கவலைப்படும் கிறிஸ்தியான் மனம் திரும்புதல்

கவலைப்படும் கிறிஸ்தியான் மனம் திரும்புதல்

ஒரு நாள் நான் அயர்ந்து தூங்கும்பொழுது ஒரு கனவு கண்டேன். அது ஒரு விசித்திரமான கனவு! அந்தக் கனவைப்பற்றி இப்பொழுது உங்களுக்குக் கூறப்போகிறேன்.கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைக் கண்டேன். அவன் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அவன் அந்தப் புத்தகத்தைத் திறந்து வாசிக்கத் துவங்கினான். அதைப் படிக்கும்போதே அவன் கண்கள் கலங்கின. உடல் நடுங்கியது.ஐயோ! நான் என்ன செய்வேன் என்று கதறி அழுதான்.அவன் தன் வீட்டினுள் நுழைந்தான். அவன் நிலையைக் கண்ட அவன் மனைவியும் பிள்ளைகளும் அருகே வந்தார்கள். அவனால் தனது கவலையை மறைக்கமுடியவில்லை.அவர்களை அவன் அருகே அழைத்தான்.என் அன்பான மனைவியே! என் அருமைப் பிள்ளைகளே, இதோ, என் முதுகிலுள்ள இந்தச் சுமை என்னை அதிகமாக அழுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் நாம் வசிக்கும் இந்த நகரம் வானத்திலிருந்து வரும் நெருப்பினால் அழிக்கப்படும் என்று இந்தப் புத்தகத்தில் படித்தேன். நாம் எப்படியாவது தப்பித்துக்கொள்ளவேண்டுமே. இல்லாவிட்டால் அழிந்துவிடுவோமே என்று அவன் புலம்பினான்.

அவனுடைய மனநிலை சரியில்லை என்று நினைத்துப் பயந்தார்கள் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும். அப்பொழுது இரவு நேரமாகிவிட்டமையால் அவனைப் படுத்து, உறங்கி ஓய்வெடுக்கும்படி கூறினார்கள். மறுநாள் காலையில் அவன் மனைவியும் பிள்ளைகளும் அவன் படுக்கையருகே வந்து அவன் எப்படியிருக்கிறான் என்று விசாரித்தார்கள். அவனோ இன்னும் மோசாமாகிவிட்டேனே என்று புலம்பினான். அவர்கள் வசிக்கும் நகரம் அழியப்போகிறது என்று கூறி மீண்டும் அவர்களை எச்சரித்தான். அவர்களோ அவன் பேச்சுக்கு செவிகொடுக்கவில்லை. அவனைக் கேலி செய்யவும், கிண்டல் பண்ணவும் துவங்கினார்கள்.

சிறுது நேரம் பொறுமையுடன் இருந்த அவன் மேலும் அந்த நிந்தனைகனைத் தாங்கமுடியாமல் தன்னுடைய அறைக்குள் சென்றான். தன் கவலையை நீக்குமாறு, தன் குடும்பத்தினர் உண்மை நிலையை அறிந்துகொள்ள உதவுமாறு ஆண்டவரை நோக்கி ஜெபித்தான்.

அதன் பின்பு அவன் அடிக்கடி வயல்வெளிகுச் சென்று அந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பான். சிலவேளைகளில் ஜெபம் செய்வான். என்றாலும் அவன் கவலை நீங்கிவிடவில்லை.

நான் இரட்சிக்கப்படுவதற்கு அந்த அழிவிலிருந்து தப்புவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று அடிக்கடி புலம்பிக்கொண்டிருந்தான்!

பயணம் துவங்குதல்

எனது கனவில் அவன் அந்த ஒளியை நோக்கி வேகமாக ஓடுவதைக் கண்டேன். அவன் மனைவியும், பிள்ளைகளும் அவன் பின்னால் ஓடி அவனை வீடு திரும்பும்படி கெஞ்சினார்கள், கதறினார்கள்! ஆனால் அவனோ தன் காதுகளைப் பொத்திக்கொண்டு நித்திய வாழ்வு, நித்திய வாழ்வு என்று கத்தயபடி அந்த ஒளியை நோக்கி ஓடினான். திரும்பியே பார்க்கவில்லை.

அந்த நகரத்தில் உள்ளவர்கள் அவன் ஓடுவதை வியப்போடு பார்த்தார்கள். சிலர் அவனைக் கேலி செய்தார்கள்.சிலர் அவனைத் திரும்பி வரும்படி கூப்பிட்டார்கள். அவர்களில் கடின நெஞ்சன் (Obstinate), இளகிய நெஞ்சன் (Pliable) என்ற இருவர் மட்டும் அவனை எப்படியாவது கூட்டி வருவோம் என்று சபதம் செய்துவிட்டு அவன் பின்னே ஓடினார்கள்.

அவர்கள் இருவரும் கிறிஸ்தியானுக்கு முன்பாக ஓடிச் சென்று அவனை வழிமறித்தார்கள். ஏன் என்னை வழிமறிக்கிறீர்கள்? என்று கேட்டான் கிறிஸ்தியான்.

நீ கண்டிப்பாக எங்களுடன் நகரத்திற்குத் திரும்பி வரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள் இருவரும்.

அது ஒருக்காலும் முடியாது. இந்த நகரம் கண்டிப்பாக ஒரு நாள் நெருப்பினால் அழிக்கப்பட்டு விடும். நீங்கள் அதில் இருந்தால் அதோடு அழிந்து போவீர்கள் நீங்களும் என்னுடன் வந்து அழிவிற்குத் தப்பிக்கொள்ளுங்கள் என்றான் கிறிஸ்தியான். எங்கள் நண்பர்களையும் எல்லா வசதிகளையும் விட்டுவிட்டு எவ்வாறு வரமுடியும்? என்று கேட்டான் கடின நெஞ்சன்.

ஆமாம், கண்டிப்பாக நண்பர்களையும், வசதிகளையும் விட்டுவிட்டுத்தான் வர வேண்டும். ஏனென்றால் நான் போகிற இடத்திலே இதைவிட மேலான நிரந்திர மகிழ்ச்சி கிடைக்கும். நீங்களும் என்னுடன் வந்தால் அதை அனுபவிக்கலாம் என்றான் கிறிஸ்தியான். இந்த உலகத்தை விட்டுவிட்டு நீ வேறு எதைத்தேடி ஓடுகிறாய்? என்று எரிச்சலுடன் கேட்டான் கடின நெஞ்சன்.

அழியாததும், மாசற்றதும், வாடாததுமான (1 பேதுரு 1:4 ) சுதந்திரத்தைத் தேடிச் செல்கிறேன். மோட்சத்தில் இந்த விடுதலை நமக்குக் கிடைக்கும். அதைத் தேடுகிற யாவரும் அதைக் கண்டடைவார்கள். இதோ இந்த புத்தகத்தைப் படித்துப் பார். உனக்கு எல்லாம் புரியும் என்று புத்தகத்தை நீட்டினான் கிறிஸ்தியான்.

உன்னுடைய புத்தகம் யாருக்கு வேண்டும்? நீ எங்களுடன் திரும்பி வரப்போகிறாயா இல்லையா? அதைச் சொல் முதலில் என்று அலட்சியமாகக் கேட்டான் கடின நெஞ்சன். வரமாட்டேன். நான் கலப்பையின்மீது கை வைத்து விட்டேன். இனிமேல் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்று மறுத்துவிட்டான் கிறிஸ்தியான். இளகிய நெஞ்சனே, வா, போவோம். இவனிடம் பேசி ஒரு பயனுமில்லை. இவன் தான்தான் புத்திசாலி என்று நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறான் என்று இளகிய நெஞ்சனை அழைத்தான் கடின நெஞ்சன்.

அப்படிச் சொல்லாதே. கிறிஸ்தியான் ஒரு நல்ல மனிதன் என்பதை நான் அறிவேன். அவன் சொல்வது உண்மையென்றால் நானும் அவனுடன் போக விரும்புகிறேன் என்றான் இளகிய நெஞ்சன். என்னது? முட்டாள்தனமாகப் பேசாதே. அவன் உன்னை எங்கே கூட்டிக்கொண்டு போவான் என்று உனக்குத் தெரியாதே. பேசாமல் என்னுடன் வந்துவிடு என்று அதட்டினான் கடின நெஞ்சன்.

ஐயா, தயவுசெய்து திரும்பிப் போகாதீர்கள். இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். நான் சொல்லும் நித்திய மகிழ்ச்சி உண்மையானதே. நீங்கள் என்னை நம்பாவிட்டால் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமானதே. இந்த நூலை எழுதியவர் நமக்காகத் தன்னுடைய இரத்தத்தையே சிந்தியிருக்கிறார் என்று கூறிய கிறிஸ்தியானின் கண்கள் கலங்கின. இளகிய நெஞ்சன் கடின நெஞ்சனை நோக்கி, நான் இந்த நல்ல மனிதரோடு போவதே நல்லது என்று நினைக்கிறேன் என்று முடிவாககக் கூறினான்.

பின்பு அவன் கிறிஸ்தியானைப் பார்த்து, நீ போகும் இடத்திற்கு வழி தெரியுமா? என்று கேட்டான். அதோ அந்தப் பிரகாசமாக ஒளி தெரிகிறதே! அதற்கு அருகே இடுக்கமான வாசல் ஒன்று இருக்கிறது என்று நற்சேய்தியாளர் கூறியுள்ளார். அங்கு நாம் போகும்போது அடுத்த நாம் செய்ய வேண்டியது என்னவென்று அங்கே கூறப்படுமாம் என்றான் கிறிஸ்தியான். நல்லது. அப்படியென்றால் நானும் உன் கூடவே வருகிறேன் என்று கூறிய இளகிய நெஞ்சன் கிறிஸ்தியானுடன் சேர்ந்து நடக்கத் துவங்கினான். இதைக் கண்ட கடின நெஞ்சன் முட்டாள்களே, நான் உங்களுடன் வரப்போவதில்லை என்று கூறியபடியே நகரத்தை நோக்கித் திரும்பிவிட்டான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைக் கண்டேன் என்று ஜான் பனியன் எழுதுகிறார். இன்று ஒரு கிறிஸ்தவனின் நிலைமையும் இதுபோலத்தான் இருக்கிறது. கர்த்தர் கொடுத்த வெள்ளை நிற ஆடையை அவன் இழந்து தன முதுகில் ஒரு பெரிய சுமையை சுமந்துச் செல்கிறான். இவன் கள்ள தீர்க்கத்தரசிகளின் சத்தத்திற்கு காது கொடுத்து தனது வெள்ளை நிற ஆடையை இழந்துவிட்டான். உலக கவலைகள் அவனை மேற்கொண்டு ஒரு பெரிய சுமையை சுமந்துச் செல்கிறான். வேதத்தை படிக்காமல் மறந்துவிட்டான். ஆகவே தேவனும் அவனை மறந்துவிட்டார். நாம் வசிக்கும் இந்த நகரம் வானத்திலிருந்து வரும் நெருப்பினால் அழிக்கப்படும் என்று இந்தப் புத்தகத்தில் படித்தேன் என்று இப்போது கூறுகிறான். அவனுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது இந்த நகரம் அழிக்கப்படும் என்று அவனுக்கு யாரும் சொல்லவில்லை. இந்த உலகத்தில் இயேசுவின் மூலமாக பாவ மன்னிப்பும், சரீர சுகமும் எல்லா உலக ஆசிர்வாதங்களும் கிடைக்கும் என்றும், கூறப்பட்டது. கள்ள ஊழியர்கள் கிறிஸ்தியானை சுவிசேஷத்தில் அறிவிக்கப்படட யேசுகிறிஸ்துவை அறிவிக்காமல் வேறு ஒரு கிறிஸ்துவை அவனுக்கு அறிவித்து அவனது வெள்ளை நிற ஆடையை நாளடைவில் இழந்துவிடும்படி செய்து விட்டார்கள். அவன் இயேசுவின் சுவிசேஷத்தை கேட்டு பாவமன்னிப்பு கேட்டும் நாளடைவில் வேறு ஒரு சுவிஷேகத்திற்கு திருப்பப்பட்டு வேறு ஒரு சுவிசேஷத்தில் அல்லாத ஒரு போலி கிறிஸ்துவை சந்தித்து தனது தூய ஆடைகளை இழந்து நிற்கிறான். இப்போதுதான் ஒரு உண்மையான சுவிசேகனை, அதாவது மோட்ச பயணத்தில் குறிப்பிட்ட எவாஞ்சலிஸ்ட்டை( நற்சேய்தியாளர்) சந்திக்கிறான். அவன் இந்த கந்தை அணிந்து அழும் மனிதனை பார்த்து, நீ போகும் இடத்திற்கு வழி தெரியுமா? என்று கேட்கிறான் . அதோ அந்தப் பிரகாசமாக ஒளி தெரிகிறதே! அதற்கு அருகே இடுக்கமான வாசல் ஒன்று இருக்கிறது என்று நற்சேய்தியாளர் இப்போது கூறுகிறான். அங்கு நாம் போகும்போது அடுத்த நாம் செய்ய வேண்டியது என்னவென்று அங்கே கூறப்படுமாம். இதற்கு முன்னாள் இதுபோல் ஒரு நற்செய்தி கேட்கப்பட்டது இல்லை.

அவனது சபையின் பாஸ்டர் சொல்வதாவது, "நீ இரட்சிக்க பட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்றுவிட்டாய். இந்த சபைக்கு ஒழுங்காக வந்து தசம பாகத்தை கொடுத்து தேவ ஆசீர்வாதங்களை பெற்று சந்தோஷமாக இரு. உனது பாரத்தை சபையிடம் அறிவித்துவிடு. நங்கள் உனக்காக ஜெபிப்போம்".

எல்லா வாரமும் ஞாயிறு கிழமை பாஸ்டர் பாவத்தைக் குறித்து கண்டித்து பேசாமல் பரிசுத்த ஆவியானவரின் வரங்களை குறித்தோ அல்லது அபிஷேகத்தை குறித்தோ பேசிக்கொண்டிருந்தார். கிறிஸ்தவனோ தான் பரிசுத்தாவி பெற்று தேர்ச்சி அடைந்து விட்டேன் என்று எண்ணிக்கொண்டிருந்தான். இப்போது அவன் கண்கள் திறக்கப்பட்டு அழுக ஆரம்பிக்கிறான். அவனது மனைவியும் மற்றும் தனது சபை மக்களும்,”நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? பாஸ்டர் அய்யா சொல்வதைக் கேள். கிறிஸ்து நமக்கு எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுப்பார்,” என்று கூறினார்கள் ஆனால் அவன் தனது நிலைமையை வேதத்தைப் படித்தவுடன் தான் உணர்கிறான். இந்த உலகம் அழியப்போகிறது, இங்கேயிருந்து மிகவும் கவனத்தோடு தப்பி செல்லவேண்டும் என்ற சத்தியம் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டித்திருந்தது.

இவன் ஒரு பின்னடைந்த நிலையில் இருக்கிறான். கள்ள போதகர்களால் வஞ்சிக்கப்பட்டு வேறு ஒரு ஆவியைப் பெற்று, அதாவது அந்திகிறிஸ்துவின் ஆவியின் மூலம் வஞ்சிக்கப்பட்டுவிட்டான். இப்போது நற்சேய்தியாளர் அவனை பின் நோக்காமல் தனது வஞ்சிக்கப்பட்ட சபையையும், வஞ்சிக்கப்பட்ட ஊழியர்களையும் விட்டுவிட்டு குறுகலான வாசல் வழியாக கால்வாரியை நோக்கி செல்லும்படிக்கு எச்சரிக்கை கொடுக்கிறான்.

"நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்". வெளி 3:1:ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு" வெளி 2: 4.

"ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்"; எபிரெயர் 12 :1

மேலே கூறியுள்ள வசங்களின்படி -

அவன் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தை மேற்கொள்ள முடியாமல் அதற்கு அடிமையாகி, இப்போது பாவம் செய்தால் சபைக்குப் போய் பாஸ்டரிடம் ஜெபித்தால் பாவமன்னிப்பு கிடைத்துவிடும் என்று நம்பி துணிகரமாய் பாவம் செய்து, தேவனை விட்டு விலகிப் போகிறான். கிருபை என்பதை தப்பாக போதிக்கப்பட்டு முன்னிலையைப் பார்க்கிலும் மோசமாகி இருக்கிறான். ஆதியில் கொண்டிருந்த அன்பை இழந்து உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாகயிருக்கிறான். அவனுடைய வாழ்க்கைக்கும் உலகத்தார் வாழ்கைக்குக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.

"பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?" (எபிரெயர் 12:25). பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்!

Next.....கிறிஸ்தியானும் இளகிய நெஞ்சனும்