இருளில் தோன்றும் பெரிய வெளிச்சத்தின் ஆசிர்வாதமும், நியாத்தீர்ப்பும்


Previous....Isaiah8


ஏசாயா 9ம் அதிகாரத்தை தியானிப்போம்.

ஆண்டவர் புற ஜாதி மக்களை மகிமைப்படுத்தும் நாட்கள் இப்போது நடக்கின்றது. யூத மக்கள் இயேசுவை ஏற்றுகொள்ளவில்லை. ஆனால் நாமோ அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

இருளில் நடக்கிற நாம் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் காண்கின்றோம். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது. "அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்".

ஆவிக்குரிய இருளானது நம்மை சூழ்ந்து கொண்டிருக்கையில் நாம் இப்போது பெரிய வெளிச்சத்தைக் காண்கின்றோம். நாம் குடியிருக்கும் மரண இருளின் தேசத்தில் தேவனின் மகிமை வெளிப்படுகின்றது. நாம் எப்படி ஆசிர்வதிக்கப்படுகிறோம் என்று காணலாம்.

நாம் அவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது அவரின் மகிமை வெளிப்பட்டு அசிர்வதிக்கப்படுகிறோம். அதே சமயம் தேவனின் வழிகளில் நடக்காமல் கள்ள தீர்க்கதரிசிகளால் ஏமாற்றப்பட்டு இருக்கும் மக்களின் மேல் தேவனின் கோபம் வெளிப்படுகின்றது.

நாம் சுமந்த நுகத்தடியையும், நமது தோளின்மேலிருந்த மிலாற்றையும், நம்மை தப்பான பாதையில் நடத்திவந்த கள்ள ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போடுகிறார்.

நமக்கு விரோதமாக அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படுகிறது. நமக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவது தேவன் தான். இதே சமயத்தில் நமக்கு இரட்சிப்பு கொடுக்க நமக்கு ஒரு பாலகனை கொடுத்திருக்கிறார்.

"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்". இந்த பாலகன் நமக்காகத்தான் கொடுக்கப்பட்டார. இன்று நாம் எவ்வாறு போதிக்கப்பட்டு இருக்கிறோம். நமக்காக மற்றவர்கள் ஜெபிக்கும்போதுதான் அவர் ஆசிர்வதிக்க இறங்கி வருவார் என்று போதிக்கப்படுகிறது. நமக்கு இந்த உலகில் ஆளுகை பண்ணுவதற்கு கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கிறது. அவருடைய அதிசயமான நாமத்தை நாம் அறியவேண்டும்.

நமக்கு ஆலோசனைக் கொடுப்பவர் அவர்தான். தேவ ஆலோசனையை அவரிடமிருந்து பெறாமல், தீர்க்கதரிசன வார்த்தைகளுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிய அவசியமில்லை.

அவர் வல்லமையுள்ள தேவன். அவரின் வல்லமையை தேட எந்த கூட்டத்திற்குப் போய் உட்கார அவசியமில்லை.

தீர்க்கதரிசனமாக தாவீதின் சிங்காசனம் என்பது ஏசுகிறிஸ்துவின் ஆளுகையின் சிங்காசனமாகும். இது இனி வரப்போகும் ஆயிர வருட ஆளுகையை குறித்து அல்ல. நியாயத்தினாலும் நீதியினாலும் ஏற்படும் ஆளுகையை நாம் நிலைப்படுத்தும்படி முயற்சி எடுக்கும்போது, அங்கே கிறிஸ்துவின் ஆளுகையின் சிங்காசனத்தைக் கொண்டு வருகின்றோம். அது ஒரு அரசியலாக இருக்கலாம். அது ஒரு ஸ்தாபனமாக இருக்கலாம். இன்றைக்கு நமது கிறிஸ்துவ ஸ்தாபனங்களிலும், ஆலயங்களிலும் நியாயமும் நீதியும் நிறைந்து காணப்படுகிறதா?

நியாயத்தினாலும் நீதியினாலும் ஏற்படும் கிறிஸ்துவின் ஆளுகையை நாம் ஏற்படுத்தாமல் வெறும் வாய்கள் மூலம் ஆராதிக்கும் கூட்டங்களை மாத்திரம் உருவாக்கி கொண்டுவருகிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயத்திற்காக குரல் கொடுக்கிறோமா? அநேக வேத கல்லூரிகளை உண்டாக்கி அநேக வாலிபர்களை ஊழியம் என்ற பெயரில் மக்களுக்கு சேவை செய்யாமலே, வெறும் பிரசங்கம் செய்யும் போதகர்களாக உருவாக்கி வருகிறோம். இன்று தேவ ஊழியம் என்ற பெயரில் நமது வயிற்றுப் பிழைப்பிற்காக சபைகளை நிறுவி மக்களிடமிருந்து பணம் வாங்கி அதை ஊழியம் என்று சொல்லுகிறோமா?

இந்த அதிகாரத்தில் கர்த்தத்துவத்தின் பெருக்கத்தை குறித்து பேசப்படுகின்றது. கர்த்தத்துவத்தை பெருக்குகிறோமா? அல்லது நமது சுய ராஜ்ஜியங்களை பெருக்குகிறோமா? நாம் இந்த கர்த்தரின் ஆதிக்கத்தை நிலைப்படுத்தும்போது தேவன் தாமே நமக்கு உதவுகிறார்; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும். அதின் ஆளுகையின் சமாதானத்துக்கும் முடிவிருக்காது.

ஆண்டவர் யாக்கோபு போன்றவர்களுக்கு இதுபோன்ற வார்த்தையை அனுப்புகிறார்; அவை தேவ ஜனங்களின் இஸ்ரவேலின்மேல் இறங்குகிறது. இந்த தேவ மக்களின் மூலமாக்கத்தான் ஆண்டவரின் சிங்காசனம் இந்த பூமியில் ஸ்தாபிக்கப்படுகிறது.

தேவனது ராஜ்யத்தை கட்டுவோம் என்று அகந்தையும், மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற கள்ள ஊழியர்களை தேவன் தண்டிப்பார். அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. கர்த்தரிடத்தில் திரும்பாத தேவ ஜனத்தை நடத்துகிற கிறிஸ்தவ தலைவர்களும் , பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசிகளும் தண்டிக்கப்படுவார்கள். இன்று தப்பான வழிகளில் நடத்தப்படும் நமது வாலிப சமூகத்தின் மேலும், நமது திக்கற்ற பிள்ளைகள் விதவைகள் மேலும் அவர் இரங்குவதுமில்லை.

தேவனுடைய பார்வையில் அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

கர்த்தருடைய சினத்தால் தேவ மக்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான். நமது சத்துருக்களின் கைகளில் நம்மை தண்டிப்பதற்கு தேவன் ஒப்புக்கொடுக்கிறார்.

Next......Isaiah10 அசிரியனின் தண்டாயுதத்தால் தேவ கோபம்