உண்மையான மேய்ப்பனும் தேவனுடைய வீடும்

Home

முந்திய பகுதி..அவமானத்தின் பள்ளத்தாக்கு

உண்மையான மேய்ப்பனும் தேவனுடைய வீடும்

ஆட்டிடையனின் பாடல்

பயணிகள் முன் செல்லும்போது ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனைக் காண்கிறார்கள். இவனது ஆடை மிகவும் எளிய முறையில் இருந்தாலும் இவனது முகம் பிரகாசமாகக் காட்சியளிக்கிறது. வழிகாட்டி பயணிகளை நோக்கி அந்த மேய்ப்பன் பாடுவதை கேட்கலாம் என்றார். "கீழே இறங்கும்போது பயமேன்? பெருமை இல்லாமல் மனத்தாழ்மையோடு இருந்து தேவனை தனது வழிகாட்டியாக இருக்கும்போது நான் மனரம்மியமான வாழ்க்கை வாழ்கிறேன் மோட்சப்பயணத்தில் பாரம் இல்லாமல் முன்செல்ல இந்த உலகத்தில் கொஞ்சம் இருந்தாலும், கூடுதல் இருந்தாலும், மனரம்மியமாக இருப்பதை நாடுவேன். இங்கே கொஞ்சம் இருந்தாலும் போதும். இனிமேல் கிடைப்பது யுகயுகமான நித்திய பேரின்பம்", என ஆட்டிடையன் பாடுகிறான். வழிகாட்டி, "இந்த ஆட்டிடையன் ஆனந்தக்களிப்புடன் இந்த வாழ்க்கை வாழுகிறான். பட்டு, வழவழப்பு ஆடைகளை அணிபவர்களைக் காட்டிலும் தன் இதயத்தில் பாரமில்லாமல் இதயத்தின் எளிமை என்ற இலையால் உண்டாக்கப்படட ஆடையை தரித்திருக்கின்றான்," என்றார்.

அழுகையின் பள்ளத்தாக்கு

"இந்த பள்ளத்தாக்கில் நமது ஆண்டவரின் குடியிருப்பு ( நாட்டு வீடு) இருந்தது. அவர் இதை அதிகமாக நேசித்தார். இந்த பசுமை புல்லின்மேல் நடக்க விரும்பினார். இங்குள்ள காற்று இனியதாக இருக்கக் கண்டார். இங்கே ஒரு மனிதன் அமைதியாக உலகத்திலுள்ள இரைச்சலிருந்தும், வேகமான காரியங்களிலிருந்தும் ( hurryings of this life) தன்னைக் காத்துக்கொள்கிறான். இந்த பள்ளத்தாக்கில் தனிமையும் வெறுமையும் ஆட்க்கொள்கிறது. தனது தியான வாழ்விற்கு எதுவும் தடையில்லாமல், பரதேசியின் வாழ்க்கைக்கு உகந்ததாக அமைந்து இருக்கிறது. கிறிஸ்டியான் இந்த இடத்தில் அப்பொல்லியோனை சந்தித்து அவனை துரிதமாக முறியடித்தாலும், முந்திய நாட்களில் தேவமனிதர்கள் தேவதூதர்களை இங்கே சந்தித்திருக்கிறார்கள். இங்கே முத்துக்களைக் கண்டெடுத்தனர். இந்த இடத்தில் நித்திய வாழ்விற்காக வார்த்தைகளைக் கண்டெடுத்தனர்," என்று வழிகாட்டி கூறினார். தேவனுடைய வீட்டை பராமரித்தல்

"ஆண்டவரின் நாட்டு வீட்டில் வீட்டை சுற்றியுள்ள நிலத்தை வருட பராமரிப்புக்காக ஒரு வருவாய் தொகை ஒழுங்காய் செலுத்தும்படி விதிமனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வீட்டையும், நிலத்தையும் பராமரிப்பவர்களுக்கு இந்த வருவாய் தொகை குறிப்பிட்ட காலங்களில் செலுத்தப்படவேண்டும். அவர்களுக்கு செய்யும் இந்த சேவை அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தி, மோட்சப்பயணிகளுக்கு உதவிசெய்ய ஏதுவாயிருக்கிறது",என்று வழிகாட்டி கூறினார்.

ஞாபக மறதி என்ற மோசமான இடம்

சாமுவேல் தன் தகப்பன் எந்த இடத்தில் அப்பொல்லியனோடு யுத்தம் செய்தார் என கேட்க, வழிகாட்டி ஒரு குறுகலான இடம் என்றும், அது மிக மோசமான இடமாகிய "ஞாபக மறதி" (Forgetful Green) என்றார். அப்பொல்லியானோடு கிறிஸ்டியான் சண்டை போட்டு வெற்றி பெற்றது ஒரு குறுகிய இடம்; அதன் அருகில் இருப்பது "ஞாபக மறதி" என்ற இடம்! பயணிகள் தங்களுக்கு ஆண்டவர் செய்த நன்மைகளை மறக்கும்போது இந்த இடத்தில் அவதிக்குள்ளாகுகிறார்கள். இந்த இடத்தில் நடந்த யுத்தத்தின் அடையாளம் இன்றும் எல்லாரும் காணும்படியாக இருக்கிறது,"என்று உரைத்தார்.

"நான் இந்த இடத்தை மிகவும் நேசிக்கிறேன், ஏனென்றால் எனது இருதயம் உருகி கண்களிலிருந்து நீர் தாரைதாரையாக வடிந்து எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போல மாறுகிறது (உன்னதப்பாட்டு 7:4) . இந்த அழுகையின் பள்ளத்தாக்கிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து மழையும் குளங்களை நிரப்பும் (சங்கீதம் 84 :6); இந்த பள்ளத்தாக்கின் தண்ணீரானது வானத்திலிருந்து தேவனால் அனுப்பப்படுகிறது. பின்பு இந்த பள்ளத்தாக்கின் நீர் மூலம், பரம அரசன் தன் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவார். கிறிஸ்டியான் போல, இந்த பள்ளத்தாக்கின் வழியாக போகிறவர்கள் பாடிக்கொண்டும் துதித்துக்கொண்டும் போவார்கள். அனேகரின் கண்ணீரால் இந்த பள்ளத்தாக்கு ஆனந்த பள்ளத்தாக்காக மாறுகிறது," என்று மேர்சி கூறுகிறாள்.

"நானும் இந்த பள்ளத்தாக்கின் வழியாக அநேகந்தரம் கடந்துப்போயிருக்கிறேன். ஆனால், இப்போது எனக்குள்ள அனுபவம் முந்திய அனுபவங்களைக்காட்டிலும் வித்தியாசமாயிருக்கிறது", என்று வழிகாட்டி பதிலளித்தார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

உண்மையான மேய்ப்பர்கள் எங்கே?

இந்த பகுதியில் ஒரு மாதிரி மேய்ப்பனைக் காண்கிறோம். இந்த மேய்ப்பன் தனது ஆடுகளை பசுமை நிறைந்த பள்ளத்தாக்கில் மேய்த்துக்கொண்டிருக்கிறான். அவன் அணிந்திருக்கும் உடை அவனது சாதாரண, எளிய வாழ்க்கையை காண்பிக்கிறது. அவன் மனரம்மியமாக இருக்கிறான்.

இந்த மேய்ப்பன் தனது பிதாவின் ஆட்டுக்களை மேய்த்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறான். அவனுக்குள்ள ஒரே கவலை ஆடுகளை பராமரிப்பதுதான். தான் என்ன உடுத்தவேண்டும் என்ற கவலை சிறிதளவும் இல்லை.

மேலேயுள்ள அவனது பாட்டை தியானிக்கவும்.

மேய்ப்பன் என்றால் ஒரு சபையை நடத்தும் போதகர் மாத்திரம் அல்ல. "......இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்" (யோவான் 21:5). எல்லா இயேசுவின் சீடர்களுக்கும் ஆடுகள் இருக்கிறது. ஒரு சீடனின் கடமை என்னவென்றால் வேத அறிவில் குறைவு உள்ளவர்களுக்கு வேதத்தை கற்றுக்கொடுப்பதும், ஆவிக்குரிய ஜீவியத்தில் புதிய விசுவாசிகளை வழி நடத்துவதும், அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்பதும் ஆகும்.

நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். ஓநாய் போன்ற கள்ள தீர்க்கதரிசிகளின் வாயிலிருந்து தன் ஆடுகளை தனது ஜீவனை கொடுத்து காக்கிறான். ஆடுகளை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறான் (யோவான் 10:5).

ஒரு தீர்க்கதரிசன ஊழியன் தன் ஆடுகளை கள்ள தீர்க்கதரிசிகளின் வாயிலிருந்து தப்ப வைப்பது அவனது தலையானக் கடமையாகும்.

ஓநாய்கள் யார்?

நம்மிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நாம் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யவேண்டும் (1 பேதுரு 5:2-3).

போதகர்களின் மந்தைகள் அல்ல. தேவனின் மந்தை என்பதை மறக்கக்கூடாது.

அப்போஸ்தலர் 20ம் அதிகாரம், 17-38 வசனங்களைத் தியானிக்கவும். எபேசு சபையின் மூப்பர்களை அழைத்து பவுல் தான் மரிக்கும் முன், ஒரு எச்சரிக்கையின் செய்தியை தீர்க்கதரிசனமாக கூறுகிறார். அந்தய காலத்தில் ஒரு சபையை வழிநடத்துவது மூப்பர்கள் (elders) தான் என்று அறிகிறோம். இன்று நாம் காண்பது போல ஒரு போதகர் (Pastor) மாத்திரம் தான் சபையை நடத்துகிறார். அவரைத்தான் சபை மேய்ப்பர் என்று கூறுகிறோம். இந்த முறை மாறவேண்டும்.

தனக்கு கட்டுகளும் உபத்திரவங்களும் பரிசுத்த ஆவியானவர் மூலம் அறிந்திருந்து, தன் பிராணனையும் அருமையாக எண்ணாமல் தன் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன் என்றும் இனி அவர்கள் அவன் முகத்தைப் பார்க்கமாட்டார்கள் என்றும், தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி தான் சுத்தமாயிருக்கிறேன் என்று தெளிவாக கூறி பவுல் அவர்களுக்கு ஒரு கடைசி எச்சரிப்பு கொடுக்கிறார். தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த

ஆவியானவர் நம்மை கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், நாம் விழிப்போடும் எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று பவுல் எபேசு சபையின் மூப்பருக்கு அறிவிக்கிறார். அவர் மரித்தபின்பு தான் "மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள்" அவர்களிடத்தில் வரும் என்றும், "உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று" அறிவிக்கிறார்.

நன்றாக கவனிக்கவும். மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் அவர்களில் மத்தியிலிருந்துதான் எழும்புவார்களாம். சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களாம். "ஆனபடியால்", அந்த மூப்பர்களுக்கு மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் பவுல் தனித்தனியாய் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்துக்கொண்டு அவர்கள் விழித்திருக்கும்படி பவுல் எச்சரிக்கிறார். மேலும் தான் ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் இச்சிக்கவில்லை என்றும் அவர்கள் எல்லாரும் அறிந்திருக்கிறபடி, அவருக்கும் அவரோடு கூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக "இந்தக்" கைகளே வேலைசெய்தது என்று கூறி தான் இவ்விதம் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் அந்த மூப்பர்களுக்கு காண்பித்தேன் என்கிறார். பின்பு அவர்களெல்லாரும் மிகவும் அழுது, அவனின் முகத்தை இனி அவர்கள் பார்க்கமாட்டார்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு, பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவரை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவருடனே கூடப்போனார்கள்.

இந்த நூற்றாண்டிலுள்ள ஓநாய்கள் யார்? இவர்கள் நமது மத்தியில்தான் இருக்கிறார்கள். ஆண்டவரின் மந்தையை தங்களது கூடாரங்களுக்குள் இழுத்து இந்த மந்தைகளின் பொருட்களையும் காணிக்கைகளையும் இச்சித்து, வேதத்திற்கு மாறுபாடானவைகளைப் போதித்து, ஆண்டவரின் மந்தையை வைத்து அவர்களின் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டுகிறார்கள். பவுல் தனது கைகளால் சம்பாதித்து தானும் தனது கூட இருந்தவர்களுக்கும் தங்கள் உலக வாழ்க்கையை நடத்தினார்கள் என்று தெளிவாக கூறுகிறார். பவுலைப்போல எல்லா சத்தியங்களையும் போதிக்காமல் வெறும் லேவியரின் தசமபாகத்தைக் குறித்து போதித்து, அதை இச்சித்து, தேவனின் மந்தையை தங்களின் கூடாரங்களில் அடைத்து வைத்திருக்கும் எந்த ஊழியனும் ஒரு ஓநாய் போல காட்சியளிக்கிறான். ஓநாய் போன்ற ஊழியர்கள் தங்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் மற்றவர்களுக்கோ, ஏழை விசுவாசிகளுக்கோ, விதவைகளுக்கோ தங்களின் வருமானங்களிலிருந்து கொடுக்கவிடமாட்டார்கள். இவர்கள் தப்பான போதனைகளையும் போதித்து தேவனின் மந்தையை இடற வைக்கிறார்கள்.

இந்தவிதமான கள்ள ஊழியர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருந்து தேவனது மந்தையை இந்த மோட்சப் பயணத்தில் காணும் ஆட்டுடையானை போல காத்துக்கொள்ளவேண்டும். இந்த மந்தையை தேவன் தன் தேவன் தம்முடைய சுயரத்தத்தினால் சம்பாதித்தாராம்.

இந்த கள்ள ஊழியர்களை "மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள்" என்று பவுல் குறிப்பிடுகிறார்!

ஒரு மேய்ப்பன் எப்படி ஓநாயாக மாறுகிறான்?

"மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்"(எசேக்கியேல் 34:2). நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொண்டு கொழுத்த ஆடுகளை அடிக்கிறீர்கள். பணக்கார விசுவாசிகளை தேடி சென்று அவர்களின் காணிக்கையையும் சொத்தையும் அபகரிக்கிறீர்களே! பின்பு மந்தையை மேய்க்காமற்போகிறீர்கள். நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள். மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாயின. என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்" (எசேக்கியேல் 34:3-8).

கர்த்தரின் ஆடுகளை விசாரிக்காமல் அந்த மந்தையை மேய்க்காமல் சபை போதகர்கள் தங்களையே மேய்த்தால், கர்த்தர் அந்த போதகர்களை நியாயம் விசாரிப்பார். அந்த ஆடுகளை காட்டு மிருகங்களான சாத்தானின் பொல்லாத கூட்டம் பட்சிக்கும்போது, இந்த போதகர்கள் தேவனுக்கு பதிலளிக்கவேண்டும்.

கஷ்டத்துடன் சுவிசேஷம் அறிவித்து ஒரு ஊழியன் ஒரு கூட்டத்தாரை ஆண்டவரிடம் வழிநடத்தி அவர்களை புல்வெளிகளில் மேய்க்கிறான். நாளடைவில், அந்த ஆடுகளின் மாம்சத்தின் மேல் அந்த மேய்ப்பனுக்கு ஆசை வருகிறது. அந்த ஆடுகள் தன்னை மேய்க்கும் மேய்ப்பனுக்கு தங்களது பாலை கொடுக்க சம்மதிக்கிறது. பாலை ஒரு ஆடு அளவுக்குமேல் கொடுக்கமுடியாது. ஆனாலும் மேய்ப்பன் அந்த ஆடுகளிடமிருந்து மேலும் பால்களை கறக்கும்படி அவர்களுக்கு தப்பான உபதேசம் செய்து அவைகளிடமிருந்து கூடுதல் பால்களை கறந்து கள்ள உபதேசத்தால் அவர்களை ஆத்தும வாழ்க்கையில் பெலவீனப்படுத்தி இடற வைக்கிறான். எப்படியென்றால், அந்த ஆடுகளை பரம மேய்ப்பரின் மேல் நம்பிக்கை வைக்காமல் தன் மேல் நம்பிக்கை வைத்து அந்த ஆடுகள் மேய்ப்பனையே சார்ந்திருந்து ஆத்தும வாழ்க்கையில் ஜீவிக்கும்படி செய்கிறான்! இயேசுவின் மந்தை அல்லவா! அவரல்லவா இந்த ஆடுகளின் மேய்ப்பன்!

நாளடைவில், அந்த மேய்ப்பன் தன் கீழேயுள்ள ஆடுகளை பட்சிக்கும் ஓநாயாக மாறிவிடுகிறான். தசமபாகம் கொடுக்கும் இந்த ஆடுகளை தனது தொழுவத்திலிருந்து வேறு தொழுவத்திற்கு போகவிடாமல் தடுத்துக்கொள்கிறான். இந்த ஆடுகளை கிறிஸ்துவின் சீடர்களாக மாற்றாமல் அவர்களை வைத்து தனக்கு ஆதாயம் வரும்படி செய்துவிடுகிறான். இந்த ஆடுகள் எப்போதும் ஆவிக்குரிய குழந்தைகளாவே இருக்கும்படி விரும்புகிறான். ஆண்டவருடைய பார்வையில் இந்த ஆடுகள் சிதறிக்கப்படுகிறது.

"நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்கள் மேய்ச்சல்களில் மீதியானதை உங்கள் கால்களால் மிதிக்கலாமா? தெளிந்த தண்ணீரைக் குடித்து மீதியாயிருக்கிறதை உங்கள் கால்களால் குழப்பிப்போடலாமா?" (34:18).

"அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்" (சங்கீதம் 23:2). அந்த மந்தைக்கென்றே கிறிஸ்து அனேக சரீரப்பிரகானமான ஆசிர்வாதங்களை தெளிந்த தண்ணீராக வைத்திருக்கிறார். அந்த மந்தையின் ஆசிர்வாதங்களை மேய்ப்பர்கள் இச்சித்து அவர்களது கால்களால் குழப்பிப்போடுகிறார்கள். அந்த தெளிந்த தண்ணீரை அவர்கள் இச்சிக்கும்போது அவர்களது கால்களால் தீட்டுப்படுகிறது.

கிறிஸ்து தன் மந்தைக்கு அவர்களின் கைகளின் மூலம் வரும் சம்பாத்தியத்தை மேய்ச்சலாக வைத்திருக்கிறார். அந்த நல்ல மேய்ச்சலை யாரும் இச்சித்து தங்களது கால்களால் மிதிக்கக்கூடாது. இன்று அநேக தேவபிள்ளைகளை நமது பரம மேய்ப்பன் பசுமை நிறைந்த தேசங்களிலும், பட்டிணங்களிலும் வைத்து தெளிந்த தண்ணீரைக் கொடுக்கிறார். இந்த தண்ணீரானது தெளிவானதாக இருக்கிறது.

நாம் நமது கைகளின் பிரயாசத்தால் பொன்னையோ வெள்ளியையோ சம்பாதிக்கிறோம். இந்த ஆசீர்வாதங்களை நாம் கைகளில் கறைகளோடு சம்பாதிப்போமானால் இந்த தண்ணீர் கறைப்பட்டு விடும். அநியாகமாக அல்லது ஊழலின் மூலம் சம்பாதிக்கும்போது இந்த ஆசீர்வாதங்கள் நமக்கு சாபமாக மாறிவிடுகிறது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் உண்மையாக இருக்கவேண்டும்.

இரண்டாவது சபை மேய்ப்பர்கள் அறியவேண்டியது, இப்படி கஷ்டப்பட்டு கர்த்தரின் சம்பாதிக்கும் பொன்னையோ வெள்ளியையோ எந்த ஊழியக்காரனும் இச்சிக்கக்கூடாது.

பவுல் எபேசிய சபை மூப்பருக்கு சொல்லுவதாவது (அப்போஸ்தலர் 20:33) "ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை".

கிறிஸ்துவின் மந்தையின் மேய்ச்சலையோ தண்ணீரையோ யாரும் இச்சிக்கக்கூடாது. ஆனால், இந்த மந்தைக்கு சேவை பண்ணும்போது இவர்கள் தங்களது மனதாரக் கொடுக்கும் பரிசுகளையும், காணிக்கைகளையும் மேய்ப்பர்கள் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளலாம்.

இன்று நமது போதகர்கள் வியாபாரம் செய்யும் பணக்கார கிறிஸ்துவின் ஆட்டுக்களை மிகவும் அதிகமாக கனம் பண்ணுகிறார்கள். அவர்களிடமிருந்து "தசம பாகம்" என்ற பழைய ஏற்பாட்டு லேவியரின் சம்பாத்தியத்தை இச்சிக்கிறார்கள். இந்த தசம பாகத்தை தங்களுக்கு சட்டப்படி கொடுக்கும்படியான ஒரு உரிமையாக (Legal right) கருதுகிறார்கள். அல்லது தேவனின் கட்டளையாக மல்கியாவின் தீர்க்கதரிசன புத்தகத்தின் (3:7-10) வசனங்களை குறிப்பிடுகிறார்கள். "நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்". தசம பாகத்தை கொடுக்காத தேவ மக்களை இந்த வசனத்தை சுட்டிக்காட்டி தேவனை நீங்கள் தசமபாகத்திலும் காணிக்கைகளிலும் வஞ்சிக்கிறீர்கள் என்றும், தராததால் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றும் கூறி இவர்கள் உங்கள் கைகளின் பிரயாசங்களை இச்சிக்கிறார்கள்.

"என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்". தேவனது பண்டசாலை அவரது ஆலயத்திலிருக்கிறது. ஆகாரம் என்பது பணமோ வெள்ளியோ அல்ல. புதிய ஏற்பாட்டில் தேவ ஆலயமானது கிறிஸ்துவின் சபையாகும். இந்த சபையில் உண்ண ஆகாரமின்றி தவிக்கும் மக்களுக்கு ஆகாரம் உண்டாயிருக்கும்படியும் தரித்தாராக இருக்கும் ஆட்டுக்களுக்கு (poor saints) எல்லாவிதமான உதவிகளும் செய்வதற்கு நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

பத்தில் ஒரு பங்கு பழைய ஏற்பாட்டின் லேவிய ஆசாரிகளுக்கான நியமம். நமக்கோ ஒரு வரைகோடு கிடையாது. நாம் தேவ வீட்டில் எல்லாருக்கும் ஆகாரம் உண்டாயிருக்கும்படி கொடுக்கவேண்டும். சபை போதகர்களுக்கும் நாம் ஆகாரம் கொடுக்கவேண்டும். "திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்" (கலாத்தியர் 6:6).

மேற்கொண்டு, இந்த எசேக்கியேல் 34ம் அதிகாரத்தை தொடர்ந்து தியானிக்கவும். இந்த சிதறுண்ட ஆடுகளை அந்த மந்தையின் சொந்த மேய்ப்பன் தேடி வந்து ஓநாய்களான மேய்ப்பர்களிடமிருந்து மீட்பாராம்.

பழைய ஏற்பாட்டின் காலத்திலுள்ள ஆடுகளை பட்சிக்கும் இஸ்ரவேல் மேய்ப்பர்களை விரட்டி தனது ஆடுகளை பரமாரிக்கும்படி கிறிஸ்துவாகிய நல்ல மேய்ப்பன் வெளிப்பட்டார். அதேபோல புதிய ஏற்பாட்டின் கீழுள்ள கள்ள மேய்ப்பர்களையும் தேவன் நியாயம் விசாரிப்பார். இந்த சிதறுண்ட ஆடுகளை தனது கிறிஸ்துவின் சரீரமான சபையின் மூலம் மீட்டெடுக்கிறார் (Restoration Ministry).

ஓநாயாக மாறுவது ஒரு சபை நடத்தும் போதகர் மாத்திரம் அல்ல. ஒரு சுவிசேடகனும் நாளடைவில் ஒரு ஓநாயாக மாறலாம். தனது ஊழியத்தின் மூலம் கிறிஸ்துவை அறிந்தவர்களிடமிருந்து பணத்தை இச்சித்து தனது ராஜ்ஜியத்தினை கட்டும்போது ஓநாயாக மாறிவிடுகிறான். தேவ மக்களிடமிருந்து காணிக்கைகள் வாங்குவதன் மூலமாக அல்ல! தேவ மக்களின் பண உதவியோடு ஊழியம் செய்யும்போது அல்ல! சுவிசேஷம் மூலம் ஒரு ஊழியன் பிழைப்பு நடத்தலாம். ஆனால் தேவ மக்களின் பணத்தை இச்சிக்கும்போதுதான் (covetousness) ஒரு ஊழியன் ஓநாயாக மாறுகிறான்.

I தீமோத்தேயு 6 :7-12 வசனங்களை தியானிக்கவும். " போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்..........பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்". ஆகவே ஊழியம் செய்கிறவர்களும் ஊழியம் பெறுகிறவர்களும், பணத்தின்மேல் ஆசை வைக்காமல், மோட்சப்பயணத்தில் கவனமாகயிருந்து மோட்சப்பட்டணத்தை நோக்கி ஓடவேண்டும். ஒரு உண்மையான மேய்ப்பனின் வாழ்கை வரலாறு மறக்கக்கூடாத இறைஊழியர் என்ற ஒரு கட்டுரையில் ஒரு அருமையான சபைபோதகரை குறித்து படித்தேன். இவரின் பெயர் Rev. பரமானந்தம் (1873-1960) ஆகும். இவர் அந்த காலத்தில் பணி புரிந்த அயல்நாட்டு missionary Rev Thomas Walker உடன்திருநெல்வேலியிலுள்ள பண்ணவிளையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும், மற்றும்கேரள நாட்டிலும் ஊழியம் செய்துவந்தார். Bishop V .S Azariah, Dr Edithurai அவர்களுடனும் கூட்டங்கள் நடத்தினார். இவரின் ஊழியம் மூலம் சபைகளில்எழுப்புதல் உண்டாயிற்று. இவருக்கும் மதுரை பசுமலையை சேர்ந்த கனம் பார்ன்ஸ்போதகரின் பேத்தி சாராள் என்னும் ஊழிய வாஞ்சையுள்ள சாராளுக்கும் திருமணம்நடந்தது இந்த தம்பதியாருக்கு 4 ஆண் குழந்தைகளும் ஒரு பெண்

பிள்ளையையும்தேவன் ஈவாக அருளினார்.

1907ம் ஆண்டு சென்னை ராயபுரம் ஸ்காட்லாந்து மிஷன் சபை போதகராக(space) பணிபுரிந்தார். ஆராதனைகளும், சபை நடவடிக்கைகளும் கர்த்தருக்கு(space)மகிமையாகவும், சபையாருக்கு ஆசிர்வாதமாகவும்

நடந்தேறின. ஒவ்வொருஆராதனையிலும் கர்த்தர் பலமாய்க் கிரியை செய்தார். ஆலயம் நிரம்பி வழிந்தது. பலமுறை ஆலயத்தை விரிவாக்கம் செய்தனர். நோயாளிகளை பலரை அற்புதமாககர்த்தர் சுகமாக்கினார். ஆராதனை நிறைவு பெற்று சபையார் செல்லும்போதுமனதில் பாரம் நீங்கி மகிழ்ச்சியுடன் சென்றனர். பணம் சேர்க்கும் பொருட்டுவிற்பனைகள், கேளிக்கைகள், களியாட்டுகள்

நடத்தப்படுவதில்லை. காணிக்கைகள், கட்டாய காணிக்கைகள், நன்கொடைகள் பற்றி பேசுவதில்லை. சபையின்(space)செயல்பாடுகளைக் கண்ட சபையார் வேண்டிய பொருளுதவி தானாகவே செய்தனர். பரமானந்தம் ஐயர் ஜெபித்து திட்டமிட்டு மேற்கொண்ட பணிகள் அனைத்தையும் வெற்றியாய் முடிக்க கர்த்தர் கிருபை செய்தார். ராயபுரம் சபையை விட்டுசென்றபின், பல இடங்களில் கூட்டம் நடத்தினார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் கர்த்தர் இவரை வல்லமையாய் உபயோகித்தார். 1914ல் பர்மாவிற்கும் சென்றார். ஒரு வருடம் சென்றபின், ராயபுரம் சபைக்குத் திரும்பினார். புதிதாக சிலர் சபை வருமானத்தில் திட்டமிட்டு தவறு செய்வதை கண்டு மனம் வருந்தினார். இதற்காக போதகரும், சபையாரும் ஊக்கமாக ஜெபித்தனர். தவறு செய்தவர்கள் தாமாக ஒதுங்கிக்கொள்ளும் நிலைக்கு கர்த்தர் கிரியை செய்தார். மீண்டும் முன்பு இருந்ததைப்போல சீராயிற்று. சபை நிரம்பியது. சபையாரின் உள்ளமும் மகிழ்ச்சியால் நிரம்பியது.

கேரளமாநில மாராமன் கிறிஸ்தவ எழுப்புதல் மாநாட்டில் 5 முறை

செய்தியாளராகஅழைக்கப்பட்டு 1919ல் சாது சுந்தர்சிங்குடன் சேர்ந்து ஊழியம் செய்தார். 14 புத்தகங்களும், 100 பாடல்களுக்குமேல் எழுதி இரட்சணியக்

கீர்த்தனைகள் என்னும்பெயரில் பல பதிப்புகள் வெளியிட்டார்.

1957ம் வருடம் பெரிய வெள்ளிக்கிழமையன்று கிண்டி காந்தி மண்டபத்தில் தமிழ்நாட்டின் கவர்னர் பிரகாசம் தலைமையில் முன்னாள் முதல்வர் உயர்திருஇராஜகோபாலச்சாரியர், தலைமை செயலர், அரசு உயர் அதிகாரிகள், முன்னணி நடிகர்கள், நடிகைகள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் நிறைந்த கூட்டத்தில்"இயேசுவை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்னும் தலைப்பில், எம்மதமும் சம்மதம் அல்ல, இயேசு ஒருவரே

தெய்வமென்று வல்லமையாக(space)எடுத்தியம்பினார். அநேகரை

கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி ஒரே திருச்சபையில் 45 வருடங்கள் பணி செய்து, சாட்சியாக வாழ்ந்த, சங்கை பரமானந்தம் ஐயர் 15.05.1960 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். அவரை காசிமேட்டிலுள்ளகல்லறைத்தோட்டத்தில் நல்லடக்கம் செய்தார்கள்.

இதை படிக்கும் சபை போதகரே, பரிசுத்தாவியானவர் இன்று உங்களோடுபேசுகிறார். இந்த ஊழியரின் சுவடுகளை பின்பற்றி ஊழியம் செய்யலாம் அல்லவா!

மகிமையில் பிரவேசித்த பரிசுத்தவான்கள்

அவமானத்தின் பள்ளத்தாக்கு அநேக பரிசுத்தவான்கள் வடித்த கண்ணீர்களினால் அழுகையின் பள்ளத்தாக்காக மாறி இந்த பள்ளத்தாக்கில் கடந்து போகும் மற்ற பயணிகளுக்கு ஆனந்த பள்ளத்தாக்காக மாறிவிடுகிறது.

அப்பொல்லியனால் சோதிக்கப்பட்டு அவனோடு யுத்தம் பண்ணி, கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடந்து வந்த கிறிஸ்டியானை போல பக்தர்கள், கிறிஸ்டியானா, மேர்சி போன்ற பயணிகளை சுலபமாக மோட்சப்பயணத்தை மேற்கொள்ள, உதவுகிறார்கள். கிறிஸ்டியான் போன பாதை வேறு. அவன் மனைவியும் பிள்ளைகளும் போன பாதை வேறு. நமது பெற்றோர்கள் நமக்காக கண்ணீர் வடித்து ஜெபம் பண்ணி சாத்தானோடு யுத்தம் செய்ததினால், நாம் ஆனந்த களிப்போடு இந்த பள்ளத்தாக்கை கடந்து வருகிறோம். நமக்காக ஜெபித்து, வழிநடத்தி ஆண்டவரின் வாக்குத்தந்தங்களை நமக்கு ஆசீர்வாதமாக மாற்றி கொடுத்து, தேவ ராஜியத்தில் பிரவேசித்த பரிசுத்தவான்களை நாம் ஒருக்காலும் மறக்கக்கூடாது.

நானும் எனது மனைவியும் இந்த அழுகையின் பள்ளத்தாக்கில் 2019 ஆகஸ்ட் மாதத்தில் கடந்து வந்தோம். எங்களுக்காக கண்ணீர் வடித்து ஜெபித்து தேவ ராஜ்ஜியத்தில் பிரவேசித்த எனது தாயார், மாமனார் அவர்களின் ஜெபங்களும் மற்ற தேவ ராஜ்ஜியத்தில் பிரவேசித்த எனக்கு அருமையான தேவ ஊழியர்களையும் நான் நினைவு கூறுகிறேன். அவர்களின் கண்ணீரின் நீரூற்றால் நாங்கள் இந்த பள்ளத்தாக்கைக் கடந்து வந்தோம்.

தேவராஜியத்தில் பிரவேசித்த எனது அருமையான தாயார் பால் நேசம்மாள் தங்கசாமி எனக்காக பண்ணின ஒவ்வொரு ஜெபமும், தீர்க்கதரிசன வார்த்தைகளும் இன்றும் என் மனதில் பதிந்து இருக்கிறது. அவர்களின் கடிதத்தை இன்னும் பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன். மோட்சபட்டணத்தை அடைந்த ஆண்டவரின் ஊழியக்காரர்களை நாம் ஒருக்காலும் மறக்கக்கூடாது. நாம் ஆண்டவரின் ஆசீர்வாதங்களை மறக்கும்போதுதான் (Forgetful Green) நாம் ஆத்தும ஜீவியத்தில் கீழான இடத்திற்கு தள்ளப்படுகிறோம்.

என்னை நேசித்து ஆரம்ப கால ஆவிக்குரிய வாழ்க்கையில் வழிநடத்தி, என்னை ஓர் ஊழியத்தில் நிறுத்தி, எனக்கு டெல்லியில் 1979 - 1981 வரை போதகராக இருந்து என்னை ஊழியப்பாதையில் வழிநடத்திய தேவ ராஜ்யத்தில் பிரவேசித்த Pastor கிளாடி ஈஸ்வர்ராஜ் அவர்களையும் என்னால் மறக்கமுடியாது. தேவ ராஜியத்தில் பிரவேசித்த சாது ஜெபராஜ் அவர்கள் எனக்கு அநேக கடிதங்கள் எழுதி, என்னை ஆரம்ப கால ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தினார்கள். அவர்களது கடிதங்கள் அப்போஸ்தலனாகிய பவுல் தன் ஆவிக்குரிய மகனாகிய தீமோத்திக்கு எழுதிய கடிதங்களை போல நான் கருதுகிறேன். நான் அவைகளை பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன். சோர்வு அடையும் சமயத்தில் அவைகளை வாசிப்பது உண்டு.

தேவ எக்காளத்தின் ஆசிரியர் அன்புக்குரிய அண்ணன் N. சாமுவேல், 2019 ஆகஸ்ட் 29ம் தியதி தேவராஜ்யத்தை அடைந்தார்கள். அவர்களின் ஜெபங்கள் எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. அவர்களையும் என்னால் மறக்கமுடியாது. 2019 ஆகஸ்ட் மாதம்ஒன்றாம் தியதியில் நாங்கள் மரண இருளின் பள்ளத்தாக்கில் போகும்போது, அண்ணனது ஜெபமானது எங்களை மிகவும் தாங்கியது என விசுவாசிக்கிறேன். நாங்கள் மரண இருளின் பள்ளத்தாக்கை கிடந்த பின்புதான் அண்ணனை ஆண்டவர் தன் ராஜ்ஜியத்திற்கு அழைத்துச்சென்றார்.

ஆண்டவருடைய "நாட்டு வீடு" (Country House), இப்போதும் நம் மத்தியில் இருக்கிறது.

இது ஒரு நாட்டு வீடு. ஒவ்வொரு தேசத்திலும் வித்தியாசமாக இருக்கும். நமது நாட்டில் இது ஒரு கூரையுள்ள குடிலாக (குடிசையாக) இருக்கலாம். அமெரிக்க தேசத்தில் இது ஒரு சிறிய காட்டேஜ் (Cottage) ஆக இருக்கலாம். ஆனால் இது ஒரு மாளிகை கிடையாது.

இந்த வீட்டையும் அதை சுற்றியும் உள்ள நிலத்தை பராமரிப்பது நமது கடமை. இந்த பராமரிப்பின் பணியில் நாம் நமது சமயத்தையும், பணத்தையும் செலவிடவேண்டும். தேவனுடைய வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாம்தான் சம்பளம் கொடுக்கவேண்டும். எளிய முறையில் வாழ்க்கை நடத்தும், தங்கள் வாய்களை திறந்து பணம் கேட்காமால், இந்த ஆட்டிடையனை போல, ஆண்டவரின் மந்தைகளை வழி நடத்தும் உத்தம ஊழியக்கார்களுக்கு, நாம் தியாகத்தோடு பண, பொருள் உதவி செய்யவேண்டும். இந்த நிலத்தில் அநேக தேவ ஊழியர்கள் பகலும் இரவும் தூங்காமல், தங்கள் கண்ணீர்களினால் நீர் பாய்த்து, விதைகள் நாட்டி, அறுவடை செய்து வருகிறார்கள். இந்த நிலத்தை பராமரித்துவந்த தேவனுடைய ராஜியத்தில் பிரவேசித்த ஊழியர்களின் குடும்பங்களையும் நாம் தாங்கவேண்டும். அவர்களின் பிள்ளைகளின் படிப்பிற்க்காகவும், பிள்ளைகளின் கல்யாண காரியங்களுக்கவும், நாம் உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். இது தேவ நியமம்.

தொடர்ந்து படிக்க.....மரண இருளின்பள்ளத்தாக்கில்