மூன்று உறங்கும் மனிதர்கள்

Previous....சிலுவைக்காட்சியை காணுதல்

மூன்று உறங்கும் மனிதர்கள்

மூன்று உறங்கும் மனிதர்களை கிறிஸ்டியான் காண்கிறான். அவர்களின் கால்கள் இரும்பு சங்கிலிகளினால் கட்டப்பட்டிருக்கிறது. அவர்களின் பெயர்கள் மூடன், சோம்பேரி, ஊகிப்பவன் என்பதாகும்.

கிறிஸ்டியான் அவர்களை நோக்கி "நீங்கள் பாய்மரக் கம்பதின் மேல் உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள். கீழே ஆழமில்லாத மரணக்கடல் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. நான் உதவி செய்யலாமா?" என்று கேட்டும் அவர்கள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

மூடன் வகையை சேர்ந்த மக்கள் ஆலயங்களுக்குப் போவார்கள். ஆனால் தங்களது பாவத்தின் மூலம் வரும் அபாயத்தை காணாமல் உறங்கிக்கொண்டிருப்பார்கள்.

இந்த சோம்பேரி வகையை சேர்ந்த மக்கள் ஆலயங்களுக்குப் போவார்கள். ஆனால், ஆவிக்குரிய காரியங்களை ஒத்தி வைத்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.

ஊகிப்பவன் வகையை சேர்ந்த மக்கள் ஆலயங்களுக்குப் போவார்கள். ஆனால், தங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல் தங்களது சன்மார்க்க வாழ்க்கையின் மூலம் பரலோகம் போய்விடலாம் என ஊகித்துக்கொண்டிருப்பார்கள்.

இந்த மூன்று வகைகளை சேர்ந்த மனிதர்கள் சுவிசேஷத்தைக் கேட்கமனதில்லாமல் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கையில் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக சுவிசேடர்கள் பாரத்தோடு ஜெபித்து சுவிசேஷம் அறிவிக்கவேண்டும்.

மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தபடி, எந்தவிதமான முதுகுச் சுமையும் இல்லாதவனாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தான் கிறிஸ்தியான். அந்த இடுக்கமான பாதையின் இடதுபக்கச் சுவற்றில் ஏறிக்குதித்து, கிறிஸ்தியானை நெருங்கும் இருவரை என் கனவில் கண்டேன். சம்பிரதாயன், வெளிவேசக்காரன் என்ற இருவருமே அவர்கள்.அவர்களைக் கண்டவுடன் கிறிஸ்தியான், ஐயா நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? என்று கேட்டான். வீண்பெருமை என்ற ஊரிலிருந்து வருகிறோம். மோட்சத்துக்குச் சென்று பேரும் புகழும் பெற ஆசைப்படுகிறோம் என்றார்கள் அவர்கள்.ஐயாமார்களே, நீங்கள் மோட்சத்துக்குப் போக வேண்டுமென்று கூறுகிறீர்கள். ஆனால் இடுக்கமான வாசல் வழியே வராமல் குறுக்குப் பாதையில் வருகிறீர்கள். ஒழுங்கை மீறிய உங்களை ஆண்டவர் மோட்சத்துக்குள் நுழைய அனுமதிப்பாரா? என்று தாழ்மையுடன் சந்தேகம் கிளம்பினான் கிறிஸ்தியான்.

எங்களுடைய வழி குறுக்குவழிதான். இவ்வாறு வருவதுதான் எங்கள் ஊர் மனிதர்களின் பழக்கம். நீயோ இடுக்கமான வாசல் வழியே வந்தாய்! நாங்களோ சுவர் ஏறி வந்தோம்! ஆனால் இருவரும் ஓரே பாதையில்தானே செல்கிறோம் என்று கூறினார்கள் அந்த இருவரும்.

நானோ ஆண்டவரின் கட்டளைப்படி நடக்கிறேன். நீங்களோ உங்கள் சுய விருப்பத்தின்படி நடக்கிறீர்கள். ஆண்டவர் ஏற்கனவே உங்களைக் கள்வர்கள் என்று தீர்ப்பளித்திருப்பார் என்று உறுதியாகக் கூறினான் கிறிஸ்தியான். நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். நீ உன் வழியைப் பார்த்து நட என்று கூறிவிட்டார்கள் அந்த இருவரும்.

மூவருமாக அந்தப் பாதையில் தொடர்ந்து நடந்து சென்றார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் கிறிஸ்தியானோடு விவாதத்திற்கு வந்தார்கள். நாங்களும் விதிகளைக் கடைப்பிடித்து நடப்பவர்கள்தான். எங்களுக்கும் உனக்கும் ஓரே வித்தியாசம் தான். நீ வெண்ணங்கி அணிந்திருக்கிறாய். எங்களுக்கு இல்லை அவ்வளவுதான் என்றார்கள்.

ஆண்டவர் அளித்த அங்கி இது! நான் மோட்ச வாசலை அடையும்போது இந்த அங்கியின் மூலம் அவர் என்னை அடையாளம் கண்டுகொள்வார். என் நெற்றியில் ஓர் அடையாளம் போடப்பட்டுள்ளது. இதோ இந்த முத்திரையிடப்பட்டுள்ள சுருளை நான் வாசலண்டை வராதபடியால் உங்களுக்கு இவைகள் கொடுக்கப்படவில்லை என்றான் கிறிஸ்தியான். ஒன்றுமே பதில் கூறாத அவர்கள் கிறிஸ்தியானைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இடுக்கமான வாசல் வழியே வராமல் குறுக்குப் பாதையில் இன்று அநேகர் மோட்சப்பட்டணத்திற்கு போக விரும்புகிறார்கள். இயேசு என்ற ஒரே வாசலின் மூலம் வந்து பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு கல்வாரியில் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை தரிசியாமல் ஏதோ ஒரு ஜெபம் செய்துவிட்டு குறுக்கு வழியில் வருபவர் அநேகம். கிறிஸ்துவுக்குள் புதிய மனிதனாக பிறவாமல் ஒரு சபையில் சேர்ந்துவிட்டு தாங்கள் பரிசுத்தாவி பெற்றுவிட்டோம் என்று அநேகர் ஏமாந்து இருக்கிறார்கள். தாங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்றும் பிதற்றுகிறார்கள். இவர்கள் சுவர் ஏறி வந்தவர்கள். இவர்கள் சபைகளுக்கு ஒழுங்காகச் செல்கிறார்கள். ஆனால், கல்வாரியில் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவையைக் கண்டு காணாமலும் விசுவாசியாமலும், சுவர் ஏறி குதித்து வந்தவர்கள். இவர்கள் தங்களது பிரச்சனைகள் தீர போதகர்மார்களிடம் வந்து ஜெபிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடந்தவுடன் தாங்கள் இயேசுவின் மூலம் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்று எண்ணி ஒரு பெரிய ஏமாற்றத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் கைகளில் முத்திரையிடப்பட்டுள்ள சுருளை காணமுடியாது. எனென்றால், சுவிஷேசத்தை விசுவாசித்து இரட்சிக்கப்படவில்லை. தேவனின் வார்த்தைகளை விசுவாசித்து மனம் திரும்பி இரட்சிக்கப்படவில்லை. அவர்களின் கைகளில் பைபிள் இருக்கலாம். ஆனால், அவர்கள் அதைப் படித்து அல்லது கேட்டு கிறிஸ்துவையை தங்கள் ரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களின் பைபிள் மேலே முத்திரை கிடையாது. இரண்டாவது, நெற்றியில் பரிசுத்தாவியானவரின் முத்திரையில்லை. பரிசுத்தாவியானவர் இவர்களின் இருதயத்தில் வரவில்லை ஏனென்றால் இவர்களின் இருதயங்களிலிருந்து பாவங்கள் அகற்றப்படவில்லை. மூன்றாவது இவர்களுக்கு வெண் ஆடை கொடுக்கப்படவில்லை. இன்னும் பழைய ஆடைகளைத்தான் அணிந்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு நல்ல ஆவிக்குரிய சபையில் சேர்ந்ததால் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்று எண்ணுகிறார்கள்.

சம்பிரதாயன், வெளிவேசக்காரன் என்பவர்கள் வீண்பெருமை என்ற ஊரிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் சபைகளைக் குறித்தோ அல்லது தாங்கள் அடைந்த ஆவிக்குரிய அனுபவங்களைக் குறித்தோ பெருமையாக பேசுகிறவர்கள். சபையின் சம்பிரதாயங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தங்களின் சபைதான் சரியனானது என்றும், உயர்ந்ததும் என்றும் பெருமையாக பேசுகிறவர்கள். மற்ற சபைகளை குறித்து கேவலமாக பேசுகிறவர்கள்.

பெருமை உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிப்பு! இவர்கள் கிறிஸ்துவின் சிலுவையை தரிசித்தும் தங்களது வாழ்க்கையில் பெருமைக்கு இடம் கொடுத்து கிருபையை இழந்து பின்வாங்கி (Backslide) நிற்பவர்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் (I பேதுரு 5:5). இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.(நீதிமொழிகள் 3:34). இவர்கள் தங்களை தேவனுக்கு முன்பாக தாழ்த்தி வெளி வேடத்தைக் களைந்து மோட்சப் பட்டணத்தை நோக்கி ஓட வேண்டும். சபை சம்பிரதாயங்களை விட்டு தங்களுக்கு கல்வாரி சிலுவையில் அளிக்கப்பட்ட சுருளை தியானித்து முன் செல்ல வேண்டும்.

Next.... கடினமலையை அடைதல்சுவற்றில் ஏறிக்குதித்து வரும் சம்பிரதாயன், வெளிவேசக்காரன் என்ற இருவர்