தேவனின் கோபாக்கினையும் தேவமக்களின் மீட்பும்

தேவன் அன்று யூதமக்களை, அதாவது இன்று  தேவ மக்களை, உதவி தேடி எகிப்து தேசத்தை நோக்கி போவதைக்குறித்து கடிந்துகொள்கிறார். தேவனை அறியாத வல்லமை பொருந்திய பார்வோனை போன்ற உலக தலைவர்களின் ஆலோசனையை நாடினாலே தேவனின் பார்வையில் "பாவத்தோடே பாவத்தைக்" கூட்டுவது என்ற அர்த்தமாகும், தேவனின் ஆவியை புறக்கணிப்பதாகும். முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு நம்மை ஒப்பிடுகிறார். நாம் எகிப்தின் நிழலிலே ஒதுங்ககூடாது. பார்வோனாலே தனது மக்களை மீட்கமுடியவில்லை. நாம் இவர்களை நாடினால் வெட்கமடைவோம் (1-5)

 

அசீரிய நாட்டிலிருந்து தம்மை காக்கும்படி யூத மக்கள் தங்களது உடமைகளையும், மிருகஜீவன்களையும் வனாந்தரத்தின் வழி பார்வோனிடம் போவதும், எகிப்தியர் சகாயம்பண்ணுவதும்  வியர்த்தமும் வீணுமாம். நாம் எகிப்தியரின் உதவியை நாடாமல் தேவனையே நூறு விழுக்காடு நம்பியிருப்போமானால் இந்த சாட்சியை  பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, நாம் இதை எழுதிவைக்கவேண்டும். நாம் ஒன்றும் செய்யாமலே சும்மாயிருப்பதே நமக்கு பெலன். ஆண்டவரை முற்றிலும் நம்பி சும்மா இருந்தாலே போதும் (6-8).

 

இக்காலத்து யூத மக்கள் ஆண்டவரின் பார்வையில் "கலகமுள்ள ஜனங்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், கர்த்தருடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாயிருக்கிறார்கள்". இன்று வேதத்தை தியானித்து சத்தியத்தை அறிந்து ஆண்டவரின் வேதத்தை புறக்கணித்து உண்மையான தீர்க்கத்தரசிகளை நோக்கி "யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள்" என்று விரும்பிவருகிறார்கள். ஆண்டவரின் நியாயத்தீர்ப்பை பற்றிய செய்திகளை விரும்பாமல் ஆசிர்வதிக்கும் செய்திகளை மாத்திரம் விரும்பிவருகிறார்கள்.

 

அவர்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை தங்களுக்கு முன்பாக இராமல் வெறும் சரீர நன்மைகளை மாத்திரம் பெற அங்கும் இங்கும் ஓடி, அவரது மகிமையை நாடாமல் அதை  ஓயப்பண்ணுங்கள் என்றும் விரும்பிவருகிறார்கள்.  இஸ்ரவேலின் பரிசுத்தர் என்று நமக்கு தம்மை வெளிப்படுத்துகிறார் (10-11).

 

நாம் நமக்கு கொடுக்கப்பட்ட "இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்துகொள்ளுகிறபடியால்", இந்த அக்கிரமம் நமக்கு உயர்த்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார். கள்ள தீர்க்கத்தரசிகளை நம்பி நாம் அவருடைய வார்த்தையை புறக்கணிக்கும்போது நம்மை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல நம்மை  நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம். இதே போல நமது வாழ்க்கை சுக்கு நூறாக உடையும்.

 

ஆகவே "நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்; அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த் துரத்துவார்கள்". நாம் ஆண்டவரின் வார்த்தையை கேட்காமல் புறக்கணித்து அவரின் நாமத்தால் கிடைக்கும் குதிரைகள் போன்ற ஆசீர்வாதங்களை மாத்திரம் பிடித்துக்கொண்டு அதில் ஏறிக்கொண்டு இந்த உலகத்தில் நமது வாழ்க்கை ஜீவனை ஓட்டுவோமானால் நம்மை பின்துடர்ந்து சாத்தானும் இந்த உலகில் வரும் வாதை நோய்களும் நம்மை வேகமாக துரத்தும் (13-16).

 

"நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு கொடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்". நாம் தேவனுடைய வார்த்தையை மதிக்காமல் நமது சொந்த வழிகளில் நமது குதிரைகளின் மேல் ஏறி போகும்போது, நாம் ஆயிரம் பேராக இருந்தாலும்  இருந்தாலும், ஒரு தேவனை அறியாத மனிதன் நம்மை எதிர்க்கும்போது தேவன் நம்மை அநேக மக்களாக ஒன்று கூடி ஜெபித்தாலும் நாம் பயந்து ஓடிவிடுவோம்.

 

"ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்". நம்மை தீய சக்திகள் தொடர்ந்து வந்தாலும் நமக்கு நீதிசெய்கிற தேவன் நமது மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார். நாம் செய்யவேண்டியது, அமைதியாக அவரின் வேளைக்காக காத்திருக்கவேண்டும். மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவோம். அவரின் அற்புதத்தை கண்டிப்பாக பெறுவோம். பார்வோனை நம்பாமல் தேவனையே நம்பி காத்து இருக்கும்போது அமரிக்கையும் நம்பிக்கையுமே நமது பெலனாயிருக்கும் (17-18).

 

"சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்".

 

நீங்கள் சீயோனில் தேவனோடு வாசம் பண்ணுகிறவர்களாக இருந்தால் நாம் சீயோனைச் சேர்ந்த ஜனங்கள். இந்த உலகத்தில் நமக்கென்று தேவன் குடி வைத்திருக்கும் எருசலேமில் வாசமாயிருக்கிறோம். இந்த உலகப்பாடுகளின் மத்தியிலும் நாம் அழவேண்டிய அவசியமில்லை. நமது கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே நமக்கு மறுஉத்தரவு அருளுவார்.

 

"ஆண்டவர் (தனது நியாயத்தீர்ப்பினால் தண்டித்து) உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும். இன்றும் உங்களுக்கு உண்மையான போதகர்கள் மறைந்திருக்கமாட்டார்கள். உங்கள் சபைகளில் இருக்காமலிலிருக்கலாம். ஆனால் நீங்கள் சத்தியத்தை அறியநாடும் போது "உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்".

 

"நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்". குழப்பமாக இருக்கும்போது பரிசுத்தாவியானவர் உங்களுக்கு எந்த வழியில் செல்லவேண்டும் என்று காண்பிப்பார். யாரவது நீங்கள் அறியாத நபராக இருக்கக்கூடும். உங்களிடம் வந்து  "வழி இதுவே" என்று கூறுவார்கள். இல்லாவிட்டால் வேறு விதமாகவும் ஆண்டவர் உங்களுடன் பேசுவார் (19-21).

 

நீங்கள் சத்தியத்தை அறிந்து தேவனுக்கு கீழ்ப்படியும்போது நீங்கள் கள்ள தீர்க்கத்தரசிகளை சுரூபங்களாக வைத்து அவர்களின் செய்தியை கேட்டு அவர்களை வணங்கி வருவதை விட்டுவிடுவீர்கள். அவர்களின் உபதேசத்தை உங்களால் ஆராய்ந்து அறிந்து அதனை  மூடிய வெள்ளித்தகட்டையும், விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்று கூறுவீர்கள்.

 

அப்படி சத்தியத்தை அறிந்து கைக்கொள்ளும்போது நீங்கள்  நிலத்தில் விதைக்கும் விதைக்கும்  அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்.  சத்தியம் உங்களை அறியாமை என்ற அரக்கனின் கையிலிருந்து உங்களை விடுவிக்கும். உங்கள் சபைகள், ஊழியங்கள் கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும். உங்களின்  கைகளில் கொடுக்கப்பட்ட கிறிஸ்துவின் மந்தைகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்.

 

உங்களின் ஊழியத்தில் உழுகிற எருதுகள், கழுதைமறிகள், போன்ற தேவபிள்ளைகள் "முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்பார்கள். ஆண்டவர் உங்களின் கூட பணிபுரியும் தேவமக்களை எல்லாவிதத்திலும் ஆசீர்வதிப்பார்  (23-24).

 

கோபுரங்கள் போல வானத்தை எட்டும் ஊழியங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாள் வந்துவிட்டது, ஆண்டவருக்கு பிரியமாய் "உயரமான சகல மலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும்", அதாவது சுவிசேஷம்  எட்டாத இடங்களில் ஊழியம் செய்யும்போது அங்கே ஆவிக்குரிய ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும். சுவிசேஷத்தை கேட்கும் மக்கள் இரட்சிக்கப்பட்டு சரீர சுகம், அற்புதங்கள் பெறுவார்கள்.

 

"கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்". இதுதான் தேவமக்களின் மத்தியில் நடக்கும் உயிர்மீட்பு. அவர்களின் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு கிறிஸ்துவின் வெளிச்சத்திலே இருளில் மறைக்கப்பட்ட சத்தியங்களை "ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போல" அறிந்து கொள்வார்கள் (25-26).

 

தேவனின் கோபம் வெளிப்படும்போது இந்த உலகமக்களுக்கு கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.

 

நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும்.

 

அப்போது மீட்கப்பட்ட தேவமக்கள் "பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப்" பாடுவார்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்துவருகிறபோது மகிழுகிறதுபோல மகிழ்வார்கள் (27-29).

 

கர்த்தர் மகத்துவமானவர். கர்த்தரின் கோபாக்கினை இந்த உலகத்தின் மக்கள் மேல் இதுபோல வரும்.

தமது சத்தத்தைக் கேட்கப்பண் ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார்.

 

"அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டுபோவான்". அசீரியன் போல அரசியல் நடத்தி தேவமக்களை துன்புறுத்தி வரும் ஆளுநர்களை தேவன் தமது கிறிஸ்துவாகிய வார்த்தையால் நொறுங்குண்டு போக செய்வார்

 

கர்த்தர் அசீரியன் மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார்.

 

அசீரியன் போன்ற ஆளுநர்களை ஆண்டவர் அழிக்கும்படி ஆழமும் விசாலமுமான பள்ளத்தை ஆயுத்தம் பண்ணுவார் (30-33).