ராஜாவின் ஆளுமையும், கடைசிகால எழுப்புதலும்

நீதியான அரசனின் ஆட்சி


ஏசாயா 32ம் அதிகாரத்தை தியானிப்போமாக.


"இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்".  இந்த தீர்க்கதரிசனம் கிறிஸ்து இயேசுவின் ஆளுமையை குறிக்கின்றது. நம்மை ஆளுவது இந்த ராஜாதான். தேசத்தின் அரசியல் ஆளுநர்கள் நம்மை ஆண்டுவந்தாலும் நமது ஒரே ராஜா இவர்தான். நாம் இவரின் ஆழுகைக்கு உட்பட்டிருக்கும்போது இந்த உலகத்தில் ஆளும் பிரபுக்களும் நீதியாக ஆட்சி செய்வார்கள். எப்படியெனில் நாம் நியாயமாகத் துரைத்தனம் பண்ணும் ஆளுநர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இந்த ராஜாவின் ஆளுமைக்குள் கொண்டு வரலாம். நாம் நமது நாட்டில் நடக்கும் அரசியலில் பங்குகொள்ளவேண்டும்.  ஊழல், அநியாயம், அக்கிரமம் இல்லாத இறை ஆட்சியை இந்த உலகிலுள்ள நமது நாட்டில் கொண்டுவரலாம்.

 

"அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்". நாட்டு மக்களின் கண்கள் திறக்கப்படும். சுவிசேஷம் கேட்கும்படி செவிகள் திறக்கப்பட்டு கவனித்தே இருக்கும். இது நடப்பது உண்மையான எழுப்புதலின் காலத்தில். வேல்ஸ் நாட்டில் நடந்த எழுப்புதலில் தேவனின் ஆட்சியை மக்கள் எங்கும் கண்டார்கள்.


 உயிரமீட்சியின் காலம்


அந்த உயிரமீட்சியின் காலத்தில், "பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்".

 

"மூடன் இனித் தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.

 

ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.

 

லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.

 

தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்”.

 

முட்டாள்தனமான நபர் இனி இனித் தயாளன் என்று மதிக்கப்படான். முட்டாள்தனமான நபர் முட்டாள்தனம் பேசுவான் : எசேக்கியாவின் ஆட்சியின் போது ஆன்மீக புதுப்பித்தல் ஆன்மீக சத்தியத்தை  அனைவரும் அறிய வேண்டும் என்பதாகும். இனி வெளித்தோற்றத்தால் ஏமாற்றம் இருக்காது; ஒரு மனிதன் முட்டாள் என்றால், அவன் முட்டாள் என்று வெளிப்படும். லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை. ஒரு மாய்மால ஆட்களை காணமுடியாது. எல்லோரும் திறந்த புத்தகங்களாக காட்சியளிப்பார்கள்.

 

முட்டாள்களின் முட்டாள்தனம் மட்டுமல்ல, தாராள மனப்பான்மையும் வெளிப்படும். நீதியும் துன்மார்க்கமும் ஒவ்வொன்றும் என்னவாக இருந்ததோ அதைக் அப்படியே கண்டு மக்கள் நிதானிப்பார்கள்.

 

அக்கிரமம் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும், மேலும் நல்லொழுக்கம் வெளிப்படும் மற்றும் வெகுமதி அளிக்கப்படும், மேலும் அனைத்தும் நேர்மையுடனும் எளிமையுடனும் நிர்வகிக்கப்படும் (1-8).

 

நிர்விசாரம் என்ற பாவம்


நிர்விசாரமாக வாழும் தேவமக்களுக்கு ஆண்டவர் கொடுக்கும் எச்சரிக்கை. அவர்களை மாமிச பலவீனத்தில் இருக்கும் பெண்களை போல ஆவியானவர் கருதுகிறார். "ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது". நிர்விசாரம் இருந்தால் நாம் தத்தளிப்போம். நமக்கு நமக்கு காலத்தில் வரவேண்டிய திராட்சப்பலன் கிடைக்காது. அறுவடை காலம் கடந்து போய்விடும். எதிர்பார்க்கும் ஆசிர்வாதம் வராது. தேசத்தில் எழுப்புதல் வராது. ஆகவே நமது பழைய வாழ்க்கையை களைந்துபோட்டு அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளவேண்டும் (9-11).


தேவனின் கோபம்    


தன் சொந்த ஜனங்கள் கள்ள உபதேசம், பாவம் மூலம் பின்மாறிப்போகும் போது தேவனின் கோபம் அவர்களின் மேல் இவ்விதமாக வரும்.

 

"செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.

 

என் ஜனத்தினுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.

 

அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்". நமது வாழ்க்கையிலும் ஊழியத்திலும் முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும். கனிதரும் திராட்சச் செடிகள் பலனைக் கொடுக்காது. நஷ்டமும் ஏமாற்றமும் ஏற்படும். புலம்பி அழுவோம் (12-14).

 

உண்மையான எழுப்புதல்


உண்மையான எழுப்புதல் தேசத்தில் உண்டாகும்போது -

 

"உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும். உன்னத்திலிருந்து தேவனின் மகிமை வெளிப்பட்டு நம்மேல் ஊற்றப்படும் போது எங்கும் தேவன் மூலம் வரும் செழிப்பு காணப்படும். ஆவிக்குரிய வனாந்தரம் மாறிவிடும்.

 

இந்த உலகிலுள்ள ஆவிக்குரிய "வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்". இப்போது நமது ஆலயங்களிலும் ஊழியங்களிலும் நியாயம் வாசமாயிருக்கும். எங்கே செழிப்பு நம் மத்தியில் இருக்குமோ அங்கே நீதி வெளிப்படும், நமது பணத்தால் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவுவோம்.

 

"நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.

 

என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்". தேவ மக்கள் திருப்தியுடன் ஆனந்தமாய் வாழ்க்கை நடத்துவார்கள் (15-18).

 

"ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோம்.

 

மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்".

 

தேவனின்  ஆவி ஊற்றப்படும் போது, ​​நாம் இப்போதுள்ள சூழ்நிலைகளை விட உயர்ந்த ஆவிக்குரிய நிலையில்  வாழ்வோம். தேவனின் வல்லமை வெளிப்படும்போது மற்றவர்கள் அதை உணர்ந்தாலோ, அல்லது அவமானத்தில் தாழ்த்தப்பட்டாலோ, அது தேவனின்  ஆவியானவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை பாதிக்காது. நமது உலகத்தில் தேவனால் கொடுக்கப்பட்ட பொருட்களால் எல்லா இடங்களிலும் சுவிசேஷத்தை வித்தாக விதைத்து தேவனால் பாக்கியவான்களாக கருதப்படுவோம். இது உண்மையான எழுப்புதலின் காலத்தில் நடக்கும் (19-20)'