எப்சிபா பியூலா தேசத்திற்குள் பிரவேசித்தல்

Previous......முகத்துதியைச் சந்தித்தல்

எப்சிபா பியூலா தேசத்திற்குள் பிரவேசித்தல்

மயக்க நிலத்தைக்கடந்து பியூலா தேசத்திற்குள் மோட்சப்பயணிகள் நுழைந்தனர். இந்த தேசத்திலுள்ள காற்று மிகவும் இனிதாகவும் சந்தோஷத்தை அளிப்பதாகவும் இருந்தது. ஒரு காலம் முழுவதும் இங்கே தங்கி தங்களைத்தேற்றிக்கொண்டார்கள். பறவைகளும் பாடும் சத்தத்தைக் கேட்டு, பூக்கள் மலர்வதைக் கண்டும் ஆமையின் குரலையும் கேட்டும் மகிழ்ந்தனர்.

இங்கு நறுமணம் கொண்ட தென்றல் வீசியது! தரையெங்கும் வண்ண வண்ண மலர்கள்! எங்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள்!

இந்த தேசத்தில் சூரியன் இரவிலும் பகலிலும் ஒளி கொடுக்கிறது. இந்த தேசமானது மரண பள்ளத்தாக்கை தாண்டி அமைந்திருக்கிறது. நம்பிக்கையற்றவன் என்ற அரக்கனும் இந்த தேசத்திற்குள் பிரவேசிப்பதுமில்லை. சந்தேக கோட்டையும் இந்த தேசத்திலிருந்து தென்படுவதில்லை. இந்த தேசத்திலிருந்து தங்கள் போகும் மோட்சப்பட்டணம் தென்படுகிறது. இந்த தேசம் மோட்சப்பட்டணத்தின் அருகாமையிருந்ததால் ஒளிவீசும் ஆடையணிந்த மனிதர்கள் இங்கே அலைந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேசத்தில் மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் இடையேயுள்ள உறவு புதுப்பிக்கப்படுகிறது. மணவாளன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாயிருகிறார்.

" நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும் (ஏசாயா 62: 4-5). இந்த தேசத்தில் தானியமும், திராட்சைரசமும் குறைவுபடாது. மோட்சப்பயணிகள் வேண்டியதற்கும் மேலாக ஆசீர்வாதங்கள் இந்த தேசத்தில் அனுபவிக்கிறார்கள். இந்த தேசத்தின் குடிமகன்கள் பரிசுத்த ஜனமென்றும். கர்த்தரால் தேடப்பட்டு, மீட்கப்பட்டவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்.

இந்த தேசத்திலிருந்து தாங்கள் போகும் தேசத்தை நன்றாக காணமுடிகிறது. அங்கிருந்தபடியே, மோட்சத்தைக் கண்டு மெய்மறந்து நின்றார்கள்! முத்துக்களாலும், நவரத்தினங்களாலும் கட்டப்பட்டிருந்த அந்தப் பட்டணம் பிரகாசமாக ஒளி வீசியது. தரையெங்கும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டு தகதகவென்று மின்னியது! சூரிய ஒளி அதன்மீது பட்டுப் பிரதிபலிப்பதைக் காண முடியாமல் கூசிய கண்களைப் பொத்திக் கொண்டார்கள் இருவரும்! மோட்சப் பட்டணம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது! கிறிஸ்தியானும் நம்பிக்கையும் மணவாளனின் நேசத்தால் சோகமடைந்திருக்கிறார்கள். "என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்"(உன்னதப்பாட்டு 5 :8).

தோட்டக்காரர் அவர்களை திராட்சத்தோட்டங்களுக்குள் அழைத்து அங்கேயுள்ள பழங்களைப் பறித்து உண்ணும்படி செய்தார். தோட்டக்காரர் அங்கேயுள்ள பரம அரசரின் பாதைகளையும் இளைப்பாறுதல் ஸ்தலங்களையும் காண்பித்தார். அங்கே படுத்து ஒய்வெடுத்தார்கள். மணவாளனின் அன்பில் தங்களை மெய்மறந்து தங்களுக்குள் அவரின் அன்பைக்குறித்து பேசிக்கொள்ளும்போது, தோட்டக்காரர் அவர்களை நோக்கி "யாரெல்லாம் இந்த திராட்சைரசத்தை அதிகமாய் பருகிறார்களோ அவர்கள் மணவாளனைக்குறித்து மேலும் புகழச்செய்யும் தன்மையை இந்த திராட்சைரசம் உடையதாகயிருக்கிறது", என்றுரைத்தார்.

அவர்கள் இந்த மெய்மறந்த நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டபோது மோட்சப்பட்டணத்தை நோக்கி பயணத்தைத் தொடர திடன்கொண்டனர். சூரியன் அந்த பட்டணத்தின் மேல் ஒளிவீசும்போது, தூய தங்க நிறமாக காட்சியளித்தது. இந்த மகிமையின் காட்சியை தங்களின் திறந்த முகத்தால் காண மாமிச கண்கள் கூசியது. ஆனால் தங்களின் தீர்க்கதரிசன கண்களால் இந்த மகிமையின் பட்டணத்தை காணமுடிந்தது. அப்போது, முகம் பிரகாசிக்கும் தங்கம் போல ஜொலிக்கும் ஆடைகளணிந்து ஒளிவீசும் மனிதர்களில் இரண்டு பேர்களை கண்டார்கள்.

இந்த ஒளிவீசும் மனிதர்கள் அவர்களிடம், "நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள்" என்று கேட்டு அவர்கள் வரும் வழியில் எங்கே தங்கி எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்தும், எப்படிப்பட்ட வசதிகளையும் இன்பங்களையும் பெற்றுக்கொண்டனர் என்று கேட்டறிந்தனர். பின்பு அவர்களை நோக்கி இன்னும் இரண்டு தடைகளை அவர்கள் சந்தித்து மோட்சப்பட்டணத்தை அடைவார்கள் என்று தெரிவித்தனர்.

பின்பு கிறிஸ்தியானும் அவனது தோழனும் அந்த மனிதர்களை தங்களுடன் வரும்படி அழைக்க அவர்கள் சம்மதித்து, "நீங்கள் விசுவாசத்துடன் மோட்சப்பட்டணத்தின் வாசலை அணுகவேண்டும்," என்று உரைத்தனர். அதன்பின்பு அவர்கள் மோட்சப்பட்டணத்தின் வாசலை அணுகினர். அவர்களுக்கும் அந்த வாசலுக்குமிடையில் ஒரு நதியைக்கண்டனர். அந்த நதியின் மேல் ஒரு பாலமும் கிடையாது. நதி மிகவும் ஆழமாகயிருந்தது. அந்த நதியைப்பார்த்து பயணிகள் மிகவும் பயந்துநடுங்க, அந்த மனிதர்கள் அவர்களை நோக்கி "நீங்கள் இதன்வழியாகத்தான் வாசலில் பிரவேசிக்கவேண்டும்", என்று உரைத்தனர்.

பின்பு பயணிகள் அந்த மனிதர்களிடம் வேறு வழி இருக்கிறதா என வினவ, அவர்கள் "ஆம்" என்றனர். "ஆனால் உலகம் ஆரம்பிக்கப்பட்டு கடைசி எக்காளம் ஒலிக்கும்வரை, ஏனோக்கு எலியா போன்ற இரண்டு மனிதர்கள் மாத்திரம் இந்த நதியை கடக்காமல் வேறு வழி மூலமாக பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டனர்" என்று கூற பயணிகள் துக்கித்தனர். பயணிகள் அங்குமிங்கும் பார்க்க வேறு ஒரு வழியும் தென்படவில்லை. பயணிகள் அந்த மனிதர்களை நோக்கி இந்த நதி இதுபோல ஆழமாக இருக்குமா என கேட்க. "இல்லை" என்று பதில் வந்தது. தாங்கள் ஒன்றும் உதவி செய்யமுடியாது என்று கூறி, "பரம அரசரின் மேலுள்ள உங்களது விசுவாசத்தைவைத்து இந்த நதியானது ஆழமுள்ளதாகவும், ஆலமற்றதாகவும் இருக்கும்." என்று அந்த மனிதர்கள் பதிலளித்தனர். பின்பு பயணிகள் ஆற்றிலிறங்கினர். கிறிஸ்டியான் நதியில் மூழ்க நம்பிக்கையை நோக்கி "..... அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது" என கதறினான் (சங்கீதம் 42:3).

கற்றுக்கொள்ளும் பாடம்

இந்த எப்சிபா பியூலா தேசத்தைக்குறித்து விபரமாக இரண்டாம் பகுதியிலுள்ள கிறிஸ்டியானாவின் வாழ்க்கை வரலாற்றில் மேலும் எழுதியிருக்கிறேன். இங்கே எழுதும் காரியங்கள் அந்த பகுதியில் எழுதவில்லை. எப்சிபா பியூலா தேசமானது மகிமையின் தேசத்திற்குள் (Celestial City) பிரவேசித்தப்பதற்கு முன்பான ஒரு இடை தேசம். இதை நாம் கானான் தேசம் (Promised Land) என்று சொல்லலாம். இங்கே நமக்கு ஓய்வு எடுக்கும் இடம். நாம் விசுவாசத்தால், தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கவேண்டிய தேசம் (ஏசாயா 62:4).

நாம் இந்த தேசத்திலிருந்துகொண்டுதான் ஊழியம் செய்யவேண்டும். இன்று அநேகர் வனாந்தரத்தலிருந்துக் கொண்டுதான் ஊழியம் செய்கிறார்கள். எல்லா பொறுப்புகளையும் தன் தலைமேல் ஏற்றி, சரீரத்தில் ஓய்வு எடுக்காமல் ஊழியம் செய்கிறார்கள். தன்கூட பணிபுரியும் சக ஊழியர்களுக்கு பொறுப்பு கொடுப்பதில்லை. ரோமருக்கு எழுதிய 16ம் அதிகாரத்தை தியானிக்கவும். இங்கே ஒரு பட்டியலில் தன் சக ஊழியர்களை ஒவ்வொருவராக பெயர்க்கூறி பவுல் வாழ்த்துகிறார்.

ஆண்டவர் நமக்கென்று வைத்திருக்கும் இளைப்பாறும் ஸ்தலங்களில் தாபரித்துக்கொண்டும், ஆண்டவர் நாம் விரும்பிக் கேட்பதற்கும் மேலாக நமக்கு அருளும் சரீர தேவைகளைப் பெற்றுக்கொண்டும், மோட்சப்பட்டணத்தை நமது ஆவிக்குரிய கண்களால் பார்த்துக்கொண்டும், மரண நதியை கடக்கும் சந்தர்ப்பத்திற்காக ஆயத்தம் பண்ணும் இடம்.

மரண இருளின் பள்ளத்தாக்கிலிருந்து நம்மை ஆண்டவர் இந்த தேசத்திற்கு அழைத்து வருகிறார். இந்த தேசத்தில் சாத்தானின் பயமுறுத்தலும், மரண பயத்தைக்குறித்து அச்சமும் நமது விசுவாசத்தை அசைக்காது. நமது வியாதிகளிலிருந்து ஆண்டவர் விடுதலை கொடுக்கிறார். நமக்கு ஊழியம் செய்வதற்கு அநேக தேவமக்களையும், தேவதூதர்களையும், மற்ற மனிதர்களையும் ஆண்டவர் குறித்த இடங்களில் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறார். நமக்கு வேண்டிய மருத்துவர்களையும், மருத்துவ மனைகளையும் ஆண்டவர் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறார். எனது சாட்சியை விளக்கமாக கிறிஸ்டியானாவின் பகுதியில் விபரமாக எழுதியிருக்கிறேன்.

இந்த இடத்தின் காலங்களை ஆண்டவர் முன்குறித்து தீர்மானித்து வைத்திருக்கிறார். அநேக ஆண்டுகளாக இருக்கலாம். நமக்கு நீடிய ஆயுள் நாட்களை கொடுத்து தேவன் நம்மை தனது ஊழியத்தில் பயன்படுத்துகிறார். நாம் ஊழியம் செய்யும் சரியான இடம் இதுதான். வனாந்தரத்திலே நாம் ஊழியம் செய்யாமல். இந்த தேசத்தில் பிரவேசித்து, சாத்தானின் ஆவிக்குரிய தலையை நமது கால்களால் நசுக்கி, ஊழியம் செய்யவேண்டும்.

இங்கே நமக்கு பணிவிடை செய்யும் வெண்ணிற ஆடைகளை அணிந்த தூதர்கள் உண்டு. இங்கே சாத்தான் நம்மை கண்டால் ஓடிவிடுவான். எந்தவித அரக்கர்களோ நம்மை தாக்கமுடியாது.

சூரியனான கிறிஸ்து இந்த தேசத்தில் எப்போதும் தனது ஒளியை தந்துக்கொண்டிருக்கிறார். இருளோ கிடையாது. இந்த தேசத்திலிருந்து நாம் கள்ள ஊழியர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும்படி புத்திதெளிவு (Discernment) கிடைக்கிறது.

ஆண்டவரின் பழ தோட்டங்களில் எல்லாவிதமான கனிகளையும் உண்ணலாம். யாரிடமும் காணிக்கை கேட்டு ஊழியம் செய்ய அவசியம் இல்லை. மணவாளனின் அன்பையும், அரவணப்பையும் இங்கே நாம் உணரலாம். பரலோகத்தின் ஆசீர்வாதங்களை முன் அனுபவிக்கும் (Foretaste) இடம். இந்த தேசத்தில் தானியமும், திராட்சைரசமும் குறைவுபடாது.

இங்கே பரிசுத்தாவியானவர் எப்படி தோட்டக்காரர் கிறிஸ்தியானையும் நம்பிக்கையையும் தனது பழத்தோட்டங்களில் கொண்டுப்போய் ஆகாரம் அளித்து இளைப்பாறுதல் எடுக்கும்படி செய்தாரோ அப்படியே நம்மையும் வழிநடத்துகிறார்.

Next....மரண நதியை கடப்பது