ஏசாயா தீர்க்கனின் எச்சரிப்பின் தீர்க்கதரிசன  தொனி - 2

Previous


கர்த்தரின் மகிமையான தாபரஸ்தலம்

ஏசாயா 11ம் அதிகாரத்தை தியானிப்போம்.

ஆண்டவர் தனக்கென்று ஒரு சிறிய கூட்டத்தாரை இரட்சித்து நடக்கையில்,  ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். தாவீதின் வம்சத்தின் வழி வந்த கிளையாகிய இயேசு கிறிஸ்துவை இங்கே குறிப்பிடப்படுகிறது. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.  பரிசுத்தாவியானவர் இவர் மேல்தான் தங்கியிருக்கிறார்.  எப்போது இயேசுவை இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கிறோமோ, கர்த்தரின் பரிசுத்தாவியானவரையும் ஏற்றுக்கொள்கிறோம்.  இதுதான் சத்தியம். இயேசுவின் குணாதிசயங்களை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்.

"கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்".

நாம் தேவனுக்கு பயந்து பாவத்தை விட்டு விலகுகிறோமா? நமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்கிறோமா. கிறிஸ்துவின் சரீரம் நாம்தான். ஏழைகள் சிறுமையானவர்கள் போன்றவர்களுக்காக நாம் வழக்காடி நீதி வாங்கிக்கொடுக்கிறோமா? அவரது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை ஏந்தி அவரின் வாக்கின் கோலால் அடித்து சத்தியத்தை உரைக்கிறோமா? எங்கே அவரின் நாமம் தூஷிக்கப்படுகிறதோ அங்கே நாம் சத்தியத்திற்காக யுத்தம் செய்கிறோமா? அவரின் வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். நாம் இன்று அவரின் இடைக்கச்சையுமாயிருக்கும் சத்தியத்தை நிலைப்படுத்த முயற்சி செய்கிறோமா? இல்லாவிட்டால் கள்ள போதகர்கள் வேதத்தை புரட்டும் போது சும்மா இருந்துகொண்டு "நாம் ஜெபிப்போம். நியாயம் விசாரிக்க அவசியமில்லை " என்று வேதத்திலிருந்து சில வசனங்களை சுட்டிக்காட்டி, ஓடி ஒளிந்துகொள்கிறோமா?

"அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.

 பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.

பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,

என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்".

இந்த வசனங்களை தீர்க்கதரிசன கண்ணோட்டத்தில் ஆராயவேண்டும். மேசையாவாகிய இயேசுவின் காலத்தில் நடக்கும் காரியங்கள். நாம் இந்த சஞ்சலம், சண்டைகள், கலவரம் நிறைந்த உலகத்தில் ஜீவித்தாலும், நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் மூலம் கிறிஸ்துவின் ஆளுகைக்கு கீழ் வந்திருக்கின்றோம். அந்திக்கிறிஸ்துவின் ஆளுகைக்கு கீழே அல்ல.

பட்சிக்கும் ஓநாய் போன்ற கள்ளஊழியர்களால் நமது மகிமையான சபையில் உள்ள ஆட்டுக்குட்டிகள் போன்ற தேவ மக்களை சேதப்படுத்த முடியாது. அதே போல கட்டவிழ்க்கப்பட்ட புலி,  பாலசிங்கம் போல பொல்லாத சாத்தானின் சேனைகளினால் கிரியை செய்யும் எந்த விதமான அரசியல் கட்சிகளோ, நாடுகளை ஆளும் மனிதர்களோ செயலிழந்து போவார்கள். பால  சிங்கம்,புலி, ஓநாய்,  கட்டு விரியன்பாம்பு போன்ற வல்லமை உள்ள சாத்தானின் கொடூர சேனைகள் நம்மை தாக்கி நம் மேல் அதிகாரம் செலுத்தமுடியாது.

ஒரு சிறு பையன் போல நாம் நமது ஆடுகளை ஓநாய்கள், சிங்கங்கள் வாய்களிலிருந்து தப்புவித்து வழி நடத்துவோம். ஏனென்றால் அந்த சிறு பையனை வழிநடத்துவது நல்ல மேய்ப்பனாகும். இந்த உலகத்தில் பொல்லாத மக்களோடு வசித்தாலும் நாம் காக்கப்படுவோம். இந்த மகிமையான கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு விரோதமாக எழும்புவர்கள் மாட்டைப்போல் வைக்கோல் தின்பார்கள். நமது ஆவிக்குரிய குழந்தைகளை அந்திகிறிஸ்துவின் ஆவியோ, மற்ற சாத்தானின் சேனையோ வஞ்சிக்க முடியாது. பொல்லாத தொற்று நோய்களை பரப்பும் அணுக்களின் பிடிகளிலிருந்து தப்பி செல்லலாம்.

தேவனின் பரிசுத்த பர்வதத்தில் நாம் தாபரிக்கும் போது இந்த பாதுகாப்பு கிடைக்கிறது. நமது வாழ்க்கையில் தேவ வார்த்தையை உதாசீனப்படுத்துகிறோமா அங்கே பரிசுத்தம் காணப்படாது. பாவம் இல்லாமல் ஜீவித்தால் மட்டும் போதாது. பிரசங்கம் பண்ணிவிட்டு அதன்படி நடக்காவிட்டால், நமது பரிசுத்தம் போய்விடும். எங்கே நீதிக்காகவும் சத்தியத்திற்காகவும் யுத்தம் செய்து கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தை நிறுவுகின்றோமே அங்கே தான் இந்த பரிசுத்த பர்வதம் இருக்கிறது. இந்த பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை. சாத்தானால் கூட தீங்கு செய்யமுடியாது. கேடுசெய்வாருமில்லை. செய்வினை, மந்திரம் இங்கே பலிக்காது.

பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். கிறிஸ்துவின்  தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும். நமது மத்தியில் அவர் வல்லமையோடு வீற்றிரிப்பார். நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்த உலகத்தார் அல்லவே.

இன்று நமக்கு கள்ள ஊழியர்கள் காண்பிப்பது சாத்தான் ஆளுமை செய்கிற இந்த உலகத்தை தான். இந்த கள்ள தீர்க்கத்தரசிகள் தான் நமக்கு பாதுகாப்பு சாத்தானின் பிடியிலிருந்து கொடுப்பவர்களாக காட்சி அளிக்கிறார்கள். தேவனது ஆளுகையை மறைத்து தங்களை விக்கிரகங்களாக காண்பிக்கிறார்கள். 

இந்த காலத்தில், கிறிஸ்து அவருடைய சரீரமாகிய சபைக்கு கொடியாக நின்று காப்பார். உலக மக்கள் அவரை நோக்கி வருவார்கள். அவரின் தாபரஸ்தலம் நமது மத்தியில் மகிமையாயிருக்கும்.

இந்த காலத்தில், கிறிஸ்து அவருடைய சரீரமாகிய சபைக்கு கொடியாக நின்று காப்பார். உலக மக்கள் அவரை நோக்கி வருவார்கள். அவரின் தாபரஸ்தலம் நமது மத்தியில் மகிமையாயிருக்கும். இந்த உலகத்தின் நாடுகளிலிருந்து தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி, அவருடன்  சேர்த்துக்கொள்கிறார்.  பழைய ஏற்பாட்டின் துரத்துண்டவர்களையும்,  சிதறடிக்கப்பட்டவர்களையும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் மூலம் பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுகிறார். கிறிஸ்துவின் ஒரே சரீரத்தில் மீட்கப்பட்ட தேவமக்கள் மேலும் புடமிடப்பட்டு உலகத்தோடு விபச்சாரம் பண்ணும் பாபிலோனிய மதத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு remnant என்று  ஆங்கிலத்தில் குறிப்பிடலாம்.  பழைய ஏற்பாட்டில் இடிக்கப்பட்ட தேவாலயம் கிறிஸ்துவின் மூலம் திரும்ப கட்டப்படுகிறது. ஜாதிகளுக்கு ஒரு கொடியாக இந்த மகிமையாக்கப்பட்ட சபை (Glorious Church) விளங்கும்.


எச்சரிப்பின் தீர்க்கதரிசன  தொனி .......நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்

Isaiah 1

Next......Isaiah 13