எழுப்புதலின் விளைவுகள்


Previous....Isaiah5

இன்று ஏசாயா 5 அதிகாரம் வசனங்கள் 11 20 வரை தியானிப்போம்.

சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!

நாம் ஆவிக்குரிய ஜீவிதத்தில் மதுபானம் குடித்து போதை வெறியில் மதிமயங்கி காணப்படும் மக்களைப்போல காணப்படுகிறோமா? மேலறையில் சீடர்கள் பரிசுத்தாவியானவரால் நிரப்பப்படும்போது "மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்" (அப் 2:13). அன்று முதன்முதலாக தேவன் பரிசுத்தாவியானவரை வெளிப்படுத்தி கிறிஸ்துவாகிய சபைக்கு அவரை அருளப்பட்டபோது இதுபோல ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது. இன்றும் நாம் இதுபோல ஒரு அடையாளத்தை மிகைப்படுத்தி இதுதான் ஆவிக்குள்ளாகும் அனுபவம் என்று கூறி ஆராதனையில் தேவமக்களை மெய் மறக்க செய்கிறோமா? இதுதான் ஆவிக்குரிய அனுபவம் என்று போதித்து மக்களை அவர்கள் பாவ ஜீவியத்திலிருந்து விடுதலை பெற வழிநடத்தாமல் இருக்கிறோமோ? அவர்களை சீடர்களாக்கி ஊழியங்களில் நிலைநிறுத்துகிறோமா? ஆராதனையில் உணர்ச்சிவசப்படுத்தி மக்களை சந்தோஷமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கிறோமா?

"அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை". பரிசுத்தாவியானவர் எப்படி கிரியை செய்கிறார் என்றும் அவரின் கரத்தின் செய்கையைச் சிந்திக்க வைக்காமல், சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும் உபயோகித்து ஒரு உணர்ச்சி வசப்படுத்தலின் அனுபவத்திற்கு தேவமக்களை வழிநடத்துகிறோமா?

"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கடினமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள், அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்".

அவர்களில் கடினமுள்ள தேவமக்கள் (men of rank) இவ்விதம் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்களே! ஆவிக்குரிய ஆகாரத்தின் பஞ்சம் ஏற்பட்டு பட்டினியினால் தொய்ந்துபோகிறார்களே! நல்ல படித்த மக்கள் கூட இவ்விதம் வேத அறிவில்லாமையினால் ஆவிக்குரிய பஞ்சத்தில் வாடிப்போகிறார்கள். திரளான கூட்டத்தார் கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் அரவணைப்பு இல்லாமல் ஆவிக்குரிய தாகத்தால் நாவறண்டு போகிறார்கள். இயேசுவோடு தனிப்பட்ட உறவும் ஐக்கியமும் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அநேகர் பாவ விடுதலை கிடைக்காமல் பழைய ஜீவிதத்திலே வாழ்ந்து வருகின்றார்கள்.

"அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்".

கடைசியாக இந்த மக்கள் பாதாளத்திற்கு நேராக போகும்படி வழி நடத்தப்படுகிறார்கள். சிலுவையின் அருகாமையில் வந்தும் சிலுவையின் மூலம் இரட்சிக்கப்படாமல் பரலோகத்தை இழந்துவிடுகிறார்கள். அவர்களின் போதகர்கள் கிறிஸ்து மூலமாக கிடைக்கும் உலக ஆசீர்வாதங்களை தள்ளிவிட்டு ஒரு ஆடம்பர வாழ்க்கை நடத்தும்படி வழிநடத்துகிறார்கள். இந்த போதகர்களும் இவ்விதமான ஆடம்பர வாழ்க்கையை நடத்திவருகிறார்கள்.

சிறியவன் (mean men) தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான்; மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோம்.

அற்பமான மனிதன் தாழ்த்தப்படுவான். வல்லமையான மனிதனும் தாழ்ச்சியடைவான். மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோம். தேவனின் மகிமை விளங்கும்போது இவ்விதமான காரியங்கள் நடக்கும். "சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார்".

"அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அநுபவிப்பார்கள்".

அப்போது உண்டாகும் எழுப்புதலில் கிறிஸ்துவின் மந்தையின் ஆட்டுக்குட்டிகள் ஆவிக்குரிய ஆகாரத்தை ஒரு குறைவும் இல்லாமல் உண்பார்கள். இந்த உலகத்தில் பரதேசிகளாக வாழும் தேவமக்கள், உலகத்தில் அதிகாரமுள்ள செல்வந்தர்கள் உபயோகித்து பாழாய்ப்போன சொத்துக்களை தேவனனின் ஊழியங்களுக்குப் பிரயோஜனம் படுத்துவார்கள்.

"மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டில் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டுவந்து, நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!"

பாவத்தில் ஜீவித்துக்கொண்டும், தேவனின் சித்தத்தின்படி ஊழியம் செய்யாத மனிதர்கள் தேவன் தமது கிரியையைச் சீக்கிரமாய் தங்களின் கைகளின் மூலம் நடப்பிப்பார் என்றும், கிறிஸ்துவின் வெளிப்படுத்தல்கள் தங்களுக்கு சமீபித்து கிடைத்துவிட்டது என்று சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!

"தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!"

இன்று கள்ள போதகர்கள் உலகத்தின் செல்வத்தை நன்மையென்றும், சாதாரண ஆடம்பரம் இல்லாத வாழ்க்கையையும், உலக பாடுகளையும் தீமையென்றும் சொல்லி பிரசங்கித்து வருகிறார்கள். பாவத்தை பலவீனம் என்று போதித்து கசப்பைத் தித்திப்பு என்று சாதிக்கிறார்கள். பரிசுத்தத்தை கசப்புமென்று சாதிக்கிறார்கள். பரிசுத்தம் இல்லாத ஆராதனையை வெளிச்சமாக பாவிக்கிறார்கள். மாயமால ஜெபத்தை வெளிச்சமாக பாவிக்கிறார்கள்.

Next....Isaiah5 பரிதானமும் நியாயத்தைப் புரட்டுவதும்