பாபிலோனின் மேல் வரும் நியாயத்தீர்ப்பு


Previous


பாபிலோனின் மேல் வரும் நியாயத்தீர்ப்பு

ஏசாயா13 அதிகாரத்தில் பாபிலோனின் மேல் வரும் நியாயத்தீர்ப்பை கண்டிப்பாக அறியவேண்டும்.

ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம்.

பாபிலோன் என்றால் யாரை குறிக்கும்? இந்த சத்தியத்தை அறிந்தால் நாம் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ளமுடியும்.உலகத்தில் மூன்று ராஜ்யங்கள் இருக்கின்றது. ஒன்று இயேசுவின் தலைமையின் கீழேயுள்ள சீயோனின் அரசு. இது மாசு களங்கம் இல்லாத மகிமையான கிறிஸ்துவின் கிறிஸ்துவின் சரீரத்தை உள்ளடக்கியது. மற்றொன்று உலகமும் மதங்களும் சேர்ந்து செயல்படும் பாபிலோன் அரசு. இந்த பாபிலோன் அரசில் கிறிஸ்தவ மதமும் வழக்கங்களும் உள்ளடங்கி தோற்றத்தில் சீயோன் போல காட்சியளிக்கும். மூன்றாவது அரசு சாத்தானின் கீழே செயல்படும் அந்தகாரத்தின் சக்திகளை உள்ளடக்கியது. நாம் ஏமாந்து போவது பாபிலோனின் ஆளுகையின் மூலம்தான். பாபிலோன் அரசு மூன்றாவது அரசான சாத்தானின் அரசால் வஞ்சிக்கப்பட்டு அந்திகிறிஸ்துவின் ஆளுகைக்கு கீழாக படிப்படியாக கொண்டு வரப்படுகின்றது.

பாபிலோன் என்பது ஒரு சபையை குறித்தோ அல்லது ஒரு denomination ஐ குறித்தோ இல்லை. கள்ள போதனையின் மூலம் அடையும் ஒரு ஆவிக்குரிய நிலைமை.கிறிஸ்துவிற்கு சீடனாக மாறாமல், வேதத்தை ஆராய்ந்து படித்து சத்தியத்தை அறியாமல் ஒரு போதகர் கூறும் வேத வியாக்கினங்களை அப்படியே நம்பி ஒரு ஆவிக்குரிய நிலைமைக்கு தள்ளப்படுவது!

இந்த பாபிலோன் ஒரு வசீகரிக்கின்ற ஒரு வேசி பெண்ணாக வெளிப்படுத்தலில் காணலாம். 17 ம் அதிகாரத்தை தியானிப்போம். திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களாம். இது ஒரு இரகசியம்”. மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறாள். முதலாவது நூற்றாண்டில் இந்த பாபிலோன் ரோமன் சபையின் மூலம் உண்மையான கிறிஸ்தவர்களை கொன்று குவித்தது. இப்போதோ சத்தியத்தை அறிவிக்கும் உண்மையான கிறிஸ்துவின் சீடர்களை பாபிலோனிலுள்ள கிறிஸ்தவ மதம் வெறுத்து வருகிறது. வெளிப்படுத்தலின் 18 ம் அதிகாரத்தில் இது ஒரு விழுந்து போனராஜ்யம். கடைசியாக அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாகுமாம்”. நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்”.

இந்த அதிகாரத்தில் ஆவியானவர் தனது கிறிஸ்துவாகிய சபையை எப்படி வளரவேண்டும் என்று ஆலோசனை கூறி கர்த்தரின் நாள் எப்படி பாபிலோனின் உலகத்தை நியாயம் தீர்க்கின்றது என காண்பிக்கிறது. இந்த அழிவானது பாபிலோன் ராஜ்யத்திற்கு மாத்திரம் இல்லாமல் உலகை ஆளும் சாத்தானின் ராஜ்யத்திற்கும் வரும். தண்டிக்கப்படும்போது ஆண்டவரின் பார்வையில் இந்த

இரண்டு ராஜ்ஜியங்களும் ஒன்றாகவே இருக்கின்றது.

ஆண்டவரின் இந்த யுத்தத்தில் சீயோனில் குடியிருக்கும் ஜனங்கள் ஆண்டவரோடு இணைந்து இருக்கவேண்டும். ஏசாயாவின் 13 அதிகாரதை வாசிக்கவும். இது ஒரு ஆவிக்குரிய யுத்தம். கர்த்தரின் நாள் என்பது ஒரு நாளை குறிக்கவில்லை. அல்லது ஒரே நாளில் நடக்கும் இரண்டாம் வருகையை குறிப்பிடவில்லை. கர்த்தர் வருகிறார் என்று காண்கிறோம். அவர் சரீர பிரகாரமாக வரும் இரண்டாம் வருகை இல்லை.


தேவனது யுத்த வீரர்கள் உயர்ந்த பர்வதத்தின்மேல் தங்களின் சிலுவை கொடிகளை ஏற்றவேண்டும். இது ஒரு ஆவிக்குரிய கொடி. இந்த கொடியை வைத்துதான் இந்த யுத்தத்தை பண்ணி பாபிலோனிய அரசை வீழ்த்த முடியும். எல்லா தேவ மக்களை கூப்பிட்டு அழைத்து ஒரே மகிமையான கிறிஸ்துவின் சபையில் இணைக்கும் சமயம் இது.

ஆவிக்குரிய உயர்ந்த பர்வதங்களை நாம் அடையவேண்டும். ஆண்டவரின் வார்த்தையை நேசித்து அதற்குத்தான் முதல் இடம் கொடுக்கவேண்டும். எந்த மனிதர்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. ஆண்டவரின் சத்திய வசனத்திற்காக யுத்தம் செய்யவேண்டும். வெறும் ஆலய ஆராதனை போதாது. சகல பரிசுத்தவான்களுடன் ஐக்கியம் வைத்துக்கொள்ளவேண்டும்.

“பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்”

கடைசி நாட்களின் அழிவுகள் இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பூமியானது எந்த நோக்கத்திற்காக தேவன் படைத்தாரோ அந்த இடத்தை விட்டு நாளுக்கு நாள் அகன்று போய் கொண்டு இருக்கிறது. சீதோஷண நிலை மாற்றத்தினால் அழிவு வந்து கொண்டுயிருக்கிறது. வானத்தின் நீர் மதகுகள் திறக்கப்பட்டு காற்றின் மண்டலம் மூலமாக புயல் உண்டாகி தேசங்களை அழித்துக்கொண்டிருக்கிறது. பூமியின் கீழேயுள்ள அஸ்திவாரம் அசைந்து பூகம்பம் ஏற்படுகிறது. உலக மக்கள் பலவிதமாக வன்முறை, சண்டைகள், யுத்தங்கள், நோய்கள் மூலம் அழிக்கப்படுகிறார்கள். ஆனால் தேவன் சீயோனில் வாசம் பண்ணும் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களை ஆச்சரிய விதமாக தப்புவித்து காத்து வருகிறார்”. வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்”.

எங்கும் இருள் சூழ்ந்து இருக்க, எந்த இடத்தில் பெரிய அழிவுகள் நடக்கிறதோ வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகள் கொடுக்கும் ஒளி மக்களை அடையாமல் போகிறது.

“கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும். ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம். அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும்; பிள்ளைபெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும”.

கர்த்தரின் நாளில் நடப்பது மேலே குறிப்பிட்டிருக்கிறது. நாம் பாபிலோனில் குடியிருப்போமானால் நமக்கு இது போல வேதனைகளும் வாதைகளும் வரும். இது போல அடையாளங்கள் நமக்கு நேரிட்டால் உடனே நாம் நமது வழிகளை ஆராய்ந்து கர்த்தரிடம் திரும்பவேண்டும். “இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது”. நாம் பாவிகளாக வாழ்ந்து கொண்டு எந்த சபையில் இருந்தாலும், எந்த ஊழியர் நமக்கு ஜெபித்தாலும், நாம் தப்பிக்கொள்ள முடியாது.

13 முதல் 16 வசனங்கலில் குறிப்பிட்ட பயங்கரமான காரியங்களையும் படிக்கவும். “நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல்பிரியப்படாமலும், வில்லுகளால் இளைஞரைச்சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை”. மேதியர் என்பது தேவனை அறியாத கூட்டத்தார். இன்று நமக்கு வரும் உபத்திரவங்கள் மேதியர் மூலம் வருகிறது. இது போலவே கொடூரமான காரியங்களை செய்வார்கள் என்ற அர்த்தம் இல்லை. ஆனால் மனித இரக்கம் இல்லாமல் எந்த காரியத்தையும் தேவ பிள்ளைகளுக்குச் செய்ய துணிந்தவர்கள். ஆகவே நாம் பாபிலோனின் பிடியிலிருந்து தப்பவேண்டும். நமக்கு பாதுகாப்பு தேவ வசனங்கள் தான். எந்த போதகரோ

ஊழியரோ நமக்கு புகலிடம் தர முடியாது. நாம் சீயோனில் குடியிருந்து அப்போஸ்தலர்கள் தீர்க்கத்தரசிகளின் உபதேச அடிவாரத்தின் மேலே கட்டப்பட்டு உண்மையான பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் நிலைநின்று கிறிஸ்துவாகிய தலையில் வளரவேண்டும்.

எபேசியர் 4 அதிகாரம் 11 - 15 படித்து தியானிக்கவும். மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், இது தான் நமது அழைப்பு.

பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.

நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.

நாம் தலையாகிய கிறிஸ்துவுக்குள் வளரும்படி மேலே குறிப்பிட்ட ஊழியர்களை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். உங்களின் சபை போதகர் மாத்திரம் அல்ல. நாம் இன்று மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிருக்கிறோம்.


19 முதல் 22ம் வசனங்களின் படி ஒரு பாழான ஆவிக்குரிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவோம். ஆகவே மனம்திரும்பி கர்த்தரின் வேதத்தின் வெளிச்சத்திற்கு திரும்புவோமாக.

Next…Isaiah 14…பாபிலோனிய அரசனின் மேலும் சாத்தானின் அரசின் மேலும் தேவனின் நியாயத்தீர்ப்பும் தண்டனையும்