கிறிஸ்துவின் பாடும், தேவமக்களுக்கு எச்சரிப்பும்

ஏசாயா 50ம் அதிகாரத்தில், தீர்க்கதரிசி  கிறிஸ்துவின் பாடுகளை விவரித்தும், பின்வாங்கிப்போன தேவமக்களை தீர்க்கதரிசி எச்சரித்தும் திடப்படுத்துகிறான்.

 

"கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன்கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்". பின்மாறிப்போன தேவமக்கள் விவாகரத்து  செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட மனைவியைப் போல ஒப்பிடப்படுகிறார்கள். நீங்கள் இதுபோல நிலையில் இருந்தால் இதற்கு காரணம் நீங்கள் தான். உங்களது அக்கிரமங்கள் பாதங்கள் உங்கள் மணவாளனாகிய தேவனிடமிருந்து பிரிந்துவிட்டது. நீங்கள் உங்கள் தாயாகிய கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிடம் ஐக்கியம் வைக்கமுடியாமல் உங்கள் பாவங்கள் தடையாக இருக்கிறது.

 

"நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது". நீங்கள் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியை போல இருந்தாலும், ஆவியானவர் உங்களின் உள்ளத்தில் உங்களை உணர்த்திவருகிறார். பழைய ஏற்பாட்டின் காலத்தில் தீர்க்கதரிசி மூலமாக பின்மாறிப்போன இஸ்ரவேல் மக்களைத் தேடிவந்து கூப்பிட்டு தன்னிடம் வரும்படி அழைத்தார். ஆனால் புதிய ஏற்பாட்டின் காலத்தில்  உங்களில் வாசமாயிருக்கும் ஆவியானவரின் மூலம் தேவன் அழைக்கும்போது நீங்கள் மறுஉத்தரவு கொடுக்க மனதில்லாமல் இருந்துவருகிறீர்கள். பாவத்திலிருந்து மீட்கக்கூடாதபடிக்கு அவரின் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு அவரிடத்தில்  பெலனில்லாமற்போயிற்றோ? வேறு ஒரு விதமாகவும் இந்த தீர்க்கதரிசன வார்த்தையை தியானிக்கலாம். நீங்கள் துன்பங்களின் மத்தியில் தவித்துநிற்கும்போது, அவரின் கரம் மீட்கக்கூடாதபடிக்கு குறுகிப்போகவில்லை. அவரிடம் பெலனில்லாமற்போகவில்லை. கடலை வற்றப்பண்ணி, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போட வல்லமையுள்ளவர்.

 

"நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்". நமது தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் வானங்களை அசைக்கிறார்,

 

"இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்". தீர்க்கதரிசி, தன்னை இளைப்படைந்த ஒரு தேவப்பிள்ளையின் இடத்தில் வைத்து இந்த தீர்க்கதரிசனத்தை உங்களுக்காக உரைக்கிறான். சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல, கல்விமானின் நாவைத் தந்தருளிகிறார். நமக்கு இந்த உலகத்தின் ஞானம் இல்லாமலிருந்தாலும் கல்விமானின் நாவைத் தந்து நம்மை இந்த உலகத்திலுள்ள ஞானிகள் ஆச்சரியப்படும்படி செய்கிறார். காலைதோறும் உங்களை எழுப்புகிறார். சரீர பலவீனத்தால் காலையில் அதிக நேரம் ஜெபிக்கமுடியாவிட்டாலும் கவலைப்படவேண்டாம். அவர் எழுப்பும்போது சிறிது நேரம் ஜெபித்தால் போதும்.

 

"கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை". தீர்க்கதரிசி தன்னை உங்கள் இடத்தில் வைத்து இதை எழுதுகிறார். அநேகந்தரம் தேவன் அவரின் எச்சரிப்பின் குரலைக் கேட்கும்படி உங்கள் செவியைத் திறக்கிறார். ஆனால் அவரின் எச்சரிப்பின் குரலை எதிர்த்து, பின் வாங்கக்கூடாது.

 

"அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை". இந்த வசனத்திற்கும் முந்தின வசனத்திற்கும் சம்பந்தம் இல்லை. இந்த வசனம் கிறிஸ்துவின் பாடுகளைக்குறிக்கிறது. இது கிறிஸ்து ரோம போர்வீரர்களால் அனுபவிக்கும் பாடுகளைக் குறித்த தீர்க்கதரிசனம். இயேசு தன் வாயின் மூலம் கூறியதாக தீர்க்கதரிசி எழுதுகிறார். இயேசு கூறியதாக சொன்ன இந்த வார்த்தைங்கள் சுவிசேஷத்தில் எழுதப்படவில்லை. இதுதான் தீர்க்கதரிசனத்தின் மேன்மை.

 

மேலும் குமாரனின் தீர்க்கதரிசனம் கூறுகிறதாவது, "கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.

 

என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.

 

இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்". பாடுகளை சுமந்து வரும் கிறிஸ்துவின் தீர்க்கதரிசன சாட்சிகள். யேசுவிற்கு விரோதமாக யார் எழும்பினாலும், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

 

கிறிஸ்து இந்த வசனங்களை சுவிசேஷத்தில் சொல்லாமலிருந்தாலும், அவர் கூறியதாக தீர்க்கதரிசனம் கூறுகிறது. இதுதான் தீர்க்கதரிசனத்தின் மேன்மை தீர்க்கதரிசனத்தின் மேன்மை.

 

"உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்". தீர்க்கதரிசி நம்மை கர்த்தருக்குப் பயந்து இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படியும் படி ஏவுகிறார்.

 

இதோ, நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜுவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்". தீர்க்கதரிசி இந்த வசனத்தை பிதாவாகிய தேவன் உரைத்ததாக எழுதுகிறார். நாம் ஆண்டவரின் எச்சரிப்பின் சத்தத்தை கேட்காமல் மற்றவர்களுக்கு விரோதமாக சுழ்ச்சி செய்து அவர்களை அழிக்க நெருப்பை உண்டாக்குவோமானால் நாம் மூட்டின நெருப்பில் நாமே அழிந்துபோவோம். இந்த அழிவு தேவனின்  கரத்தினால் உண்டாகும் (1-11).