போக்கரிகளின் கைகளில் பலவீன விசுவாசம்

Previous......கிறிஸ்டியானும் நம்பிக்கையும் அறியாமை என்ற பயணியுடன்

போக்கரிகளின் கைகளில் பலவீன விசுவாசம் என்ற பயணி

அறியாமை என்ற பயணியை சந்தித்தபின்பு கிறிஸ்தியான் கிறிஸ்டியான் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறான். பலவீன விசுவாசம் என்ற பயணி நேர்மை என்ற பட்டணத்தில் வசித்தான். இவன் வழித்தவறி இந்த வழியில் மரித்தவர்களின் தெரு (Dead Man's Lane) என்ற ஒரு விசாலமான தெருவில் (Broad-way Gate) உட்கார்ந்து மறந்து உறங்கிவிட்டான். இந்த தெரு ஒரு கொலைகள் நடக்கும் இடம். இங்கே போக்கிரிகளான மூன்று சகோதரர்கள் பலவீன விசுவாசத்தை கொள்ளையடித்தனர். அந்த போக்கிரிகளின் பெயர்கள் பயந்த இருதயம் (Faint - heart), அவநம்பிக்கையை (Mistrust), குற்றவுணர்வு (Guilt) என்பதாகும். அவனிடமுள்ள நகைகளை சூறையாடாமல் அவன் செலவிற்கு வைத்திருக்கும் பணத்தை மாத்திரம் எடுத்துச்சென்றனர். இந்த கள்வர்கள் அவனை அடித்து குற்றுயிராக்கினர். அப்போது "நல்நம்பிக்கை" என்ற பட்டணத்திலிருந்து மகா கிருபை நடந்து வரும் நடையோசையை கேட்டு இந்த போக்கிரிகள் ஓட்டம்பிடித்தனர்.அவனது நகைகளை அந்த கள்வர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் பணம் மாத்திரம் விட்டுவைத்தார்கள். இந்த பணம் இந்த ஏழை பயணிகளின் மோட்சப்பயணத்தின் வழிச்செலவுற்கு பற்றாது. பிச்சைதான் எடுக்கநேரிடும். அவனால் நகைகள விற்று சாப்பாட்டிற்கு செலவு செய்யமுடியாது. ஒருநல்ல காரியம் என்னவென்றால், அவனது மோட்சபட்டணத்தின் சான்றிதழை அவர்கள் எடுத்துக்கொண்டுபோகவில்லை. இது அவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. மோட்ச வாசலில் நகைகளை இழக்காமல் இருந்ததால் அவனுக்கு கிடைக்கவேண்டிய சேஷ்டபுத்திரபாகத்தை காத்துக்கொண்டான். ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப் ஈசாவை போல இவன் நடந்துகொள்ளவில்லை. இவனுக்கும் ஏசாவுக்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு. ஏசா தன் வயிற்றை காக்கும்படி சேஷ்டபுத்திரபாகத்தை இழந்துவிட்டான். ஏசாவிற்கு இவனை போல கடுகளவு விசுவாசம் கிடையாது. ஏசா தனது மாமிச இச்சைகளை நிறைவேற்றினான். ஆனால் இவனோ தனது பலவீன விசுவாசத்தைக் காத்துக்கொண்டான்.

மகா கிருபையின் முகத்தில் காயங்களின் அடையாளங்கள் இருக்கின்றன. எப்போதெல்லாம், தனது விசுவாசத்தில் பலவீனரான பிள்ளைகள், இந்த போக்கிரிகளின் கைகளில் மாட்டிக்கொள்கிறார்களோ, பரம அரசன் அவர்களுக்கு உதவுகிறார்.

விசுவாச துரோகம் என்ற பட்டணத்தைச்சேர்ந்த ஒரு கல்லூரி பேராசிரியர்

இவர்கள் மூன்று பேரும் முன்னே செல்லும்போது, ஒரு இருண்ட தெரு தோன்றுகிறது. அந்த தெருவில் காணும் காட்சி கிறிஸ்தியானையும் நம்பிக்கையையும் அதிர வைக்கிறது. ஏழு பிசாசுகள், ஒரு மனிதனை ஏழு கயிறுகளால் கட்டி, மலையின் பக்கத்திலிருந்து பாதாள சுரங்கத்திற்குள் கொண்டு செல்லும் கதவுக்கு நேராக இழுத்து சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த மனிதன் "விசுவாச துரோகம்" (Apostacy) என்ற பட்டணத்தைச்சேர்ந்த ஒரு கல்லூரி பேராசிரியர் என்று அந்த மனிதனின் முதுகில் எழுதப்பட்டிருப்பதாக நம்பிக்கை கூறுகிறான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

"பயந்த இருதயம்" என்ற கொள்ளையன் பயந்த இருதயமுள்ள தேவமக்களுக்கு தேவ வசனத்தின்மேல் நம்பிக்கை வைக்காமல் மனிதர்களின்மேல் நம்பிக்கை வைக்க வழிநடத்துகிறான். அநேக ஊழியர்கள் தங்களை கிறிஸ்துவுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மத்தியஸ்தகர்களாகக் காண்பித்து, நீங்கள் தேவனின் மேல் விசுவாசிக்காமல், சாத்தானை வைத்து பூச்சாண்டி காண்பித்து, உங்கள் இருதயத்தில் பயத்தை விளைவிக்கிறார்கள்.

"அவநம்பிக்கை" என்ற கொள்ளையன் உங்களை தேவன் மேல் முழு இருதயத்தோடு நம்பிக்கை வைக்க விடாமல் அவநம்பிக்கையை, உண்டுபண்ணுகிறான். அதாவது, தேவன் மேல் அவநம்பிக்கையையும் தன்மேல் நம்பிக்கையும் வரச் செய்கிறான். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை (மத்தேயு 22 37-38).

"குற்றவுணர்வு" என்ற மூன்றாம் கொள்ளையன் நீங்கள் பாவிகள் என்ற குற்றவுணர்வை மாத்திரம் வரச்செய்து உங்களுக்கு பாவத்திலிருந்து வெற்றிபெறும் ஜீவியத்தைக்குறித்துப் போதிக்கமாட்டான். இவன் உங்களின் பழைய ஜீவியத்தைச் சுட்டிக்காட்டி குற்றவுணர்வை உங்கள் உள்ளத்தில் உருவாக்கி இவனது ஜெபத்தினாலும், செய்திகளினாலும் நீங்கள் பாவ ஜீவியத்திலிருந்து விடுதலை பெறமுடியும் என்று போதிப்பான். தேவனுக்கும் உங்களுக்கும் இடையில் தன்னை ஒரு மத்தியஸ்தராக காண்பிப்பான்.

இந்த மூன்று கொள்ளையர்கள் உங்களது பலவீன விசுவாசத்தை தாக்கி உங்களின் ஆத்துமாவை பலவீனப்படுத்துகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த உங்களின் பணத்தை திருடிக்கொள்கிறார்கள். "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்" (யோவான் 10:10).

உங்களை பயந்து நடுங்கவைத்து அவநம்பிக்கையையும், குற்றவுணர்வையும் உருவாக்கி உங்களின் மதிக்கப்படாத விசுவாசத்தை இழக்க வைக்கிறார்கள். இப்படி உங்கள் விசுவாசத்தைப் பலவீனப்படுத்தி, தங்களுக்கு ஆதாயமாக உங்களின் பணத்தையும் சூரையாடுகிறார்கள். ஆனால், உங்களின் நகைகளான சேஷ்டபுத்திரபாகத்தையும், இரட்சிப்பின் சான்றிதழையும் இழக்காமல் தேவன் தனது கிருபையால் காத்துக்கொள்கிறார். மகா கிருபையான கிறிஸ்து இயேசு தனது காயங்களைக்காண்பித்து சாத்தானையும் அவன் அனுப்பும் இந்த கள்ள தீர்க்கதரிசிகளான கொள்ளையர்களையும் விரட்டியடிக்கிறார்.

இன்று தேவபிள்ளைகளின் பணத்தின்மேல் தான் அநேக ஊழியர்கள் கண் வைக்கிறார்கள். தேவ பிள்ளைகளை தங்களது சேவைக்காக காணிக்கை, தசமபாகம் கொடுக்கும்படி வேண்டிக்கொள்கிறார்கள். 5000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு ஏழை விசுவாசியை, தசமபாகம் 500 ரூபாய் கொடுத்தால், 4500 ரூபாய் வைத்துதான் குடும்பம் நடத்தவேண்டும். அப்போஸ்தலனான பவுல் பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் பொருள்சகாயம் செய்ய விரும்பினார். இன்று நடப்பதோ பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரிடமிருந்து தசமபாகம் என்ற பெயரில் பணம் பறிக்கப்படுகிறது. செல்வந்தராகயிருக்கும் பரிசுத்தவான்களைவிட ஏழை விசுவாசிகள் சரியாக தங்கள் வருமானத்தை சபை போதகருக்கு தெரிவித்து தசமபாகத்தை சரியாக கொடுக்கிறார்கள். இவர்கள் கஷ்டத்துடன் தங்களின் குடும்பங்களை நடத்திவருகிறார்கள். பண்ணியன் எழுதியபடி, இந்த பணம் இந்த ஏழை பயணிகளின் மோட்சப்பயணத்தின் வழிச்செலவுற்கு பற்றாது.

காணிக்கை, தசமபாகம் கொடுத்தால்தான் தேவனிடமிருந்து ஆசிர்வாதம் கிடைக்கும் என்று தேவ மக்களை அவர்களின் கைகளால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இச்சித்து வாங்குவது, கொள்ளை அடிப்பதற்கு சமமாகும். ஆனால், தேவமக்களே முன்வந்து தங்களை தேவனிடத்தில் வழிநடத்திய ஊழியர்களுக்கும் தேவவசனத்தை போதிக்கும் போதகர்களுக்கும் தங்களின் மனப்பூர்வமாக தியாகத்தோடு கொடுக்கும்போது அது பரிசுத்தவான்களுக்கு சேவை செய்யும் ஊழியமாக (Ministry to the saints) கருதப்படுகிறது.

ஒரு ஏழை விசுவசுவாசியிடமிருந்து வலுக்கட்டாயமாக தசமபாகம் வாங்குவது சரியா? "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்" (லூக்கா 6:38). இந்த வசனத்தை குறிப்பிட்டு சபை மக்களை சபை போதகருக்கோ அல்லது சுவிசேடனுக்கோ கொடுக்கும்படி வற்புறுத்துகின்றோம். II கொரிந்தியர், 9 அதிகாரம் 6 -13 வசனங்களையும் தியானிக்கவும். " விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்". "... வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான்..." ".....இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்...."

இந்த வசனங்களை தியானிக்கும்போது, ஏழை பரிசுத்தவான்களுக்கு தர்மசகாயமாகிய பணிவிடை பணியை உற்சாகமாய் செய்யும்படி பவுல் எழுதுகிறார் என்று அறிகிறோம்.

இன்று நாம் இந்த வசனங்களை திரித்து எந்த ஊழியத்தில் எந்த விதமாக விதைக்கிறோமோ நமக்கு அந்த விதமாக ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்கள் நமது மடியிலே மற்றவர்கள் போடுவார்கள் என போதிக்கிறோம். "உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" என்ற பகுதியை குறிப்பிட்டு "தேவன் உங்களை விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" என்று பொய் கூறுகிறோம். "நீதியின்" விளைச்சல் என்று கூறாமல் பண விளைச்சல் என்று கூறுகிறோம்.

ஒரு ஊழியர் ஒரு மெகா சபையில் தேவமக்கள் கைகொட்டி ஆர்வரிக்க இவ்விதம் கூறுகின்றார். "இயேசுவின் மரித்த சரீரத்தை பெற்றுக்கொள்ளும்படியாக ஒரு செல்வந்தன் தான் முன்வந்தான். ஒரு ஏழைக்கு இந்த சரீரம் கொடுக்கப்படவில்லை. அப்படி கொடுக்கப்பட்டிருந்தால், அவன் அந்த சரீரத்தை வைத்து, அழுது பிச்சை எடுத்திருப்பான். அடக்கம் செய்திருக்கமாட்டான். ஏழைகள் சபைகளுக்கு வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஏழைகள் சபைகளுக்கு வந்தால் அவர்களை தேவன் செல்வந்தர்களாக மாற்றுவார்".

ஏழை பரிசுத்தவான்கள் விசுவாசத்தின் மூலம் ஆண்டவர் அவர்களுக்கு நிச்சயமாக அந்தஸ்த்தோ, சொத்தோ கொடுப்பார். உலக ஆசீர்வாதங்களை பெறும்படி, தேவன்மேல் விசுவாசம் வைக்கும்படி தைரியமாக சபை போதகர்கள் போதனை கொடுக்கலாம். ஆனால், இந்த ஏழை பரிசுத்தவான்களிடமிருந்து, தேவ வசனங்களைச் சுட்டிக்காட்டி, காணிக்கை, தசமபாகம் போன்றவைகளை கொடுத்தால் தான் தேவன் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று போதிப்பது சரியல்ல. இது ஒரு கள்ள போதனை. இப்படி பணம் பறிப்பது பண்ணியன் கூறுவதுபோல ஒரு வழிப்பறியாகும்.

கல்லூரி பேராசிரியர் போன்ற கள்ள ஊழியர்கள்

கள்ள உபதேசத்தால் உண்டாகும் விசுவாச துரோகம் (apostacy) பெருகி வரும் இந்நாட்களில் வெறும் வேத அறிவை (Theology) மாத்திரம் பெற்றுள்ள கல்லூரி பேராசிரியர் போன்ற ஊழியர்களை குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். இவர்கள் போதிப்பது வேதத்திலிருந்துதான்! ஆனால் ஒரு கோணலாக போதித்து (From one angle) சத்தியத்தை நீங்கள் அறிந்துக்கொள்ளாமல் இருக்க விரும்புகிறார்கள். இந்த கள்ள போதகனை வழிநடத்துவது சாத்தான்தான்!

ஏழு விதமான பொல்லாத குணங்களுடன் உங்களை ஏழு விதமான கட்டுக்களால் கட்டி பாதாளத்திற்கு நேராக இழுத்துச்செல்கிறான். பெருமை, இச்சை, சுயநீதி, வஞ்சகம், மாயமாலம், பணத்தாசை, பொய் போன்ற ஏழு விதமான குணங்களிலிருந்து நாம் தப்பிக்கொள்ளவேண்டும். ஏழு கட்டுக்கள் என்றால் பலம் வாய்ந்த பிடிப்பு! இந்த பலம்வாய்ந்த பிடிப்பிலிருந்து கல்லூரி பேராசிரியர் போன்ற கள்ள ஊழியர்களை தப்புவிப்பது மிகவும் கஷ்டம். பண்ணியன் இந்த கள்ள ஊழியனைக் குறித்து நமக்கு மிகவும் தெள்ள தெளிவாக வெளிப்படுத்துகிறார். இந்த ஏழு விதமான குணங்களை நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் உண்டாக்கும் எந்த விதமான வேத போதனைகளுக்கும் (Doctrines) நாம் செவிக்கொடுக்கக்கூடாது. இந்த கள்ளப் போதனைகளைக் கொண்டுவரும் கல்லூரி பேராசிரியர் போன்ற ஊழியர்களை அடையாளம் கண்டுக்கொள்ளவேண்டும். நாம் இந்த கள்ள ஊழியர்களின் போதனையைப் பின்பற்றினால், பாவத்திலிருந்து விடுதலை பெறாமல் நரகத்திற்குத்தான் சென்றடைவோம்.

Next.....முகத்துதியைச் சந்தித்தல்