விக்கிரங்களை வெறுத்து தேவனின் மேல் நம்பிக்கை 

ஏசாயா 46ம் அதிகாரத்தில் விக்கிரகங்களை வெறுத்து நாம் தேவனின் மேலே நூறு சதவீதம் நம்பிக்கை வைக்கும்படி தீர்க்கன் போதிக்கிறான்.


"பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.

 

அவைகள் ஏகமாய்க் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்". தேவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள் பேல், நேபோ போன்ற விக்கிரகங்களை சுமந்துவந்தால், அந்த சுமைகளை தேவன் அழித்துப்போடுவார். இன்று புகழ், பணம், பதவி போன்ற விக்கிரகங்களை உங்களுக்கு அதிக பிரயாசத்துடன் தூக்கிக் கொண்டுவரும் ஊழியர்களுக்கு ஐயோ! தேவன் எழுந்தரும்போது இந்த விக்கிரகங்கள் தாமே சிறைப்பட்டுப்போகும் (1-2).

 

"யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்.

 

உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்" இன்று தேவனை உண்மையாக பின்பற்றும் மீதியாகிய ஒரு சிறு கூட்ட மக்கள் (remnant) அறியவேண்டிய சத்தியம் இதுதான். அவர்களை நரைவயதுமட்டும் தாங்கி, ஏந்தி, சுமப்பார்.  தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்குகிறார். நீங்கள் வாலிபர்களைப்போல சரீரத்தில் பலன் பெறுவீர்கள் (3-4).


யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?

 

பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலிபொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.

 

அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை" இன்று பாவத்தில் ஜீவித்துக்கொண்டு, நாம் பணம், காணிக்கைகள் கொடுத்து தேவனை விலைக்கு வாங்கிக்கொள்ளாம் என்று நினைத்து அவரை கைகளால் உண்டாக்கப்படும் விக்கிரகங்களுக்கு ஒப்பிடுகிறோமா? எவ்வளோவோ பணத்தை தேவனின் நாமத்தில் அள்ளி அள்ளிக்கொடுத்தும் நமக்கு மறுஉத்தரவு வராமல் இருக்கிறதா? அந்த குறிப்பிட்ட தேவ ஊழியன் ஜெபித்தால் ஆண்டவர் இக்கட்டை நீக்கி ரட்சிப்பார் என்று நம்பி ஏமாந்து நிற்கிறோமா (5-7).

 

"இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள்". நாம் தேவன் மேல் கீழே கூறப்பட்ட விதத்தில் விசுவாசம் வைக்காமல் இருந்தால் நாம் பாதகராகிவிடுகிறோம்.

 

"முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.

 

அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்" தேவப்பிள்ளையே இன்னும் ஏன் தேவன் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றவில்லை என்று ஏங்கி நிற்கறீர்களா?  "என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்" என்று சொல்கிறார்,  உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், அவரின்  ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறார். உங்களுக்கு உதவி செய்வதற்கு நீங்கள் அறியாத இடத்திலிருந்து அவரின்  ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை கண்டுபிடித்து உதவுவார். ஆகவே உங்கள் கண்கள் அவர் மேல்தான் இருக்கவேண்டும் (8-11).


"முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள்.

 

என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்". முரட்டு இருதயமுள்ளவர்கள் தேவனை நம்பாதவர்கள். ஆண்டவரின் நீதியும் இரட்சிப்பும் தாமதிப்பதுமில்லை. உன் பார்வையில் தாமதமாவது போல தோன்றும். நாம் அவரின் இரட்சிப்பையும் மகிமையையும் கண்டிப்பாக நமது கண்களால் காண்போம். தரிசனம் தாமதித்தாலும் அது நிறைவேறும் (12-13).