எழுப்புதல் எப்போது வரும்? எழுப்புதல் என்றால் என்ன?


Previous.....Isaiah


எழுப்புதல் எப்போது வரும்? எழுப்புதல் என்றால் என்ன?

ஏசாயா 6 அதிகாரத்தை தியானிப்போம். தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட இஸ்ரவேலின் அரசன் உசியா ஆண்டவரால் தண்டிக்கப்பட்டு மரணம் அடைந்தவுடன் தான் ஏசாயாவின் தீர்க்கதரிசன கண்கள் திறக்கப்பட்டது. உசியா பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான். அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். ஆனால் "மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்" ( II இராஜாக்கள் 15:2-5). இந்த மேடைகள் அகற்றப்படத்தலால் ஆண்டவர் உசியாவை குஷ்டரோகத்தால் தண்டித்தார். "கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்".

இன்றும் ஆண்டவர் தான் தெரிந்துக்கொள்ளப்பட்ட அநேக ஊழியர்கள் விக்கிர மேடைகளை அகற்றாமல் ஊழியம் செய்ததால் அவர்களை ஆவிக்குரிய குஷ்டரோகத்தால் தண்டிக்கிறார். இவர்கள் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தாலும், தங்களுக்கென்று சாம்ராஜ்ஜியங்களை கட்டி தங்களின் பெயர்களை பிரபலப்படுத்தி கட்டிடங்களையும், ஆராதனை கோபுரங்களையும் கட்டி அங்கே தேவமக்களை பலி செலுத்த வைக்கிறார்கள். கோடிக்கணக்கான பணத்தில் இவைகளை கட்டி வருகிறார்கள். ஆண்டவர் வழிநடத்தித்தான் இவ்விதம் செய்கின்றோம் என்றும் கூறுகின்றார்கள்.

ஆண்டவரின் "வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது". சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்".

பெயரில்லாத சேராபீன்கள் தேவனுக்கு மேலாக நிற்கின்றார்கள். இந்த சேராபீன்களின் (கூப்பிடுகிறவர்களின்) சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. ஆலயம் தேவனின் மகிமையால் நிரம்பும்போதுதான் எழுப்புதல் உண்டாகிறது.

சேராபீன்களில் "ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்".

இந்த சேராபீன்கள் தங்களின் முகங்களை தங்களின் இரண்டு செட்டைகளால் மூடி சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று ஆராதிக்கிறார்கள். பலவித வாத்திய கருவிகளை வைத்து ஆராதிக்கவில்லை.

இந்த சேராபீன்கள் ஒரு தீர்க்கதரிசன புத்தகத்தை எழுதவில்லை. அவர்களின் ஓரே செய்தி இதுதான் "சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது. சாத்தானை விரட்டியோ அல்லது அவனின் வல்லமையை குறித்தோ எந்த செய்தியும் கொடுக்கவில்லை. இவர்களின் இடமோ தேவனின் சிங்காசனத்தில் மேலிருந்தது.

ஏசாயா யேசுவைக்குறித்து அநேக தீர்க்கதரிசனங்கள் உரைத்த ஒரு பெரிய தீர்க்கன்! தேவனின் மகிமை வெளிப்பட்டவுடன் அவன் "நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே" என்கிறான்.

எழுப்புதலில் தேவ மகிமை வெளிப்படும்போது நாம் அசுத்த உதடுகளுள்ள மனிதர்கள் என்ற வெளிப்பாடு கிடைக்கிறது. "அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது" என்கிறான்.

ஒரு பெயரில்லாத சேராபீன் ஒரு பெரிய தீர்க்கதரிசியின் வாயைத் தொட்டு உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்று சொல்கிறார்.

இன்று எழுப்புதலுக்கு ஆண்டவர் அழைப்பது பெயர் அறிமுகம் இல்லாத சேராபீன்கள் தான். ஏசாயா போன்ற தீர்க்கத்தரசிகளை அல்ல.

இந்த எழுப்புதலில் நடப்பது என்ன? "பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்று ஏசாயா தீர்க்கன் கூறுகிறான்.

கடைசி காலத்தின் ஆண்டவரின் மகத்தான தீர்க்கதரிசன ஊழியம் இந்த கட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

ஆண்டவர் இப்போதுதான் ஏசாயாவிடம் பேச ஆரம்பிக்கிறார். நான் யாரை அனுப்ப என்று கேட்கும்போது சுத்திகரிக்கப்பட்ட ஏசாயா முன்வருகிறார். அநேக ஏசாயாக்கள் எழும்பி முன் வருவார்கள். பழைய ஏசாயா அல்ல. இயேசுவின் ரத்தத்தால் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசன கூட்டத்தார் எழும்புவார்கள். இவர்கள் கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தை திர்க்கதரிசனத்தால் எச்சரித்து நல்வழி படுத்துவார்கள். எலியாவை போல ஊழியம் செய்வார்கள்.

வசனங்கள் 9-13 ஒரு பெரிய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்துகிறது. இந்த ஜனங்கள் ஆண்டவரின் சத்தத்திற்கு கீழ்ப்படியாமல், மனம்திரும்பாத பட்சத்தில் தேவன் இவர்களை தண்டித்து ஒரு பெரிய நியாயத்தீர்ப்பிற்குள் உட்படுத்துவார்.

தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும் இருக்கும் கல்லான இதயமுள்ள மக்களை தேவன் அவர்களின் இருதயத்தை மிகவும் கல்லாக்கி அவர்களின் காதுகளை மந்தப்படுத்தி அவர்கள் கண்களை மூடிப்போகும் வரை செய்கிறார். அநேகந்தரம் கள்ள தீர்க்கத்தரசிகளை குறித்து எச்சரித்தும் மோசம் போகும் மக்களை ஆக்கினை தீர்ப்பிற்கு தேவன் ஒப்புக்கொடுக்கிறார்.

இது ஒரு மிகவும் கடினமான தீர்க்கதரிசன ஊழியம். தேவனனின் சித்தத்தின்படி கட்டப்படாத ஊழியங்களை ஒரு மனிதனும் அவைகளில் பங்குகொள்ளாதபடி அழித்துவிடுவார். எல்லா ஆவிக்குரிய குடியிருப்பின் இடங்களை நிர்மூலமாக்கி அவாந்தரவெளியாக்குவார்.

"கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்". மனிதர்களை இந்த ஊழல், அக்கிரமம் நிறைந்த ஊழியங்களிலிருந்து விலக்கி கிறிஸ்தவ உலகத்தை நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்படி செய்வார்.

அதில் இன்னும் பத்திலொரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும் தண்டனையை அனுபவித்த பத்திலொரு பேர் மீண்டும் தண்டிக்கப்படுவார்கள். இப்படி வடிகட்டி எடுக்கப்பட்ட மக்கள் அடிமரமாக மாறி பரிசுத்த வித்தாயிருப்பார்கள். கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப் போனாலும் அவைகளின் அடிமரம் நிலைத்திருந்து ஆசீர்வாதமாக இருக்கும். அதேபோல நம்மை ஆண்டவர் ஒரு பரிசுத்த ஜனமாக மாற்றுவார்.

நியாயத்தீர்ப்பின் மூலமாக கிறிஸ்துவின் சரீரம் சுத்திகரிக்கப்பட்டு ஒரு பரிசுத்த வித்து உருவாகும். இந்த பரிசுத்த வித்து கர்வாலி, அரச மரங்களாக இந்த உலகத்திற்கு ஒரு ஆவிக்குரிய எழுப்புதலை கொண்டுவரும்இந்த ஊழியர்கள், மனிதர்களால் கட்டப்பட்ட ஊழியங்களையும் இருப்பிடங்களையும் அழித்து தேசத்தை அவாந்தரவெளியாகி, முதல் நூற்றாண்டில் நடந்த ஊழியங்களை போல கிறிஸ்துவின் சரீரத்தை மகிமையுள்ள சபையாக (Glorious church without spot) மாற்றுவார்கள். "கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்". (எபேசியர் 5: 27).

இந்த பரிசுத்த வித்துதான் கடைசி காலத்தின் "கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபை".

Next.....Isaiah 8 தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும்