ஏசாயா தீர்க்கதரிசன வாக்குத்தந்தங்கள் 

ஏசாயா 44 ம் அதிகாரம் ஒரு வாக்குத்தத்ததின் அதிகாரம்.

 

"இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்". நீங்கள் யாக்கோபைப் போல ஏமாற்றுக்காரனாக இருந்தபோதும் தேவன் உங்களை என் தாசன் என்றும் தெரிந்துகொண்ட இஸ்ரவேல் என்றும் அழைக்கிறார். நீங்கள் ஒரு தேவனால் தெரிந்துகொண்ட பாத்திரம் .

 

"உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே". உங்களை தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கின தேவன். பிறக்கும்போது ஏதாவது சரீர குறையோடு உங்கள் தாய் பெற்றிருக்கலாம். ஆனால் ஆண்டவரின் தயவால் உனக்குத் துணை செய்து உன்னை குணமாக்கமுடியும்.  யெஷூரன் என்றால் நேர்மையானவன். உன் வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்கும்போது உனக்கு துணையாக தேவன் நிற்கிறார். எந்த  சுழ்நிலையிலும் நீ தனிமனிதனாக நிற்கும்போது பயப்படாதே.

 

"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்". நீ ன்று தாகத்தோடு ஏதாவது வழி திறக்காதோ, அற்புதம் நடக்காதோ என்று ஏங்கி நிற்கிறாயோ? உனக்கு இஸ்ரவேலின் தேவன் உன் தாகத்தை நீக்கி உன்னை மாத்திரம் அல்ல உன் சந்தானத்தின்மேலும் ஆசீர்வாதத்தை ஊற்றுவார். இஸ்ரவேலின் அவர் நடப்பித்த காரியங்களை உன் வாழ்க்கையிலும் செய்வார். நீ அவரை இஸ்ரவேலின் தேவன் என்றும் நீ அவருடையவன்/ல் என்று விசுவாசித்தால் போதும். 

 

"அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள்". யெஷூரனைப்போல நேர்மையாக வாழும்போது, ஆண்டவரின் ஆசிர்வாதம் உன் மேலும் உன் சன்னதிமேலூம் ஊற்றப்படும்.  அப்போது நீங்கள் எல்லோரும் நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவீர்கள்.

 

"ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்". உன் சந்நதியின் மக்கள் இதுபோல தனிப்பட்ட முறையில் கர்த்தரின் பிள்ளைகள் என்றும், உன் பெயரை தரித்துக்கொண்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வார்கள். என்ன பாக்கியம்! உன் பேரப்பிள்ளை ஆசிர்வதிக்கப்பட்ட உன் பெயரை தரித்துக்கொள்வான்/ள் (1-5)

 

"நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்".  உன் இஸ்ரவேலின் தேவன் எல்லா படைப்புக்களுக்கும், ஆளுமைககளுக்கும், முந்தினவர். இனி நடக்கப்போகும் காரியங்களுக்கும் பிந்தினவருமானவராக இருந்து உன் வாழ்க்கையில் நடக்கப்போகும் காரியங்களை நன்கு அறிந்துக்கொண்டு உன்னை வழிநடத்துவார். அவரைத்தவிர வேறு ஒரு மனிதனும் உனக்கு தேவனாக இருக்கவே கூடாது. இஸ்ரவேலின் மக்களை வழிநடத்தின ராஜாவாகிய உன் கர்த்தர் இவரே.  அவரிடம் ஒரு பெரிய தேவ தூதரின் கூட்டமே இருக்கிறது. இந்த சேனைகளின் கர்த்தர் உனக்கும் உன் சந்நதியாருக்கும் மீட்பராக இருக்கிறார். இந்த மகா பெரிய சேனை உனக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறது. 

 

"பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்". பூர்வகாலத்தில் இஸ்ரவேலில் தனது ஜனங்களை எப்படி ஸ்தாபித்தாரா அப்படியே நம்மை ஸ்தாபித்து வழிநடத்துவார். ஆகவே பழைய ஏற்பாட்டின் ஆவியானவர் எழுதிக்கொடுத்த, ராஜாக்களின், நாளாகமங்களின் புத்தகங்களை வாசித்து தியானிக்கவும். உங்களின் நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தேவன் தாமே உங்களுக்கு அறிவிப்பார். யாரிடமோ குறி கேட்க போக வேண்டாம்.

 

"நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்". தேவன் பழைய ஏற்பாட்டின் காலத்தில் தீர்க்கத்தரசிகள் மூலம் முன்னறிவித்ததை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். சரித்திர சம்பவங்கள்  நிறைவேறினாலும், இன்றும் அந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் உங்களது வாழ்க்கையில் நிறைவேறிவருகிறது. ஆகவே கலங்காமலும் பயப்படாமலும் இருக்கவேண்டும். நாம் வேதத்தின் வாக்குத்தத்தங்களை மாத்திரம் விசுவாதித்தால் போதும். மனிதர்களை நம்ப அவசியமில்லை. இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது நீங்களே ஆண்டவருக்கு சாட்சிகள்.

 

9-20 வசனங்களில் தேவமக்கள் விக்கிரவழிபாடு செய்யவே கூடாது என்று எச்சரிக்கின்றது. நாம் கல்லையோ, மண்ணையோ வணங்க மாட்டோம். ஆனால் தேவ ஊழியர்களை விக்கிரம் போல வழிபடலாம். இன்று நாம் சுவிஷேத்தில் வெளிபட்டப்பட்ட இயேசுவை அல்லாமல் மனித கற்பனையாலும் ஒரு இயேசுவை அநேக கள்ள தீர்க்கத்தரசிகள் உருவாக்கி இயேசு இவ்விதம் என்னோடு பேசினார் என்று கூறி மக்களை ஏமாற்றிவருகிறார்கள். அநேக கள்ள கிறிஸ்துக்களை அந்திக்கிறிஸ்துவின் ஆவியின் மூலம் நமக்கு வெளிப்படுத்திவருகிறார்கள். "அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்..... ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.....இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.....ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்" (மத் 24:23=26).

 

"அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது" (18). இன்று நடப்பது இதுதான்.

 

கொல்லன், தச்சன் இரண்டுபேரும் விக்கிரகங்களை தனது கற்பனைகளால் உருவாக்குகிறார்கள். இயேசு என்ற சாயலில் கள்ள போதகர்கள் அநேக கிறிஸ்துக்களை உருவாக்கி அந்த கள்ள கிறிஸ்துக்கள் வஞ்சிக்கப்பட்ட விழுந்து போன தூதர்களினால் உயிர் பெற செய்து  மக்களை வஞ்சித்துவருகிறார்கள். "விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு (இந்த கள்ள ஊழியர்கள்) வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்" (19).

 

தேவபிள்ளையே, "யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை". உன்னை உருவாக்கின தேவன் உன்னை மறப்பதில்லை.

 

"உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்". நீ பண்ணின மீறுதல்களையும், பாவங்களையும் அகற்றி உன்னை மீட்டுக்கொண்டார். ஆகவே நீ அவரிடத்தில் திரும்பு.

 

"வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்".  கர்த்தர் இதைச் செய்தார் என்ற தீர்க்கதரிசன வாக்குத்தத்தில் இந்த காரியத்தை செய்தார் என்று உங்கள் டைரியில் தியதிகளுடன் விபரமாக எழுதி வைக்கவும். அவரை போற்றி துதியுங்கள். ஆர்ப்பரியுங்கள். உங்களை தேவன் ஆசீர்வதிக்கும்போது காடுகளும், காட்டிலுள்ள சகல மரங்களும் கெம்பீரமாய் முழங்கும்.  ஆண்டவர் தன் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும்போது  இயற்கையும்  இந்த அற்புத காரியங்களை சாட்சியாக வெளிப்படுத்தும்.

 

"உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்".  நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர் என்ற தீர்க்கதரிசன வசனத்தில் எந்த காரியங்கள் என்று டைரியில் எழுதி வைக்கவும். அவர் ஒருவராய் இந்த காரியங்களைச் செய்வார். உன்னையும் இந்த உலகத்தையும் உருவாக்கின கர்த்தர் எல்லாவற்றையும் தானாகவே உருவாக்குவார். எந்த மனிதனுடைய உதவியையும் அவர் நாடமாட்டார்.

 

"நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்". உங்களுக்கு யாராவது கள்ள தீர்க்கதரிசனம் மூலம் உரைத்த குறிகளை அபத்தமாக்குவார்.  இந்த காரியம் மனித உதவி இல்லாமல் நடக்கவே நடக்காது என்று உலக ஞானத்தால் உரைத்தவர்களும் வெட்கப்பட்டு போவார்கள். தேவன் உரைத்த தீர்க்கதரிசனம் கண்டிப்பாக நிறைவேறும்.

 

"நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்". உண்மையான ஊழியர்கள் உரைத்த வேதத்தின் அடிப்படியில் உரைத்த தீர்க்கதரிசனங்கள், "குடியேறுவாய்",  "கட்டப்படுவீர்கள்" என்பவைகள்  கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும். எருசலேமிற்கும், யூதாவிற்கும் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாகிய நமக்கு பொருந்தும். நீ இதுவரை திறக்கப்படாத வாசலில் பிரவேசித்து உனக்கு ஆண்டவர் முன்குறிக்கப்பட்ட உயர் இடத்தில் குடியேறுவாய். இதுவரை கட்டப்படாத பாழடைந்த உன் வாழ்க்கை மறுபடியும் கட்டப்படும்.

 

"நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்".  நீ தவித்து, கடந்துபோக முடியாமல் இருக்கும் ஆழமான தண்ணீர் நிறைந்த நதிகளைப் போன்ற இடுக்கன்கள் நீ கால் வைக்கும்போது வற்றிப்போகும். உனக்கு விரோதமாக வந்த நதிகள் இருக்கிற இடம் தெரியாமல் அழிந்துபோகும். நீ இவைகளை கடந்து வாக்குத்தத்தத்தின் தேசத்தில் பிரவேசிப்பாய்.  

 

"கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்".  கிறிஸ்துவாகிய மேய்ப்பனின் சத்தத்தை கேட்காமல் கலங்கி நிற்கும்போது கோரேசைப் போல ஒரு உண்மையான மேய்ப்பனை காண்பாய். அவன் தீர்க்கதரிசனம் உரைத்து பாழாய்ப்போன உன் வாழ்க்கையை "கட்டப்படும்" என்றும், இதுவரை அஸ்திபாரம் போடப்படாத உனது தொழிலில் அல்லது வேலையில் நீ "அஸ்திபாரப்படு" என்றும் உரைப்பான் (20-28).