தமஸ்குவின் பாரம்

Previous Isaiah மோவாபின் பாரம்


ஏசாயா 17 ம் அதிகாரத்தை தியானிக்கவும்.

தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும். இது குறிப்பிட்ட ஆவிக்குரிய நிலையிலுள்ள ஒரு கூட்டத்தாரைக் குறிக்கும். இவர்களுக்கும் ஆவிக்குரிய உன்னத மலையில் வாழும் சீயோனின் குமாரத்திகளுக்கும் வித்தியாசம் உண்டு. இவர்களின் ஆவிக்குரிய ஜீவிதம் தள்ளப்பட்ட நகரத்திற்கு சமமாகவும் பாழான மண் மேட்டிற்கு சமமாகவும் இருக்கிறது.

ஆண்டவரின் நியாயத்தீர்ப்பு பின் வாங்கிப்போன இஸ்ரவேல் மக்களின் மேல் வருவது போல இந்த மக்களின் மேலும் வரும் . ஆளுமை செய்யும் அதிகாரம் இவர்களுக்கு கிடைக்காது.

இவர்களின் ஆசீர்வாதம் இவ்விதமாக இருக்கும் "ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டுமூன்று காய்களும், காய்க்கிற அதின் கிளைகளிலே நாலைந்து காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்"

ஆனால் இந்த மக்கள் "மனுஷன் தன் கைகளின் கிரியையாகிய பீடங்களை நோக்காமலும், தன் விரல்கள் உண்டுபண்ணின தோப்புவிக்கிரகங்களையும், சிலைகளையும் நோக்காமலும்,

தன்னை உண்டாக்கினவரையே" நோக்குவார்கள். இவர்களின் "கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக்கொண்டிருக்கும்".

இவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை பாழாய் போயிருந்தாலும் இவர்களின் பெலமாகிய கன்மலையை நினையாமல் தங்களின் இரட்சிப்பாகிய தேவனை மறந்து, "நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும்" பகற்காலத்திலே இவர்களின் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே இவர்களின் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே இவர்களின் அறுப்பாயிருக்கும்.

இவர்களின் நியாயத்தீர்ப்பு இவ்விதமாக இருக்கும்

"ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது". இவர்கள் தேவனை மறந்து தங்கள் சொந்த வழிகளில் போகும்போது இவர்களின் கதறுதல்களை கேட்க மாட்டார். இவர்கள் "ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்".

இவர்கள் தங்களின் பொன்னான காலத்தை வீணடிக்கக் கூடாது. ஏனென்றால் "இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்", ஆண்டவர் இந்த கூட்டத்தாரை தேவ மக்களின் விரோதியாகவே காண்கிறார். "இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்". இவர்கள் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு விரோதமாக செயல்படுபவர்கள். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை சூறையாடுகிறவர்கள்.

ஆண்டவரின் சித்தம் செய்யாமல் நாம் கூடி ஜெபித்தாலும் ஆண்டவர் நம்மேல் பிரியமாக இருக்கப்போவதில்லை. தலையாகிய கிறிஸ்து தன் சரீரத்தோடு இணைந்திருக்கிறார்.