சீயோனிலுள்ள  தேவமக்களின் ஆசிர்வாதங்கள்  

 ஏசாயா 51ம் அதிகாரம் சீயோனிலுள்ள தேவமக்களுக்காக எழுதப்பட்டிருக்கிறது.


"நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்". "நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் கிறிஸ்துவின் உபதேசத்திற்கு செவிகொடுக்கவேண்டும். தேவன் உங்களை கிறிஸ்துவின் மூலம் ரட்சிக்கப்படும்போது கன்மலைபோல இருக்கும்  ஒரு கடினமான பழைய வாழ்க்கையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு  ஆண்டவருக்கென்று பிரித்தெடுக்கப்பட்டிருக்கறீர்கள். அந்த வெட்டி எடுக்கப்பட்ட வாழ்க்கையை இன்றும் நினைவு கூறவேண்டும். அதேபோல ஆண்டவர் உங்களை ஒரு ஆழமான பாவக்குழியிலிருந்து தோண்டி எடுத்திருக்கிறார். தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நீங்கள் மறக்கக்கூடாது. இன்று அநேக தேவமக்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டு ஒரு ஆவிக்குரிய உச்சத்தை அடைந்தவுடன், தங்களது பழைய நிலையை மறந்து ஒரு ஆவிக்குரிய அகந்தையில் தள்ளப்படுகின்றனர்.

 

"உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்". இஸ்ரவேலின் நாட்டைச் சேர்ந்த ஆபிரகாம் தான் உங்களுக்குள்ள ஆவிக்குரிய தகப்பன். உங்களை கிறிஸ்துவிற்குள் பெற்று எடுத்த ஒரு ஊழியனும் உண்டு.  எப்படி ஆபிரகாம் ஒருவனாயிருக்கையில் அவனை அழைத்து ஆசிர்வதித்து பெருகப்பண்ணினாரோ அந்தவிதமாக உங்களையும் பெருகப்பண்ணுவார். உங்களுக்கு சுவிசேஷம் அறிவித்து பெற்று எடுத்த ஊழியரையும் மறக்கவேண்டாம்.

 

"கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்". கிறிஸ்துவின் மூலம் இரட்சிக்கப்பட்டவுடன் நீங்கள் தேவனனின் நகரமாகிய சீயோனில் வாசம் பண்ணுகிறீர்கள். கிறிஸ்துவோடு உன்னதத்தில் வீற்றிரிக்கறீர்கள். "நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள் (எபி 12:22-24). நீங்கள் சீயோனில் வந்து சேர்ந்துவிட்டீர்கள்.  உங்களை சுற்றி ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்துவில் மரித்த பரிசுத்தவான்களின் ஆவிக்குரிய ஐக்கியத்தில் இருக்கறீர்கள். இந்த தேவதூதர்களையும் பரிசுத்தவான்களையும் நீங்கள் மாமிசத்தில் அறியமுடியாது. அறியவும்கூடாது. மேகம்போன்ற இந்த பரிசுத்தவான்கள் "இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க"( எபி 12:1) நீங்கள் பயத்தோடு வாழ்க்கை நடத்தவேண்டும்.

 

சீயோனில் வாசமாயிருக்கும்போது நம்முடைய வாழ்க்கையில் பாழான ஸ்தலங்களையெல்லாம் மாற்றி புதுப்பிப்பார். வனாந்தரத்தை ஏதேனைப்போல மாற்றுவார். அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார். இழந்துபோன ஏதேன் தோட்டத்தைத் கிறிஸ்துவின் மூலம் திருப்பிப்பெறுகிறோம்.  ஏதேனின்  சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் நமது வாழ்க்கையில் திரும்பப்  பெறுவோம்.

 

பாழான இடங்கள் என்றால் ஆவிக்குரியவாழ்க்கையில் பாவத்தின் மேலே வெற்றி கிடைக்காத சூழ்நிலைகள். உலக வாழ்க்கையில் இழந்து போன ஆசிர்வாதங்கள் ஆகும். வனாந்தரமான வாழ்க்கையில் தண்ணீர் ஊற்றுகள் போன்ற ஆசீர்வாதங்கள்.

 

"என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன்". யேசுக் கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனின் ஜனங்களாகிவிட்டோம்.  இயேசுவின் பிரமாணத்திற்கு செவிகொடுத்து அதன்படி நாம் நடந்தால் வேதம் அவரிடமிருந்து வெளிப்படும். வெறும் எழுதப்பட்ட வேதத்தை ஆராய்ந்து பிரசங்கம் செய்தால் மாத்திரம் போதாது. இந்த வேதம் நமது வாழ்க்கையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சமாக வெளிப்படவேண்டும்.

 

"என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்". யேசுக்கிறிஸ்துவின் நீதி எல்லோரும் இரட்சிப்பு அடையும்படி சமீபமாயிருக்கிறது. அவரின் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்க நீட்டப்பட்டிருக்கிறது. தீவுகள் போன்ற கிறிஸ்துவை அறியப்படாத உலக பகுதிகள் அவரின் சுவிசேஷத்திற்காக காத்துநிற்கின்றது. என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறது. அவரின் கரத்தின் கிரியைகள் அந்த தூரமாகவும் மறைமுகமாகவும் இருக்கிற உலகத்தின் பகுதிகளில் வெளிப்படும்.

 

"பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்". நமக்கு விரோதமாக எழும்புபவர்கள் தேவனால் அழிக்கப்பட்டுவிடுவார்கள். கிறிஸ்துவின் மூலம் வெளிப்பட்ட தேவனின் நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும்.  நமக்கு கிடைக்கும் தேவனின் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.

 

" எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?" தீர்க்கதரிசி கர்த்தரின் கரத்தை நோக்கி தீர்க்கதரிசனம் இவ்விதம் உரைக்கிறார்.  இராகாப் என்பது ஒரு கடலின் அசுரன். ஏதேன் தோட்டத்தில் சாத்தனாகிய வலுசர்ப்பத்தை தேவனின் கரம் வதைத்தது.  இராகாபைப் போன்ற கொடுங்கோல் அரசு செய்யும் உலக வல்லரசனை தேவன் தனது புயத்தால் துண்டித்து தன் மக்களைக்  காப்பாற்றுவார். அடுத்த வசனத்தில் இஸ்ரவேலின் மக்களை சிவந்த சமுத்திரத்தை பிளந்து தன் ஜனத்தை பின்பற்றிவரும் கடலின் அசுரனனை சமுத்திரத்தில் அழித்து அவர்களை காப்பாற்றினார்.

 

"மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?" உங்களது வாழ்க்கையில் உங்களுக்கு தடையாக இருக்கும் சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணி, பள்ளங்களை வழியாக்கி, கடந்து பாலும் தேனும் ஓடும் தேசத்திற்க்கு அவரின் கரம் கொண்டு செல்கிறது.

 

"என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன்". யேசுக் கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனின் ஜனங்களாகிவிட்டோம்.  இயேசுவின் பிரமாணத்திற்கு செவிகொடுத்து அதன்படி நாம் நடந்தால் வேதம் அவரிடமிருந்து வெளிப்படும். வெறும் எழுதப்பட்ட வேதத்தை ஆராய்ந்து பிரசங்கம் செய்தால் மாத்திரம் போதாது. இந்த வேதம் நமது வாழ்க்கையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சமாக வெளிப்படவேண்டும்.

 

"உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம்; அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை". கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பு இந்த வானமும் பூமியும், பூமியின் குடிகளும் ஒழிந்துபோனாலும், என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். அவரின் நீதி அற்றுப்போகாமல் இந்த உலகில் நமக்கு நியாயம் கிடைக்கச்செய்யும். 

 

"நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்". தேவ நீதியை அறிந்த மக்களான நாம் தேவனின் வேதத்தை இருதயத்தில் பதித்திருந்து அவருக்கு செவிகொடுத்தால் மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருப்போம்.

 

"அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்". இயேசுவின் ரத்தத்தால் மீட்கப்பட்ட மக்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள். சீயோன் தேவனின் நகரம் என்று ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். சீயோனில் நமக்கு நித்திய மகிழ்ச்சி இருக்கிறது.  சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். சீயோனிலுள்ள தேவ மக்கள் மனித தயவையோ உதவியையோ நாடி அங்கும் இங்கும் ஓடமாட்டார்கள். அவர்களைச் சுற்றி ஆயிரமாயிரம் பணிவிடை செய்யும் தேவதூதர்கள் இருக்கிறார்கள்.

 

"நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?

 

"இடுக்கண்செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? இடுக்கண்செய்கிறவனுடைய உக்கிரம் எங்கே?" நமக்கு விரோதமாக இடுக்கண்செய்கிறவன், சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படக்கூடாது.

 

"சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை". இந்த தீர்க்கதரிசனம்  அநியாயமாய் சிறைப்பட்டுப்போகிற ஒரு தேவ பிள்ளைக்குப் பொருந்தும். அவன் கண்டிப்பாக விடுதலை செய்யப்படுவான். அவனுடைய குடும்பம் அப்பத்தில் குறைவுபடாது.

 

"உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.

 

நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்".  இது சீயோனின் மக்களுக்கு அருளப்படும் தெய்வ வாக்கு. உங்களை என் ஜனமென்று சொல்வதற்காக அவரின் தீர்க்கதரிசன வார்த்தையை உஙகள் வாயிலே அருளுகிறார். நீங்கள் உங்கள் வாயைத்திறந்து மற்றவர்களிடம் பேசும்போது தேவனின் வாக்கு வெளிப்படும். கேட்கும் மக்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இந்த வார்த்தை ஒரு எச்சரிப்பின் தீர்க்கதரிசன குரலாக இருந்தால் இதை ஏற்றுக்கொள்ளாமல் மக்கள் உங்களை பகைக்கக்கூடும். அப்படியிருக்கும்போது அவர் உங்களை தன்  கரத்தின் நிழலினால் மறைத்துக்கொள்வார்.

 

"எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.

 

அவள் பெற்ற புத்திரரெல்லாரிலும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த குமாரரெல்லாரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.

 

இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உனக்குப் பரிதபிக்கிறவன் யார்? பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உனக்கு ஆறுதல்செய்வேன்?

 

உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன் தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.

 

ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடியாமல் வெறிகொண்டவளே, நீ கேள்.

 

கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.

 

உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்".

 

தேவமக்கள் பாவத்தில் விழுந்து தேவனின் நியாயத்தீர்ப்பினால், பாழ்க்கடிப்பு, சங்காரம், பஞ்சம், பட்டயம் இவைகளால் தண்டிக்கப்பட்டு விழுந்துகிடக்கும்போது அவர்களை மறுபடியும் நிலைநிறுத்துகிறார். தங்கள் பாவத்தை அறிக்கை செய்து தேவனிடம் மனம்திரும்போது அவர்களின் தத்தளிப்பின் பாத்திரத்தை அவர்களின் கையிலிருந்து நீக்கிப்போடுகிறார். அந்த பாத்திரத்தை உங்களைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுக்கிறார் (1-23).