தேவ மக்களின் மீட்பு 

"அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்". இந்த கடைசி அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் கோணலான லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை தமது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தால் யுத்தம் பண்ணி அவனை தண்டிக்கிறார். அந்திக்கிறிஸ்து கிறிஸ்துவின் சபையை ஒரு புரம் கருக்குள்ள பட்டயத்தால் ஏமாற்றி வருகிறான். வேதத்தை ஒரு கோணத்தில் போதித்து மக்களை அடிமையாக்கி வருகிறான். எப்படி இயேசுவை வனாந்தரத்தில் ஏமாற்ற முயற்சி செய்தானோ அப்படியே கள்ள போதகர்களின் மூலமாக வஞ்சித்து வருகிறான். தனது இரண்டாம் வருகையில் இவனை முற்றிலும் அழித்துவிடுவார்.

 

"அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள்". இந்த கடைசி காலத்தில் நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டமாக கிறிஸ்துவின் சபையை உருவாக்குகிறார்." கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்" (எபேசியர் 5:27). நமது ஊழியங்கள், சபைகள் நல்ல கனிகள் கொடுக்கவேண்டும். நமது கிறிஸ்தவ வாழ்க்கையும் நல்ல கனிகள் கொடுக்கவேண்டும்.

 

"கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்". கர்த்தர் தாமே அவரின் தோட்டத்திற்கு பரிசுத்தாவியானவரின் வற்றாத நீரூற்றால் தண்ணீர் பாய்ச்சுகிறார். உங்களுக்கென்ற ஒரு தோட்டம், அதாவது ஒரு ஊழியம் அந்த மகா தோட்டத்தில்  கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதற்கு நீர் பாய்ச்சுவது தேவன் தான். உங்கள் கிறிஸ்துவ வாழ்க்கையில் பரிசுத்தாவியானவரின் வழிநடத்துதலும் பலனும் கிறிஸ்துவே தருகின்றார். ஒரு மனிதன் மூலம் இந்த தண்ணீர் கிடைக்காது. மனிதனை நம்பி ஏமாந்துபோகவேன்டாம்..

 

"உக்கிரம் என்னி டத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்". தேவனிடத்தில் உங்களை பற்றிய எந்தவிதமான உக்கிரமோ கிடையாது  நீங்கள்  கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாக அவரில் நிலைத்திருக்கும்போது உங்களுக்கு விரோதமாய் சாத்தானோ அந்திகிறிஸ்துவோ செய்யும் யுத்தத்தில் கொண்டுவரப்படும் முட்செடியையும் நெரிஞ்சிலையும் தேவன் ஏகமாய்க் கொளுத்திவிடுகிறார். (2-4)

 

"இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்".


அப்படியே நீங்கள் யுத்தத்தில் உங்களுக்கு விரோதமான முட்செடியையும் நெரிஞ்சிலையும் அழிக்கப்படாதிருந்தாலும் நீங்கள் தேவனின்  பெலனைப் பற்றிக்கொண்டு உங்கள் வழிகளை ஆராய்ந்து பார்த்து தேவனுக்கு வேதனை உண்டாக்கும் வழிகள் இருக்குமாயின் அவைகளை நீக்கி தேவனோடு ஒப்புரவாகவேண்டும்   (5)

 

"யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்". தேவனோடு இரவு முழுதும் போராடி தேவனால் மேற்கொள்ளாத நிலையில் தன்னை காட்டிக்கொண்ட  யாக்கோபை போன்ற பலமுள்ள தேவமனிதர்களின்  மூலமாக கிறிஸ்துவின் சரீரம் வேர்பற்றி,   பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் இப்போது வந்துள்ளது.

 

"அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ?"

 

கிறிஸ்துவின் சரீரமானது அநேக பாடுகளின் மூலமாகவும்  தேவனின் நியாய தீர்ப்பினாலும் பூரணாகும்படி தேவனுடைய விரோதிகளினால் அடிக்கப்படும்படி தேவமக்கள் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் தேவ விரோதிகளாக கருதப்பட்டு கொல்லப்படுவார்கள். 

 

"தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல்காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்". தேவனுடைய நியாயமான நியாத்தீர்ப்பு தனது சொந்த ஜனத்த்தோடு வழக்காடுகிறார். ஆனால் அவர்களை மன்னித்து பாவங்களை மூடி அவரகள் மேலே வீசும்  கடுங்காற்றை  அவர்கள் மேலிருந்து தனது காருண்யத்தால் விலக்கிவிடுகிறார்

 

ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரகம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன் (6-9).

 

"அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்" இந்த காலத்தில் அரணான நகரம் என்று தங்களை பெருமையாக கருதிக்கொள்ளும் ஊழியங்கள் அவாந்தரையாகும். தள்ளுண்டு வனாந்தரத்தைப்  போலாகிவிடும். அந்த ஊழியங்கள் அப்படியே அழிந்து போவதில்லை. அங்கே பிறந்த கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.

 

"அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்".  நாளடைவில் அந்த ஊழியங்களின் கொப்புகள் உலர்ந்து  ஒடிந்துபோம். உண்மையை அறிந்த தேவமனிதர்கள், அதாவது  பணிவிடை செய்யும் பெண்களை போன்றவர்கள் அந்த விழுந்துபோன ஊழியங்களை புறக்கணித்துவிடுவார்கள். அந்த ஊழியர்கள் பகுத்தறிந்து சத்தியத்தை அறிய  உணர்வுள்ள ஜனமல்ல.  அந்த ஊழியங்களை ஏற்படுத்திக்கொடுத்த தேவன் இரங்காமலும்,  கிருபைசெய்யாமலும் இருப்பார்.

 

"அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்".  இந்த ஊழியர்களுக்கு விரோதமாய் ஆண்டவர் எல்லா இடங்களிலும்  போரடிப்பார். ஆண்டவர் இவர்களுக்கு எத்தனையோ தருணங்களை கொடுத்தும் இவர்கள் மனம் திரும்பாமலே தங்கள் விருப்பம் போல தேவ வார்த்தைக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்கள். சத்தியத்தை அறிந்த உண்மையான இஸ்ரவேல் புத்திரர்களை, ஆண்டவர் ஒவ்வொருவராய் தன் சரீரத்தில் சேர்ப்பார்.

 

"அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது அசீரியாதேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்" இந்த கடைசி காலத்தில், உபத்திரம் அனுபவித்து, புறக்கணிக்கப்பட்ட ஒரு சிறு மிஞ்சின கூட்டத்தார், பல நாடுகளிலிருந்து ஒன்றாக இணைந்து,  அனைவரும் ஒரே கிறிஸ்துவான சரீரத்தில் சேர்க்கப்பட்டு சீயோனான  பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள் (10-13).