முகத்துதியைச் சந்தித்தல்

கிறிஸ்தியானும், நம்பிக்கையும் தங்கள் மோட்சப் பாதையில் மகிழ்ச்சியோடு நடந்து சென்றார்கள். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையில் செல்வது என்று தயங்கி நின்ற போது அங்கியால் முகத்தை மூடியிருந்த ஒருவன் அருகே வந்து ஏன் நிற்கிறீர்கள்? என்று கேட்டான்.பயணிகள் இருவரும் பாதை தெரியவில்லை என்றார்கள். என்னைப் பின்பற்றி வாருங்கள், நானும் மோட்சத்திற்குத்தான் போகிறேன் என்றான் அவன். இருவரும் அவனுக்குப் பின்னே சென்றார்கள். அந்தப் பாதை வளைந்து வளைந்து சென்றபடியால் எந்தத் திசையில் செல்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை!அப்போது இருவரும் ஒரு பெரிய வலையில் சிக்கிக்கொண்டார்கள்! அவர்களால் நகரக்கூட முடியவில்லை! அவர்களை அழைத்துவந்தவர்களின் முகத்திரை விலகியது! அவன்தான் முகத்துதி என்பதைக் கண்டு கலக்கமடைந்ததார்கள்! அவன் அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றான்.முகத்துதியிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று மேய்ப்பன் கூறினாரே! நாம் கவனக் குறைவால் இப்படி மாட்டிக்கொண்டோமே! பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான் (நீதி.29:5 ) என்ற வார்த்தை எவ்வளவு உண்மையாகி விட்டது! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். சிறிது நேரம் கழித்து பிரகாசமான ஆடையணிந்து ஒருவர் அவர்களருகே வந்தார். அவர் கையில் ஒரு சாட்டை இருந்தது. வலையைக் கிழித்து அவர்களை விடுவித்தார்.

சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேசத்தை தரித்துக் கொள்வானே (2 கொரி 11:14) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை மறந்துவிட்டீர்களே! மேய்ப்பன் கொடுத்த வரைபடத்தை எடுத்துப்பார்த்துச் சரியான பாதையை அறிந்திருக்கலாமே! என்று கடிந்து கொண்ட அவர் சாட்டையை எடுத்து அவர்களை அடித்தார்.

தண்டனையை அளித்த பின்பு வாருங்கள் சரியான பாதையை உங்களுக்கு காட்டுகிறேன் என்று அவர்களை அழைத்துச் சென்று சரியான பாதையில் செல்ல வைத்தார். இருவரும் மயக்க நிலத்தை வந்தடைந்தார்கள். காற்றே இல்லாததுபோல காணப்பட்டது! நடப்பதற்கே கடினமாக இருந்தது! நம்பிக்கை சற்று அமர்ந்து ஒய்வெடுக்கலாம் என்று கூறினான்.

மேய்ப்பன் கூறியதை மறந்துவிட்டாயா? இது மயக்க நிலம் நாம் முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தான் கிறிஸ்தியான்.

உறங்கிவிடாதிருக்க ஆண்டவர் செய்த அற்புதங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே நடந்து, அந்த நிலத்தைக் கடந்துவிட்டார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

"முகத்துதியிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று மேய்ப்பன் கூறினாரே! நாம் கவனக் குறைவால் இப்படி மாட்டிக்கொண்டோமே! பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான் (நீதி.29:5 ) என்ற வார்த்தை எவ்வளவு உண்மையாகி விட்டது! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். சிறிது நேரம் கழித்து பிரகாசமான ஆடையணிந்து ஒருவர் அவர்களருகே வந்தார். அவர் கையில் ஒரு சாட்டை இருந்தது. வலையைக் கிழித்து அவர்களை விடுவித்தார்".

இன்று நம்மை முகத்துதி செய்து தப்பாக வழி நடத்தும், கள்ள போதர்கள் அநேகர் உண்டு. "நீங்கள் பரலோக ராஜ்ஜியத்திற்கு என்று நியமிக்கப்பட்ட, அபிஷேகம் பெற்ற தேவ பிள்ளைகள். நாங்கள் காண்பிக்கும் வழியை பின்பற்றினால் போதும். நாங்கள் ஜெபித்து உங்களை வழி நடத்துகிறோம். நீஙகள் ஒரு ஆசாரிப்பு கூட்டம்," என்று கூறி முகத்துதி செய்வார்கள்.

இன்று நம்மை கண்டித்து ஆவிக்குரிய சாட்டையை வைத்து அடித்து வழி நடத்தும் உண்மையான ஊழியர்கள் தேவை. இவர்கள் பாவத்தை குறித்தும், நீதியை குறித்தும் உணர்த்துவார்கள்.

"சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேசத்தை தரித்துக் கொள்வானே", (2 கொரி 11:14) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை கூறி இந்த ஊழியர்கள் நமக்கு எச்சரிக்கை செய்வார்கள். நாம் சரியான பாதையில் நடக்காவிடில் வேத வசனமாகிய சாட்டையை எடுத்து நம்மை அடித்து உணர்த்துவார்கள்.

இப்போது, எசேக்கியேல் 14 அதிகாரம் வசனங்கள் 1 முதல் 11 வரை ஜெபத்தோடு தியானிப்போம்.

இங்கே குறிப்பிட்ட இஸ்ரவேலுடைய மூப்பர்கள் யார்? இவர்கள் நமது மத்தியில் நம்மை கிறிஸ்துவினிடம் வழி நடத்துபவர்கள். இவர்கள் தங்கள் "நரகலான விக்கிரகங்களைத்" தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே! இவர்கள் தங்களுக்கு (வற்புறுத்தி வாங்கும்) தசமபாகம், புகழ்ச்சி நாடுதல், முகஸ்துதியை விரும்புதல், மற்றவர்கள் தங்களை கண்ணியம் பண்ண விரும்புதல், ஆடம்பர வாழ்க்கை, தங்களின் பெயர்களை பிரசத்தி படுத்தும் கட்டிடம், ஜெபம் செய்து பலனடைந்த மக்களிடமிருந்து காணிக்கையை அல்லது நன்கொடையை நாடி செல்வது போன்ற நரகலான விக்கிரகங்களை (idols) தேவ மக்களின் முன்பு வைத்து அவைகளை தேவமக்கள் சேவிக்க, இந்த மூப்பர்கள் விரும்புகிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் தூய்மை (holiness) காணப்படாமல் இருக்குமானால் அல்லது கிறிஸ்துவின் குணாதிசயங்கள் இவர்களில் வெளிப்படாமல் இருக்குமானால் இவர்கள் வைத்திருக்கும் கூடாரங்கள் இவர்களின் புகழை மாத்திரம் வெளிப்படுத்தும் விக்கிரங்களாக காட்சியளிக்கும். தேவ மக்களுக்காக ஆராதிப்பற்கு ஆலயம் கட்டினால் அல்லது சுவிசேட பணிக்காக ஒரு கட்டிடம் கட்டவேண்டுமானால் அந்த கூடாரங்களினுள் தங்களது புகப்படங்களை வைத்து அலங்கரித்தால், இந்த கூடாரங்கள் விக்கிர கூடங்களாக மாறிவிடும். இப்படி இவர்கள் இந்த கூடாரங்களை விக்கிரங்களாக மாற்றும்போது, இவர்கள் நமக்காக தேவனிடத்தில் விசாரிக்கத்தகுமா?

இவர்களில் ஒருவன் தேவ வசனமாகிய தீர்க்கதரிசனத்தை வைத்து தேவ சமூகத்தில்

நமக்காக வந்து, நம்மை ஆசிர்வதிக்கும்படி வேண்டிக்கொண்டால் அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக தேவன் உத்தரவு கொடுப்பார். அவர்களின் விக்கிரங்களுக்கு நாம் பலிசெலுத்தும்போது நமக்கு தேவன் பண அபிவிருத்தி கொடுக்கலாம். அது நமக்கு உண்மையான ஆசிர்வாதம் கொண்டுவராது. ஏனென்றால் தேவன் "நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக" உத்தரவு கொடுக்கிறார். அவருடைய நாமத்தில் இவர்கள் ஜெபிக்கும்போது நமக்கு வீடோ, சொத்தோ கிடைக்கலாம். "இயேசுவின் நாமத்தில்" அற்புதங்கள் நடக்கலாம். ஆனால்,

அவர்கள் இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக தேவன் உத்தரவு கொடுக்கிறார்.

அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, தேவனை விட்டுப் பின்போனவர்கள் தான்.

அந்த ஊழியனுக்கு விரோதமாக கர்த்தர் தன் முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை தேவ ஜனத்தின் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து போடுவார்; அவர்களின் வீழ்ச்சி நமக்கு ஒரு அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து கர்த்தர் தம்மை நமக்கு வெளிப்படுத்திக்கிறார். இந்த ஊழியர்களின் ஆடம்பர வாழ்கை, செழிப்பின் உபதேசம் (prosperity gospel), மூலமாக சாத்தான் நமக்கு வைத்திருக்கும் வலையை (NET) குறித்து நாம் எச்சரிக்கையாகயிருக்கவேண்டும்.

கிறிஸ்டியான், நம்பிக்கை ஆன இரண்டு பேரையும் நீங்கள் இந்த படத்தில் காணலாம். தேவ வசனத்தை திரித்து நமக்கு ஆசிர்வாதத்தை கொண்டுவரும் எந்த ஊழியக்காரனும் இங்கே குறிப்பிட்டுள்ள ஒரு கள்ள தீர்க்கதரிசி ஆவான்! அவனுக்கு விரோதமாக தேவன் தன் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பார். ஜாக்கிரதை!

நீங்கள் எந்த ஆசிர்வாதத்தையும் இவர்களின் ஜெபத்தின் மூலம் பெற்றாலும் அப்படியே அவரவர் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். நமது அக்கிரமத்தை நாம் தான் சுமப்போம்.

நாம் அக்கிரம சிந்தை கொண்டு, பாவத்தின் அடிமையிலிருந்து, ஆசிர்வாதத்திற்காக எந்த ஊழியனிடத்தில் போனாலும் தேவ கோபம் நம்மேல் வரும்.

எங்கே தேவன் வெறுக்கும் விக்கிரங்கள் இருக்கிறதோ, அங்கே நமக்கு உண்மையான ஆசிர்வாதங்கள் இருக்காது. எசேக்கியேல் தீர்க்கன் மேலும் இதை பற்றி உரைப்பதை காணலாம்.

"பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி, என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார், இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்" (எசேக்கியேல் 8:13- 14).தேவன் காணும் அருவருப்புகளை நமது மாமிச கண்களால் காணமுடியாது. ஏனென்றால், நமது மாமிச கண்களுக்கு நமக்கு அவைகள் பரிசுத்தமாக தோன்றும். ஆனால் நமது ஆவிக்குரிய அல்லது தீர்க்கதரிசன கண்கள் மூலம் இவைகளை காணலாம்.தேவசமூகத்தில் நாம் அமரும் போது அவைகள் வெளிப்படுத்தப்படும். எசேக்கியேல் தீர்க்கன் ஒன்றாம் அதிகாரத்தில் முதல் வசனத்தில் உரைப்பது "நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்". ஒன்றாம் அதிகாரத்தில் மூன்றாம் வசனத்தில், "கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது" என்று எழுதப்பட்டிருக்கிறது. நாம் இன்று சிறைப்பட்ட தேவ மக்களின் மத்தியில் இருக்கிறோம். அந்த சிறைப்பட்ட மக்களுக்கு நாம் பாரத்தோடு ஜெபிக்கும்போது வானங்கள் திறக்கப்பட, தேவதரிசனங்களைக் காண்கிறோம்; கர்த்தருடைய கரம் நம்மேல் அமர்கிறது.

வேதத்திலுள்ள தீர்க்கதரிசன புத்தகங்களை நாம் உட்கொள்ளும்போது, அதாவது தியானிக்கும்போது பரிசுத்தாவியானவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். கர்த்தருடைய ஆலயமாகிய கிறிஸ்துவின் சரீரத்தில்தான், அதாவது தேவமக்களிடத்தில் காணப்படும் "தம்மூசு" வெளிப்படுத்தப்படுகிறது. நாம் ஆண்டவரிடத்தில் அவரது வல்லமைக்காக அல்லது ஆவிக்குரிய வரங்களுக்காக அழுது புலம்புகிறோம்.

நமது வாழ்க்கையில் பாவத்தின் மேல் வெற்றியில்லாமல் ஜீவிக்கும்போது நாம் ஊழியம் செய்வதற்கு பரிசுத்தாவியானவரின் வல்லமையும் வரங்களையும் பெறுவதற்கு முயலக்கூடாது. பாவத்தின் மேல் வெற்றியில்லாமல் உங்களை கூட்டங்களில் கைகளை உயர்த்தி ஆண்டவரின் வல்லமையை நீங்கள் பெறவேண்டுமென்று போதனை அளிக்கப்படும்போது கவனமாகயிருக்கவேண்டும். பாவத்தின்மேல் வெற்றியில்லாமல் இதுபோல கைகளை உயர்த்துவர்களுக்கு சிலுவையிலிருந்து வல்லமை வராது. இப்படி வல்லமையை மாத்திரம் நாடுவீர்களானால், நீங்கள் தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரிகளுக்கு ஒப்பாவீர்கள். வரும் வல்லமை அந்திக்கிறிஸ்துவிடமிருந்துதான்!

"அப்பொழுது அவர், மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி....." (8:15)

"என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார், இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்" (8:16).

அருவருப்புகளின் காரியங்கள் என்னவென்றால், தேவ வல்லமை பெற சூரியனை வழிபடுவது. இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படாமல் வெறும் அவரின் "வல்லமை தாரும் தேவா" என்று அந்த வல்லமையை மய்யமாக்கி அதை நோக்கி ஜெபிப்பதும் அதற்காக ஊழியர்களை தேடி அலைவதும் சூரியனை நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகும் (Power without cross).

மேலே கூறியதுபோல கர்த்தருடைய ஆலயத்தில் தான் இஸ்ரவேல் மக்கள் சூரியனை நமஸ்கரித்தார்கள். இன்று நாமும் இதுபோல செய்கிறோம். வேறு எங்கேயும் போய் அந்நிய தேவர்களைத் தேடாமல் இருந்தும், தேவ சமூகத்தில் அழது புரண்டு, அற்புதம் அடையாளம் செய்வதற்கு மாத்திரம் வல்லமை மாத்திரம் நாடுவது நல்லதல்ல. கிறிஸ்துவின் ஜீவனை பெற்று, அவரோடு சிலுவையில் அறையுண்டு, கிறிஸ்துவின் மனதுருக்கத்தால் ஊழியம் செய்யாமல், வெறும் வரங்களால் மாத்திரம் ஊழியம் செய்ய விரும்புவது போன்ற காரியங்கள் தேவன் அருவருக்கும் காரியங்களாகும். இதற்காக 40 அல்லது அனேக நாட்கள் உபவாசம் எடுத்து ஜெபம் பண்ணுவது புதிய ஏற்பாட்டின் சத்தியத்திற்கு புறம்பானது. புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் உபவாசம் எடுத்து வல்லமை பெற்றது கிடையாது.

இன்றுள்ள power ministry அல்லது anointing செமினார் போன்ற கூட்டங்களில் பங்கெடுக்கும்போது, நாம் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும்.

அந்திக்கிறிஸ்துவின் மூலமாக வேறு ஒரு வல்லமையை நாம் பெற இடம் கொடுத்துவிடக்கூடாது. கள்ள ஊழியர்களை நாடி அவர்களின் கைகளின் மூலமாக வல்லமை பெறுவது சூரியனை நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகும். இந்த கள்ள ஊழியர்கள் உங்களை விழ வைத்து அந்தித்கிறிஸ்துவின் (Anti-Christ) வல்லமையை உங்களுக்குக் கொடுப்பார்கள். இவர்கள் உங்களுக்காக ஜெபிப்பதும் யேசுவின் நாமத்தில்தான்! போதிப்பதும் வேதத்திலிருந்து தான்! ஆனால் இங்கே கிரியை செய்வது வேறு ஒரு கிறிஸ்துவின் ஆவி.

மயக்க நிலம் கடக்க நாம் முழுக்கவனத்துடன் இருக்கவேண்டும். இன்று நாம்

எல்லாரும் ஒரு மயக்க நிலையில் இருக்கிறோம். வரைப்படமாகிய வேத வசனங்களை நாம் தியானித்து இந்த மயக்க நிலத்தை கடந்து செல்லவேண்டும்.

ஆவிக்குரிய ஜீவியத்தில் உறங்கிவிடாதிருக்க, ஆண்டவர் செய்த அற்புதங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே, அவரின் வார்த்தைகளை தியானித்துக்கொண்டே, மற்ற மோட்சப்பயணிகளை எச்சரித்துக்கொண்டும் அவர்களுடன் கூட ஐக்கியம் (Fellowship) வைத்துக்கொண்டும், நாம்

இந்த மயக்க நிலத்தை கடந்துவிடவேண்டும்.

Next... எப்சிபா பியூலா தேசத்திற்குள் பிரவேசித்தல்