கொடுங்கோல் ஆட்சியின் வீழ்ச்சியும், சீயோனின் ஆசிர்வாதமும்  


ஏசாயா 33ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசனமாக அறிந்துகொள்ளவேண்டிய சத்தியங்கள். அசீரியனை போன்ற கொடுங்கோல் அரசரின் கைகளிலிருந்து தேவமக்களை காப்பாற்றி அந்த  கொடுங்கோல் அரசனை ஆண்டவர் தண்டிக்கிறார். நமக்கு விரோதமாக எழும்பும் மனிதர்களை தேவன் தண்டிக்கிறார்.

 

மக்களை துன்புறுத்தும் அசீரியனை போன்ற கொடுங்கோல் ஆட்சி செய்யும் அரசியல் ஆளுநர்களை தேவன் தண்டிப்பார். அவர்களை தண்டிப்பதற்கு எதிரிகளை எழுப்புவார். அமைதியாக கொள்ளையிடப்படாமல் வாழும் மக்களை கொள்ளையிடும், துரோகம்பண்ணும் அசீரியனை எந்த விதத்தில் படி அளந்தார்களோ அந்த விதத்தில் படி அளக்கப்படுவார்கள் (1).

 

தேவமக்களான நாம் தேவனை நோக்கி வேண்டிக்கொள்ளும் விதம் –

 

"கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.

 

அமளியின் சத்தத்தினாலே ஜனங்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது ஜாதிகள் சிதறடிக்கப்படுவார்கள்.

 

வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத் திரிகிறதுபோல மனுஷர் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்".

 

தேவனின் இரட்சிப்புக்காகவோ அல்லது அற்புதத்திற்காகவோ காத்திருக்கவேண்டும். கர்த்தர் நமக்காக எழுந்திருக்கும்போது நமக்கு விரோதமாக எழும்பினவர்கள்  சிதறடிக்கப்படுவார்கள். நமக்கு எதிரானவர்கள் முறியடிக்கப்படும் போது நாம் ஆனந்தத்தில் மகிழ்வோம் (2-4).

 

"கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்". நாம் சீயோனில் வாசம் செய்தால் நமக்கு இந்த உலகத்தில் நீதியும் நியாயமும் கண்டிப்பாக கிடைக்கும். கர்த்தர் இந்த உலகத்தின் வல்லமையுள்ள தலைவர்களைக்  காட்டிலும் உயர்ந்தவர். நாம் யாரிடமோ கையை கட்டிக்கொண்டு தயவுக்காக காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

 

"பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்". நாம் வாழும் காலத்தில் நமக்கு வேண்டிய பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் தேவன் தருவார். நாம் பணிபுரியும் இடத்தில் கர்த்தருக்குப் பயப்படுதல் இருந்தாலே நமக்கு பொக்கிஷம் கிடைக்கும்.

 

"இதோ, அவர்களுடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்". நமக்கு விரோதமாக எழும்பும் பராக்கிரமசாலிகள் அலறுவார்கள். இந்த உலகத்தில் அநியாயத்தை எதிர்க்காமல் சமாதானத்தை உண்டுபண்ணி தப்பிக்கொள்ளும் ஸ்தானாபதிகள் அழுவார்கள்.

 

"பாதைகள் பாழாயின; வழிப்போக்கர் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழ்ச்சிபண்ணுகிறான்; மனுஷனை எண்ணாதேபோகிறான்". மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற உடன்படிக்கையை மீறி, மனிதநேயம் இல்லாமல், மக்களை அழிக்க அல்லது ஒடுக்க நினைக்கும் அசீரியனை போன்ற மனிதர்களின் பாதைகள் பாழக்கப்படும்.

 

அந்த அக்கிரமக்காரர்களால் "தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது. தேசமே துக்கிக்கிறது.  லீபனோன் போன்ற   உலக செழிப்பு நிறைந்த பகுதி. அந்த அக்கிரமக்காரர்களால் "தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது. தேசமே துக்கிக்கிறது.  லீபனோன் போன்ற   உலக செழிப்பு நிறைந்த இடங்கள் வனாந்தரமாக மாறும். பாசான் என்பது அடர்ந்த காடுகள் உள்ள செழிமையான பகுதி. கர்மேல் என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றி பெற்ற நிலைப்பாடு. தேவனின் நியாயத்தீர்ப்பு வெளிப்படும்போது இவைகளெல்லாம் ஒன்றுமில்லாமல் வனாந்தரமாக மாறிவிடும்  (5-9).

 

தண்டிக்கப்போகும் அக்கிரமக்காரர்களை நோக்கி தேவன் கூறுவது, "இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவீர்கள்; அக்கினியைப்போல் உங்கள் சுவாசமே உங்களைப் பட்சிக்கும்.

 

 ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.

 

தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்" (10-14).

 

"சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்தியஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்". சீயோனில் பரிசுத்தவான்களுக்குத்தான் இடம். ஆனால் கிறிஸ்துவின் இரத்தத்தால் இரட்சிக்கப்பட்டு சீயோனில் வாசமாகும் பரிசுத்தவான்கள் பாவம் செய்து பாவிகள் ஆகி மனம்திரும்பாமல் மாயக்காரனாக மாறும்போது நரக அக்கினி காத்து நிற்கின்றது.

 

ஆனால் சீயோனில் "(1) நீதியாய் நடந்து, (2) செம்மையானவைகளைப் பேசி, (3) இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, (4) பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, (5) இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, (6) பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,

 

மேலே குறிப்பிட்ட ஆறு கட்டளைகளை கைக்கொள்ளுகிறவன் "அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்". 

 

"உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்". நீங்கள் இயேசு கிறிஸ்துவை தீர்க்கதரிசன கண்களின் மூலம் காண்பீர்கள். உங்களுக்கு இந்த உலகத்தின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

 

"உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?".  தேவனின் பயங்கரத்தை நினைவு கூறுவீர்கள். உங்களது மாமிச பலத்தையோ உங்களின் உலக ஆஸ்திகளையோ கணக்கு வைத்து இந்த உலகில் வாழவேண்டாம். தேவன் செய்யும் அதிசயங்கள் பயங்கரமாக இருக்கும்.

 

"உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்". உங்களை புரிந்துக்கொள்ள முடியாமல் உங்களை துன்புறுத்திவரும் குரூர ஜனங்களை உங்களின் தேசத்தில் (promised land) நீங்கள் இனி காணமாட்டீர்கள்"  (15-19).

 

"நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை". ஆண்டவரின் பண்டிகளை எப்படி சீயோனில் ஆசரிக்கப்படவேண்டும் என்பதை வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.  கிறிஸ்துவின் சபையாகிய ஆவிக்குரிய எருசலேம் அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் தீர்க்கதரிசன கண்ணோட்டத்தில் நாம் காணவேண்டும். உலகத்தில் சமாதானம், நிம்மதி இல்லாத சூழ்நிலைகள் இருந்தாலும் நாம் தாபரிக்கும் சீயோனில் அமைதி நிலவும். நமது குடியிருப்புகள் பெயர்க்கப்படாத கூடாரங்களாக இருக்கும். எந்தவிதமான ஆபத்தோ, கொடிய நோயோ நமது குடியிருப்பை தாக்காது. புயல் அடிக்கும்போது உன்னதமானவரின் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவோம். யாருமே நம்மை  தாக்கி அழித்துவிடமுடியாது.

 

"மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை, பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை". ஆண்டவர் தாமே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார். அவருக்குள் நாம் முழ்கி வேதத்திலுள்ள ஆழ்ந்த சத்தியங்களை அறிந்து ஆசீர்வாதங்களை பெறலாம். எந்த மனிதனின் மூலமாக ஆசிர்வாதத்தை பெற, அந்த மனிதனின் படகோ, கப்பலோ தேவையில்லை. நாம் கிறிஸ்துவில் அஸ்திவாரம் போடப்பட்டு நிலைத்திருக்கும்போது, அவரில் ஜீவிக்கிறோம். 

 

"கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்". நமக்கு நியாயம் வழங்குவது கர்த்தர்தான். நீதிமன்றத்தில் நமது உரிமைகளுக்காக போராடினாலும் வெற்றி பெற செய்வது இந்த நியாயாதிபதிதான். நமக்கு அனுகூலமாக சட்டத்தை மாற்ற வல்லவர். நமக்கு அவர்தான் ராஜா, இந்த உலகத்தின் ராஜாக்கள் அவரின் ராஜரீகத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். நம்மை  இரட்சிப்பார். நமது விண்ணப்பங்களை கேட்டு பதில் அளிப்பார்.

 

சீயோனில் தாபரிக்கும்போது, நமது அசீரியனை போன்ற கொடுங்கோல் அரசர்களின் யுத்த  கப்பல்கள் கிறிஸ்துவாகிய சமுத்திரத்தில் புயலால் அலைக்கழிக்கப்பட்டு தத்தளித்து நிற்கும்போது அவர்களின்  "கயிறுகள் தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும், பாயை விரிக்கவுங்கூடாமற்போம்"; அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் அசீரியனை மேற்கொண்டு "அவனின் திரளான கொள்ளைப்பொருளை பங்கிடுவார்கள்". இரண்டாம் உலக மகா யுத்தத்தில், ஜெர்மன் நாட்டை allies சூறையாடினார்கள். கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுபடும்போது, ஒடுக்கப்பட்டு சப்பாணிகளான மக்கள் கொடுங்கோல் அரசினால் கொள்ளையடிக்கிப்பட்ட பொருட்களை கொள்ளைபொருள் போல  திரும்ப பெறுவார்கள்.

 

சீயோனில் தாபரிக்கும்போது, "நாம் வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்". வாயின் மூலம் "வியாதிப்பட்டிருக்கிறேன்" என்று கூறக்கூடாது ஏனென்றால் நமது அக்கிரமம் கிறிஸ்துவின் இரத்தத்தால் மன்னிப்பட்டிருக்கிறது (21-24).