பாடு அனுபவிக்கும் உலக இரட்சகர் 


ஏசாயா 53ம் அதிகாரம் ஒரு சுவிஷேகத்தின் புத்தகம். இயேசு லூக்கா 22:37 ல் "அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்". 


எல்லா கிறிஸ்தவர்களும் சுவிஷேகர்களும் இந்த அதிகாரத்தை நன்றாக அறிந்துகொண்டு பிரசங்கம் செய்துவருகிறார்கள். அதே சமயம் மற்ற அதிகாரங்களை விவரமாக ஆராய்வு செய்வது கிடையாது. ஆகவே நான் இந்த அதிகாரத்தை கடந்து போகிறேன். சில புரிந்து கொள்ளமுடியாத வசனங்களை மாத்திரம் விளக்கவுரை செய்யவிரும்புகிறேன்.


8. "இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்".  இயேசு பாவம் இல்லாமல் ஜீவித்து வந்ததினால், அவர் பாவத்தின் விளைவாக வரும் இடுக்கணிலும், நியாயத்தீர்ப்பிலுமிருந்து எடுக்கப்பட்டார். சரீர மரணத்தின் மூலம் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார். இயேசுவின் வம்சத்தை யாராலும் கணக்கெடுப்பு நடத்தமுடியாது. 


10. "கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்". இரத்தம் சிந்தி சம்பாதித்த இயேசுவின் சந்நதி, அதாவது சபையாகிய தன் சரீரம் தலையாகிய கிறிஸ்துவோடு இணைந்து இருக்க, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார். அவருடைய சந்நதியாகிய நாம் அவர் உயிரோடு நம்முடன் நீடித்தநாளாயிருப்பதைக் காண்போம்.  


12. "அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்".  இன்று, இயேசு அக்கிரமக்காரங்களான நமது பாவத்தைத் தாமே சுமந்து, நமக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் பிதாவாகிய தேவன் நம்மை அவருக்குப் பங்காகக் கொடுத்திருக்கிறார். நம்மையும் யேசுவிற்கு பங்காகக் காண்கிறார். நம்மையும் அவரையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்கிறார். என்ன பாக்கியம்! வாழ்க்கையில் பரிசுத்தமாக இருந்து, முற்றிலும் இயேசுவின் பின் தங்களின் சிலுவைகளைத்தூக்கி செல்பவர்கள் பலவான்கள் ஆகிறார்கள். அவருக்கு கொள்ளையாக கிடைத்த அவரின் வல்லமையும், மகிமையையும் இயேசு அந்த பலவான்களோடு பங்கிட்டுக்கொள்கிறார்.