கடைசிநாட்களில் நடக்கும் தீர்க்கதரிசனம்


Previous எச்சரிப்பின் தீர்க்கதரிசனம்


ஏசாயா 2 அதிகாரத்தை தியானிப்போம். இது கடைசிநாட்களில் நடக்கும் தீர்க்கதரிசனம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப்பின் நடக்கும் அல்லது ஆயிரம் வருட இறை ஆட்சியில் நடக்கும் காரியம் அல்ல.

கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

உலகத்தையே ஒரு கொரானா தொற்று வியாதி தலைகீழாக மாற்றிவரும் இந்த கடைசி காலத்தில், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படுகிறது.

எல்லா நாடுகளிலும் மக்கள் கிறிஸ்துவை நோக்கி ஓடி வருகின்றார்கள். சீயோனிலிருந்து வேதம் (Law) வருகிறது. தேவனின் வாசஸ்தலம் தான் சீயோன் நகரம். தேவ வசனமாகிய கட்டளைக்கு மேல் எந்த மனிதன் ஏற்படுத்திய சடங்காச்சரமோ. கொள்கையோ நிலை நிற்காது. பரிசுத்தமில்லாத மாய்மாலம் நிறைந்த ஆராதனைகளாக இருக்கட்டும். தசமபாகம், காணிக்கைகளின் மேல் கட்டப்பட்ட சபைகளாக இருக்கட்டும். தேவமக்களின் பணத்தை வைத்து தேவனின் பெயரில் நடந்துவரும் மாய்மாலம் காணப்படும் ஊழியங்களாக இருக்கட்டும். இவைகள் எல்லாம் சீயோனிலிருந்து புறப்படுகிற வேதத்திற்கு உட்பட்டதாக இருக்கிறதா?

எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனம் வெளிப்படுகின்றது. கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்கு எருசலேம் மூலம்தான் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இன்று ஆயிரமாயிர மக்கள் கள்ள போதகர்களைத் தேடி அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு ஓடுகிறார்கள். தொலை காட்சிகளின் பெட்டிகளுக்கு முன்பு உட்கார்ந்து "எருசலேமிலிருந்து" வரும் கர்த்தரின் வசனங்கள் என்று நம்பி ஏமாந்து போகும் காலமிது! சீயோனிலிருந்து தேவனின் சட்டதிட்டங்களின் படிதான் ஊழியங்கள் அமைய வேண்டும். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன புத்தகங்களில் எவ்விதம் தேவ ஆலயம் கட்டப்படவேண்டும் என்று சட்டதிட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல புதிய ஏற்பாட்டின் ஊழியங்களுக்கான சட்டதிட்டங்களை அப்போஸ்தலர்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.

கிறிஸ்து தன் ஜனத்தை நியாயம் விசாரிக்கும் காலமிது. கிறிஸ்துவ ஜனங்களோ தங்களுக்குள் வாதாடி தர்க்கம் பண்ணி தங்களைத்தாமே அழித்துக்கொள்ளாமல், தேவ வசனத்திற்கு மாத்திரம் நடுங்கி தங்களது பட்டயங்களை, ஈட்டிகளை தூர எறிந்து "கர்த்தரின் வெளிச்சத்திலே நடக்கவேண்டும்.

'கீழ்த்திசையாரின் போதகத்தால்" யாக்கோபின் வம்சத்தாராகிய நாம் குறிகள் சொல்லி வரும் காலத்தில் நடக்கும் காரியங்களை தீர்க்கதரிசனம் என்ற பெயரில் அறிவித்து, நாள் பார்த்து, இந்து மத தலைவர்களை பின்பற்றி வருகிறோம். கர்த்தர் நம்மை கைநெகிழ்ந்து ஒரு அணுவிற்கு Virus ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

நமது தேசத்தில் எல்லாவிதமான உலகப்பிரகானமான, பொன் தங்கத்தால் நிறைந்துஇருக்கிறது. இந்த பொன்னெல்லாம் எப்படி சம்பாதித்தோம். நமது சொந்த வேர்வையால் சம்பாதித்தோமா அல்லது பிறரின் நெற்றிவேர்வையால் சம்பாதித்த பணத்தால் வாங்கிய பொருட்களா? "பொக்கிஷங்களுக்கு முடிவில்லை" உல்லாசமான கார்கள் (குதிரைகள், இரதங்கள்) ! விதம்விதமான ஆடைகள்!

நமது தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு ஊழியனும் ஒரு விக்கிரமாக காட்சியளிக்கிறான். "தங்கள் கைகளின் கிரியையையும் தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்து கொள்கிறார்கள்". தங்களது ஊழியங்களைக் குறித்து மேன்மை பாராட்டி தேவமக்களை தங்களது விக்கிரங்களுக்கு முன் பணிய வைக்கிறார்கள். "சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்"!

இந்த ஊழியர்கள் தேவனுக்கு அல்ல உலகப்பொருட்களுக்கு ஊழியம் செய்கிறார்கள். அந்தந்த ஊழியர்களின் கோட்டைகளுக்குள்ளே அடைபட்டு எல்லா தேவமக்களும் குனிந்து பணிகிறார்கள். இந்த ஊழியர்களின் வாய்களிலிருந்து வரும் வார்த்தைகளை எருசலேமிலிருந்து வந்த தேவனின் வாக்காக எண்ணி இந்த ஊழியர்களை தொழுது கொள்கிறார்கள்.

இதை வாசிக்கும் நீ "கர்த்தரின் பயங்கரத்துக்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்". "நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். எல்லாம் தாழ்த்தப்பட்டு, சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்" உயர்ந்து இருக்கும். கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். எந்த கோபுரமோ, ஒரு பெரிய கூட்டத்தை ஆளும் பர்வத மலையைப்போல காட்சியளிக்கும் எந்த ஊழியமோ தாழ்த்தப்பட்டு "கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்". "விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்". தனக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கும் எந்த ஊழியமும் தாழ்த்தப்படும்.

"பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்" இப்போது நடப்பது என்ன? பூமியோ தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கர்த்தர் எழும்புகிறார். இன்று அவரின் கோபத்திலிருந்து தப்பிக்கொள்ள நாம் எத்தனையோ ஜெபக்கூட்டங்களை ஏற்படுத்தி நாம் அடைக்கலம் புகுந்து கொள்ள விரும்புகிறோம். உலகம் எங்கும் கன்மலைகளின் கெபிகள், குகைகள் எற்படுத்தப்படுகிறது. நமக்கு அடைக்கலம் இந்த ஜெபக்கூட்டங்களில் கலந்து ஜெபிப்பதினால் ஒருக்காலும் கிடைக்காது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தேவனை முழு இருதயத்தோடுத் தேடி அவரது வேதத்திற்கு கீழ்ப்படிந்து கிறிஸ்துவை பின்பற்றுவோமானால் இந்த நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கொள்ளலாம்.

"மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான். நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்". நாம் எல்லா விக்கிரங்களையும் நமது மனத்திரையிலிருந்து அகற்றிவிட்டு தேவ வசனத்திற்கு திரும்புவோமாக. "அந்த ஊழியன் ஜெபித்தால் தான் எனக்கு விடுதலை கிடைக்கும்" என்று எண்ணி அந்த ஊழியனை ஒரு விக்கிரமாக வைத்திருந்தால் அந்த விக்கிரத்தை அகற்றிவிடவும். எந்த நாசியிலே சுவாசமுள்ள மனிதனையும் அவனது கள்ள தீர்க்கதரிசனத்தையும் நம்பி ஏமாந்து போகவேண்டாம்.


Next.......sites.google.com/site/gloryofhiscross/isaiah4