பயத்தை போக்கி ஆசிர்வதிக்கும்  இஸ்ரவேலின் தேவன்

ஏசாயா 43ம் அதிகாரம், பயத்தை நீக்கி தேவன் மேல் முற்றிலும் விசுவாசிக்க ஏவுகின்றது.


இந்த அதிகாரத்தில் இஸ்ரவேலின் தேவன் யார் என்றும் அவரை பற்றிய வெளிப்பாட்டுக்களை அறிந்துக் கொள்ளவேண்டும்.


"இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இன்று இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்".  தனிப்பட்ட முறையில் ஒரு சோர்ந்து போன தேவப்  பிள்ளையான உனக்குத் தான்அவர் சிருஷ்டி கர்த்தர், அல்லது  உன்னை  உருவாக்கினவருமாகிய கர்த்தர் என்று வெளிப்படுத்துகிறார். உன்னைப் பேர்சொல்லி அழைத்தவர். இன்று அநேக தேவபிள்ளைகள் சுவிசேஷ கூட்டத்தில் சுவிசேஷகர் தங்களை பேர்சொல்லி அழைக்க ஏங்கி நிற்கின்றார்கள்.  அந்த சுவிசேஷகன் மற்றவர்களை பேர் சொல்லி அழைத்து தன் பெயரை குறிப்பிட்டு அழைக்கவில்லையே என்று ஏங்குகிறார்கள்.  "நீ என்னுடையவன்" என்று அவர் கூறும்போது நீ இந்த உலகில் யேசுவிற்கு முற்றிலும் சொந்தமானவன்/ள். உனக்கு செய்யாத அதிசயத்தை வேறு யாருக்கும் செய்யமாட்டார். இதுவரை யாருக்கும் செய்யாத காரியத்தை உனக்கு மாத்திரம் செய்வார். உன்மேல் அவரின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கின்றது. எந்த உயர் அதிகாரிகளோ உங்களை காணும்போது தேவனின் மகிமையை உங்கள்மேல் காண்பார்கள்.

 

"நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது".  இந்த உலகத்திலுள்ள துன்பங்களின் மத்தியில் கடக்கும்போது அவர் உன்னோடு இருப்பார். அக்கினி போன்ற பாடுகள் உன்னை சேதப்படுத்தாது. மரண விளிம்பில் தள்ளப்பட்டாலும் நீ உயிருடன் திரும்புவாய்.

 

"நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்".  தன்னை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தின இஸ்ரவேலின் பரிசுத்தர் தான் உன் தேவனாகிய கர்த்தர். வேறு யாரும் இல்லை. உன் கையிலுள்ள வேதத்தை உனக்காக எழுதிக்கொடுத்தவர் இவர் தான். 

 

"நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்". ஒரு தனிப்பட்ட மனிதனாகிய உனக்கு ஒரு பெரிய உலக மகா அதிசயத்தைச் செய்ய உனக்கு ஈடாக உன்னோடு போட்டி போடும் ஒரு ஜனக்கூட்டத்தை புறக்கணித்து உன்னை மேன்மை படுத்தி, பிரபுக்களுடனும், ராஜாக்களுடனும் உட்கார வைப்பார். ஏனென்றால் நீ அவரின்  பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய். அவர் உன்னை மாத்திரம் மற்றவர்களைவிட அதிகம் நேசிக்கிறார்.

 

"பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்". பயப்படாதே அவர் உன்னோடே இருக்கிறார். ஆயிரம் பேர் உன்னை சுழ்ந்து இருந்தாலும் அவர் உன்னை மாத்திரம் காண்கிறார். உலகத்தில் மேற்கு கிழக்கு என்ற இரண்டு பகுதிகள் இருக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளிலிருந்தும் உனக்கு சந்ததிகளை வரப்பண்ணுவார். உன்னை அறியாத மக்கள் உனக்கு சேவை பண்ணுவார்கள். இந்த வசனத்தின் இன்னொரு மறைப்பொருள் இதுவாகும். கிறிஸ்துவாகிய ஒரே சரீரத்தில் இந்த உலகின் இரண்டு பகுதிகளிலிருந்தும் தேவமக்களை ஒன்று கூட்டிச்சேர்ப்பார். ஆகவே நீ பயப்படவேண்டாம். நீ துன்பத்தில் தனியாக இருக்கும்போது உன்னை சரீர பிரகாரமாக அறியாத தேவப்பிள்ளைகள் உனக்கு ஆறுதல் கூறி தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள். உன் நாட்டில் ஒரு கொடுங்கோல் அரசன் ஆட்சி செய்யம்போது உன் நாட்டின் தேவபிள்ளைகளை காக்கும்படி அநேக தேவப்பிள்ளைகள் பல நாடுகளிருந்து ஜெபிக்கும்போது தேவன் அந்த சர்வாதிகார அரசன் ஆட்சியிலிருந்து அகற்றுகிறார்.

 

"நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.",  ஆண்டவர் தனது நாமந்தரிக்கப்பட்ட அருமை மக்கள், எந்த தூரமாக இருந்தாலும், அதாவது இந்த உலகின் வடைக்கு தென் பகுதிகளாக இருந்தாலும், அவர்களை ஒன்றுக்கூட்டி சேர்ப்பார். எந்த உலக வல்ல அரசனாலும் அவர்களை, எகிப்தின் பார்வோன் அரசனைபோல தேவமக்களை அடக்கி ஒடுக்கமுடியாது. தேவன் தனது வலது கரத்தை நீட்டி அவர்களை ஒன்றுக் கூட்டி சேர்ப்பார். அவர் கட்டளையிட இந்த உலக அதிபதிகளளின் பிடிகளிலிருந்து தேவமக்களை அவர் விடுவித்து கிறிஸ்துவாகிய சரீரத்தில் ஒன்றாக சேர்ப்பார். (1-7).

 

"கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும்,காதுகளிருந்தும்செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்.

 

சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும்".  தன் சொந்த மக்கள் தேவனின் மகிமையை காண ஆவிக்குரிய குருடராகவும், அவரது வேதத்தின் சத்தியத்தை கேட்க முடியாமல் ஆவிக்குரிய செவிடர்களாக இருக்கும் நிலைப்பாட்டை பார்த்து தேவன் அங்கலாய்க்கிறார். அந்த இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வரும்படி கட்டளையிடுகிறார். 


தேவபிள்ளைகள், இந்த உலக மக்களுக்கு பழைய ஏற்பாட்டின் முந்தி சம்பவிப்பவைகளை விளக்கி இயேசுவின் நற்செய்தியை  அறிவித்து யேசுவிற்காக மெய் சாட்சியாக வாழும்படி தேவன் விரும்புகிறார்.

 

தேவபிள்ளைகள் தனது சாட்சியுள்ள வாழ்க்கை மூலம் தேவனை உணர்ந்து விசுவாசிக்கவேண்டும்.  "நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் (கர்த்தராகிய யேசுவும்) எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை". யேசுக்கிறிஸ்துவோடு நாமும் சாட்சிகளாகயிருக்கவேண்டும். இயேசுவின் வாழ்க்கையோடு இணைந்து இருக்கவேண்டும். அப்போதுதான் உலகத்தார் வேறு ஒரு தேவன் அவருக்கு முன்பும் பின்பும் இல்லை என்றும்,  அவரே அல்லாமல் வேறு ஒரு ரட்சகர் இல்லை அறிந்துக்கொள்வார்கள்.

 

"நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்". சுவிசேஷம் அறிவித்து மக்களை இரட்சிப்பவர் தேவன் தான். அதாவது சுவிசேஷர்கள் சுவிசேஷம் அறிவித்தாலும், திரியேக தேவன், பரிசுத்தாவியானவர் மூலமாகவே கிரியை செய்துவருகிறார். தேவப்பிள்ளைகளாகிய நாம் வெறும் சாட்சிகளாகத்தான் இருக்கிறோம். இன்று நமது ஊழியத்தின் மூலம் மக்கள் இரட்சிக்கப்பட்டாலும், தெய்வீக சுகம் கிடைத்தாலும் நாம் ஒருபோதுமே மகிமையை எடுத்துக்கொள்ளக்கூடாது.

 

"நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?". கிறிஸ்துவாகிய திரியேக தேவன் ஆதியிலே இருந்தார். அவரே நியாதிபதியாக வெளிப்பட்டு தேவமக்களின் விரோதிகளைப் பட்சிக்கிறார். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே (எபி 12:12) 

 

"நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர் படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் சொல்லுகிறார்".  தேவமக்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் அரண்களை இடிந்துவிழவும், பாபிலோனிய மதத்திற்கு அடிமைபட்டுப்போன தேவமக்களை மீட்டுவரவும் கட்டளையிடுகிறார். தன்னை தேவமக்களின் மீட்பராகவும், இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் என்று வெளிப்படுத்துகிறார் (8-14).

 

"நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்". பரிசுத்தராகிய கர்த்தர் என்று தேவன் வெளிப்படுகிறார். பரிசுத்தம் இல்லாமல் இவரை நாம் தரிசிக்க முடியாது. இஸ்ரவேலின் சிருஷ்டிகர் என்றால் இஸ்ரவேல் என்ற தேசத்தை மாத்திரம் சிருஷ்டி செய்தவர் என்ற அர்த்தம் இல்லை. இஸ்ரவேல் என்ற தேசத்தின் மூலமாக தன்னை உலக இரட்சகராக வெளிப்படுத்தினார். பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேல் நாட்டில் நடத்திய அற்புதங்களையும், அடையாளங்களையும், இரட்சிப்பையும், நியாயத்தீர்ப்புகளையும் அந்த தேவனை விசுவாசிக்கும் இப்போதுள்ள மக்களின் மத்தியில் செய்ய வல்லவராக இன்றும் இருந்து வருகிறார். இந்த தேவனே நமக்கு ராஜாவுமாக இருக்கிறார்.

 

"சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது." நாம் ஆராதிக்கும் தேவன் அதே இஸ்ரவேலின் தேவனாகும். நமக்கு விரோதமாக எழும்பும் எந்த அதிகாரத்தையும் ஒரு திரியை அணைப்பதுபோல அழித்துப்போடுகிறார்.

 

"முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்". உங்கள் வாழ்க்கையில் முன்பு நடந்த தோல்விகளையும், துன்பங்களையும், சஞ்சலங்களையும், நோயின் படுக்கைகளையும், முடிந்து போய்விட்டது. பூர்வமானவைகள். அவைகளை நினைக்கவேண்டாம், சிந்திக்ககூடவேண்டாம். நோவாவின் காலத்தில் வந்த ஜலப்பிரளயம் இனி திரும்ப வராது.

 

"இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்". உங்கள் வாழ்க்கையில் இப்பொழுதே புதிய காரியத்தைச் செய்யப்போகிறார். வனாந்தரமான வாழ்க்கையில் இனி வழியே உண்டாகாது என்று எண்ணவேண்டாம். அவாந்தரவெளியில் எந்த நாடும் விஞ்ஞான ரீதியில் ஆறுகளை உண்டுபண்ணமுடியாது. ஆனால் இஸ்ரவேலின் தேவனால் எல்லாம் கூடும்.

 

"நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.

 

இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்". நாம் தேவனால் தெரிந்துகொண்ட ஜனமாகும். நமது வறட்சியான வாழ்க்கையை மாற்றி நமக்கு தேவையான உலக ஆசீர்வாதங்களைக்கொடுக்கும்போது நமக்கு தீமை விளைவித்துக்கொண்டிருக்கும் அசுத்த ஆவிகள், சாத்தானின் சேனைகள் அடங்கிப்போய் தேவனை கனம்பண்ணுவார்கள். இப்படி ஆசீர்வதிக்கப்பட்ட தேவமக்களை தேவன் தனக்கென்று ஏற்படுத்துகிறார். இவர்கள் தேவனின் துதியை உலகம் முழுவதும் சொல்லிவருவார்கள் (15-21).


"ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய்". இதுவரை  தனது சொந்த ஜனத்தை எப்படி ஆசீர்வதிக்கிறார் என்று சொல்லிவரும்போது, "ஆனாலும் யாக்கோபே", என்று நம்மைப்பார்த்து "நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை" என்று தேவன் அங்கலாய்க்கிறார். நீங்கள் தான் அவரை நோக்கிக் கூப்பிடவேண்டும். ஒரு மூன்றாம் மனிதன் மூலமாக உங்கள் விண்ணப்பங்களை அறிவிக்க அவசியமில்லை. சிலசமயம் நாம் விண்ணப்பம் பண்ணி பதில்வராததால் மனஞ்சலித்துப்போகிறோம்.

 

"உன் ஆடுகளை தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனம்பண்ணவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன்". நாம் அநேகந்தரம் அவரை நமது பலிகளால் கனப்படுத்தவில்லை. அவருக்கு துன்பத்தின் மத்தியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாம் பணஉதவி செய்வது கிடையாது. அவர் நம்மை கட்டாயப்படுத்துவது கிடையாது. அன்பினால் அவருக்கு சேவை பண்ணவிரும்புகிறார்.

 

"நீ எனக்குப் பணங்களால் சுகந்தபட்டையைக் கொள்ளாமலும், உன் பலிகளின் நிணத்தினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்".  நாம் அவரை நமது உலக ஆசீர்வாதங்களால் உச்சித காணிக்கைகளால் அவரை கனம்பண்ணாமல், பாவங்களாலும், அக்கிரமங்களினாலும் துக்கப்படுத்திவருகிறோம்.

 

'நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்'. ஆனால் அவரோ மிகுந்த இரக்கங்களினால் நமது மீறுதல்களை அவரின் நாமத்தினால் குலைத்துப்போட்டு பாவங்களை நினையாமல் இருக்கிறார். எவ்வளவு பெரிய தயவுள்ள தேவன்!

 

"நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்". நாம் அவருக்கு முன்பாக நமது பொல்லாத கிரியைகளை சரியானது என்று வழக்காடி நீதிமானாக முடியாது. ஆனாலும் அவர் நம்மை தண்டிக்கும் முன்பு சந்தர்ப்பத்தைக்கொடுத்து நமது வழக்கை கேட்கவிரும்புகிறார். அவர் நீதியுள்ள நியாதிபதி.

 

"உன் ஆதிதகப்பன் பாவஞ்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள்". அவர் நம்மோடு வழக்காடும்போது நமது பாவங்களை உணர்த்துகிறார். ஆதியிலே ஆதாம் பண்ணின பாவம் முதல் நமக்காக பரிந்து பேசும் ஊழியர்களின் பாவங்களையும் நினைவு கூறுகிறார். அதனாலதான் நமக்கென்று பரிந்து பேசுகிறவர்கள் ஆண்டவருக்கு முன்பாக மோசேயை போல உத்தமர்களாக இருக்கவேண்டும்.

 

"ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்துக்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்". பரிசுத்தமாக வாழாமல், யாக்கோபை போல ஏமாற்றும்  கிறிஸ்தவ ஊழியர்களை தேவன்  சாபத்துக்கும், நிந்தனைக்கும் ஒப்புக்கொடுக்கிறார். ஜாக்கிரதை! நமக்கு போதித்து நல்வழி படுத்தும் ஊழியர்கள் பரிசுத்தமாகவும், உத்தமர்களாகவும் இருப்பது மிக்க அவசியம் (22-28)