Jeremiah 10th chapter
இஸ்ரவேல் வீட்டாரே, கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:
புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.
ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.
அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக்கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்".
புதிய உடன்படிக்கையின் அடையாளம் சிலுவை. இந்த சிலுவையின் உடன்படிக்கை மூலமாக நாம் நமது மனதிலுள்ள எல்லா விக்கிரகங்களையும் அகற்றவேண்டும். கிறிஸ்துவின் உடன்படிக்கையின் சத்தம் அவரின் வார்த்தைகளின் மூலம் வெளிப்படுகின்றது. அவருடைய வார்த்தைகளைக் கைக்கொண்டால் தான் நமக்கு தேவனாகிய கர்த்தர் நமக்கு தேவனாகயிருப்பார். அவரின் கட்டளைகளை உதாசீனப்படுத்தி மனிதர்களின் கலப்பட வார்த்தைகளை பின்பற்றினால் அவர் நமக்கு தேவனாகயிருக்கமாட்டார். வெறும் ஆராதனை செய்தாலோ ஆலயத்திற்கு ஒழுங்காக போனாலோ அவர் நமக்கு தேவனாகயிருக்கமாட்டார். அவரின் சித்தத்தை செய்யாமல் எந்தவிதமான அடையாளங்களோடும் ஊழியம் செய்தாலோ அவர் நம்மை அறியேன் என்று நியாயத்தீர்ப்பின் நாளில் கூறுவார். பசியுள்ளவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறோமா? உடுக்க ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுக்கிறோமா?
பழைய ஏற்பாட்டின் காலத்திலுள்ள விக்கிரகங்களுக்கு சாயலாக நாம் மனித விக்கிரகங்களை தூக்கி நடக்கறோமா? இந்த விக்கிரகங்கள் பரிசுத்த ஆவியானவர் மூலம் கிறிஸ்துவின் வார்த்தைகளை நமக்கு வெளிப்படுத்தாது. போதகர்கள் வேதவசனங்களை பிரசிங்கித்தாலும் கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்கமாட்டோம்.
சத்திய ஆவியானவரின் வெளிப்படுத்தல் இல்லாத வார்த்தைகளில் தேவவல்லமை இல்லையென்று அறியவேண்டும்.
"கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.
ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டியது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.
அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது".
தேவனை ஒரு கட்டிடத்திற்கோ, ஒரு மனித கற்பனையில் உருவாக்கிய விக்கிரகத்திற்கோ ஒப்பிடமுடியாது. இன்று தேவனை நான்கு சுவருக்குள்ளே அடக்கி வெறும் ஆராதனை நடத்தி அவருக்கு ஒப்பான ஒரு விக்கிரகத்தை உருவாக்குகிறோமா? அவர் எல்லா வழிபாட்டு இடங்களை காட்டிலும் பெரியவர். எல்லா வேதத்தை கரைத்துக்குடித்த ஞானிகளும் அவருக்கு பயப்படவேண்டும். பாவத்தில் வாழ்ந்துக்கொண்டு வெறும் கூத்தடித்து ஆராதிப்பது யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள். மரத்தினால் உருவாக்கி அவரை தொழுதுகொள்ளும் எந்த உபதேசமும் மாயை தான். வெறும் ஆராதனை நடத்தி அவரின் சாயலை உருவாக்கமுடியாது. அவரை நாம் ஏமாற்றமுடியாது.
" தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும், இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்".
பணத்தினால் ஒரு பிரமாண்டமான கட்டிடத்தை எழுப்பி அங்கே தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார் என்று கூறுவோமானால் அவரின் சாயலை உருவாக்கி இதுதான் தேவன் என்று அறிவிக்கிறோமா? கர்த்தரோ மெய்யான தெய்வம். பாவத்திற்கு மரித்து கிறிஸ்துவில் ஜீவிக்கிற மக்களுக்கு பரிசுத்தாவியானவர் கிறிஸ்துவை அவர்களின் வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறார் அப்போது அவரே மெய்யான தெய்வம் என்று அறிகிறார்கள். அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா என்ற வெளிப்படுத்தல் கிடைக்கப்பெறுகிறார்கள். அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.
"அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.
அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்".
மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.
அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. இன்று இயேசுவின் பெயரில் அநேக விக்கிரகங்களை உருவாக்கி பொய்யை உருவாக்குகிறார்கள். அவைகளில் பரிசுத்தாவியானவர் இல்லவே இல்லை.
"அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்".
இன்று மனித கற்பனையால் உருவாக்கப்படும் விக்கிரகங்கள் விசாரிக்கப்படும் ஒரு நாளிலே அழியும். சர்வத்தையும் உருவாக்கின நமது தேவனை அந்த விக்கிரகங்களுக்கு ஒப்பிட முடியாது. நாம்தான் அந்த இஸ்ரவேலின் சுதந்தரமான கோத்திரம். இப்போதுள்ள சரித்திர இஸ்ரவேலுக்கும் கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
"அரணில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள்.
இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.
என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை".
தேவன் விக்கிரவழிபாடு செய்கிற தன் ஜனங்களை தண்டிக்கும்போது அவர்கள் உலக பொருட்களின் மேலுள்ள ஆசைகளை வெறுக்காமல் அவைகளை சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனாலும் தேவன் அவர்களை அவரின் ராஜ்ஜியத்திலிருந்து வெளியே அனுப்புகிறார். இந்த தேவமக்கள் கதறும்போது தீர்க்கதரிசன ஊழியர்கள் தேவனுக்கு முன்பாக தாங்களே தண்டனை அனுபவிப்பது போல உணர்கிறார்கள். "ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன். என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை".
"மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.
இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது".
இன்று தேவப்பிள்ளைகளை வழிநடத்தும் மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள். அவர்களுக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்கள் தடைபட்டுவிடுகிறது. அவர்களின் மந்தைகளை அந்திக்கிறிஸ்துவின் ஆவிகள் சிதறடிக்கப்பண்ணுகிறது. இன்று அந்த சபைகளில் பாழும் அந்திக்கிறிஸ்துவின் கூடாரங்களாக மாறிவிடுகிறது. வேறு ஒரு கள்ள கிறிஸ்து அவர்களை ஆளுமை செய்கிறான். இந்த மக்களை தண்டிக்கும்படி ஒரு பெரிய அந்நிய ஜாதி மக்களை தேவன் எழுப்புகிறார்.
"கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.
கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.
உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே".
தீர்க்கன் இதை அறிந்து "மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்" என்று கூறுகிறான். தேவனது உதவியில்லாமல் நாம் நடக்கும் வழியை நாம் அறிவோம். ஆகவே நாம் கர்த்தரின் பலத்த கரத்திற்குள் ஒப்புக்கொடுத்து "கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்" என்று விண்ணப்பம் செய்வோமா? நம்மை அழிக்க எத்தனிக்கும் அந்நிய ஜாதி மக்களை தேவன் அழித்து நிர்மூலமாக்குவார்.