சர்வாதிகாரம் செய்யும் கொடுங்கோல் அரசனின் பெரிய வீழ்ச்சி 

ஏசாயா 47ம் அதிகாரத்தில் தேவமக்களை அடக்கி ஆண்ட பாபிலோனிய அரசனைப்போல ஒரு சர்வாதிகாரியின் வீழ்ச்சியை ஆண்டவர் நிகழ்த்துவார்.

 

"பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை". பாபிலோனிய மன்னன் யூத மக்களைச் சிறைப்பிடித்து அவர்களை அடிமைகளாக ஆண்டுவந்தான். கீழ்ப்படியாமையின் நிமித்தம் தன் ஜனங்களை அந்த கொடுங்கோல் அரசனின் கைகளில் ஒப்புக்கொடுத்தாலும் ஆண்டவர் பாபிலோனிய அரசனை தண்டித்தார்.

 

உனது நாட்டில் ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறானா? இவனை ஒரு கன்னிகையாக, அதாவது திருமணம் ஆகாத ஒரு தனி மனிதனாக ஆவியானவர் சித்திரிக்கிறார். அவன் ஒரு நாளில் இறங்கி மண்ணிலே உட்காருவான்.  தரையிலே உட்காருவான். அவன் சிங்காசனத்தை இழந்துவிடுவான். செருக்குக்காரன், சுக செல்வன் என்று இனி இவன் அழைக்கப்படுவதில்லை.

 

"ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ". எப்போது ஒரு சர்வாதிகாரி தேவனால் தண்டிக்கப்படுகிறானோ அவன் சுகபோக வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு கீழான வாழ்க்கைக்குத் தள்ளப்படுவான். அவனது முக்காடு நீங்கிவிடும். வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் இருக்கும் நிலைமை என்றால் தனது ராஜரீக மகிமை போய் ஒரு கேவலமான நிலைமையை அடைவது என்ற அர்த்தமாகும்.

 

"உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் இலச்சை காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்". அந்த சர்வாதிகாரியின் உள்ளரங்க காரியங்கள் எல்லோரும் அறியும்படி வெளிப்படும். அவனின் நாணம் எல்லோரும் காணும்படி வெளிப்படும். ஆண்டவர் தாமே அவன் செய்த அநியாயங்கள், அக்கிரமங்களுக்காக நீதியைச் சரிக்கட்டுவார்.

 

"எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது". அப்போது தேசமக்களும் விசேஷமாக தேவமக்களும் தேவனின் நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.

 

"கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை" அந்த கொடுங்கோல் அரசன் இருக்கிற இடம் தெரியாமல் மறைவிடத்திற்குள் பிரவேசிப்பான். அவன் உலக நாயகன் என்று அழைக்கப்படுவதில்லை (1-5).

 

"நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,

 

என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக் காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்". எந்த நாட்டில் தேவப்பிள்ளைகள் ஆண்டவரை மறந்து பின்வாங்கிப்போகிறார்களோ ஆண்டவர் கடுங்கோபமடைந்து அந்த நாட்டில் ஒரு சர்வாதிகாரியின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார். ஆனால் அந்த சர்வாதிகாரி தேவ மக்களின் மேல் இரக்கம்வையாமல் தன் ஜனத்தின் முதிர்வயதுள்ளவர்களின்மேல் நுகத்தை மகா பாரமாக்குகிறானோ ஆண்டவர் எரிச்சல் கொள்கிறார். அவன் "என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி", இப்படி இந்தக் காரியங்கள் நடக்கும் என்று அகந்தையால் தன் "மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்" என்று ஆண்டவர் கூறுகிறார்.

 

"இப்பொழுதும் சுகசெல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே; நான்தான் என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்லுகிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள்". இப்போது சுக செல்வியாக மக்களைக்குறித்து விசாரமில்லாமல் வாழும் தன்னலத்துடன் வாழும் சர்வாதிகாரி அவனைத்தவிர ஒருவருமில்லை என்று அகந்தை கொள்கிறான். தான் கைவிடப்பட்ட ஓரு விதவையைப்  போல ஆகமாட்டேன் என்றும் தன் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று இருதயத்திலே சொல்லுகிறவனை "நான் சொல்லுகிறதைக் கேள்" என்று ஆண்டவர் உரைக்கிறார். அவனது சந்தானம், அதாவது அவனையும் அவனது தீய கொள்கையையும் குருட்டுத்தனமாக பின்பற்றிவரும் மக்கள், மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

 

"சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்". அந்த சர்வாதிகாரி வீழ்த்தப்படும் அந்த ஒரே நாள் சடிதியாக வரும். அந்த நாளில் சந்தான சேதமும், விதவையிருப்பும் அவன் மேலே வரும்.

 

கர்த்தர் அவனுக்கு உரைப்பது,   "உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்.

 

ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்" ஆண்டவரின் பயங்கரமான எச்சரிப்பின் வார்த்தைகள் இது  (7-11).

 

"நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்". அந்த சர்வாதிகாரி சிறுவயதிலே கெட்டுப்போகிறான், அவனுக்கு மந்திர வித்தைகள், சூனியங்கள், இவைகளின் மேலேதான் நம்பிக்கை. ஜீவனுள்ள தேவன் மேலே கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.  

 

"உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்". இந்த சர்வாதிகாரியின் ஆலோசனைக்காரர்கள் ஜோசியர்கள், நட்சத்திரம் பார்க்கிறவர்கள் ஆகும். அவனுக்கு நல்ல நாட்களையும், நடக்கப்போகும் காரியங்களையும் அமாவாசி கணிக்கிறவர்களால் நிர்ணகிக்கப்படுகிறது. இவர்களால் இந்த அரசனை இரட்சிக்கமுடியாது என ஆண்டவர் கூறுகிறார்.

 

"இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல". இந்த ஜோசியர்கள் தேவனின் நியாயத்தீர்ப்பினால் தண்டிக்கப்படுவார்கள். ஆண்டவரின் அக்கினிஜுவாலையினின்று அவர்கள் விடுவிப்பதில்லை.

 

:உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை". அந்த சர்வாதிகாரியுடன் தொடர்பு வைத்து வியாபாரம் பண்ணினவர்களும் அவர்களும் இரட்சிப்பவர் இல்லாமல் தண்டிக்கப்படுவார்கள் (12-15).