இரண்டு கெட்ட மனிதர்கள்

Home

முந்திய பகுதி..... நுழைவு வாசலில் பிரவேசிப்பு

நுழைவு வாசலின் அருகே இரண்டு கெட்ட மனிதர்கள்

கிறிஸ்டியானாவின் பிள்ளைகள் நுழைவு வாசலின் அருகே தொங்கிக்கொண்டிருக்கும், ஒரு கனி கொடுக்கும் மரத்தைக் கண்டு, அதிலிருந்து பழங்களை பறித்து உண்ணத் தொடங்கினர். இந்த மரமானது (Beelzebub) பெயெல்செபூக்கு சொந்தமானது. அப்போது திடீரென இரண்டு கெட்ட மனிதர்கள் (Ill-favoured ones) தோன்றினர். இவர்கள் பெண்களை வசீகரிக்க வந்தவுடன், கிறிஸ்டியானாவும் மேர்சியும் தங்களது முகங்களை முக்காடு போட்டுக்கொண்டு, தங்களை மறைத்தனர். பின்பு கிறிஸ்டியானா, "நாங்கள் பரதேசிகள். எங்களிடம் ஒரு காசோ பணமோ கிடையாது. எங்களை விட்டு ஓடிப்போய்விடு," என்று கத்தி அவர்களை தன் காலால் உதைக்கிறாள். அவர்கள், "நாங்கள் பணத்திற்காக வரவில்லை. எங்கள் பேச்சை கேட்டால் உங்களை புகழ்மிக்க பெண்களாக மாற்றிவிடுவோம்," என்றனர். அவர்களின் கெட்ட நோக்கத்தை அறிந்த கிறிஸ்டியானா, "நாங்கள் உங்களின் பேச்சை கேட்க விருப்பமில்லை. நாங்கள் எங்களின் இரட்சிப்பிற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்," என்று கிறிஸ்டியானா உரைத்தாள். அந்த கெட்ட மனிதர்கள் இவர்களை பலவந்தம் செய்ய முற்ப்பட்டபோது, "நாங்கள் செத்தாலும் சரி, எங்கள் ஆத்துமாவையும் சரீரத்தையும் உங்களுக்கு பலி செலுத்தமாட்டோம்," என்று கூறி, "திருடன், திருடன்" என்று கத்த ஆரம்பித்தனர். அந்த கெட்ட மனிதர்கள் மீண்டும் நெருங்கியபோது இன்னும் அதிக சத்தத்துடன் பெண்கள் சத்தம் போட்டனர்.

பிள்ளைகள் அழ ஆரம்பித்தனர். கிறிஸ்டியானாவும், மேர்சியும், அந்த கெட்ட மனிதர்களோடு தங்களின் கைகளினால் போராடினர். அப்போது வீட்டின் உள்ளிருந்து கிறிஸ்டியானாவின் சத்தத்தை கேட்டு, சிலர் வெளியே ஓடி வந்தனர். "தேவ மக்களை பாவத்திற்குள் நடத்தும் நீங்கள் யார், " என்று சத்தம்போட்டு ஒரு தேவ மனிதன் (Reliever) அங்கே தோன்றி, அந்த கெட்ட மனிதர்களைக் கடிந்து கொள்ள, அவர்கள் ஓட்டம் பிடித்து, மதிலை தாண்டி, அருகேயுள்ள அந்த நாயை அனுப்பிய பெயெல்செபூவின் கோட்டைக்குள் நுழைந்தனர். கிறிஸ்டியானாவும், மேர்சியும் தங்களை, அந்த கெட்ட மனிதர்களிடமிருந்து தேவ மனிதனை அனுப்பி இரட்சித்த, தங்களின் பரலோக அரசரை நன்றியால் துதித்தனர்.

அந்த தேவ மனிதர் கிறிஸ்டியானாவை நோக்கி, "பெலவீனரான பெண்கள் ஆண்டவரிடம் ஜெபித்து அவர்களை வழி நடத்தும்படி ஒரு வழி காட்டியை கொடுக்கும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த வழி காட்டி, அவர்களை எல்லா தீமைகளுக்கும் சோதனைகளிலிருந்தும் தப்பிக்கொள்ளும்படியாக உதவி செய்வார்", என்று உணர்த்தினார். அப்போது கிறிஸ்டியானா தனது தப்பை உணர்ந்தாள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

நமது பிள்ளைகள் பெயெல்செபூவின் மரத்திலிருந்து பழங்களை பறிக்காமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். தப்பான பாலிய உறவுக்குள் நுழையாமல் அவர்களின் மேல், கண்கள் வைத்து எப்போதும் கவனித்துக்கொண்டிருக்கவேண்டும். இந்த காலத்தில், போதகர்மார்கள் செய்திகள் கொடுப்பதில் மாத்திரம் தங்கள் நேரங்களை செலவிடுகிறார்கள். தங்களின் பிள்ளைகள் மொபைல் போனில் என்ன பார்க்கின்றார்கள் என்று கொஞ்சம் கூட கவனிப்பது கிடையாது. சில சபைகளில் வாலிப பெண்களும் பையன்களும் ரொம்ப நெருங்கி பழகுகிறார்கள். தொட்டு பேசி பேசுவது சகஜம். பெற்றோர் இதை குறித்தோ சபை போதகர் இதைக்குறித்தோ எந்தவித கவலை கொள்வது கிடையாது.

இந்த தடை செய்யப்பட்ட கனியை (forbidden fruit) உண்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவைகள் நடப்பது பாரம்பரிய சபைகளில் அல்ல. ஆவிக்குரிய சபைகள் என்ற பெயர் பெற்ற சபைகளில் இப்படி நடக்கிறது.

ஆராதனை என்ற பெயரில் மைக்கை கையில் ஏந்தி, அழகான வாலிப பெண்களும் வாலிப ஆண்களும் மேடையில் நடனம் ஆடும்போது இந்த ஆராதனை மாமிச இச்சைக்கு ஏதுவாக வழி நடத்துமானால், அது பரிசுத்த ஆராதனை அல்ல.

தேவ மகளிர் மாமிச இச்சைகளிலிருந்து தங்களின் சரீரங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இந்த நவீன காலத்தில் இணைய தளத்தின் மூலமாக அனேகவிதமான மாமிச இச்சையை உண்டுபண்ணும் சோதனைகளிலிருந்து தாங்களை காத்துக்கொள்ளவேண்டும்.

ஆபாச பாடங்களை காணும்போது அல்லது சினிமா திரைகளில் வரும் காட்சிகளை காணும்போது உள்ளத்தில் காம எண்ணங்கள் கற்பனை உலகத்திற்கு (fantasy world) கொண்டு செல்கிறது. ஆகவே தங்கள் உள்ளங்களில் கற்பனைகள் உருவாகாமல் காத்துக்கொள்ளவேண்டும்.

"எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" (II கொரிந்தியர் 10:4,5).

பெலவீனரான பெண்கள் எப்போதும் ஆண்டவரிடம் ஜெபித்து அவர்களை வழி நடத்தும்படி ஒரு வழி காட்டியை (Guide) கொடுக்கும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். இந்த வழி காட்டி தனிப்பட்ட பெண்களுக்கு ஆவிக்குரிய வாழ்க்கையில் வழி நடத்தும் முதிர்ச்சி பெற்ற ஊழியர்களாக இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பரிசுத்தாவியானவரின் உதவியை ஜெபத்தின் மூலமாக நாடவும். அவரே (Holy Spirit) உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்.

தொடர்ந்து படிக்க.... இளைப்பாறும் வீடு