பெருமை உள்ளவர்களின் மேல்வரும் தேவ கோபாக்கினை 

ஏசாயா 28ம் அதிகாரம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெருமை பிடித்து மயக்கமடைந்தவர்களின் மேல் வரும் ஆண்டவரின் கோபத்தை வெளிப்படுத்துகிறது. தீர்க்கதரிசனத்தில் இவர்கள் எப்பிராயீம் தேசத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

 

இந்த காலத்தில் அந்திக்கிறிஸ்துவின் கைகளிலிருந்து தப்பி மீதியான தேவபிள்ளைகளுக்கு ஆண்டவர் "மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,  நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்".

 

இடற வைக்கும் ஆசாரியனும் தீர்க்கதரிசியும்

 

ஆனாலும் இந்த மீதியான  தேவபிள்ளைகளும் "திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்".  ஆவிக்குரிய பெருமை, ஆவிக்குரிய அனுபவங்களால் வரும் மதிமயக்கம் எந்த தேவமனிதனையும் வீழ்த்துகிறது. "தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்". இன்று கள்ள தீர்க்கதரிசனத்தால், அதாவது எழுதப்பட்ட தேவ வார்த்தைகளுக்கு ஒத்துப்போகாமல் ஆவிக்குரிய அனுபவங்கள் மூலம் மக்கள் வழிதப்பிப்போகிறார்கள். " ஆசாரியனும் தீர்க்கதரிசியும் நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்" இன்று கிறிஸ்தவ சபைகளில் கிறிஸ்தவ நிறுவனங்களில் சரியாக நியாயந்தீர்க்கிறதில் இடறி போகிறார்கள். பணம், புகழ் வாய்ந்த மக்களுக்கு சாதகமாக நியாய தீர்ப்பு வழங்கப்படுகிறது.

 

"போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை". வேதவசனமாகிய பண்டகசாலையிலிருந்து வேதத்தை ஆவியானவரின் வழிநடத்துதல் இல்லாமல் ஒரு வேத  உபதேசியார் பிரசங்கிதத்தையே மற்ற பிரசங்கிகள், அதை தேவவசனத்தோடு ஒப்பிட்டு பார்க்காமல் பிரசங்கித்து வருகிறார்கள். சுத்தமான விளக்குதல் இல்லாததால் தேவ வசனம் கலப்படம் செய்யப்பட்டு பொய்யாக்கப்படுகிறது.

 

"அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே". ஆண்டவர் பெருமை பிடித்தவர்களுக்கு அறிவைப் போதிக்கமாட்டார்  ஆனால் சிறு பிள்ளைகள் போல தங்களை தாழ்த்தி ஆண்டவரின் உதவியோடு வேதத்தை தியானிக்கும்போது, "கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்". வேதத்தை கற்றுக்கொள்ளவது ஒவ்வொரு கற்பனையும் பிரமாணத்தையும் எங்கே, யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது என்றும் இப்போது இந்த புதிய ஏற்பாட்டின் காலத்தில் எப்படி பொருந்தும் என்று அறியவேண்டும். இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் புரட்டி புரட்டி வாசிக்கவேண்டும். எப்போது நம்மிடம் concordance பதிவு இருக்கிறது. கூகிள் மூலமாகவும் படிக்கலாம்.

 

"பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்". வேதத்தை அவர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்தில், உதாரணங்கள், பழமொழிகள் மூலமாகவும் புரிய வைப்பார்.  அவர்களின் சொந்த மொழிகளில் (எபிரேய, கிரேக்க மொழிகளை தவிர்த்து) அவர்களுடன் பேசுவார். இதுதான் நமக்கு கிடைத்த பெரிய பாக்கியம்.

 

"இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்".  ஆண்டவருடைய வசனத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது. இதுவே ஆறுதல் என்று நாம் நம்பவேண்டும்.

 

"ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்". தேவ வசனம்,  கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் நமக்கு பாதையில் வெளிச்சமாக இருக்கும்போது அந்த வெளிச்சத்தில் நாம் இடறல் அடையமாட்டோம். இல்லாவிட்டால், பாவத்தால், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு சாத்தானின் கையில் பிடிபட்டுவிடுவோம்.

 

கள்ள ஆளுநர்களை குறித்த எச்சரிக்கை

 

"ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்".

 

தேவமக்களை நல்ல புல்லுள்ள இடங்களில் நடத்தாமல் வெறுமனே ஆளுகிறவர்களை நிந்தனைக்காரர்கள் என்று தேவவசனம் கூறுகிறது.

 

இந்த எருசலேமின் கள்ள ஆளுநர்கள்  கூறுவது, "நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே".

 

"ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்; விசுவாசிக்கிறவன் பதறான்". சீயோனில் வாசம் செய்யும் தேவமக்களுக்கு இரட்சிப்பும் பாதுகாப்பும் "பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான" மூலைக்கல்லான இயேசு கிறிஸ்து தான். கூலிக்காக மாரடிக்கும் கள்ள மேய்ப்பர்கள் தேவமக்களுக்கு எந்தவிதமான இரட்சிப்பை கொண்டுவரமுடியாது. இந்த மூலை கல்லை விசுவாசிக்கிறவன் யாராக இருந்தாலும் பயப்படவோ கலங்கவோ மாட்டான்.

 

அந்த கள்ள கள்ள ஆளுநர்களுக்கு தேவன் கூறுவதாவது:

 

"நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.

 

 நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள். அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும். கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது". கர்த்தரின் நியாத்தீர்ப்பு அந்த கள்ள மேய்ப்பர்களின் மேல் விழும்பும்போது அது விழாதபடி தங்களை போர்வையால் மூடிக்கொள்ளமுடியாது.

 

ஏசாயா தீர்க்கனின் அறிவுரை

 

இந்த சூழ்நிலையில் ஏசாயா தீர்க்கன் கூறுவதாவது:

 

"கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார். இந்த வசனத்தில் நாம் அறிந்துக்கொள்வது ஆண்டவர் தனது கோபத்தினால் தாவீதின் மூலம் பெலிஸ்தியரை முறியடித்தார். பெராத்சீம் மலையிலே தாவீது பெலிஸ்தியரின் மேல் யுத்தம் செய்து வெற்றி பெற்றான்.

 

 கர்த்தரின் கிரியை பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்து இந்த காலம் வரை மாறாமல் தொடர்ந்து செயல்படுகின்றது. அவரின் குணாதிசயங்கள் புதிய ஏற்பாட்டின் காலத்தில் மாறிப்போகவில்லை. இன்றும், நாம் இஸ்ரவேல் மக்களைப்போல பின்மாற்றம் அடைகிறோமோ, அவர் கோபம்கொள்வார். ஆனால் இயேசுவின் கிருபை மூலமாக அவரிடம் மனம்திரும்பி ஒப்புரவு ஆகும்போது அவர் நம்மை தண்டிப்பது கிடையாது.

 

அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் ஆண்டவர் கோபத்தினால் தம்பதியான அனனியா, சப்பீராள் இருவரையும் மரணத்தின் மூலம் தண்டித்தார்.

 

"இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன். . செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள் ". இன்றும் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பரியாசம் பண்ணும் கூட்டத்தாரின் மேலுள்ள நியாயத்தீர்ப்பின் கட்டுகள் பலத்துக்கொண்டுதானிருக்கிறது. நமது சபைகள், ஊழியங்கள் மேல் ஆண்டவர் நிர்ணயிக்கப்பட்ட  சங்காரத்தின் செய்தியை கேட்டுக்கொண்டுதானிருக்கிறோம். உங்களின் இப்போது வருவது அவரின் சத்தம். கவனித்து கேளுங்கள்.  ஜாக்கிரதை!

 

ஏசாயா  28 இன் முடிவு ஒரு கவிதை

 

“ உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?

 

அவன் அதை மேலாக நிரவினபின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?

 

அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்”.

 

ஏசாயா  28 இன் முடிவு தேவனின்  வேலை மற்றும் ஒரு விவசாயியின் வேலை தொடர்பான ஒரு கவிதை. ஒரு விவசாயி உழுவது மட்டுமல்ல; உழுவதை எப்போது நிறுத்த வேண்டும், எப்போது நிலத்தை சமன் செய்ய வேண்டும், எப்போது நட வேண்டும், எதை எங்கு நட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். ஒரு விவசாயி வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறார் மற்றும் பயிர்களை உற்பத்தி செய்ய அவற்றை ஒன்றாகச் செய்கிறார். அதேபோல், நம் வாழ்வில் என்ன கருவிகளை பயன்படுத்த வேண்டும், எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை தேவன்  அறிந்திருக்கிறார். தேவன் நம் வாழ்வில் என்ன செய்கிறார் என்பதில் நாம் சந்தேகப்படவோ விரக்தியடையவோ தேவையில்லை, ஏனென்றால் அவர் ஒரு நிபுணரான விவசாயி, அவருடைய எல்லா ஞானத்தையும் கொண்டு நமக்கு வேலை செய்கிறார்.

 

இது நம் வாழ்வில் தேவனின் கிரியையின் சரியான நேரத்தையும் ஞானத்தையும்   நமக்கு நினைவூட்டுகிறது.