலேயே அதுவும் நடந்தது. 1677ல் அவர் ஆறுமாதங்களுக்கு மறுபடியும் சிறையில் தள்ளப்பட்டார். இக்காலப் பகுதியிலேயே அவர் ஏற்கனவே முதல் சிறைவாசத்தின்போது எழுத ஆரம்பித்து பல பகுதிகளை முடித்திருந்த ‘மோட்சப் பயணத்தை’ (Pilgrims Progress) ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்நூலின் முதலாம் பாகம் 1678ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு அவருடைய ஏனைய நூல்களான The Life and Death of Mr. Badman (1680), The Holy War (1682) ஆகியன வெளியிடப்பட்டன. மோட்ச பயணத்தின் இரண்டாம் பாகம் 1684ல் பனியனின் வேறு பலபிரசுரங்களோடு சேர்த்து வெளியிடப்பட்டது.

பனியனுக்குகெதிராக தொடர்ந்திருந்து வந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவருடைய புகழ் எங்கும் பரவியது. அக்காலத்தில் மோட்சப் பயணம் நூல் விற்பனையில் முதலிடத்தை வகித்தது. ஜோன் பனியனின் பிரசங்கங்களை ஆயிரக்கணக்கானவர்கள் கூடிவந்து கேட்டனர். ஒரு முறை அவர் இலண்டனுக்கு வந்தபோது 1200 பேர் கடுமையான பனியையும் பொருட்படுத்தாமல் கூடி நின்று காலை ஏழு மணியில் இருந்து அவருடைய பிரசங்கத்தைக் கேட்டனர். அக்காலத்தில் அவருடைய பிரசங்கங்களைத் தொடர்ந்து கேட்டுவந்தார் ‘பியூரிட்டன்களின் இளவரசர்’ என்று அழைக் கப்பட்ட ஜோன் ஓவன் (John Owen). அரசனான இரண்டாம் சார்ள்ஸ், ஜோன் ஓவனைப் பார்த்து ஒரு முறை கேட்டாராம், ‘இவ்வளவு படித்த மனிதனான நீங்கள் ஒரு சாதாரண இரும்புத் தொழிலாளியின் வெறும் பேச்சைப் போய்க் கேட்பதெப்படி?’ என்று. அதற்குப் பதிலளித்த ஜோன் ஓவன், ‘பேரரசனே, அந்த இரும்புத்தொழிலாளியின் பிரசங்கத் திறமை மட்டும் எனக்குக் கிடைக்குமானால் என்னுடைய பாண்டித்தியம் அனைத்தையும் கொடுத்துவிடத் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

1688ல் பனியன் ஒரு தகப்பனையும், அவருடைய மகனையும் சேர்த்து வைப்பதற்காக பிரெட்போர்டில் இருந்து ரெட்டிங் என்ற இடத்துக்கு பயணம் செய்தார். அந்த வேலை முடிந்தபிறகு அவர் இலண்டனை நோக்கி குதிரையில் பிரயாணம் செய்தார். இடிமுழக்கத்தோடு வந்த பெரு மழையையும் பொருட்படுத்தாமல் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். பெருமழையில் நனைந்து தோய்ந்திருந்த பனியனை ஜூரம் பிடித்தது. ஜுரத்தோடு அடுத்து வந்த ஓய்வு நாளில் அவர் பிரசங்கம் செய்தார். அவருடைய உடல் நலம் மிக வேகமாகக் குன்ற ஆரம்பித்தது. 1688ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31ம் நாள் வெள்ளிக்கிழமை அவருடைய நண்பர்களில் பலர் மரணத்தை எதிர்நோக்கி படுக்கையில் இருந்த பனியனைச் சுற்றிக் கூடினர். அவரோடு சில வார்த்தைகளைப் பேசிய பிறகு அவர்கள் பனியனைப் பார்த்து, ‘நாங்கள் செய்யக் கூடியது ஏதாவது இருக்கிறதா நண்பரே!’ என்று கேட்டார்கள். அவர்களைப் பார்த்து பனியன், ‘சகோதரர்களே, நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடிருப்பதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்’ என்று கூறி தன்னுடைய கரங்களிரண்டையும் நீட்டி, ‘நான் உம்மிடத்தில் வருகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறி பரலோகத்தை நோக்கிப் பயணமானார். அவர் பன்ஹில் நிலம் (Bunhill Fileds) என்ற இடத்தில், அரசை எதிர்த்த விசுவாசிகளால் பயன்படுத்த இடத்தில் அடக்கம்பண்ணப்பட்டார். பனியன் இலண்டனுக்கு தன்னோடு கொண்டு போயிருந்த நூலான The Acceptable Sacrifice or, The Excellency of a Broken Heart அவருடைய மரணத்திற்குப் பிறகு அவரது நண்பர்களால் வெளியிடப்பட்டது. அதற்கு சில மாதங்களுக்குப் பின்பு ஒரு பெரும் புரட்சியினால் 1689ல் இரண்டாம் சார்ள்ஸ் பதவியில் இருந்து இறக்கப்பட்டு முதன் முறையாக பனியன் தன்னுடைய வாழ்நாளில் அனுபவிக்க முடியாத மத சுதந்திரத்தை இங்கிலாந்தில் மக்கள் அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது. (இவ்வாண்டிலேயே 1689 விசுவாச அறிக்கை வெளியிடப்பட்டதென்பதை நினைவில் கொள்ள வேண்டும்).

மோட்சப் பயணம் (Pilgrim's Progress)

மோட்சப் பயணத்தின் பெரும்பகுதியை பனியன் தன்னுடைய பன்னிரெண்டு வருடகால சிறைவாசத்தின்போது எழுதினார் என்று பார்த்தோம். அவருடைய வாழ்க்கையை நாம் ஆராய்கிறபோது சில நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும், சம்பவங்களையும் மோட்சப் பயணம் பிரதி பலிப்பதை நம்மால் கவனிக்க முடியும். பியூரிட்டன்களைப் பிரதிபலிக்கும் புத்தகத்தின் முழுத்தலைப்பும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றிய விளக்கத்தைத் தருவதாக இருக்கின்றது. நாம் மோட்சப் பயணம் என்று சுருக்கமாக அழைத்தாலும் நூலின் தலைப்பு நீளமானது. அப்படி நீளமான தலைப்புக் கொடுப்பது அக்கால வழக்கம் – இந்த உலகத்தில் இருந்து அவ்வுலகுக்கு பயணமாகும் ஒரு பயணி அங்கு எப்படிப் பாதுகாப்பாகப் போய்ச்சேர்ந்தான் என்பதையும், அந்தப் பயணத்தின் ஆபத்தான தன்மை களையும் கனவில் நிகழ்வதுபோல் உருவகமாக வெளிப்படுத்துகிறது இந்நூல். நூலின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு முதல் பாகத்தை ஒத்ததாக இருந்தாலும் அது பயணியின் குடும்பமும், குழந்தைகளும் அந்தப் பயணத்தில் இணைந்துகொண்டதை விளக்குகிறது.

இந்த நீளமான தலைப்பு நமக்கு நூலைப் பற்றிய அநேக விஷயங்களை வெளிப்படுத்துகின்றது. நூலின் நோக்கம் பரலோகப் பயணத்தை விளக்குவதாகும். அது, அழியும் நகரத்தில் இருந்து மோட்சப் பட்டணத்திற்கு பயணி பயணம் செய்வதை விவரிக்கிறது. இந்த நூல் உருவக மொழியில் எழுதப்பட்டு பனியனின் இலக்கியத் திறமையையும், சொல்லாட்சியையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஒரு உருவகத்தில் காணப்படும் நபர்கள், சம்பவங்கள் அனைத்தும் வேறொன்றை அடையாள மொழியில் விளக்குவதாக அமைந்திருக்கும். ஒன்றை வைத்து இன்னொன்றை விளக்குவது உருவகமாகும். இந்தவிதமான மொழிநடையைப் பயன்படுத்தி சத்தியத்தை ஆத்துமாக்கள் மனதில் பதியவைக்கும்படியாக பனியன் நூலைப் படைத்திருக்கிறார். உதாரணமாக, பரலோகத்தில் இருந்து வரும் நெருப்பினால் அழியப்போகும் நகரம் இந்த உலகமாகும். விசுவாசிகள் இறுதியில் போய்ச்சேரப்போகிற நித்திய பரலோகமே மோட்சப் பட்டணமாகும்.

நூலின் முதலாம் பாகம்

இந்நூலின் முதலாவது பாகம், பல்வேறு ஆபத்துக்களுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் கிறிஸ்தியான் (Christian) என்று அழைக்கப்படும் நூலின் நாயகன் அழியும் நகரத்தில் இருந்து வெளியேறி எவ்வாறு மோட்சப் பட்டணத்தைச் சென்றடைகிறான் என்பதை விளக்குகிறது. இந்நூலில் கிறிஸ்தியான் சென்றடைந்த இடங்கள், சந்தித்த மனிதர்கள் அனைத்தும் எங்கெல்லாம் இந்த நூல் வாசிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஆங்கில மொழியின் இலக்கிய அம்சங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நூலில் கிறிஸ்தியான் முதலில் அடையும் இடம் நம்பிக்கையிழப்பு என்ற உளையாகும் (Slough of Despond). இங்கே கிறிஸ்தியான் அநேக பயங்களுக்கும் சந்தேகங்களுக்கும் உள்ளாகும் நிலையை அடைகிறான். போகும் பாதையில் இருந்து விலகிவிடுமளவுக்கு வந்துவிட்ட கிறிஸ்தியானை விசுவாசமுள்ள நற்செய்தியாளன் (Faithful Evangelist) குறுகிய வாசலுக்கு (Wicket Gate) வழிகாட்டுகிறான். அந்த வழியாகவே கிறிஸ்தியான் மோட்சப் பட்டணத்தை அடைய வேண்டும். அந்த வழியில் போகும்போது கிறிஸ்தியான் விளக்கம் கூறுகிறவரின் வீட்டை அடைகிறான் (House of Interpreter). அவர் கிறிஸ்தியானுக்கு அநேக அதிசயங்களைக் காட்டி அவனுடைய வழியில் அனுப்பி வைக்கிறார். அங்கிருந்து கிறிஸ்தியான் சிலுவையைக் கொண்டிருக்கும் ஒரு மலையில் ஏறுகிறான். அவ்வாறு மலையேறும்போது தன் முதுகில் இருந்த பாரமான பாவச் சுமை இறக்கப்படுவதைக் கவனிக்கிறான். இந்தக் காட்சி இலண்டனில் இருக்கும் பனியனின் கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பக்கத்தில் கிறிஸ்தியான் மலையேறும் காட்சியும், மறுபக்கத்தில் அவன் சிலுவையின் அருகில் வருவதையும், அவனுடைய சுமைகள் மலையின் கீழ் உருண்டோடி மறுபடியும் காணமுடியாதபடிப் போவதையும் விளக்குகின்றன.

அதற்குப் பிறகு கிறிஸ்தியான் கடினமலை (Difficulty) என்று அழைக் கப்படும் இன்னொரு மலையில் ஏறுகிறான். அங்கே சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு சிங்கங்களுக்கு இடையில் நுழைந்து தங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பயணி அலங்கார மாளிகையில் (Lodge) தங்கி இனி வரப்போகும் பயணத்துக்காக தன்னைத் தயார் செய்கிறான். அங்கே தன் பயணத்துக்குத் தேவையான ஆயுதங்களையும், கவசங்களையும் பெற்றுக் கொள்ளுகிறான். அவனுடைய ஆயுதங்களுக்கும், கவசங்களுக்கும் உடனடியாகவே வேலை வந்து விடுகிறது. அடுத்து அப்போலியனோடு (Apollyon – சாத்தான்) ஏற்படும் கடுமையான, நீண்ட போராட்டத்தில் கிறிஸ்தியானின் ஆயுதங்களும், கவசங்களும் சோதனைக்குள்ளாகின்றன. இப்போராட்டத்தில் கிறிஸ்தியான் பல துன்பங்களுக்கும் மத்தியில் வெற்றியடைகிறான். அதன்பின் அவனைப்போன்ற சக பயணியான உண்மையானவனை (Faithful) கிறிஸ்தியான் சந்திக்கிறான். அவர்கள் இருவரும் உலக இச்சைகளையும், இன்பங்களையும் குறிக்கும் மாயாபுரி (Vanity Fair) நகருக்குப் போனார்கள். அங்கே இருவரும் சிறைபிடிக்கப்பட்டதோடு, உண்மையானவன் கொலை செய்யப்பட்டான். கிறிஸ்தியான் அங்கிருந்து விடுதலை அடைந்து இன்னோரு நண்பனான நன்நம்பிக்கையை (Hopeful) சந்தித்து அவனோடு பயணத்தைத தொடர்கிறான். கிறிஸ்தியானுடையதும், உண்மையானவனுடையதும் சாட்சிகளைப் பார்த்தே நன்நம்பிக்கை தன் பயணத்தை ஆரம்பித்திருந்தான். அடுத்ததாக அவர்கள் இருவரும் செல்வ மலையின் (Hill Lucre) கட்டுகளுக்கு தப்பினாலும் கிறிஸ்தியானுடைய மதியீனத்தினால் வேறுபாதையில் போய் கடும் பயங்கரமான அரக்கனின் (Giant Despair) பிடியில் சிக்கி கொஞ்சக் காலத்துக்கு சந்தேகக் கோட்டையில் (Doubting Castle) வைக்கப்பட்டார்கள். மறுபடியும் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பினார்கள். இந்தத் தடவை அவர்களுக்கு வாக்குத்தத்தம் (Key of Promise) என்ற சாவி கோட்டையில் இருந்து தப்புவதற்கு கைகொடுத்தது. அங்கிருந்து அவர்கள் மகிழ்ச்சி மலையை வந்தடைந்தார்கள் (Delectable Mountains). அங்கே அறிவு, அனுபவம், விழிப்பு, மெய்மை என்ற நான்கு மேய்ப்பர்கள் அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக் கொண்டார்கள். அத்தோடு அழிவற்ற நகரையும் காணும் பாக்கியத்தையும் அளித்தார்கள். அங்கிருந்து புறப்பட்ட இருவரும் வழியில் புத்தியீனனையும், நாத்திகனையும் வேறு சிலரையும் சந்தித்தார்கள். இறுதியில் ஆனந்த நாட்டுக்குள் (Enchanted Ground) அவர்கள் இருவரும் நுழைந்தார்கள். அங்கிருந்து இளைப்பாறுதல் தரக்கூடிய பழத்தோட்டத்துக்குள் (Land of Beulah) வந்தார்கள். தங்களுடைய பயணத்தின் இறுதிக் கட்டமான மோட்சப் பட்டணத்தை அடையுமுன் அவர்கள் கடக்க வேண்டிய ஒரு கடைசித் தடை இருந்தது. அது மரண ஆறு. அந்த ஆற்றைக் கடக்காமல் மோட்ச வாயிலை அடைய வேறு வழி இல்லை. ஆற்றைக் கடப்பவர்களுடைய விசுவாசத்தைப் பொறுத்து அதன் ஆழம் மாறிக்கொண்டிருந்தது. நன் நம்பிக்கை ஆற்றை இலகுவாகக் கடந்து விடுகிறான். ஆனால், கிறிஸ்தியான் ஆரம்பத்தில் பயத் தால் நடுங்கிவிடுகிறான். நன்நம்பிக்கை தனது நண்பனுக்கு பல ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவன் தலையை ஆற்றின் தண்ணீருக்கு மேல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறான். இறுதியில் கிறிஸ்தியான் கிறிஸ்துவை நினைத்து விசுவாசிக்க அவனுடைய பயங்கள் விலகிவிடுகின்றன. இரண்டு பேரும் ஆற்றைக் கடந்து மோட்சப் பட்டணத்தை அடைந்து மகிமைக்குள் வரவேற்கப்படுகிறார்கள்.

நூலின் இரண்டாம் பாகம்

நூலின் இரண்டாம் பாகத்தில் கிறிஸ்தியானைப் போலவே அவனுடைய பாதையில் செல்கின்ற ஒரு கூட்டத்தாரைச் சந்திக்கிறோம். அக்கூட்டத்தில் கிறிஸ்தியானின் மனைவியான கிறிஸ்தீனாளையும் (Christina), அவனுடைய குமாரர்களையும், மெர்சி (Mercy) என்னும் பெயருடைய கிறிஸ்தீனாளின் இளம் நண்பியையும் சந்திக்கிறோம். கிறிஸ்தியான் ஆற்றைக் கடந்த பிறகு அவனுடைய மனைவி இந்தப் பயணத்தை ஆரம்பித்தாள். இரண்டாம் பாகத்தில், முதலாம் பாகத்தில் இலகுவாக கையாள முடியாததும், அவசிய மில்லாததும் அல்லது உடனடியாக பொருந்திவராமலுமிருந்த சில அம்சங் களை விளக்க முனைகிறார் பனியன். இதைப் பற்றி விளக்கும் பனியன் “கிறிஸ்தியான் திறந்துவைக்காமல் விட்டுவிட்டுத் தன் வழியில் சென்ற பின் கிரிஸ்தீனாள் அவற்றைத் தன்னுடைய திறவுகோளால் திறந்துவைக்கிறாள்” என்கிறார். குறுகிய வாசலூடாக போவதற்கு முன்பாக இந்தப் புதிய பயணிகளும் பல தடைகளை தங்கள் வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு அவர்கள் விளக்கம் கூறுகிறவரின் வீட்டில் சில காலங்களைக் கழித்தனர். அவர் அவர்களுடைய பயணத் துணையாக தன்னுடைய சேவகர்களில் விசுவாசமிக்க துணிபு (Great Heart) என்பவனை அவர்களுக்குப் பாதுகாப்பாகக் அனுப்பிவைத்தார். போகின்ற வழியில் துணிச்சல்காரன் கிறிஸ்தியானுடைய பயண அனுபவங்களை அவர்களுக்கு விபரித்து, வழியில் சில இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு நிகழ்ந்த குறிப்பிட்ட சம்பவங்களையும் அவர்களுக்கு விளக்கிக்கொண்டு வந்தான். அத்தோடு, வழியில் பயணிகளுக்காக அவன் எதிரிகளோடு போராடி இரண்டு இராட்ச தர்களான இரத்த வெறியனையும், சங்கார அரக்கனையும் (Giants Maul and Slay Good) வெட்டிச் சாய்த்தான். துணிச்சல்காரனின் மிக முக்கிய செயல்களில் ஒன்று வீண் நம்பிக்கை என்ற அரக்கனையும், அவனுடைய மனைவியான அவிசுவாசத்தையும் (Giant Despair and his wife Diffidence) கொன்றதோடு சந்தேகக் கோட்டையையும் முற்றாகத் தகர்த்ததுதான். அவர்களுடைய பயணத்தின்போது ஏனைய பயணிகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் எல்லோருமே பல இடர்களை வழியில் சந்திக்க நேர்ந்தது. கிறிஸ்தியான் போன பாதையிலேயே அவர்களும் போனபோதும் கிறிஸ்தியான் சந்தித்திராத இடர்களையும் அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அத்தோடு, மத்தேயுவுக்கும் கிரிஸ்டீனாவின் இளம் நண்பியான இரக்கத்துக் கும் இந்தப் பயணத்தின்போது திருமணமாகியது. இறுதியில் அந்தப் பெரிய கூட்டமான பயணிகள் பியூளாவுக்கு வந்து சேர்ந்து ஆற்றைக் கடக்கத் தயாரானது. ஆற்றைக் கடப்பதற்கு முன்பு பல பயணிகள் ஒருவருக் கொருவர் ஆறுதல் வார்த்தைகளையும், எச்சரிப்புகளையும் சொல்லி ஒருவரையொருவர் திடப்படுத்திக் கொண்டார்கள்.

இந்நூலின் இரண்டு பாகங்களிலும் நாம் அழியும் நகரத்தைவிட்டு மோட்சப் பட்டணத்தை நோக்கிப் பயணம் செய்து அந்நகரைச் சென்றடையும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட உலகத்தின் பல தரத்து மக்களையும் காண்கிறோம். நூலின் இந்த அற்புதமான வடிவமைப்பு பனியனுக்கு கிறிஸ்தவ வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களையும், தனி மனித அனுபவங்களை மட்டுமல்லாமல், கிறிஸ்தவ சமுதாய அனுபவங்களையும் அலசவும், விளக்கவும் பேருதவி செய்தது. நாம் மேலே பார்த்த நூலின் சுருக்கமான விளக்கம் அதன்பொதுவான அமைப்பையும், பயணி களின் அனுபவங்களையும் விளக்க முயல்கிறது. பயணிகள் அனைவரைப் பற்றியும், அவர்களது துன்பங்கள், சோதனைகள், மகிழ்ச்சி எல்லாவற்றை யும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விபரமாக இந்தப் பகுதியில் ஆராய்வதற்கு இடம் போதாது.

இந்நூலின் பல முக்கியமான அம்சங்கள் இதை நாம் வாசிப்பதற்கு ஊக்கமளிக்கும். ஒவ்வொரு விசுவாசியும் ஏன் இந்த நூலை வாசித்தே ஆக வேண்டும் என்பதை இந்த அம்சங்கள் தெளிவாக விளக்குகின்றன.

(1) மோட்ச பயணத்தில் வேதத்தின் ஆளுமையைக் காண்கிறோம்.

மோட்சப் பயணத்தை வாசிக்கின்றபோது அதில் வேதத்தின் ஆளுமையை நம்மால் கவனிக்காமல் இருக்க முடியாது. ஜான் பனியனின் வேத ஞானத்தையும், அதில் அவருக்கிருக்கும் பரந்த அறிவையும் மூன்று விதங்களில் நூலை வாசிக்கின்றபோது நாம் விளங்கிக் கொள்ளுகிறோம். முதலாவதாக, அதில் வேத வசனங்கள் பெருமளவுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்பட் டுள்ளன. மோட்சப் பயணம் போகும் ஒவ்வொரு பயணியும் தங்களுடைய நம்பிக்கைகளையும், அனுபவங்களையும் விளக்குவதற்காகவோ அல்லது ஏனையோருக்கு ஆறுதல் அளிப்பதற்காகவோ அடுத்தடுத்து வேத வசனங்களை நூல் முழுவதும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். நூலின் ஆரம்பத்தில் பயணியின் முதலாவது அனுபவமாக கூறப்பட்டிருப்பது அவனுடைய வேத வாசிப்பில் அவன் கண்டுணர்ந்த உண்மைதான்: அவன் தன்னுடைய பாவத்தை உணர்ந்து இரட்சிப்பை நாடிப் பிலிப்பியர் சிறை அதிகாரி கதறி யதுபோல், “இரட்சிப்பை அடைவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான் (அப்போஸ்தலர் 16:30). அதற்குப் பிறகு பயணியின் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவனுடைய ஆத்மீகத் தேவைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தகுந்த வேத வசனங்களை நூல் முழுவதும் அவனுடைய பயணத்தின்போது பனியன் பயன்படுத்தியிருப்பதைக் காண்கிறோம்.

இந்தவிதத்தில் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வசனங்களை விட, வேதப்புத்தகத்தோடு பரிச்சயமுள்ள வாசகன் நூலை வாசிக்கும்போது அதன் வேதம் தழுவிய போதனைகளையும் இனங்கண்டு கொள்வான். சார்ள்ஸ் ஸ்பர்ஜன் மோட்சப் பயணத்தைப் பற்றிக்கூறும்போது “வேதமே இன்னொரு வடிவில் நூலாயிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து, “பனியன் தான் முழுமையான வேத ஞானத்தைப் பெறுமளவுக்கு வேதத்தை வாசித்திருக்கிறார். ஆகவே, நாம் மோட்சப் பயணத்தை வாசிக்கும் போது, ஆகா! இந்த மனிதன் ஜீவனுள்ள வேதமாயிருக்கிறார்.” என்று சொல்லுவோம். “அவரை எந்த இடத்தில் நீங்கள் குத்தினாலும் அவருடைய இரத்தில் வேதம் உறைந்திருப்பதைக் காணலாம்; அவருடைய ஆவி முழுவதும் வேதத்தால் நிறைந்திருக்கிறது” என்றார் ஸ்பர்ஜன். நேரடியாக வேத வசனங்களைப் பயன்படுத்தாத இடங்களில்கூட அவருடைய பேனாவில் இருந்து வேத வார்த்தைகளும், பதங்களும் ஆறாகப் புறப்பட் டிருக்கின்றன. வேதத்தைப் பயன்படுத்தாமல் அவரால் எழுத முடியவில்லை.

அடுத்ததாக, பனியனுக்கு வேதக்கோட்பாடுகளில் இருந்த ஞானத்தை நாம் மறந்துவிடக்கூடாது. நூலின் இரண்டு பாகங்களிலும் அதில் நாம் சந்திக்கும் பயணிகள் தங்களுடைய விசுவாச வாழ்க்கையின் அனுபவங்களைப் பற்றி நண்பர்களோடு பேசும்போதும், அவர்களுடைய எதிரிகளோடு தர்க்கம் செய்கின்றபோதும் வேதக் கோட்பாடுகளே அவர்களுடைய சம்பாஷனைகள் முழுவதிலும் நிறைந்திருப்பதைப் பார்க்கிறோம். அது பனியன் எந்தளவுக்கு வேதக் கோட்பாடுகளில் நிறைந்த ஞானத்தைக் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. பனியனைப் பொறுத்தவரையில் வேதம் காலத்துக்குதவாத நூலல்ல; விசுவாசியினுடைய விசுவாசத்திற்கும், வாழ்க்கைக்கும் வழிகாட்டுகின்ற அவசியமான நூல். ஜான் பனியன் நிறைந்த இருதயத்தைக் கொண்டிருந்த வேதத்திற்கு அடிமையான சுவிசேஷக் கல்வினியக் கோட்பாடுகளை விசுவாசித்த மனிதர் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. மார்டின் லூதரின் எழுத்துக்கள் அவருடைய இருதயத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. வேறு எந்த நூல்களையும்விட லூதர் கலாத்தியருக்கு எழுதிய விளக்கவுரை தன்னை மிகவும் பாதித்த நூலென்றும், காயப்பட்ட இருதயத்துக்கு இதமூட்டும் நல்ல லேகியம் அது என்றும் பனியன் கூறியுள்ளார். ஸ்பர்ஜன் சொன்னார், “வேதபூர்வமான கோட்பாடுகளுக்கு மறுபெயர்தான் கல்வினிசம்” என்று. பனியனின் மோட்சப் பயணம், இறையாண்மையும், இரக்கமும் கொண்ட கர்த்தர் தன்னுடைய கிருபையால் கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தினூடாகப் பாவிகளுக்கு இரட்சிப்பை அளித்து அவர்களைப் பரலோக வாழ்க்கைக்கு தயார்செய்வதை விளக்குகிறது. விசுவாசத்தின் மூலமாக மீட்பராகிய கிறிஸ்துவுக்குள் நீதிமானாக்குதலாகிய கோட்பாடு பனியனின் நூலில் அடிப்படைப் போதனையாக இருக்கிறது.

பனியனின் நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உருவகம் முழுவதும் வேதபூர்வமானது; அதன் சம்பவங்களும், விளக்கங்களும் வேதபூர்வமானவை; அதன் மொழி வேதபூர்வமானது; உள்ளடக்கமானதும், வெளிப் படையானதுமான அதன் போதனைகள் வேதபூர்வமானவை. வேதத்தை விசுவாசித்து அதன் போதனைகளின்படி வைராக்கியத்தோடு வாழ்ந்து வந்த பனியனின் ஆத்துமாவை வெளிப்படுத்தும் நூலாக இருக்கிறது மோட்சப் பயணம்.

(2). மோட்சப் பயணம் உறுதியானதும், ஜீவவல்லமையுள்ளதுமான கிறிஸ்தவத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

பனியன் வாழ்ந்த பதினேழாம் நூற்றாண்டுகளில் மெய்க்கிறிஸ்தவம் என்பது விளையாட்டுப்பொருளாகவோ வெறும் ஆர்வக் கோளாறாகவோ இருக்கவில்லை. அந்தக் காலத்தில் அரசோடு உடன்படாமல் இருந்த விசுவாசிகளும், சபைகளும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தனர். உன்னுடைய பாவத்தோடு நரகத்துக்குப் போகப் போகிறாயா? அல்லது பாவத்தை விட்டுவிலகி பரலோகம் போகப் போகிறாயா? என்ற பனியனுடைய இருதயத்தைப் பிழிந்து கொண்டிருந்த கேள்வியின் வெளிப்பாடுதான் மோட்சப் பயணம். நூலில் கிறிஸ்தியான் நற்செய்தியாளனிடம், “நான் இறக்க விரும்பவில்லை, கர்த்தரின் நியாயத் தீர்ப்பை சந்திக்கவும் அஞ்சுகிறேன்” என்று பனியனின் அனுபவத்தைத்தான் கூறுகிறான். நற்செய்தியாளனால் வழிகாட்டப்பட்டு மோட்சப் பட்டணத்தை நோக்கிப் புறப்பட்ட கிறிஸ்தியான் அதை அடையும்வரை பல்வேறு துன்பங் களுக்கும், ஆபத்துக்களுக்கும் மத்தியில் உறுதியாக தன் பாதையைவிட்டு விலகாமல் கர்த்தரின் கிருபையின் மூலமாக கரை சேர்கிறான்.

மோட்சப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விசுவாசியும் தன்னுடைய வாழ்க்கையில் சந்திப்பதுமில்லை; சந்திக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், இந்நூலின்மூலம் நாம் மெய்க்கிறிஸ்தவன் யார்? என்பதையும், கிறிஸ்துவுக்கும், வேதத்துக்கும் கட்டுப்பட்டு வாழ்கிற கிறிஸ்தவ வாழ்க்கையாது? என்பதையும், அறிந்துகொள்ளுகிறோம். அத்தோடு அக்கிறிஸ்தவ வாழ்க்கை பலத்த இடர்பாடுகளையும், பொறுப்புக்களையும், கடின உழைப்பையும், ஆபத்துக்களுக்கும், போலிப்போதனைகளுக்கும் எதிரான கடும்போராட்டத் தையும் உள்ளடக்கியது என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுகிறோம். நாம் விரும்புகிறவிதமாக இலகுவாக பரலோகத்தை அடையும் பாதையாக இல்லாமல், அதிக இழப்புகளோடு கிறிஸ்துவில் காட்டும் நேசத்தையும், கடைசிவரை கிறிஸ்துவில் உறுதியாக இருக்கும் கீழ்ப்படிவையும் கொண்ட கிறிஸ்தவத்தைக் காட்டும் நூலாக இருக்கிறது பனியனின் மோட்சப் பயணம். நாம் “அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவ இராஜ்யத்துக்குள் பிரவேசிக்க வேண்டும்” (அப்போஸ்தலர் 14:22) என்பதை இந்நூல் விளக்குகிறது.

அத்தோடு மோட்சப் பயணம் கிறிஸ்தியானின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுவதால் விசுவாசிகளுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இதன் இரண்டு பாகங்களிலும் நாம் சந்திக்கும் பயணிகளின் பக்திவிருத்தியின் வளர்ச்சியையும், அறிவுப் பெருக்கத்தையும், பயணத்தின் இடர்ப்பாடுகளைச் சந்திக்கும் மனப்பக்குவத்தையும், வல்லமையையும் பார்க்கிறோம். பயணிகளின் தவறுகளினால் ஏற்படும் ஆபத்துக்களின் மூலம் அநேக பாடங்களைப் படிக்க முடிந்தபோதும், தொடர்ந்து முன்னேறும் பக்திவிருத்தியான வாழ்க்கையையும், வரப்போகும் புதிய ஆபத்துக்களையும், எதிர்ப்புகளையும் முன்னெப்போதுமில்லாத புதிய மனஉறுதியோடு சந்திக்கும் அவர்களுடைய வைராக்கியத்தையும் கவனிக்காமல் இருக்க முடியாது. அதை நாம் முக்கியமாக இரண்டாம் பாகத்தில் கிறிஸ்தியா னுடயதும், கிரிஸ்டீனாவினுடையதும் குமாரர்களில் பார்க்க முடிகின்றது. அத்தோடு, கிறிஸ்தியானுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் காணப்படும் முதிர்ச்சியிலும் பார்க்க முடிகின்றது. கிறிஸ்தியானும் அவனோடு பயணம் செய்த மெய்யான பயணிகள் அனைவரும் மரண ஆற்றைக் கடந்து மோட்சப் பட்டணத்தை இறுதியில் அடைந்து மகிமையோடு இருக்கும் ராஜாவின் பிரசன்னத்தைத் தரிசித்ததை மறந்துவிடக்கூடாது.

(3) இறுதியாக, பனியன் இந்நூலில் கிறிஸ்தவனின் தனித்துவத்தையும், அவனுடைய நட்பின் தன்மையையும், அவனுடைய சமுதாயத்தையும் அறிவுபூர்வமாக விளக்கியுள்ளார்.

இந்நூலின் முதல் பாகம் தனி மனிதனான கிறிஸ்தியானுடைய பயணத்துக்கு மட்டுமே முத்தியத்துவமளிக்கிறது. வாசகர்களாகிய நாமும் அவனோடு உடன் பயணம் செய்து தனிப்பட்ட முறையில் அவனுடைய பயண அனுபவங்களில் இருந்து அநேக பாடங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம். ஆனால், கிறிஸ்தியானோடு நாம் மட்டும் பயணம் செய்யவில்லை. உண்மையானவனும், நன்நம்பிக்கையும் அவனோடு பயணம் செய்கிறார்கள். முக்கியமாக இரண்டாம் பாகத்தில் துணிச்சல்காரனை வழிகாட்டியாகக் கொண்டு ஒரு பெரும் கூட்டமே மோட்சப் பட்டணத்தை அடைகிறது. பனியன் ஒரு ஞானியின் திறமையோடு தனிப்பட்ட கிறிஸ்தவனின் வாழ்க்கை அனுபவங்களையும், அவனுடைய நட்பையும், சமுதாய உறவையும் அருமையாகப் படம்பிடித்துக் காட்டி நமக்கு கிறிஸ்தவ வாழ்க்கையின் மேன்மையை விளக்குகிறார். ஒவ்வொரு கிறிஸ்தவனும் மோட்சப்பட்டணத்தை அடைய வேண்டும். ஆனால், அவன் தான் அங்கம் வகிக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தோடு இணைந்து அதில் ஈடுபட வேண்டும். பலவீன மான சில வேளைகளில் கிறிஸ்தியான் தன்னுடய நண்பர்களில் அதிகம் தங்கியிருக்க நேரிட்டது. அதேபோல் அவனுடைய நண்பர்களும் அவனில் தங்கியிருந்தார்கள். சில வேளைகளில் நண்பர்களே தவறான வழிகளையும் காட்டிவிடுகிறார்கள் (கிறிஸ்தியானே நன்நம்பிக்கையை சந்தேகக் கோட்டை க்கு வழிகாட்டினான்). ஆனால், மொத்தத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி உதவிக்கொண்டார்கள். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவசியமான சக கிறிஸ்த வர்களின் துணையும், கிறிஸ்தவ நட்பின் மகத்துவத்தையும் நூல் முழுவதும் தெளிவாகப் பார்க்க முடிகின்றது. இரண்டாவது பாகம் துணிச்சல்காரனை அறிமுகப்படுத்துகிறது. அவனில் நாம் கிறிஸ்தவ இலக்கியம் படம்பிடித்துக் காட்டக்கூடிய அருமையான மெய்யான போதகனொருவனைக் காண்கிறோம். அவனுடைய வழிகாட்டுதலில் பயணிகள் தங்கள் வாழ்க்கையில் வளருகிறார்கள்; உயருகிறார்கள். கிறிஸ்தவ வாழ்க்கையின் குடும்ப உறவும், கிறிஸ்தவ சமுதாய உறவும் இரண்டறக் கலந்து இணைந்து பயணிக்கின்றன நூலில். கிறிஸ்தவம் மனிதன் தனிமையில் வாழ்வதற்கு வழி காட்டும் வாழ்க்கை நெறி அல்ல; திரித்துவத் தேவனோடு ஐக்கியத்தில் வந்து, அவரு க்கு விசுவாசமாக இருப்பவர்களோடு இணைந்து வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை நெறி. கிறிஸ்தவன் கர்த்தருக்கு முன்பாக வாழ்க்கின்ற தனிப்பட்ட வாழ்க்கையையும், அவன் தன்னுடைய குடும்பத்தாரோடும், நண்பர்களோடும், மெய்யான போதர்களைக் கொண்டு நடத்தப்படும் சபையிலும் வாழும் வாழ்க்கையை பனியனின் மோட்சப் பயணம் அழகாகவும், அறிவுபூர்வமாகவும், தெளிவாகவும் படம்பிடித்துக் காட்டுகின்றது.

ஜோன் பனியனின் மோட்சப் பயணத்தைப் பற்றி இதுவரை நான் தந்துள்ள சுருக்கமான விளக்கம் இந்நூலை வாசிக்கும்படி உங்களைத் துண்டியிருந்தால், உங்களுடைய ஆத்மீகப் பிரயாணத்திற்குப் பயன்படும்படி இந்தநூலை நீங்கள் கீழ்வரும் முறையில் வாசிப்பது அவசியம்:

1. நாம் மிகுந்த தாழ்மையுடன் வாசிக்க வேண்டும் – இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியனான பனியனை வழிநடத்தி அநேக சத்தியங்களை அவருக்கு வேதத்தில் இருந்து வெளிப்படுத்தியுள்ளார். அநேக ஆத்மீக சிறப்புமிக்க கிறிஸ்தவ ஜாம்பவான்களைக் கொண்டிருந்த பதினேழாம் நூற்றாண்டில் பனியன் பலராலும் உண்மையுள்ள போதகராகவும், வழி காட்டியாகவும் மதிக்கப்பட்டார். அத்தகையவரின் நூலை நாம் மிகத் தாழ்மையோடு வாசித்துப் பயனடைய வேண்டும்.

2. நாம் மிகுந்த கவனத்தோடு வாசிக்க வேண்டும் – நமக்கு இன்ப மூட்டு வதற்காகவும், சிறுவர்களுக்காகவும் பனியன் இதனை எழுதவில்லை. ஆழமான சத்தியங்களை உருவகமொழியில் அழகாகப் படம் பிடித்துக் காட்டி நமது நினைவில் நிற்க வைப்பதற்காக எழுதினார். நாம் படித்து உயருவதற்காக இது எழுதப்பட்டிருப்பதால் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்காகமிகுந்த கவனத்தோடு இதை நாம் வாசிப்பது அவசி யம். இது கதைப் புத்தகமல்ல; இது வாழ்க்கையைப் பற்றிய நூல். கர்த்தரை மகிமைப்படுத்தும் வாழ்க்கையை நாம் வாழ வழிகாட்டும் நூல்.

3. நூலை நாம் ஜெபத்தோடு வாசிக்க வேண்டும் – இந்நூல் ஆழமான சத்தியங்களை உள்ளடக்கியிருப்பதால் ஜெபத்தோடு நாம் நூலை வாசிக்க வேண்டும். அத்தோடு, வேதத்தைத் திறந்து வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் படிக்கவேண்டும். கற்றுக்கொள்வதற்கு அகங்காரமில்லாதவர்களுக்கு இந்நூல் கற்றுத்தர வேண்டிய சத்தியங்கள் அநேகம் உண்டு.

4. நூலை நாம் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் – ஸ்பர்ஜன் இதை நூறுதடவைகளுக்கு மேல் வாசித்திருக்கிறார் என்று அறிகிறோம். இது நமக்கு நல்ல வழிகாட்டி. நூல் முழுவதும் வேதத்தால் நிரம்பியிருப்பதால் அது நமக்கு வேத போதனையளிக்கிறது. நமது ஆத்மீகப் பயணத்திற்கும், பக்தி விருத்திக்கும் தேவையான நேரங்களிலெல்லாம் ஆலோசனை தரக்கூடியதாக இருக்கிறது. நாம் வாழ்க்கையில் எதிர்நோக்கக்கூடிய புதிய புதிய சோதனைகளுக்கெல்லாம் இது தகுந்த ஆலோசனை தந்துதவும்.

முதலாம் அதிகாரம்