எப்சிபா பியூலா தேசத்திற்குள் பிரவேசித்தல்

Home

முந்திய பகுதி ....யேசபேல் (Madam Bubble) என்ற கள்ள தீர்க்கதரிசி

எப்சிபா பியூலா தேசத்திற்குள் பிரவேசித்தல்


வசியம் நிறைந்த நிலத்தை கடந்து பயணிகள் எப்சிபா பியூலா தேசத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். இந்த தேசத்தில் கதிரவன் இரவிலும் பகலிலும் ஒளியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறான். பிரயாணத்தில் சோர்வடைந்த பயணிகள் இங்கு ஓய்வு எடுக்கிறார்கள். இங்கே பழத்தோட்டங்களையும் திராட்ச்சத்தோட்டங்களையும் மகிமையின் அரசன் பயணிகளுக்காக உண்டுபண்ணியிருக்கிறார். இந்த பழங்களை அவர்கள் புசித்து சந்தோஷமடைகிறார்கள். இந்த தேசத்தில் மணியோசையும் எக்காள சத்தமும் கேட்கிறது. இந்த சத்தத்தில் பயணிகளால் உறங்கமுடியவில்லை. பயணிகள் இந்த தேசத்தில் பிரவேசிக்க, அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது. வரவேற்பு கொடுக்க, ஒளிவீசும் ஆடையணிந்த மனிதர்கள் படையணியாக வருகிறார்கள். இந்த தேசத்தில் பரலோக தரிசனங்களை காணவும், பரலோக வாத்திய ஒலிகளை கேட்கவும் முடிகிறது. இந்த தேசத்தில் தங்களின் வயிற்றிற்குப் பிடிக்காத ஒன்றையும் காணவோ கேட்கவோ உணரவோ இல்லை. ஆனால் தாங்கள் கடக்கப்போகும் தண்ணீரை ருசித்துப்பார்த்து வாய்க்கு கொஞ்ச கசப்பாக இருந்தாலும் தித்திப்பாகவும் இருக்கிறது.

இந்த தேசத்தில் ஒரு சரித்திரச்சுருள் வைக்கப்பட்டிருக்கிறது. பழைய பயணிகளின் வாழ்க்கை வரலாறுகளும் அவர்களது முக்கியமான நடபடிகளையும் இதில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நதியை அவர்கள் எப்படி கடந்து மோட்சப்பட்டணத்திற்குள் பிரவேசித்தார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த தேசத்தில் சிறு பிள்ளைகள், தேவனின் தோட்டத்திற்குள் போய், பூங்கொத்துக்களைப் பறித்து, மிகுந்த அன்புடன் பயணிகளுக்கு கொண்டுவருகிறார்கள். இங்கே கற்பூரம், இலாமிச்சை, குங்குமப்பூ, இலவங்கப்பட்டை, வெள்ளைப்போளம், சந்தனம், மகா திரவியங்கள் போன்றவைகளை உற்பத்திசெய்யும் மரங்களும் செடிகளும், குங்கிலிய மரங்கள் எல்லாம் வளர்கிறது. இவைகள் மூலம் தங்கள் சரீரங்களை கழுவியும் தங்கள் அறைகளைச் சுத்திகரித்தும், அந்த குறிப்பிட்ட நாளில் நதியைக் கடக்க, காத்திருந்து, தங்களை தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு இவர்கள் அந்த நல்ல நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கும்போது, அந்த பட்டணத்தில் ஒரு சலசலப்பு உண்டாகிறது. மகிமையின் நகரத்திலிருந்து கிறிஸ்டியானின் மனைவியாகிய கிறிஸ்டியானாவிற்கு ஒரு முக்கியமான கடிதம் வந்ததாம். அவளைப் பற்றி விசாரித்து அவளுக்கு இந்த கடிதம் கொடுக்கப்பட்டதாம். இதில், "வாழ்க நல்ல பெண்ணே உனக்கு உனது ஆண்டவரிடமிருந்து ஒரு நல்ல செய்தியை கொண்டுவந்திருக்கிறேன். அதன்படி நீ அவரின் முன்னிலையில், சாவாமையின் ஆடை அணிந்து இன்னும் பத்து நாட்களில் நிற்பாய்", என்று எழுதியிருந்ததாம்.

பின்பு கிறிஸ்டியானா சந்தோஷத்துடன் கிரேட் ஹார்டுக்கும் தனது பிள்ளைகளுக்கும் அறிவித்து அவர்களை வாழ்த்தி, பிள்ளைகளுக்கென்று செய்யவேண்டிய கடமைகளை செய்து தனது சொத்தை ஏழை எளியவர்களுக்கு எழுதி கொடுத்து, அந்த நாளுக்காக காத்து நின்று தனது அன்பார்ந்தவர்களுடன் ஆற்றைக் கடந்து மகிமையின் தேசத்தில் பிரவேசித்துவிட்டாள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

எப்சிபா பியூலா தேசமானது மகிமையின் தேசத்திற்குள் (Celestial City)

பிரவேசித்தப்பதற்கு முன்பான ஒரு இடை தேசம். இதை நாம் கானான் தேசம் (Promised Land) என்றும் சொல்லலாம். இங்கே நமக்கு ஓய்வு எடுக்கும் இடம். நாம் விசுவாசத்தால், தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கவேண்டிய தேசம். "நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்". (ஏசாயா 62:4). இது அழியும் நகரத்தைப் போல பாழான தேசம் கிடையாது. கர்த்தர் நம் மேல் பிரியமாயிருக்கிற தேசம். நமது ஆவிக்குரிய பிள்ளைகள் நமக்கு எல்லாவிதமான பழங்களையும் கனிகளையும் திரவியங்களையும் கொண்டுவந்து நம்மை பிரியப்படுத்தி ஊழியம் செய்வார்கள். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில், எல்லோரும் ஒரு மனதோடு, ஒன்றாக சேர்ந்து இருந்து, தேவனுக்கு இந்த பூமியில் ஊழியம் செய்யும் இடம். கிரேட் ஹார்ட் போலவும், பொருள்கூறுவர் போலவும், ஊழியம் செய்து ஆயிரக்கணக்கான பயணிகளை நாம் இந்த தேசத்தில் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். ஒளிவீசும் தேவதூதர்கள் படைபடையாக வந்து நமக்கு பணிவிடை செய்யும் இடம். தேவ வல்லமையோடு சகல அதிகாரத்துடன் ஊழியம் செய்யும் தேசம். இங்கே கற்பூரம், இலாமிச்சை, குங்குமப்பூ, இலவங்கப்பட்டை, வெள்ளைப்போளம், சந்தனம், மகா திரவியங்கள் போன்றவைகளை உற்பத்திசெய்யும் மரங்களும் செடிகளும், குங்கிலிய மரங்கள் எல்லாம் வளர்கிறது என்று படிக்கின்றோம். நமது ஆவிக்குரிய சரீரமானது, இவ்வித மதிப்புள்ள பொருட்களின் விசேஷித்த குணாதிசயங்களால் அலகரிக்கப்படும். நமது ஊழியர்களின் இவ்விதமான ஆச்சரியமான கிரியைகள் வழிந்தோடும். அசாதாரணமான ஊழியங்கள், அசாதாரணமான தேவ வல்லமைகள், இந்த தேசத்தில் காணப்படும். சுகுந்த அபிஷேக திரவியங்கள் நமது ஆவிக்குரிய வாழ்க்கைகளையும் ஊழியங்களையும் வெளிப்படுத்திக்காண்பிக்கிறது.

எபிரெயர் 3, 4 அதிகாரங்களில் தேவனுடைய இளைப்பாறுதலை பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

"ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.

ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.

விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும் இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.

மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்"(4:1-4).

"ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்" ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்" (4:10-11).

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தில் அவிசுவாசத்தினால் பிரவேசிக்கவில்லை. "அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா?".

நமது சொந்த கிரியைகளை முடித்து ஓய்வில் பிரவேசிக்கும் இடம். இங்கே ஆண்டவரின் பூரண சித்தத்தை நிறைவேற்றுவது தான் நமது பணி. எந்த ஊழியத்தில் நம்மை அழைத்திருக்கிறாரோ அந்த ஊழியத்தை மாத்திரம் நிறைவேற்றுவது. அங்கும் இங்கும் ஓடி நமக்கு ஓய்வு இல்லாமல் செய்யும் பணி அல்ல. ஆண்டவரின் பிரசன்னத்தில் ஆராமர்ந்து நிதானமாக செய்யும் பணி. ஒரு all-rounder அல்ல. நீங்கள் தீர்க்கதரிசினத்தின் ஊழியத்திற்கு அழைப்புஇருக்குமானால் ஒரு உள்ளூர் சபை போதகராக பணி புரியமுடியாது.

எசேக்கியேல் தீர்க்கதரிசி இந்த தேசத்தை நமது சொந்த (சுய) தேசம் என்று கூறுகிறார்:

"நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்" (எசேக்கியேல் 36: 24).

இந்த தேசத்தை சீயோன் என்றும் அழைக்கலாம். ஏசாயா தீர்க்கதரிசி 35ம் அதிகாரத்தில் இதைப்பற்றி விபரமாக கூறுகிறார்:

1. வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.

2. அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.

3. தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.

4. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.

5. அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.

6. அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.

7. வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.

8. அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.

9. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.

10. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். (ஏசாயா 35: 1-10).

இங்கே அப்பொல்லியனை காணமாட்டோம். இங்கே ஜாண் பண்ணியன் குறிப்பிடும் சிங்கம் இருப்பதில்லை; பின்பு துஷ்டமிருகங்கள் (evil beasts) அல்லது அரக்கர்களோ இங்கே வருவதுமில்லை, இங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.

இவர்களை காணமாட்டோம் என்பதின் அர்த்தம் என்னவெனில், இவைகள் தோற்க்கபடிக்கப்பட்டவர்கள். இவர்கள் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. தலைகளைக் காட்டினால், நம்மை கண்டவுடன் ஓடிவிடும். ஆனால், நாம் இவைகளின் கரங்களிலிருந்து விடுவிக்கப்போகும் மக்கள் தான் பயந்து நடுங்குவார்கள்! ஏனென்றால், அவர்கள் இந்த தேசத்தில் இதுவரை பிரவேசிக்கவில்லை. இந்த தேசத்தில் பிரவேசித்தவர்கள் பயப்படவே மாட்டார்கள். துஷ்ட மிருகங்கள் இவர்களை கண்டவுடன் நடுநடுங்கி ஓடிப்போகும். இவர்களின் மேலுள்ள மணக்கும் மகா திரவியங்கள் கிறிஸ்துவின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும். இவர்களின் சாதாரண ஜெபங்கள் சரித்திரத்தை மாற்றி அசாதாரண காரியங்களை நடப்பிக்கும். யேசுவும் ஆதி அப்போஸ்தலர்களும் இந்த தேசத்தில் பிரவேசித்துத்தான் ஊழியம் செய்தார்கள்.

இங்கே இருள் இல்லாமல் தேவனுடைய வெளிச்சம் எப்போதும் இருக்கும். நாம் இந்த தேசத்தில் பிரவேசித்தபின்புதான் ஊழியம் செய்யவேண்டும். நாம் அழைக்கப்பட்ட ஊழியங்களளை செய்யும் தேசம். நாம் வாழ்க்கைப்படும் தேசம்.

கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

எப்சிபா பியூலா தேசத்தில் நாம் எத்தனை ஆண்டுகள் செலவிடுவோம் என்பதை ஆண்டவர் முன்கூட்டியே நிர்ணயித்திருக்கிறார்.

இந்த தேசத்தில் நாம் ஆனந்தமாக காத்திருந்து ஆற்றை கடந்து மகிமையின் தேசத்திற்குள் பிரவேசிப்போம்.

தொடந்து படிக்க கடைசி அதிகாரம் .... மோட்சப்பட்டணத்தை அடைதல்