சிலுவையைத் தரிசித்தல்

Home

முந்தின அதிகாரம்

சிலுவையைத் தரிசித்தல்

பாட்டுப்பாடிக்கொண்டு, மகிழ்ச்சியோடு நடந்து சென்றான் கிறிஸ்தியான். அவன் சென்ற பாதையின் இருபுறத்திலும் இரட்சிப்பு என்ற சுவர்கள் இருப்பதை நான் என் கனவில் கண்டேன். உற்சாகமடைந்தவனாக முதுகுச் சுமையோடு ஓடத் துவங்கினான் கிறிஸ்தியான். ஓர் உயரமான இடத்தை அடைந்தான் அவன். அங்கே மரத்தாலான ஒரு சிலுவை நிறுத்தப்பட்டிருந்தது! அதனருகே காலியான ஒரு கல்லறை!

கிறிஸ்தியான் சிலுவையின் அருகே வந்தவுடன் அவன் முதுகிலிருந்த சுமை படாரென அறுந்து கீழே விழுந்தது! உருண்டுபோய் திறந்திருந்த கல்லறைக்குள் சென்று மறைந்துவிட்டது அதன் பிறகு நான் அந்தச் சுமையையே பார்க்கவில்லை.

அவரது பாடுகளினால் எனக்கு விடுதலை கிடைத்தது! அவரது மரணத்தினால் எனக்கு வாழ்வு கிடைத்தது! என்று கூறி மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்தான் கிறிஸ்தியான். வியப்போடு சிலுவையைப் பார்த்தவனாக அங்கையே நின்றுகொண்டிருந்தான் அவன். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

அப்போது பிரகாசமான ஆடையணிந்த மூவர் வந்து, உனக்கு சமாதானமுண்டாகட்டும் என்று கிறிஸ்தியானை வாழ்த்தினார்கள். முதலாமவர் உன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்றார். இரண்டாமவர் அவனது கந்தையாடைகளைக் களைந்து புதிய வெண்ணங்கியை அவனுக்கு அணிவித்தார். மூன்றாமவர் அவன் நெற்றியில் ஓர் அடையாளத்தைப் பதித்து, அவன் கையில் முத்திரையிடப்பட்ட சுருள் ஒன்றைக் கொடுத்தார். நீ செல்லும் பாதையில் இதைப் படித்துப்பார். நீ மோட்ச வாயிலை அடையும்போது இந்தச் சுருளைக் கண்டிப்பாகக் கொடுக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

கிறிஸ்தியான் சிலுவையின் அருகே வந்தவுடன் அவன் முதுகிலிருந்த சுமை படாரென அறுந்து கீழே விழுந்தது! உருண்டுபோய் திறந்திருந்த கல்லறைக்குள் சென்று மறைந்துவிட்டது. உண்மையான இரட்சிப்பின் அனுபவம் இதுதான். மன்னிக்கப்பட்ட பாவங்கள் இயேசு உயிர்த்தெழுந்த கல்லறையில் மறைய வேண்டும். பின்புதான் முதுகின் மேலுள்ள பாவ பாரம் நீங்கும். பாவ பாரம் நீங்கும் வரை கால்வாயின் தரிசனத்திலிருந்து வெளியே வரக்கூடாது. இன்று அநேகர் ஏமாற்றப்பட்டு தங்கள் பாவங்களை தங்களது வாழ்க்கையில் சுமந்து கொண்டு இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். தங்களின் சபைகளின் போதகர்களின் பேச்சை அல்லது போலியான சுவிசேகர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாந்து நிற்கிறார்கள். இவர்கள் திரும்பவும் கால்வாரிக்குச் சென்று பாவமன்னிப்பின் நிச்சயத்தை கிறிஸ்துவிடமிருந்து பெறவும். கிறிஸ்தியானைப் போல உங்கள் கண்களிலிருந்து நீர் வடிய வேண்டும். முதலாவது பாவமன்னிப்பைப் பெற்று, வெண் ஆடையை தரிக்கவேண்டும். வெண் ஆடை என்றால் பரிசுத்தாவினவரை பெற்ற அடையாளம். நெற்றியில் பரிசுத்தாவியானவரின் முத்திரை வரையப்படவேண்டும். தங்கள் இரட்சிக்கப்படும்படியாக வழி நடத்தும் பைபிளை கையில் ஏந்தி முன் செல்ல வேண்டும். இங்கேயே எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்து கள்ள உபதேசிமார்களின் வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்து போகவேண்டாம். இது தான் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பம். ஆவிக்குரிய குழந்தையானாவுடன் கிறிஸ்துவின் சாயல் அடையும் வரை மோட்ச பாதையின் முன்னேறிப் போகவேண்டும்.

நீங்கள் செல்லும் பாதையில் இந்த சுருளை படித்துக்கொண்டே போகவேண்டும். நீங்கள் மோட்ச வாயிலை அடையும்போது இந்தச் சுருளைக் கண்டிப்பாகக் கொடுக்கவேண்டும். இந்த சுருளை நீங்கள் பின்பற்றினால் தான் மோட்ச பட்டணத்தை அடைய முடியும். உங்களின் சபைகளில் போதிக்கும் தப்பான உபதேசங்களின் மூலமாகவோ அல்லது ஏமாந்து போன சுவிசேடர்களின் உபதேசங்களைக் கேட்டோ நீங்கள் மோட்சப் பட்டணத்தை அடையவே முடியாது. போகும் பாதையில் அநேக போராட்டங்களும் சாத்தானின் சோதனைகளும் நஷ்ட துன்பங்கள் எல்லாம் வரும்.

பாவமன்னிப்பின் நிச்சயத்தை கொடுப்பவர் பரிசுத்தாவியானவர் தான். அவர் கொடுக்கும் முத்திரை தான் உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம். இந்த அனுபவத்திற்கான அடையாளம் என்ன? உங்களின் இந்த அனுபவத்தை குறித்து சாட்சி கொடுப்பது உங்களை சுற்றியுள்ள மக்கள் தான். நீங்கள் கல்வாரியின் சிலுவையில் வந்து மனம் திரும்பி உங்கள் பாவச் சுமை போனவுடன், கிறிஸ்து உங்கள் இருதயத்தில் வாசம் பண்ணுவார்; பரிசுத்தாவியானவர் உங்களை எல்லா சாத்தியத்திற்குள்ளும் வழி நடத்துவார். பரிசுத்தாவியானவர் தானாக பேச மாட்டார். கிறிஸ்துவின் வார்த்தைகளை தான் உங்களுக்கு அளிப்பார். சுயமாக பேசவே மாட்டார். பிதா, குமாரன், பரிசுத்தாவியானவர் மூவரும் உங்களின் இருதத்தில் ஒன்றாகவே இருப்பார்கள். தனித்தனியாக வரவோ அல்லது இருக்கவோ மாட்டார்கள். இது தான் சத்தியம். பரிசுத்தாவியானவர் தனியாக வரவே மாட்டார்.

பரிசுத்தாவியானவருக்கு எந்த விதமான அடையாளமோ கிடையாது. கிறிஸ்துவின் அடையாளம் தான். ஏமாந்து போகவேண்டாம். அடையாளத்தைப் பெற, யாரிடமோ போய் ஜெபிக்க ஓடவேண்டாம். வேறு ஒரு ஆவியைப் பெற வேண்டாம். பரிசுத்தாவியானவருக்கு கிறிஸ்துவின் குணாதிசயங்களே காணப்படும். உங்களை கீழே தள்ளி விடமாட்டார். உங்களை தாங்கி வழி நடத்துபவர். உங்களை கூச்சலிட செய்ய மாட்டார்.

" இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்" (ஏசாயா 42:1-3)

வீதியில், அவர் உங்களை சத்தமிட வழி நடத்த மாட்டார். அமைதியாக உங்களிடம் பேசுவார். பக்கத்துக்கு வீட்டிலிருக்கும் மக்களுக்கு எந்த விதமான இடையூறுகளையும் கொடுக்கவே மாட்டார்.

உங்களை ஊளையிட்டு, சிரிக்க வைக்கமாட்டார். உங்களுக்கு ஆத்துமாவில் உலகம் அளிக்காத சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுப்பார்.

ஆராதனை என்ற பெயரில், உங்களை நடனம் ஆட வழி நடத்தமாட்டார். உங்களை பரிசுத்தத்திற்குள்ளும் மற்றவர்களை நேசிக்கும் அன்புக்குள்ளும் வழி நடத்துவார். பரிசுத்த அலங்காரத்துடன் அவரை உள்ளத்தின் அடியிலிருந்து துதிக்க வழி நடத்துவார். அவர் விரும்புவது வெளிப்படையான, மற்றவர்கள் பார்க்கும்படியான ஆராதனை அல்ல. ஒரு அந்தரங்கமான பரிசுத்த ஆராதனை! மற்ற பரிசுத்த தேவ மக்களோடு அவரை துதித்து ஆராதிக்கும்போது உங்களிலுள்ள கிறிஸ்து வெளிப்படுவார். அவரை மனதிலே அமைதியாக துதிக்கலாம். வாயின் மூலம் சத்தமாகவோ துதிக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் ஆராதிக்கக் கற்றுக் கொள்ளவும்.

பரிசுத்தாவியானவருக்கு வேறு ஒரு பெயர் கிறிஸ்துவின் ஆவி. தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல (ரோமர் 8:9).

இன்று அநேகர் உணர்ச்சி வசப்பட்டு கத்தி ஆண்டவரை துதித்தால் தான் பரிசுத்தாவினவரின் கிரியைகள் வெளிப்படும் என்று தப்பான எண்ணத்தில் இருக்கிறார்கள். மாம்சத்துக்குள் உள்ளவர்கள் உணர்ச்சி உலகத்தில் வாழ்கிறார்கள். அநேக போதகமார்கள், "அந்நிய பாஷையில் பேசி ஆவிக்குள்ளாகுங்கள்" என்ற தப்பான உபதேசம் செய்கிறார்கள்.

அந்நிய பாஷையில் பேசுவது தேவனோடு ரகசியம் பேசுவதற்குத்தான். இந்த வரம் உங்களுக்கு கொடுக்கப்படாமலிருந்தால் அதை நாடி ஓடிச் செல்லவேண்டாம். ஆண்டவருக்கு யார்யாருக்கு எந்தெந்த வரங்களை அருளவேண்டும் என்பது தெரியும். பவுல் உரைப்பதுபோல தீர்க்கதரிசன வரங்களை நாடவும்.

பரிசுத்தஆவியானவரின் வழி நடத்தப்பட்டு பரிசுத்தாவியானவர் உங்களது வாழ்க்கையை முற்றிலும் ஆட்கொள்வது தான் உண்மையான சத்தியம். இதுதான் ஆவிக்குள்ளாகும் அனுபவம். இப்படி ஆவிக்குள்ளாகும் போதுதான் பரம தரிசனங்கள் கிடைக்கும். பரத்திலிருந்து ஞானம் வருகிறது. தீர்க்க தரிசன வரங்கள் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுகிறது. வெறும் கூச்சல் போட்டு அந்நிய பாஷைகளில் பேசினால் பரிசுத்தாவியானவர் தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்கவேமாட்டார். பரிசுத்தாவியானவரை நீங்கள் கட்டுப்படுத்தவோ அல்லது வெளிப்படுத்தவோ கூடாது. அவர் உங்கள் கைப்பாவை அல்ல.

மூன்று உறங்கும் மனிதர்கள்

மூன்று உறங்கும் மனிதர்களை கிறிஸ்டியான் காண்கிறான். அவர்களின் கால்கள் இரும்பு சங்கிலிகளினால் கட்டப்பட்டிருக்கிறது. அவர்களின் பெயர்கள் மூடன், சோம்பேரி, ஊகிப்பவன் என்பதாகும்.

கிறிஸ்டியான் அவர்களை நோக்கி "நீங்கள் பாய்மரக் கம்பதின் மேல் உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள். கீழே ஆழமில்லாத மரணக்கடல் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. நான் உதவி செய்யலாமா?" என்று கேட்டும் அவர்கள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

மூடன் வகையை சேர்ந்த மக்கள் ஆலயங்களுக்குப் போவார்கள். ஆனால் தங்களது பாவத்தின் மூலம் வரும் அபாயத்தை காணாமல் உறங்கிக்கொண்டிருப்பார்கள்.

இந்த சோம்பேரி வகையை சேர்ந்த மக்கள் ஆலயங்களுக்குப் போவார்கள். ஆனால், ஆவிக்குரிய காரியங்களை ஒத்தி வைத்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.

ஊகிப்பவன் வகையை சேர்ந்த மக்கள் ஆலயங்களுக்குப் போவார்கள். ஆனால், தங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல் தங்களது சன்மார்க்க வாழ்க்கையின் மூலம் பரலோகம் போய்விடலாம் என ஊகித்துக்கொண்டிருப்பார்கள்.

இந்த மூன்று வகைகளை சேர்ந்த மனிதர்கள் சுவிசேஷத்தைக் கேட்கமனதில்லாமல் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கையில் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக சுவிசேடர்கள் பாரத்தோடு ஜெபித்து சுவிசேஷம் அறிவிக்கவேண்டும்.

மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தபடி, எந்தவிதமான முதுகுச் சுமையும் இல்லாதவனாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தான் கிறிஸ்தியான். அந்த இடுக்கமான பாதையின் இடதுபக்கச் சுவற்றில் ஏறிக்குதித்து, கிறிஸ்தியானை நெருங்கும் இருவரை என் கனவில் கண்டேன். சம்பிரதாயன், வெளிவேசக்காரன் என்ற இருவருமே அவர்கள்.அவர்களைக் கண்டவுடன் கிறிஸ்தியான், ஐயா நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? என்று கேட்டான். வீண்பெருமை என்ற ஊரிலிருந்து வருகிறோம். மோட்சத்துக்குச் சென்று பேரும் புகழும் பெற ஆசைப்படுகிறோம் என்றார்கள் அவர்கள்.ஐயாமார்களே, நீங்கள் மோட்சத்துக்குப் போக வேண்டுமென்று கூறுகிறீர்கள். ஆனால் இடுக்கமான வாசல் வழியே வராமல் குறுக்குப் பாதையில் வருகிறீர்கள். ஒழுங்கை மீறிய உங்களை ஆண்டவர் மோட்சத்துக்குள் நுழைய அனுமதிப்பாரா? என்று தாழ்மையுடன் சந்தேகம் கிளம்பினான் கிறிஸ்தியான்.

எங்களுடைய வழி குறுக்குவழிதான். இவ்வாறு வருவதுதான் எங்கள் ஊர் மனிதர்களின் பழக்கம். நீயோ இடுக்கமான வாசல் வழியே வந்தாய்! நாங்களோ சுவர் ஏறி வந்தோம்! ஆனால் இருவரும் ஓரே பாதையில்தானே செல்கிறோம் என்று கூறினார்கள் அந்த இருவரும்.

நானோ ஆண்டவரின் கட்டளைப்படி நடக்கிறேன். நீங்களோ உங்கள் சுய விருப்பத்தின்படி நடக்கிறீர்கள். ஆண்டவர் ஏற்கனவே உங்களைக் கள்வர்கள் என்று தீர்ப்பளித்திருப்பார் என்று உறுதியாகக் கூறினான் கிறிஸ்தியான். நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். நீ உன் வழியைப் பார்த்து நட என்று கூறிவிட்டார்கள் அந்த இருவரும்.

மூவருமாக அந்தப் பாதையில் தொடர்ந்து நடந்து சென்றார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் கிறிஸ்தியானோடு விவாதத்திற்கு வந்தார்கள். நாங்களும் விதிகளைக் கடைப்பிடித்து நடப்பவர்கள்தான். எங்களுக்கும் உனக்கும் ஓரே வித்தியாசம் தான். நீ வெண்ணங்கி அணிந்திருக்கிறாய். எங்களுக்கு இல்லை அவ்வளவுதான் என்றார்கள்.

ஆண்டவர் அளித்த அங்கி இது! நான் மோட்ச வாசலை அடையும்போது இந்த அங்கியின் மூலம் அவர் என்னை அடையாளம் கண்டுகொள்வார். என் நெற்றியில் ஓர் அடையாளம் போடப்பட்டுள்ளது. இதோ இந்த முத்திரையிடப்பட்டுள்ள சுருளை நான் வாசலண்டை வராதபடியால் உங்களுக்கு இவைகள் கொடுக்கப்படவில்லை என்றான் கிறிஸ்தியான். ஒன்றுமே பதில் கூறாத அவர்கள் கிறிஸ்தியானைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இடுக்கமான வாசல் வழியே வராமல் குறுக்குப் பாதையில் இன்று அநேகர் மோட்சப்பட்டணத்திற்கு போக விரும்புகிறார்கள். இயேசு என்ற ஒரே வாசலின் மூலம் வந்து பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு கல்வாரியில் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை தரிசியாமல் ஏதோ ஒரு ஜெபம் செய்துவிட்டு குறுக்கு வழியில் வருபவர் அநேகம். கிறிஸ்துவுக்குள் புதிய மனிதனாக பிறவாமல் ஒரு சபையில் சேர்ந்துவிட்டு தாங்கள் பரிசுத்தாவி பெற்றுவிட்டோம் என்று அநேகர் ஏமாந்து இருக்கிறார்கள். தாங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்றும் பிதற்றுகிறார்கள். இவர்கள் சுவர் ஏறி வந்தவர்கள். இவர்கள் சபைகளுக்கு ஒழுங்காகச் செல்கிறார்கள். ஆனால், கல்வாரியில் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவையைக் கண்டு காணாமலும் (delete this word) விசுவாசியாமலும், சுவர் ஏறி குதித்து வந்தவர்கள். இவர்கள் தங்களது பிரச்சனைகள் தீர போதகர்மார்களிடம் வந்து ஜெபிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடந்தவுடன் தாங்கள் இயேசுவின் மூலம் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்று எண்ணி ஒரு பெரிய ஏமாற்றத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் கைகளில் முத்திரையிடப்பட்டுள்ள சுருளை காணமுடியாது. எனென்றால், சுவிஷேசத்தை விசுவாசித்து இரட்சிக்கப்படவில்லை. தேவனின் வார்த்தைகளை விசுவாசித்து மனம் திரும்பி இரட்சிக்கப்படவில்லை. அவர்களின் கைகளில் பைபிள் இருக்கலாம். ஆனால், அவர்கள் அதைப் படித்து அல்லது கேட்டு கிறிஸ்துவையை தங்கள் ரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களின் பைபிள் மேலே முத்திரை கிடையாது. இரண்டாவது, நெற்றியில் பரிசுத்தாவியானவரின் முத்திரையில்லை. பரிசுத்தாவியானவர் இவர்களின் இருதயத்தில் வரவில்லை ஏனென்றால் இவர்களின் இருதயங்களிலிருந்து பாவங்கள் அகற்றப்படவில்லை. மூன்றாவது இவர்களுக்கு வெண் ஆடை கொடுக்கப்படவில்லை. இன்னும் பழைய ஆடைகளைத்தான் அணிந்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு நல்ல ஆவிக்குரிய சபையில் சேர்ந்ததால் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்று எண்ணுகிறார்கள்.

சம்பிரதாயன், வெளிவேசக்காரன் என்பவர்கள் வீண்பெருமை என்ற ஊரிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் சபைகளைக் குறித்தோ அல்லது தாங்கள் அடைந்த ஆவிக்குரிய அனுபவங்களைக் குறித்தோ பெருமையாக பேசுகிறவர்கள். சபையின் சம்பிரதாயங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தங்களின் சபைதான் சரியனானது என்றும், உயர்ந்ததும் என்றும் பெருமையாக பேசுகிறவர்கள். மற்ற சபைகளை குறித்து கேவலமாக பேசுகிறவர்கள்.

பெருமை உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிப்பு! இவர்கள் கிறிஸ்துவின் சிலுவையை தரிசித்தும் தங்களது வாழ்க்கையில் பெருமைக்கு இடம் கொடுத்து கிருபையை இழந்து பின்வாங்கி (Backslide) நிற்பவர்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் (I பேதுரு 5:5). இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.(நீதிமொழிகள் 3:34). இவர்கள் தங்களை தேவனுக்கு முன்பாக தாழ்த்தி வெளி வேடத்தைக் களைந்து மோட்சப் பட்டணத்தை நோக்கி ஓட வேண்டும். சபை சம்பிரதாயங்களை விட்டு தங்களுக்கு கல்வாரி சிலுவையில் அளிக்கப்பட்ட சுருளை தியானித்து முன் செல்ல வேண்டும்.

கடினமலையை அடைதல்

மூவரும் கடினமலை என்ற மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். அங்கே ஓரு நீரோடை காணப்பட்டது. அவர்கள் சென்ற பாதையின் இடதுபுறமும், வலதுபுறமும் இரண்டு பாதைகள் பிரிந்துசென்றன.ஆனால் இடுக்கமான பாதையோ அவற்றின் நடுவே மலையுச்சியை நோக்கிச் சென்றது!கிறிஸ்தியான் அந்த நீரோடைக்குச் சென்று தெளிந்த நீரைப் பருகினான். களைப்பு நீங்கியவனாக இடுக்கமான பாதையின் வழியாக மலையேறத் துவங்கினான்.இடுக்கமான பாதை மலையேறும் கடினமான பாதையாக இருப்பதைக்கண்ட சம்பிரதாயன், வெளி வேசக்காரன் இருவரும் மற்ற இரண்டு பாதைகளிலும் தனித்தனியே பிரிந்து சென்றார்கள். இடதுபுறம் அபாயப் பாதையில் சென்றவன் அடர்ந்த காட்டினுள் வழிதப்பி அலைந்தான்! வலதுபுறம் அழிவின் பாதையில் சென்றவன் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து உயிர் துறந்தான்!

இடுக்கமான பாதை வழியே மிகக் கடினத்துடன் பாதையேறத் துவங்கினான் கிறிஸ்தியான். போகப்போக பாதை செங்குத்தானபடியால் தவழ்ந்தபடி ஏற நேரிட்டது!

கற்றுக்கொள்ளும் பாடம்

சம்பிரதாயன், வெளி வேசக்காரன் இருவரும் மற்ற இரண்டு பாதைகளிலும் தனித்தனியே பிரிந்து சென்றார்கள். இடுக்கமான பாதை வழியே மிகக் கடினத்துடன் பாதையேறத் துவங்கினான் கிறிஸ்தியான். போகப்போக பாதை செங்குத்தானபடியால் தவழ்ந்தபடி ஏற நேரிட்டது!

இன்று நமது மத்தியில் சம்பிரதாயன், வெளி வேசக்காரன் போகும் பாதைகளில் வழி நடத்தும் கள்ள போதகர்கள் உண்டு. இவர்களின் சபைகளிலோ அல்லது வேறு ஏதாவது பிரசங்க மேடைகளிலோ, இவர்களின் உபதேசத்தையோ கேட்டு மோசம் போகாதீர்கள். சம்பிரதாயன், வெளிவேசக்காரன் போன்றவர்களின் வேஷத்தைக் களைந்துவிட்டு, மலை உச்சிக்கு, கடினமான பாதை வழியாகத்தான் போக வேண்டும். கடின மலையை கிடக்காமல் நாம் கடந்தது செல்ல முடியாது. சபைக்கு ஒழுங்காகப்போய் ஆராதனையில் கலந்து கொண்டால் போதாது. காணிக்கை, தசம பாகம் கொடுத்தால் போதாது. ஆவிக்குரிய கடினமான மலை உச்சிக்கு போக வேண்டும். உங்களுக்கு இன்று பரிசுத்தாவியானவர் ஒரு அழைப்பையும் ஊழியத்தையும் வைத்திருக்கிறார்.

இன்று இடதுபுறம் அபாயப் பாதையில் சென்று அடர்ந்த காட்டினுள் வழிதப்பி அலைபவர்கள் அதிகம்.

வலதுபுறம் அழிவின் பாதையில் சென்று, செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து உயிர் துறந்தவர்கள் அநேகம். இவர்கள் செத்துப்போய் சபைகளில் வெறும் சத்தம் போட்டு தாங்கள் உயிர் உள்ளவர்கள் போல காண்பித்துக்கொள்கிறார்கள்; ஆனால் இவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் செத்தவர்கள்.

"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.

ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்"(வெளி 3:1-3).

உங்கள் கிரியைகளை தேவன் அறிந்திருக்கிறார். இந்த கிரியைகள் கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தி காண்பிக்கவில்லை.

பொல்லாத கிரியைகள்! வஞ்சகத்தின் ஆவியின் மூலமான வெளிரங்கமான கிரியைகள்! வேதத்தை எடுங்கள், கண்ணீரோடு படிக்கவும். "ஆண்டவரே, என்னை உமது சத்திய பாதையில் வழி நடத்தும்," என்று கதறி அழுங்கள். நீங்கள் இன்று தேவனுக்கு ஒரு ஊழியத்தை செய்ய முடியாமல் ஒரு சபையின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடக்கிறீர்களே. ஒரு அப்போஸ்தலனாகவோ ஒரு தீர்க்கதரிசியாவோ ஒரு சுவிசேஷகனாகவோ இருந்திருப்பீர்களே! ஒரு விசுவாசி என்ற பட்டத்துடன் இத்தனை ஆண்டுகளை வீணாக்கிவிட்டு இருக்கிறீர்களே! ஏன் உங்களுக்கு கொடுத்த சுருளை படிக்கவில்லை? கள்ள போதகர்கள் உங்களை ஒரு பணம் பறிக்கும் மரமாகவே ஆக்கி விட்டார்களே!

இளைப்பாறும் ஸ்தலம்

பாதி வழியில் பயணிகளுக்காக ஆண்டவர் அமைத்த இளைப்பாறும் ஸ்தலம் இருந்தது. கிறிஸ்தியான் களைப்போடு அங்கு சென்று அமர்ந்தான். சுருளை எடுத்துப் படிக்கத் துவங்கினான். அவன் கண்களைத் தூக்கம் தழுவியது. சுருள் கையிலிருந்த நழுவியதுகூடத் தெரியாமல் ஆழ்ந்து உறங்கிவிட்டான்! அப்போது ஒருவர் வந்து, சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதன் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள் (நீதி.6:6) என்று கூறி அவனை எழுப்பி விட்டார்!

திடுக்கிட்டு விழித்த கிறிஸ்தியான், மலையுச்சியை அடையும்வரை விரைந்து பயணம் செய்தான்! அங்கே இருவர் அவனை நோக்கி எதிர்த் திசையில் வருவதைக் கண்டு வியப்படைந்தான். கோழை, அவநம்பிக்கை என்ற அந்த இருவரையும் பார்த்து,

ஏன் ஜயா? என்ன ஆயிற்று? என்று கேட்டான்.

போகும் வழியில் சிங்கத்தைப் பார்த்தோம். இன்னும் போகப்போக அபாயம்தான் என்று எண்ணித் திரும்பிவிட்டோம் நடுங்கும் குரலில் கூறினார்கள் அந்த இருவரும்.

நீங்கள் எனக்கும் பயமூட்டிவிட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது? திருப்பிப் போவதென்றால் நிச்சயமாக மரணதண்டனைதான் கிடைக்கும். நேரே சென்றாலும் மரணத்துக்கேதுவான அபாயங்கள் என்று ஒரு கணம் தயங்கிய கிறிஸ்தியான்,

இல்லை...................இல்லை................. நான் நேராகத்தான் செல்வேன். பாதையின் முடிவில் எனக்கு நித்திய வாழ்வு கிடைக்குமே! என்று கூறியபடி உற்சாகத்தோடு முன்னே செல்லத் துவங்கினான். கோழையும் அவநம்பிக்கையும் மலையிலிருந்து கீழிறங்கி ஓடிவிட்டார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

பாதி வழியில் பயணிகளுக்காக ஆண்டவர் அமைத்த இளைப்பாறும் ஸ்தலம் இருக்கிறது. உங்கள் ஆத்தும நேசர் உங்களுக்கென்று இளைப்பாறுதல் தருகிறார். உங்கள் குடும்பத்துடன் விடுமுறையில் போய் அவர் உங்களுக்கு கொடுத்த இந்த உலக ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்குத்தான்! ஆனால் இங்கே நீங்கள் உறங்காமல் விழித்து கொண்டிருக்கவேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட சுருளை மறக்கக் கூடாது. உங்களை துன்புறுத்துவதற்கு அப்பொல்லியன் காத்து கொண்டிருப்பான். ஜெபமும் வேத வாசிப்பும் கண்டிப்பாக இருக்கவேண்டும். முடிந்தால் நீங்கள் தங்கியிருக்கும் பட்டணத்தில் ஏதாவது ஒரு சபைக்குப் போகலாம் அல்லவா!

ஆண்டவருக்கென்று அல்லும்பகலும் அயராமல் ஊழியம் செய்யும் உண்மையான ஊழியர்களும் தங்களின் சரிரங்களுக்கு நல்ல ஓய்வும் இளைப்பாறுதலும் கொடுக்கவேண்டும். கிறிஸ்துவும் படகில் அயர்ந்து தூங்கி ஓய்வு எடுத்தார். விடுமுறையில் (Vacation) குடும்பத்தோடு போகலாம்.

இன்று அநேக ஊழியர்கள் ஊழியத்திற்கு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருப்பார்கள். சரீர சுகத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு இரத்த அழுத்தம் (Blood Pressure), நீரழிவு (Diabetis) போன்ற வியாதிகளை வரவழைத்துக் கொள்கிறார்கள். இந்த மண்ணான சரீரத்திற்கு ஓய்வுகொடுக்க அவசியமில்லை, பரலோகத்தில் தான் ஓய்வு கிடைக்கும் என்ற தப்பான உபதேசத்தை நம்பி தங்களின் ஆயுசு நாட்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். பல மணி நேரங்களில் பிரசங்கம் செய்து தான் ஊழியத்தை இந்த உலகத்தில் நிறைவேற்றவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

கோழை, அவநம்பிக்கை என்ற இருவர் கிறிஸ்தியானின் மனத்தில் சிங்கங்களை பற்றி பயங்களை உருவாக்குகிறார்கள். "நீ ஆண்டவருக்கென்று ஊழியம் தனியாக செய்ய முடியாது. உனக்கு ஒரு சபையின் ஜெபத்தின் பாதுகாப்பு இருக்கவேண்டும். சபை போதகரின் வழி நடத்தப்பட்டுத்தான் ஊழியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சாத்தான் உன்னைத் தாக்குவான்", என்று பயத்தை உண்டாக்கும் கோழை அவநம்பிக்கை போன்ற சபை போதகர்கள் உண்டு. இவர்களுக்கு, நீங்கள் சபையிலிருந்து ஆத்துமாக்களைப் பறித்துத் கொண்டு வேறு ஒரு இடத்தில் ஊழியம் ஆரம்பித்து விடுவார்கள் என்ற ஒரு பயம். இந்த போதகர்களுக்கு, ஊழியம் என்றால் சபை நடத்துவது, தசம பாகம் வாங்குவது என்பதுதான். உங்களை ஊழியத்தில் பயிற்றுவிப்பது குறித்து இந்த போதகர்களுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது.

சுருளைக் காணோம்

நடந்து சென்ற கிறிஸ்தியான் சுருளில் கூறப்பட்டிருக்கும் ஆறுதலான வார்த்தைகளைப் படிக்கலாம் என்ற எண்ணத்துடன் பையினுள் கையைவிட்டான்! திடுக்கிட்டு நின்றான்! சுருளைக் காணாது கலவரமடைந்தான்! தான் உறங்கும்போதுதான் அதைக் கீழே விட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். முழங்காற்படியிட்டு ஆண்டவரிடம் தனது கவனக் குறைவுக்காக மன்னிப்புக் கேட்டான்.கண்ணீர்விட்டபடியே சுருளைத் தேடி ஓடினான் கிறிஸ்தியான். ஆண்டவர் அந்த இளைப்பாறும் தலத்தைக் கட்டியிருந்தது சற்று அமர்ந்திருக்கத்தானே! ஆனால் கடமையை மறந்து உறங்கிவிட்டது என்னுடை தவறுதானே என்று எண்ணி வருந்தினான்.இளைப்பாறும் தலத்தை அடைந்தவுடன் சுற்றிலும் தேடினான். சுருளைக் கண்டவுடன் அதை எடுத்துப் பத்திரமாக பையினுள் வைத்துக்கொண்டான். அப்போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

வேகவேகமாக மீண்டும் மலைமீது ஏறினான் கிறிஸ்தியான். அனால் அவன் மலையுச்சியை அடைவதற்குள் இருட்டிவிட்டது! கோழையும், அவநம்பிக்கையும் சிங்கங்களைப் பற்றிக் கூறியிருந்தது அவன் நினைவில் எழுந்தது.

இந்த இருட்டு வேளையில் அந்தச் சிங்கங்கள் என் மீது பாய்ந்து என்னைக் கொன்றுபோடுமே! என்று பயந்தான் கிறிஸ்தியான். உடன்தானே தனது தவறை உணர்ந்தான் அவன். தனது அவநம்பிக்கைக்காக ஆண்டவரை நோக்கி மன்னிப்புக் கேட்டான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

கிறிஸ்தியான் சுருளில் கூறப்பட்டிருக்கும் ஆறுதலான வார்த்தைகளைப் படிக்கலாம் என்று எண்ணினான். நமக்கு சுருளில்தான் ஆறுதலான வார்த்தைகள் இருக்கிறது. பெந்தேகோஸ்துவின் சபைகளில் நான் கவனித்து வந்தது என்னவென்றால், மக்கள் தீர்க்க தரிசன ஆறுதல் வசனங்கள் கேட்பதற்கு மாத்திரம் ஆவலாக சபை கூட்டங்களுக்கு வருகிறார்கள். தங்களுக்கு அழிக்கப்பட்ட சுருளை மறந்தவர்கள். தேவன் அவர்களுக்கு தனியாக கொடுக்கப்பட்ட சுருளுக்கு எந்தவிதமான மதிப்பும் கொடுக்காமல் மனிதர்களின் வாய்களின் வரும் தேவ வசனங்களை தேடி வருவது! இது போல மனிதர்களின் வாய்களின் வரும் "தேவ வசனங்களை" தேடி சுவிசேஷ கூட்டங்களை நோக்கி ஓடிப்போவது சகஜம். பின்பு, டெலிவிஷன் சேனல் முன்னால் அமர்ந்து "தேவ வசனங்களைக்" கேட்பது. சாத்தானுக்கு நல்ல பைபிள் ஞானம் நன்கு உண்டு. தேவ வசனங்கள் எங்கிருந்தும் வரலாம். ஆனால் தேவன் தன் வார்த்தைகள் மூலம் உங்களிடம் பேச விரும்புகிறார். ஆனாலோ, நீங்களோ சுருளை இழந்த நிலைமையில் இருக்கிறீர்கள். சபை போதகரையே முற்றிலும் நம்பி அவரை ஆண்டவர் தன் ராஜ்ஜியத்தில் அழைத்த பின்பு இந்த உலகமே இருண்டுவிட்டது போல எண்ணி அங்கலாய்க்கும் விசுவாசிகளை நான் கண்டிருக்கிறேன்.

கிறிஸ்தியான் உறங்கும்போதுதான் அதைக் கீழே விட்டிருக்கிறான். நீங்களும் உங்களது ஆவிக்குரிய வாழ்க்கையில் உறங்கி சபை போதகரின் மேல் விசுவாசம் வைத்து தேவன் கொடுத்த சுருளை மறந்து விட்டீர்களே!

நீங்களும் மலையுச்சி அடையாமல் இருப்பதற்கு கரணம் இதுதான். கிறிஸ்தியான் மலையுச்சியை அடைவதற்குள் இருட்டிவிட்டது! கோழையும், அவநம்பிக்கையும் சிங்கங்களைப் பற்றிக் கூறியிருந்தது அவன் நினைவில் எழுந்தது.

உங்கள் வாழ்க்கையிலும் இதுபோலத்தான் நடக்கிறது. "சாத்தானும் அவன் சேனைகளும் நீங்கள் ஊழியம் செய்யப் போகும்போது உங்களை எதிர்த்து நிற்பான்", என்று பயம் காட்டும் கோழை, அவநம்பிக்கை போன்ற போதகர்மார்கள் உங்களை ஆவிக்குரிய மலைஉச்சத்தை அடையாமல் தங்களின் சபைகளின் நான்கு சுவர்களுக்கு உள்ளில் உங்களை அடைத்து வைத்து உங்கள் மூலமாக அவர்களின் ராஜ்யத்தை விரிவாக்குகிறார்கள். உங்களை விசுவாசிகள் என்று அழைத்து தங்களை மாத்திரம் லேவிய ஊழியக்காரர்களாகக் காண்பித்துக்கொள்கிறார்கள்.

இந்த காரியம் எல்லா திருச்சபைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலிக்கன் சபையாயிருக்கலாம். அல்லது பெந்தேகோஸ்தே திருச்சபையாயிருக்கலாம். நடப்பதெல்லாம் பழைய ஏற்பாட்டின் லேவிய ஊழியமே. மேடையில் நடக்கும் காட்சிகளே. மேடையில் அமர்ந்து இருப்பது லேவியர்களே. பிரசங்க மேடையிலிருந்து பேசுவதும் பழைய ஏற்பாட்டின் லேவியர்களே. புதிய ஏற்பாட்டின் புதிய ரசத்தை பழைய ஏற்பாட்டின் துருத்திகளில் ஊற்றி வைப்பதுதான். (New wine in old bottles). புதிய ஏற்பாட்டின் எழுப்புதல் பழைய ஏற்பாட்டின் சீனாய் மலையிலிருந்து ஒருக்காலும் வராது. கொல்கதா மலையிலிருந்துதான் புதிய ஏற்பாட்டின் எழுப்புதல் வரும்.

இன்று சபைமக்களை பரிசுத்தாவியானவர் நமக்கு வைத்திருக்கும் பலவிதமான ஊழியங்களைக் குறித்துப் போதித்து அந்த ஊழியங்களில் பயிற்சி அளித்து தேவனின் பணியில் நிறுத்தும் போதகர்கள் மிகவும் குறைவு. அவர்களுக்கு தெரிந்தது ஒரேயொரு ஊழியம் சபை மேய்ப்பனின் பணிமாத்திரமே. வேறு ஊழியங்களைக் குறித்த வேத அறிவு கிடையாது. தீர்க்கதரிசன ஊழியம் என்றால் என்னவென்றும், அப்போஸ்தலர்கள் எங்கே பணிபுரிய வேண்டும் என்கிற சாத்தியங்களைப் போதிப்பது கிடையாது. அவர்களுக்குத் தெரிந்த ஊழியம் என்பது சபை ஊழியம் மாத்திரம் தான். பிரசங்க மேடையில் நின்று மணிக்கணக்கில் பிரசங்கம் செய்து மக்களை உணர்ச்சி அடைய வைப்பதுதான்! ஊழியம் என்றால் வேதத்தைக் கைகளில் எடுத்து மேடையிலிருந்து போதித்தால் போதும் என்ற ஒரு தப்பான கொள்கையை பரப்பும் அநேக பாஸ்டர்மார்கள் (pastors) நம் மத்தியில் உண்டு. ஊழியம் (Ministry) என்றால் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யவேண்டும் என்று போதியாமல் பிரசங்கம் செய்வதுதான் ஊழியம் என்று தப்பாக போதிக்கும் போதகர்கள் நம்மிடையில் உண்டு.

இன்றைய திரளான கிறிஸ்தவர்கள், புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது? என்பதைக்கூட அறியாதிருக்கிறார்கள்! புதிய ஏற்பாட்டை இவர்கள் கவனமாய்ப் படிக்கவில்லை. ஆகவேதான் புதிய ஏற்பாடு போதிப்பதைப் பின்பற்றுவதற்குப் பதிலாக தங்கள் தலைவர்களின் போதகங்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்.

இப்படி உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சுருளை படித்து தியானிக்காமல் உங்களின் பாஸ்டரின் வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்துபோயிருக்கும் தேவமக்கள். ஆண்டவரை நோக்கி மன்னிப்புக் கேட்டு, உங்களது சுருளை எடுத்துப் படித்து, மலையின் உச்சிக்கு ஓடவும். கடினமான மலையுச்சியை அடையவேண்டுமானால் ஆண்டவரின் பாதத்தில் அநேக நேரம் அமர்ந்திருந்து அவரது சத்தத்தை வேதத்தின் மூலமாகவும் தனிப்பட்ட தரிசனம் மூலமாகவும் கேட்கவேண்டும்.

நான் 1981 ம் ஆண்டில் ஒரு தரிசனம் கண்டேன். அதிலே நான் ஒரு மலையுச்சியை நோக்கி ஓடுகிறேன். என்னை மலையுச்சியை அடைய விடாமல் தங்கள் கைகளில் துப்பாக்கியை ஏந்தி என்னை துரத்திக்கொண்டு வரும் ஒரு கூட்டத்தாரை காண்கிறேன். நான் உயிர் பிழைக்க மலையுச்சியை அடைய, ஒரு வெள்ளைக்காரர் என் கரத்தைப்பிடித்து உயரே தூக்கி எடுக்கிறார். மேலே வந்தவுடன் அவர் என்னை மலையின் மேல் நிற்கக்கூடாது என்றும் அப்படி நின்றால் அவர்கள் என்னை சுட்டுவிடுவார்கள் என எச்சரிக்கிறார். பின்பு அங்கே ஒரு உணவின் பண்டகசாலை (godown) இருப்பதைக் காண்கிறேன். எனக்கு வேண்டிய ஆகாரங்கள் அங்கே இருப்பதைக் காண்கிறேன். பின்பு சிறிது நேரம் கழித்து நான் ஒரு பட்டாள தளபதி (army captain) போல ஆடை அணிந்து ஒரு போர்க்களத்தில் (battlefield) நுழைகிறேன். அங்கேயுள்ள போர் வீரர்களுக்கு நான் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறேன். அவர்கள் எல்லோரையும் தங்களின் ராணுவ ஆடைகளைக் களைந்து, சாதாரண ஆடைகளை (civil dress) அணியும்படி, கூறுகிறேன். ஆனால் அவர்களோ என்னைப் பார்த்து நகையாடினார்கள்.

நான் கொடுத்த எச்சரிக்கை பின்வந்த வேத வசனங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது: "இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாதிருங்கள்.

"இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.

கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?

மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே. (எபிரெயர் 3:15-17).

இந்த தரிசனத்தின் படி ஆண்டவர் நான் எந்தவிதமான ஊழியம் செய்யவேண்டும் என்று என்னோடு பேசினார். உங்களுக்கு ஒரு ஆவிக்குரிய மலையுச்சி உண்டு. இந்த கடின மலையை அடைய வேண்டும். இந்த மலையின் மீது நீங்களும் பரிசுத்தாவியானவரும் மாத்திரம் இருப்பீர்கள். மூன்றாவது நபராக எந்த தீர்க்கதரிசியும் அங்கே இருக்கமாட்டார்கள்.

நீங்கள் மலையுச்சி அடையாமல் தடுக்கும் எந்த விதமான நபரும் உண்மையான கிறிஸ்துவின் ஊழியக்காரர் அல்ல. அவர்களை விட்டு ஓடவேண்டும்.

ஒரு சபையில் அப்போஸ்தல அல்லது தீர்க்கதரிசன அழைப்புள்ள ஏதாவது ஊழியக்காரர் இருப்பார்களானால் பரிசுத்தாவியானவர் அவர்கள் மூலம் ஒரு ஊழிய அழைப்பையோ அல்லது எவ்விதமான ஊழியம் செய்யவேண்டுமென்றோ உங்களிடம் பேசக்கூடும். ஆனால் மலையுச்சியில் போய் தேவனோடு ஐக்கியம் வைப்பது மிகவும் அவசியம்.

மலையுச்சி அடைந்தவுடன், மிகுந்த தாழ்மையுடன் படுத்துக்கொண்டு, உங்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் உணவு பண்டாரத்தில் பரிசுத்தாவியானவரின் ஒத்தாசை கொண்டு வேதத்தை ஜெபத்துடன் படித்துத் தியானிக்கவும். இங்கே உங்களுக்கு பரிசுத்தாவியானவர் பயிற்சி கொடுக்கிறார். இது ஒரு வனாந்திரத்தில் பெரும் பயிற்சி. ஆவிக்குரிய பயிற்சி பெற்றவுடன் மலையை விட்டு இறங்கி ஊழியம் செய்யவும். எப்போதெல்லாம் மனிதர்கள் உங்களை நாடி வருகிறார்களோ அவர்களுக்கு பணிவிடை செய்துவிட்டு மீண்டும் மலையுச்சிக்குப் போய் தேவனோடு ஜெபத்தில் தரித்திருக்கவேண்டும். மனித புகழுக்கு அடிமை ஆகக்கூடாது. பரிசுத்தாவியானவர் உங்கள் கைகளின் மூலம் அற்புதம் செய்தால், உடனே உங்களை மறைத்துக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று சுவிசேஷம் சொல்லவேண்டும். உங்களுக்கென்று ஒரு மேடையோ கூடாரமோ வைத்துக்கொள்ளக்கூடாது. உங்களின் மூலம் தெய்வீக சுகம் அல்லது அற்புதம் பெற்றவர்களிடம் போய் உங்களுக்கு எந்தவிதமான உதவியையும் நாடாதீர்கள். அவர்கள் உங்கள் சபையில் அங்கத்தினராக இருப்பார்களானால் அவர்கள் உதாரத்துவமாக கொடுக்கும் காணிக்கையைப் பெற்றுக்கொண்டு அவர்களை வற்புறுத்தி காணிக்கை கேட்காதீர்கள். "தசம பாகம்" என்ற பழைய ஏற்பாட்டின் லேவியரின் பங்கைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு, புதிய ஏற்பாட்டின் ஆசிர்வாதத்தை இழந்து போகாதீர்கள். பெற்றுக்கொள்ளாமல், கொடுப்பதினால்தான் புதிய ஏற்பாட்டின் ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். சபையிலுள்ள ஏழைகளையும், விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் ஆதரியுங்கள்.

அலங்கார மாளிகை

விசுவாசத்தோடு முன்னேறிச் சென்ற கிறிஸ்தியான் அலங்கார மாளிகை என்ற அழகான அரண்மனையைக் கண்டான். இரவு அங்கே தங்கச் செல்லலாம் என்ற நம்பிக்கையோடு மாளிகையை அடைந்தான்.

அருகே செல்லச்செல்ல பாதை மிகவும் குறுகலாகியது! வாசலின் அருகே இரண்டு சிங்கங்கள் படுத்திருப்பதைக்கண்டு தயங்கினான்!கோழையும் அவநம்பிக்கையும் இந்தச் சிங்கங்களைக் கண்டுதான் பயந்து ஓடினார்கள்போலும்! என்று நினைத்தான் கிறிஸ்தியான்.கிறிஸ்தியான் தயங்கி நிற்பதைக் கண்டு விழித்திருப்போன் என்ற பெயருடைய அரண்மனைக் காவல்காரன், ஏன் கோழைபோல அங்கேயே நின்றுவிட்டாய்? சிங்கங்களைப்பற்றிப் பயப்படாதே! அவை சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றன! உன்னுடைய விசுவாசத்தைச் சோதிக்கவே அவை இங்கே இருக்கின்றன. நீ பாதையின் நடுவே நடந்து வந்தால் அவை உன்னை ஒன்றும் செய்யாது என்று அவனை நோக்கிக் கூறினான்.நடுக்கத்துடனே கிறிஸ்தியான் மெதுவாக முன்னேறிச் செல்வதை நான் என் கனவில் கண்டேன். சிங்கங்கள் கெர்ஜித்தன! ஆனால் கிறிஸ்தியானை ஒன்றுமே செய்யவில்லை!காவல்காரனிடம் சென்று கிறிஸ்தியான் ஜயா, நான் இன்றிரவு இங்கே தங்கலாமா? என்று கேட்டான்.

பயணிகள் பாதுகாப்பாகத் தங்குவதற்காகத்தான் இந்த மலையின் எஐமானர் இந்த மாளிகையைக் கட்டியுள்ளார். நீ எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டான் காவல்காரன்.

அழிநகரத்திலிருந்து வருகிறேன். நித்திய நகரமான மோட்சத்தை நோக்கிச் செல்கிறேன் என்றான் கிறிஸ்தியான்.

உன் பெயர் என்ன? ஏன் இவ்வளவு இருட்டிய பிறகு வருகிறாய்? என்று கேட்டான் காவல்க்காரன்.

முன்பு என் பெயர் கிருபையற்றோன், ஜயா. இப்போதோ என் பெயர் கிறிஸ்தியான் என்று கூறி அவன் தான் இளைப்பாறும் தலத்தில் சுருளைத் தொலைத்து விட்டதுபற்றியும், அதைத் தேடி வருவதற்காக இவ்வளவு தாமதமாகிவிட்டது என்பதையும் எடுத்துரைத்தான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

விசுவாசத்தோடு முன்னேறிச் சென்ற கிறிஸ்தியான் அலங்கார மாளிகை என்ற அழகான அரண்மனையைக் கண்டான். மலையுச்சியை அடைந்தபின்புதான் அலங்கார மாளிகை என்ற அழகான அரண்மனை தென்படுகிறது. விழித்திருப்போன் என்ற பெயருடைய அரண்மனைக் காவல்காரன் அங்கே காணப்படுகிறான். இது ஒரு தேவ சபையை குறிக்கிறது; அதை நடத்தும் பாஸ்டரை, இங்கே ஒரு "விழித்திருப்போன்" என்ற பெயருடைய அரண்மனைக் காவல்காரன் என்று ஜான் பணியன் குறிப்பிடுகிறார்.

இன்று நாம் மலை உச்சியை அடைந்து தேவனின் சத்தத்தைக் கேட்டபின்புதான், நமக்கு சபைகளில் என்ன செய்யவேண்டும் என்றோ அல்லது எந்தவிதமான ஊழியங்கள் செய்யவேண்டுமென்றோ ஆவியானவர் வெளிப்படுத்துகிறார். தேவன் தான் நமக்கு எந்தவிதமான ஊழியத்தை செய்யவேண்டும் என்று தனது வார்த்தையின் மூலமாகவோ, அல்லது நேராகவோ, தனிப்பட்ட முறையிலோ வெளிப்படுத்துகிறார். நாம் மலையுச்சியில் அவரோடு இருக்கும்போதுதான் அவரது குரலை கேட்கிறோம்.

"ஏன் கோழைபோல அங்கேயே நின்றுவிட்டாய்? சிங்கங்களைப்பற்றிப் பயப்படாதே! அவைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றன"! என்று அந்த காவல்காரன் கிறிஸ்தியானுக்குக் கூறுகிறார். இன்று சாத்தானை பற்றி பயம் காட்டி மக்களை தங்களிடம் இழுக்கும் அநேக பாஸ்டர்மார்கள் இருக்கிறார்கள்.

"நீ பாதையின் நடுவே நடந்து வந்தால் அவை உன்னை ஒன்றும் செய்யாது," என்று கிறிஸ்தியானை நோக்கிக் காவல்காரன் கூறினான்.

நமக்கு தனது வார்த்தையின் மூலமாக ஒரு பாதையை தேவன் வைத்திருக்கிறார். இந்த பாதையின் வழியாகத்தான் நாம் நடந்து வந்து அலங்கார மாளிகையின் உள்ளில் பிரவேசிக்கவேண்டும். ஒரு சபையில் சேருவதற்கு முன்னால் நாம் சிலுவை அண்டையில் வந்து பாவமன்னிப்பின் நிச்சயம் கிடைத்திருக்க வேண்டும்.

"நீ பாதையின் நடுவே நடந்து வந்தால் அவை உன்னை ஒன்றும் செய்யாது," என்று போதிக்கும் போதகர்கள் எங்கே? "நான் ஜெபித்தால் உனக்கு ஒரு தீங்கும் வராது. சபைக்கு ஒழுங்காக வந்தால் சாத்தான் உன்னை ஒன்றும் செய்யமாட்டான்", என்று போதிக்கும் போதகர்கள் நம் மத்தியில் உண்டு. இவர்கள் உண்மையாகவே காவல்காரர்கள் அல்ல.

இரட்சிப்பின் பாதை வழிதான் ஒரு ஆத்துமா சபைக்குள் பிரவேசிக்கவேண்டும். சபைக்குள் வந்தும் சுவிசேஷம் கேட்டு இரட்சிக்கப்படலாம். இரட்சிப்புதான் ஒரே வழி. சபை போதகர் இந்த இரட்சிப்பின் வழிதான் ஆத்துமாக்களை வழிநடத்தவேண்டும். வெறும் அற்புதத்தையோ சரீர சுகத்தையோ காண்பித்து வழிநடத்தியானாலும், பின்பு இரட்சிப்பின் பாதைக்குள் கொண்டுவர தாமதிக்கக்கூடாது.

ஒரு சபையில் ஒரு தீர்க்கதரிசன ஊழியம் பரிசுத்தாவியானவர் உங்களுக்குக் கொடுக்க மனதோடு இருக்கலாம். உங்களுக்கென்று ஒரு பாதையை கண்டிப்பாக வைத்து இருப்பார். மலையுட்சியில் அவரது அழைப்பைப் பெற்று இருப்பீர்களானால் உங்களுக்கு எந்த பாதை தெளிவாகத் தெரியும். சிங்கங்கள் ஏற்கனவே கட்டப்பட்டிருக்கின்றன.

காவல்காரனிடம் சென்று கிறிஸ்தியான், "ஜயா, நான் இன்றிரவு இங்கே தங்கலாமா?" என்று கேட்டான்.

ஒரு தேவ சபை ஒரு இரவு தங்கும் ஒரு அழகிய மாளிகை தான். இங்கே நாம் நிரந்தரமாக இருக்கும் ஒரு இடம் அல்ல. ஒரு இரவு என்றால் நமது வாழ்நாட்களில் ஒரு குறுகிய காலம் என்பதுதான். நமது வாழ்க்கையின் இருண்ட நாட்களுக்கு மத்தியில் இந்த மாளிகை ஒரு புகலிடமாக தோன்றுகிறது.

இன்று அநேக தேவ ஜனங்கள் தங்களின் சபைகளை நிரந்தரமாக வாசம் செய்யும் இடமென்று கருதி, தங்களின் சரீர ஆசிர்வாதங்களைப் பெறும் இடமாகக் கருதி தங்களுக்கு ஆண்டவர் கொடுக்க விரும்பும் விசேஷித்த ஊழியங்களின் அழைப்புக்களை இழந்துநிற்கிறார்கள். பாஸ்டர்தான் தங்களுக்கு தேவசத்தத்தைக் கேட்கச் செய்வார் என்று எண்ணி தங்களின் அருமையான அழைப்புக்களை கைவிட்டு நிற்கிறார்கள். அவர்கள் கேட்க விரும்புவது ஆறுதலான செய்திகள்தான்!

எத்தனையோ விதவிதமான, வினோதமான, ஊழியங்கள் இருக்கின்றன! அழிந்து போகும் மக்கள் நடுவில் அவர்களுக்கு சமூக சேவைகள் மூலம் பணி புரிந்து, இயேசுவின் அன்பை வெளிக்காட்டும் ஊழியங்கள் இருக்கிறது. வேதாகம் இன்னும் அநேக மொழிகளில் மொழியாக்கம் செய்யமால் ஆத்துமாக்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமக்கு தேவ ஊழியம் சபைக்கு வெளியில்தான்.

அழகிய அரண்மனையின் கதவு திறப்பு

இதைக் கேட்டவுடன் விழித்திருப்போன் ஒரு மணியை அடித்தான். மணியோசை கேட்டவுடன் விவேகம் என்ற பெயருடைய ஒரு அழகிய பெண்மணி கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

காவல்காரன் கிறிஸ்தியானை அவளுக்கு அறிமுகம் செய்துவிட்டு, இவன் இங்கே இரவு தங்க அனுமதி கிடைக்குமா? என்று கேட்டான்.விவேகம் கிறிஸ்தியானைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டாள். கிறிஸ்தியான் தான் பயணம் புறப்பட்டதின் காரணத்தையும், வழியில் தான் அனுபவித்த சோதனைகளும் எடுத்துக் கூறினான்.இதைக் கேட்ட விவேகம் கண்ணீர்விட்டாள். இங்கே வருவதற்குள் எவ்வளவு துன்பங்களைச் சகித்திருக்கிறீர்! வாரும், வீட்டிலுள்ள மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்கிறேன் என்று கூறி விவேகம் கிறிஸ்தியானை உள்ளே அழைத்துச் செனறாள்.முன்யோசனை, பக்தி, கருணை என்ற தன்னுடைய சகோதரிகளையும் மற்றவர்களையும் அவள் கிறிஸ்தியானுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் அனைவரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, வாரும்! என்று வாழ்த்துக்கூறி அவனை வரவேற்றார்கள்!விவேகமும் அவளுடைய சகோதரிகளும் நீண்ட நேரம் கிறிஸ்தியானோடு ஆண்டவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். உணவருந்திய பின்பு அவரவர் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார்கள். சமாதானம் என்ற மேலறை கிறிஸ்தியானுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. விடியும்வரை மன அமைதியுடன் உறங்கினான் கிறிஸ்தியான்.மறுநாள் அந்தச் சகோதரிகள் மீண்டும் அவனுக்கு ஆண்டவரைப்பற்றி எடுத்துக் கூறினார்கள். அவர் தேவனுடைய ஓரே பேறான குமாரன் என்றும், அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை அவர் மன்னிக்கச் சித்தமாயிருக்கிறார் என்றும், அவரைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறின என்றும் விளக்கமாகச் சொன்னார்கள். கிறிஸ்தியான் அனைத்தையும் ஆவலோடு கேட்டு மனதில் பதிய வைத்துக்கொண்டான்.

அதன்பின்பு அந்த மாளிகையின் ஆயுதசாலைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். கச்சைகள், மார்க்கவசம், கேடகம், தலைச்சீரா, பட்டயம் (எபே.6:11-18) இவையனைத்தையும் கண்டு மகிழ்ச்சியடைந்தான் கிறிஸ்தியான்.

நீர் போகும் வழியில் பல விரோதிகளையும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியிருகக்கும். எனவே நீர் இந்த ஆயுதங்களை எடுத்துக் கொள்ளும் என்று சகோதரிகள் கேட்டுக் கொண்டார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

முன்யோசனை (விவேகம்), பக்தி, கருணை ஆகிய முக்கிய குணாதிசயங்களை சபை மக்களுக்குப் போதிக்கவேண்டும். இவைகளை போதிக்கும் போதகர்கள் மிகவும் அவசியம். விவேகமும் அவளுடைய சகோதரிகளும் நீண்ட நேரம் கிறிஸ்தியானோடு ஆண்டவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்த ஊழியர்கள் எந்த விதமான போதனைகளையும் போதித்து, தங்களை ஒரு உன்னதமான இடத்தில் வைத்து காண்பிக்கவில்லை. ஆண்டவரை பற்றி பேசினார்களே தவிர, தங்களுக்கு என்று ஒரு மேடையை அமைத்து பிரசங்கம் பண்ணவில்லை. இன்று, எல்லா சபைகளிலும் பிரசங்க மேடைகள் இருக்கிறது. ஆனால் புதிய ஏற்பாட்டின் காலத்தில் இதுபோல மேடைகள் கிடையாது. இன்று சபைகளின் பிரசங்க மேடைகள் போதகர்களின் தாலந்துகளையும் பேச்சு திறமைகளையும் வெளிப்படுத்தும்படி அமைக்கப்பட்டிருக்கின்றது.

இன்று நாம் காண்பது PULPIT MINISTERS (பிரசங்க மேடை ஊழியர்கள்)! சேவை செய்யும் மனப்பான்மை உடைய ஊழியர்கள் அல்ல. ஆலயங்களில் முதன்மையான இடங்களின் மேல் பேராசைப்படும் (Covet) போதகர்மார்கள்! ஒரு கூட்டம் நடத்தினால் அவர்களுக்கு முதன்மையான இடங்களில் உட்காரும் இருக்கைகள் கொடுக்கப்படவேண்டும். "விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தை வெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ (Pastor அல்லது போதகர்) என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்"" (மத்தேயு 23:6-7).

ஒரு சபையில் சமாதானம் என்ற மேலறை இருக்கவேண்டும். ஆலோசனை (Counselling) போன்ற தனிப்பட்ட ஊழியங்கள் நடைபெறவேண்டும். கஷ்டப்படும் மக்களுக்குப் பொருளுதவி செய்து அவர்களை சமாதானத்துடன் அனுப்பிவைக்கவும்.

"அந்த மாளிகையின் ஆயுதசாலைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். கச்சைகள், மார்க்கவசம், கேடகம், தலைச்சீரா, பட்டயம் (எபே.6:11-18) இவையனைத்தையும் கண்டு மகிழ்ச்சியடைந்தான் கிறிஸ்தியான்." இன்று நமது சபைகள் அழகான மாளிகைகளாக இல்லாமல் வெறும் பிரசங்க மேடைகளாக மாத்திரம் இருக்கிறது. அழகிய மாளிகையாக காட்சியளிக்காமல் வெறும் மளிகை வியாபாரக் கடைகளாகக் காட்சியளிக்கிறது. போதகர்கள் (Pastors) தங்களின் தாலந்துகளையும், பேச்சுத்திறமைகளையும் விற்று மக்களைக் கவர்ந்து அவர்களின் காணிக்கைகளை இச்சிப்பது (covet) ஒரு வியாபாரமே!

பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். பரிசுத்தவான்களை சீர்பொருந்தும் (equipping) வேலையை சபைகள் செய்யவில்லை. "நீர் போகும் வழியில் பல விரோதிகளையும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே நீர் இந்த ஆயுதங்களை எடுத்துக் கொள்ளும் என்று சகோதரிகள் கேட்டுக் கொண்டார்கள்". இன்று தேவ மக்களை ஆயுதம் தரிக்க எந்தவிதமான ஊழியங்களும் நடை பெறவில்லை. ஆயுதம் தரிப்பித்து இருப்பவர்கள் போதகர்மார்கள் (Pastors) மாத்திரம் தான்.

விசுவாசிகளை சீடர்களாக உருவாக்காமல், தாங்கள் அவர்களின் தலைகள் மேல் கைகளை வைத்து, அவர்களை அசுத்த ஆவிகளிடமிருந்து விடுவிப்பதுதான் தங்களின் ஊழியமாகக் கருதுகிறார்கள்.

போதகரே, உங்கள் சபையிலுள்ள தேவ மக்களை உற்சாகப்படுத்தி, பிரசங்க மேடையில் ஏற்றி பிரசங்கம் பண்ண பயிற்சி அளித்திருக்கிறீர்களா? அவர்கள் பரிசுத்தாவியானவரை பெற்று இருப்பார்களானால் அவர்களை ஏன் செய்தி கொடுக்க பயிற்சி கொடுக்காமல் நீங்கள் மட்டும் பிரசங்க மேடையை சொந்தமாக்கி க்கொள்கிறீர்கள்? கொரிந்திய சபையிலே பவுல் எல்லோரையும் தீர்க்கதரிசனம் கூற சொல்கிறாரே! தீர்க்கதரிசனம் என்றால் தேவ வார்த்தைகளைத் தியானித்து அதன் உட்பொருளை அறிவிப்பது தானே!

கிறிஸ்தியான் ஆயுதம் தரித்தல்

உற்சாகத்தோடு கச்சை, மார்க்கவசம், தலைச்சீரா, காலில் போடும் பாதரட்சை இவற்றை அணிந்துகொண்டான் கிறிஸ்தியான். பட்டயத்தையும், கேடகத்தையும் கையில் பிடித்துக்கொண்டான்!

இவ்வாறு கவசம் அணிந்தவனாக அவர்களுடன் புறப்பட்டு, மீண்டும் வாசலண்டை வந்தான்.ஜயா, யாராவது இந்த வழியே சென்றார்களா ? என்று காவல்க்காரனிடம் கேட்டான்.ஆமாம் உண்மையானவன் என்பவர் இந்த வழியே சென்றார். இதற்குள் மலையின் மறுபுறம் இறங்கி விட்டிருப்பார் என்றான் காவல்க்காரன்.ஊண்மையானவனா? என்னுடைய வீட்டிற்கு அருகில் வசித்தவன் தான் அவன். நான் துரிதமாகச் சென்றால் அவனைப் பிடித்துவிடலாம் என்று கூறிய கிறிஸ்தியான் உடனே புறப்பட்டான்.சகோதரிகள் நால்வரும் மலையடிவாரம் வரை அவனோடு வருவதாகக் கூறி உடன் வந்தார்கள். மீட்பரைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றார்கள்.

என்ன இது ? மலையின்மீது ஏறுவதுதான் கடினமாக இருந்ததென்றால், இறங்குவது இன்னும் அபாயமாக இருக்கும் போலிருக்கிறதே என்றான் கிறிஸ்தியான்.

ஆமாம், ஏனென்றால் இந்த மலைச்சரிவு தாழ்மையின் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்கிறது. வழியில் ஏதேனும் அபாயங்கள் நேரிட வாய்ப்புண்டு. அதனால் தான் நாங்கள் உன்னுடன் வருகிறோம் என்றாள் விவேகம்.

அனைவருமாக மலையடிவாரத்தை அடைந்தார்கள். சகோதரிகள் கிறிஸ்தியானிடம் ஒரு திராட்சை இரசப்புட்டி, ஓரு ரொட்டி, உலர்ந்த திராட்சை இவற்றை உணவுக்காகக் கொடுத்துவிட்டு விடைபெற்றார்கள்.

நன்றியோடு இவற்றைப் பெற்றுக்கொண்ட கிறிஸ்தியான் தன்னந்தனியாக தாழ்மையின் பள்ளத்தாக்கில் நடக்கத் துவங்கினான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

"அனைவருமாக மலையடிவாரத்தை அடைந்தார்கள். சகோதரிகள், கிறிஸ்தியானிடம் ஒரு திராட்சை இரசப்புட்டி, ஓரு ரொட்டி, உலர்ந்த திராட்சை இவற்றை உணவுக்காகக் கொடுத்துவிட்டு விடைபெற்றார்கள்". இங்கே சபையின் வேலை முடிந்துவிட்டது. மலை அடிவாரத்தில் அரண்மனை ஊழியர்கள் கிறிஸ்டியானுக்கு வேண்டிய ஒரு திராட்சை இரசப்புட்டி, ஓரு ரொட்டி, உலர்ந்த திராட்சை இவற்றை உணவுக்காகக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். கிறிஸ்டியானுக்கு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக நற்கருணையின் (Holy communion) முக்கியத்தையும், கிறிஸ்துவின் சரீரத்தின் பாடுகளை நினைவு கூறவும் போதித்து விட்டு கடந்து செல்கிறார்கள்.

இங்கே ஊழியம் செய்வது சகோதரிகள் என்று ஜான் பணியன் குறிப்பிடுகிறார். ஊழியங்கள் என்றால், சபை மக்களுக்கு, பணிவிடை ஊழியம் செய்து பணிபுரியும் பெண்களைப் போல செய்யும் பணிவிடை ஊழியங்கள் தான். திராட்சை இரசப்புட்டி, ஓரு ரொட்டி, உலர்ந்த திராட்சை போன்ற ஆவிக்குரிய ஆகாரங்களைக் கொடுப்பதுதான் இந்த சபையின் வேலை. கிறிஸ்துவின் சரீரத்தின் பாடுகளில் நாம் பங்குகொள்ள நம்மை ஆயத்தம் பண்ணவேண்டும். அவரது இரத்தத்தின் வல்லமையை உணர வைத்து, நமது பாவங்களை வளர்க்கும் வேரை அறுத்தெறியும்படி, சபையில் உபதேசம் கொடுக்கப்படவேண்டும். பாவத்தை மேற்கொள்ளும் கடினமான உபதேசங்களும் (உலர்ந்த திராட்சை) கொடுக்கப்படவேண்டும்.

உலர்ந்த திராட்சை என்பதின் அர்த்தம் ஆத்மீக ஆகாரம் ஆகும். கிறிஸ்டியானுக்கு இந்த ஆகாரத்தை கொடுத்துவிட்டு ஊழியக்காரிகள் கடந்து செல்கிறார்கள்.

சபை போதகர்களின் வேலை நம்மை ஆயத்தப்படுத்துவது மாத்திரம்தான். நம்மை சபையில் வைத்து நமது காணிக்ககைகளை பெற்று, சபை போதகர்கள் மாத்திரம் ஊழியம் செய்வது அல்ல. சபை போதகர்களின் வேலை, நம்மை சாத்தானோடு போராடும்படி பயிற்சி அளித்து போர்வீரர்களாக மாற்றுவதுதான்!

ஐந்தாம் அதிகாரம்

அப்பொல்லியோனோடு சண்டை