தேவனுக்கு மனித ஆலோசனையும், போதகமும் 


எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி

Isaiah 40 First part எழுப்புதல் எப்போது  


ஏசாயா 40 10-14 வரை தியானிக்கவும் .......

நீங்கள் ஒரு சுவிசேஷகியே, ஒரு பணிவிடை செய்யும் பெண்ணைப்போல தாழ்மையாக இருக்கவேண்டும். ஒவ்வொரு தேவபிள்ளையும் ஒரு சுவிசேஷகியே. விசுவாசி என்ற பட்டமே கிடையாது. உயர்ந்த மேடையில் நின்று பிரசங்கம் செய்யும் மனிதர்களால் கட்டப்பட்ட மேடை அல்ல. "நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு" .  இயேசு இருக்கும் இடமே உயர்ந்த பர்வதம். "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். (எபேசியர் 2: 16). நாம் உயர்ந்த பர்வதங்களில் கிறிஸ்துவுடன் உட்கார்ந்திருக்கிறோம். சாத்தான் நம்மை இந்த இடத்திலிருந்து எடுத்து கீழே தள்ளமுடியாது.

பழைய ஏற்பாட்டின் காலத்தில் நாம் தான் உன்னதமான பர்வதங்களில் ஏற வேண்டும். ஆனால் இப்போது நம்மை கிறிஸ்து  அவரோடேகூட உட்கார வைத்திருக்கிறார். 

 "உரத்தசத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவனென்று கூறு".

ஒரு நீண்ட ஜெபமோ, பிரசங்கமோ அல்ல. "இதோ, உங்கள் தேவன்" என்ற தீர்க்கதரிசன வாக்கு! கொரோனா தொற்று நோயால் பயந்து பயந்து, ஒளிந்து கொண்டிருக்கும் தேவ மக்களுக்கு உரத்தசத்தமிட்டு உரைக்கும் மூன்று வார்த்தைகள்! "இதோ, உங்கள் தேவன்"!

சாத்தானை கட்டியோ, இயேசுவின் விலைமதிப்பிடாத இரத்தத்தைத் "தெளிக்கவோ" வேண்டாம்.

"இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது".

ஆண்டவரை பராக்கிரமசாலியாக தீர்க்கதரிசனக் கண்களின் மூலம் காணவேண்டும். இந்த கொள்ளைநோயால் நம்மை சாத்தான் ஆளவில்லை.

இந்த கொடிய காலத்தில் தேவமக்கள் தங்களை வழிநடத்த எந்த ஊழியனின் பின்னாக போகவேண்டிய அவசியமில்லை. அவர் "மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்"

ஆண்டவரே உங்கள் மேய்ப்பர். நீங்கள் அவரின் மந்தை. அவர் சொல்லும் வார்த்தைகள் தான் உங்களை வழிநடத்தவேண்டும். புதிய ஏற்பாட்டில் நமக்கு "நல்ல" மேய்ப்பராக கிறிஸ்துவே வெளிப்பட்டிருக்கிறார்.

"தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?"

கர்த்தரின் பராக்கிரம வல்லமையை அறிந்துகொள்ளவேண்டும்.

"கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?

தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும் தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின்வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?"

நாம் அவருக்கு இவ்வாறு செயல்பட வேண்டுமென்று ஜெபங்களில் ஆலோசனைக் கொடுத்து அவருக்குப் போதித்தவன் யார்? அவரை நியாயவழியிலே நடக்க உபதேசம் கூறுபவன் யார்? நாம் அவருக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்க முடியுமா?

இன்று நடக்கும் ஜெபங்கள் அவரது வார்த்தையை கனம் பண்ணுகிறதா?

மேல்கொண்டு தியானிக்கும் வசனங்கள் சத்தியமும் கிருபையும் வெளிப்படாத பழைய ஏற்பாட்டின் காலத்தில் தீர்க்கத்தரசிகள் மூலம் கொடுக்கப்பட்ட தேவ வார்த்தைகள்! ஆகவே, பரிசுத்தாவியானவரை நமக்கு பிதா தந்தருளி ஒவ்வொரு தேவபிள்ளையையும் தனித்தனியாக நடத்திவரும் காலத்தில் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவரின் வேதத்தை எவ்வாறு தியானித்து கள்ள போதனையிலிருந்து தப்பிக் கொள்ளவேண்டும் என்று அறியவேண்டாமா?

#மனித_ஆலோசனை #கள்ள_தீர்க்கதரிசனம் #கள்ளப்போதனை


Next