தேவனுக்கு சேவையும், உண்மையான எழுப்புதலும் 

ஏசாயா 61ம் அதிகாரத்தில் தேவன் நாம் எவ்விதம் சேவை பண்ணவேண்டும் என்பதை விளக்குகிறார்.

 

"கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்"

 

நமக்கு பரிசுத்தாவியானவரை தேவன் கொடுத்திருப்பது நாம் அந்நிய பாஷை பேசி மற்றவர்களுக்கு நாம் அவரை பெற்றுவிட்டோம் என காண்பித்து தம்பட்டம் அடிக்கவேண்டும் என்றோ, உணர்ச்சிவசத்தினால் ஆராதனை செய்யவேண்டும் என்றோ அல்ல. சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தைஅறிவிக்கவேண்டும். சிறுமைப்பட்டவர்கள் யார்? தங்களுடன் அனுதின தேவைகளுக்காக ஆண்டவரிடம் எதிர்பார்த்து நிற்பவர்கள். சரீர சுகத்திற்காக ஆண்டவரிடம் எதிர்பார்த்து நிற்பவர்கள். கள்ளும் கபடும் இல்லாத சாமானிய மக்கள். தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள். ஒரு அருமையான சகோதரன், பெயர் மார்கஸ் டானியல் தினமும் சென்னையில் தெருக்களில் வாழும் ஏழை மக்களுக்கு உணவளித்து சுவிசேஷம் கூறி வருகிறார்.

 

இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதல். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதல். இந்த விதமாக வாழும் மக்களைத் தேடிப்  போகவேண்டும். அவர்கள் நம்மை தேடி வரமாட்டார்கள். இந்த விதமான மக்களை சிறைச்சாலைகளில் காணலாம். தெருக்களில் காணலாம்.

 

சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்.....பாவச் சிறையில் கட்டுண்டவர்களை விடுதலை கொடுக்கவேண்டும். ஒரே நாளில் சுவிசேஷத்தை அறிவித்துவிட்டு கடந்து செல்லக்கூடாது. பாவத்திலிருந்து விடுதலை பெறும்வரை அந்த மனிதனுக்கு சேவை செய்யவேண்டும்.

 

"கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்". ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கர்த்தருடைய அநுக்கிரக வருஷம் இருக்கிறது. அது மனம்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ளும் ஆண்டு. தேவன் நம்மை சந்திக்கும் நாள். இந்த அநுக்கிரக நாள் மனம்திரும்பி இரட்சிக்கப்படும் வரை நீடிக்கப்படும். சுவிசேஷம் அறிவிக்கும்போது இந்த அநுக்கிரக வருஷத்தைப்பற்றி கூறவேண்டும். தாமதிக்காமல் இந்த காலத்தை உபயோகப்படுத்தவேண்டும். நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும். ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையில் தேவனை முழு இருதயத்தோடு தேடும்போது தேவன் இழைக்கப்பட்ட அநீதியை சரிபண்ண நீதியைச் சரிக்கட்டுகிறார். தீர்க்கதரிசன கண்ணோட்டத்தில் இந்த நாளை நீங்கள் வெளிப்படுத்தலாம். ஒரு தியதியை குறிப்பிடவேண்டாம். ஒரு காலத்தை (season) குறிப்பிடலாம். தேவனது வாக்குத்தத்ததின் வசனங்களை அறிவிக்கலாம்.  

 

"சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்".  சீயோனிலே துயரப்பட்டவர்கள் யார். துயரப்படும் தேவனின் பிள்ளைகளுக்கு தீர்க்கதரிசன வசனத்தின் மூலமாக எச்சரித்து அவர்களை சீர்ப்படுத்தவேண்டும். இன்று அநேக தேவபிள்ளைகள் நோய்களினாலும் உபத்திரவங்கள் மூலமாகவும் துயரப்பட்டுவருகிறார்கள். அவர்கள் சாம்பலை உண்டுவருகிறார்கள். சிங்காரத்தையும், ஆனந்த தைலத்தையும், துதியின் உடையையும் கொடுக்கவேண்டும். அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை சீர்படுத்தவேண்டும். அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களாக மாற்றப்படவேண்டும்.

 

"அவர்கள் நெடுங்காலம் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டி பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்.

 

மறுஜாதியார் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அந்நிய புத்திரர் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத்தோட்டக்காரருமாயிருப்பார்கள்.

 

நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள்; நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக்கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள்.

 

உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்".

 

மேல்கூறிய வசனங்களின் பிரகாரம் சியோனில் சீர்படுத்தப்பட்டவர்கள் இப்போது  நெடுங்காலம் பாழாகிக்கொண்டிருக்கும் தேவனுடைய ராஜ்யத்தை புதிதாக கட்டுவார்கள். அந்நிய ஜாதி மக்கள் இவர்களுக்கு பணிவிடை செய்து உதவுவார்கள். இவர்கள் கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவார்கள். தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள். ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக்கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள். இவர்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். என்ன அருமையான ஆசீர்வாதங்கள். நீங்கள் இந்த ஆசிர்வதிக்கப்பட்ட தேவ ஊழியர்களாக இருப்பீர்களானால் நீங்கள் உங்களது தேவைகளுக்காக பிட்சை எடுக்கவேண்டிய அவசியமில்லை. வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்.

 

"கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்; நான் அவர்கள் கிரியையை உண்மையாக்கி, அவர்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுவேன்". கர்த்தர் நியாயத்தை விரும்புகிறார். அநியாயமாக தேவமக்களை ஏமாற்றி தேவ சத்தியத்திற்கு முரணாக சம்பாதித்த பணத்தினாலோ வியாபாரத்தில் கொள்ளையடித்து சம்பாதித்த  ஒரு பகுதியை தகனபலியாக செலுத்தவேண்டாம். உங்களது கிரியையை உண்மையாக்கி, உங்களோடு நித்திய உடன்படிக்கை பண்ணுவார். உங்களின் தப்பான கிரியையை வெளிப்படுத்தி அதை சரிப்படுத்தி உண்மையாக்கி, உங்களோடு நித்திய உடன்படிக்கை பண்ணுவார்.

 

அப்போது உங்களின்  "சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்".

 

"கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்". உங்களின் சாட்சி இவ்விதமாக இருக்கவேண்டும். "அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்" என்று தைரியமாய் சாட்சி கூறலாம்.

 

"பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்". தேவன் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணவேண்டும். அதுதான் உண்மையான ஆவிக்குரிய எழுப்புதல். நீங்கள் சீர்படும்போதுதான் இந்த உலகம் தேவனை ஏற்றுக்கொள்ளும். பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோல, கண்டிப்பாக இந்த எழுப்புதல் சரித்திரத்தில் வரும்.