தேவமக்களின் மீட்பும் பரிசுத்த வழியும்

முந்திய 34ம் அதிகாரத்தில் தேவனால் இந்த உலக மக்களும், பின்வாங்கிப்போன தேவ மக்களும் தண்டிக்கப்பட்டதை அறிந்தோம். இந்த 35ம் அதிகாரத்தில் தண்டிக்கப்பட்ட தேவமக்களை ஆண்டவர் மீட்டெடுக்கிறார்.

 

"வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்". வனாந்தரமான வாழ்க்கை, இனி ஒரு நன்மையையும் வரவே வராது என்று வாழ்க்கையில் சலித்துக்கொண்ட தேவமக்களின் வாழ்க்கை செழிக்கும். இனி அற்புதமே நடக்காது என்று எண்ணி சோர்ந்து போன மக்களின் வாழ்க்கையில் ஆண்டவர் புதிய காரியத்தை செய்யப்போகிறார்.

 

"அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்". ஆனந்தக்களிப்புடன் மகிழ்வீர்கள். உங்களின் மேல் வரும் தேவனின் மகிமை லீபனோனிலிலுள்ள செழிப்பான மரங்களைப்போல வெளிப்படும். உன்மேல் வரும் அலங்காரம் எலியாவின் கர்மேல் பர்வதத்தின் மேலே தேவ மகிமை எப்படி வெளிப்பட்டதோ அப்படியே வெளிப்படும்.  சாரோன் என்ற செழிப்பான பூமி கர்மேல் பர்வத்தின் கீழே இருக்கிறது. உங்களின் மேல் வரும் தேவனின் அலங்காரம்  சாரோனை போல அழகாக விளங்கும்.

 

ஆகவே நீங்கள் "தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்".

 

அநேக ஆண்டுகளாக மிகவும் ஏமாற்றம் அடைந்து எல்லா நம்பிக்கைகளையும் இழந்து காணப்படும் உங்களைப்  பார்த்து தேவன் கூறுவது "மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்". உங்களில் வாசமாயிருக்கும் பரிசுத்தாவியானவர் உங்களின் வாழ்க்கை மூலமாக தனது வல்லமையை வெளிப்படுத்துவார். உங்களுக்கு நீதி கிடைக்க செய்வார். இதுவரை உங்களுக்கு எந்தவிதமான பதில் வராமல் இருக்கும்போது உங்கள் தேவன் உங்களுக்கு பதிலளிப்பார்.

 

அப்படி தேவன் இந்த அற்புதத்தை செய்யும்போது உங்களது குருடான கண்கள் திறக்கப்பட்டும், உங்கள் செவிடான செவிகள் திறவுண்டுபோம் (1-5).


அப்படி தேவன் உங்களின் சிறையிருப்பை மாற்றும்போது, தேவன்மேலேயுள்ள நம்பிக்கை இழந்து ஆவிக்குரிய வாழ்க்கையில் முடவன் போல நடக்க முடியாமல் இருந்த நீங்கள் மானைப்போல் குதிப்பீர்கள், உங்களது ஊமையான  நாவும் கெம்பீரிக்கும். இனி ஆண்டவருக்காக ஊமையானாக இருக்கமாட்டீர்கள்.  உங்களின் "வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்".

 

"வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்". சாத்தானின் வலுசர்ப்பமான பொல்லாத ஆவிகள்  தாபரித்துக்கிடந்த உங்கள் வாழ்க்கையில் புல்லும் கொறுக்கையும் நாணலும் வரும்படி ஆண்டவர் வழிநடத்துவார்.

 

உங்களின் மீட்கப்பட்ட வாழ்க்கையில் "பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை". உங்களின் வாழ்க்கை பரிசுத்தமாக மாறும். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் பரிசுத்தத்தைக்கண்டு பாவத்தால் தீட்டுபட்டவன் மனம்திரும்பி இரட்சிக்கப்படுவான், அந்த மனிதர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போகமாட்டார்கள்.

 

உங்கள் வாழ்க்கையில் சிங்கம் போல யாரை விழுங்கலம்லாம் என்று கர்ச்சித்து அலையும் சாத்தான் அங்கே  இருப்பதில்லை.  துஷ்டமிருகம் போன்ற பொல்லாத ஆவிகள் உங்கள் பரிசுத்தமான வாழ்க்கையில் பிரவேசிக்கமாட்டார்கள். ஏனென்றால் கிறிஸ்து சாத்தானின் வல்லமையை ஏற்கனவே அழித்துவிட்டார். "மீட்கப்பட்டவர்களே அந்த பரிசுத்தமான பாதையில் நடப்பார்கள்.

 

"கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்". தேவமக்கள் மீட்கப்பட்டு வந்து சேரும் இடம் சீயோன். நமக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இந்த சீயோன் நகரம் தான். "நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்.."  வந்துசேர்ந்தீர்கள் (எபிரேயர் 12:22-24), நாம் விசுவாசத்தினால் பாலும் தேனும் ஓடும் இந்த தேசத்தில் பிரவேசிக்கவேண்டும். இதுதான் உன்னதமானவரின் செட்டைகளின் கீழே உள்ள அடைக்கல பூமி (7-10).