அசீரியனின் தண்டாயுதத்தால் தேவ கோபம்


Previous.....Isaiah9


ஏசாயா 10ம் அதிகாரத்தை தியானிப்போம்.

ஏழைகள், தேவ சிறுமையானவர்கள், திக்கற்ற பிள்ளைகள் - இவர்களை நாம் ஆதரிக்கிறோமா? இவர்களுக்காக குரல் கொடுக்கிறோமா? இவர்களுக்கு விரோதமாக கட்டளைகளை எழுதுகிறோமா?

நாம் இவர்களுக்கு உதவாத பட்சத்தில், ஆண்டவரின் கோபாக்கினை நம்மேல் வரும். உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவோம்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்? உங்களுடைய மகிமை உங்களுக்கு உதவாது.

அசீரியனைப்போல நமது சத்துருக்கள் கைகளில் ஒப்படைக்கப்படுகிறோம். அவர்கள் தான் தேவனின் சினத்தின் தண்டாயுதம். நமது விக்கிரகங்களாகிய பணம், புகழ் போன்றவைகளை  உடைத்தெறியும் தண்டாயுதம்.

ஆனால் தேவன் நமக்கு விரோதமாக எழும்பிய அசீரியனை தண்டியாமல் விடார்.

அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார். இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜுவாலையுமாகி, ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து, அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.

“அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்”.

ஆண்டவரின் தண்டனைகளிலிருந்து தப்பியிருக்கும் ஒரு சிறு கூட்டத்தாரே கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.

"மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்".

“தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டுவரும்”.

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்துக்குள்ளெங்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார். 

"ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.

ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்."

"அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோம்".

இந்த கடைசி நாட்களில் மீட்கப்பட்ட சிறிய கூட்டத்தார் ஆண்டவரை நோக்கி  உரத்த சத்தமாய்க் கூப்பிடவேண்டும்.

"சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.

அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினால் வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்".

ஆண்டவர் தன் தோட்டத்தை சுத்திகரிக்கும் நாட்கள் இது. மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும். காட்டின் அடர்த்தியைக் கோடரியினால் வெட்டிப்போடுவார். லீபனோனை போன்ற மேட்டிமையான ஊழியங்கள் விழுந்துபோகும்.

இன்று நமது கண்களுக்கு முன்பாக அநேக பிரசித்தி பெற்ற ஊழியர்களின் அந்தரங்கங்கள்  வெளிப்பட்டு, அவர்களை அசிரியனின் தண்டாயுதத்தால் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் மக்களிடம் பணம் வாங்கி சேர்த்த சொத்துக்கள் அம்பலமாகிக்கொண்டிருக்கிறது. அவர்களின் ஆடம்பர வாழ்க்கையும், வேத வார்த்தையை ஒரு கோணலாக பிரசங்கித்து சத்தியத்தை மறைத்து, பண்ணும் போதனைகளும் வெளிச்சத்தில் கொண்டுவரப்படுகின்றது. மேடைகளில் புகழ் சம்பாதித்து தங்களை இஸ்ரவேலின் விக்கிரகங்களாக காட்டி வருகின்றார்கள்.

அசீரியன் என்றால்தேவ மக்களுக்கு விரோதமாக செயல்படும் ஒரு அரசியல் வல்லமையுள்ள ஒரு கூட்டத்தார்.  இவர்கள் மிக கொடூர குணம் உள்ளவர்கள் . எதிரிகளை சித்திரவதை செய்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இவர்களின் தலைவன் ஒரு எதேச்சதிகாரி.  மனசாட்சி இல்லாதவன். 

சீயோனில் வாசமாயிருக்கிற ஜனமே, இந்த அசீரியனுக்குப் பயப்படாதே; ....இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே ஆண்டவரின் கோபம்  நம்மேலிருந்து நீங்கி அசீரியனை சங்கரிக்கப்போகிறார். நம் நாட்டில் தேவ மக்களை துன்புறுத்தி வரும் அசீரிய ஆட்சியை ஆண்டவர் ஒழித்துவிடுவார்.  


.


Next....Isaiah13 பாபிலோனின் மேல் வரும் நியாயத்தீர்ப்பு