தேவமக்களின் ஆவிக்குரிய விபச்சாரமும், மறுமலர்ச்சியும் 

"நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக் கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.

நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்".


ஏசாயா இந்த அதிகாரத்தில் நீதிமான் துன்புறுத்தலினால் அழிந்துபோகும்போது யாருமே அவனை காப்பாற்றமுன்வரவில்லை என்று அங்கலாய்க்கிறார். ஆனால் கர்த்தரோ அவனை தீங்கு வருமுன்பு காப்பாற்றி ஒரு சமாதானமான  இடத்தில் ஒளித்துவைக்கிறார். அங்கே அவனுக்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது. நாம் சரித்திரத்தில் படிக்கும்போது நீதிமான்களை யூத அரசர்கள் சித்திரவதை செய்தபோது அந்த நீதிமான்களை தேவன் காத்துக்கொண்டார் என்று அறிகிறோம். இன்று நாம் இந்த பகுதியை தியானிக்கும்போது சரீர மரணத்தினால் ஆண்டவர் நீதிமானை எடுத்துக்கொள்கிறார் என்று பிரசங்கித்து வருகிறோம். நாம் நேர்மையாக நடக்கும்போது தேவன் நமக்கு உதவி ஒரு அமைதியான இடத்தில் நம்மை கொண்டு சேர்க்கிறார்.


"நாள்பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்.

 

நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?

 

நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடே மோகாக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள்.

 

பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ?

 

நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்" . இந்த பகுதியில்  விக்கிர ஆராதனை, நாள் பார்க்கும் பழக்கம் போன்றவைகளை கைக்கொண்டு ஆவிக்குரிய விபச்சாரம் செய்து பின்மாறிப்போன தேவமக்களை தேவன் கடிந்துகொள்கிறார். நீதிமான்களை துன்புறுத்தி அவர்களை ஒடுக்கி அதிகாரத்தில் ஆளுமை செய்கிற தலைவர்களை தேவன் எச்சரிக்கிறார். இன்று நாம்  விக்கிரகங்களை வைத்து ஆராதனை செய்து ஆண்டவருக்கென்று காணிக்கை பலி செலுத்தும்போது அந்த பலியை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காணிக்கை மூலம் பலி செலுத்த மலைகள் ஏறி வருகிறோம். நமது உள்நோக்கம் ஒரு ஆடம்பர அல்லது செழிப்பு  மிகுந்த வாழ்க்கையை எப்படியோ பெறவேண்டும் என்பதுதான்.

 

பழைய ஏற்பாட்டின் கீழே உருவ, விக்கிர வழிபாடுகளை யூத மக்கள் செய்துவந்தனர். தேவன் அவர்களுக்கு பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்தை சுதந்தரித்துக்கொண்டு சந்தோஷமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை வனாந்திர பாதையில் நடத்தி அவர்களின் இருதயத்தைச் சோதித்தார். "உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக" (உபா 8:2). இஸ்ரவேல் மக்களில்  "அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

 

அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.

 

ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.

 

அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.

 

அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.

 

அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.

 

இவைகளெல்லாம் திருஷ்டாந்தகளாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது" 1 கொ 10:6-11). நாமும் இதே போல பாவங்கள் செய்து உண்மையான ஆசீர்வாதங்களை பெற தேவனை நம்பி மாத்திரம் ஜீவிப்போமாக. எந்த ஊழியனையும் விக்கிரமாக பாவித்து பலி செலுத்த மலைகள் ஏற வேண்டாம். உங்களுக்கு என்ன ஆசீர்வாதங்களை தரவேண்டும் என்பதை அவர் அறிகிறார். நீங்களே அவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளவும். அவர் விரும்புவது பாவம் இல்லாத வாழ்க்கை. பாவத்தை வைத்துக்கொண்டு எந்த ஊழியனிடத்தில் காணிக்கை கொடுத்து ஜெபித்தாலும் உங்களுக்கு நேரிடுவது வனாந்திர பாதையின் நடந்த இச்சையின் மூலம் நிகழ்ந்த அழிவுதான்.  

 

"கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி, அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்". ஆண்டவரை விட்டு விலகி ஆசிர்வாதத்திற்காக மற்றவர்களிடம் போய் உன் இருதயத்தில் உள்ளவைகளை வெளிப்படுத்துகிறாய். மற்றவர்களின் மஞ்சங்களைக் கண்டு அதே போல உனக்கும் ஆசீர்வாதம் கிடைக்க அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய். உன் ஆசையை அதிகரிக்காதே. உன் மஞ்சத்தை அகலமாக்காதே. உனக்கு மஞ்சம் எப்படியிருக்கவேண்டும் என்பதை ஆண்டவர் அறிவார்.

 

"நீ தைலத்தைப் பூசிக்கொண்டு ராஜாவினிடத்தில் போகிறாய்; உன் பரிமளங்களை மிகுதியாக்கி, உன் ஸ்தானாபதிகளைத் தூரத்துக்கு அனுப்பி, உன்னைப் பாதாளமட்டும் தாழ்த்துகிறாய்". ஆண்டவரிடம் போகாமல் ராஜாவினிடத்தில் உன்னை அலங்கரித்துக்கொண்டு போகிறாய். அந்த ராஜாவை பணிந்துகொண்டு தேவனிடமிருந்து ஆசிர்வாதத்தை எதிர்பார்த்து நிற்கிறாய்.

 

"வழிதூரமானதால் உழன்றுபோகிறாய்; அது விருதாவென்று நீ சொல்லுகிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ ஆயாசப்படவில்லை". உன் பிரயாசத்தால் உன் கைபெலத்தால் உனக்கு ஆசீர்வாதம் தேவனிடமிருந்து வராது. உன் சுயமுயற்சிகள் விருதா.

 

"நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும்போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.

 

உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது". மனிதனுக்கு அஞ்சி பொய் சொல்லி ஆண்டவரிடத்திலிருந்து ஆசிர்வாதத்தை எதிர்பார்க்காதே. ஆண்டவரை நினையாமலும், அவர் மனதிலே வைக்காமலும்போகிறாய். ஆண்டவர் வெகுகாலம் மவுனமாயிருந்ததால், ஆண்டவர் ஒருவர் இருக்கிறார், உன் ஜெபத்தை கேட்க ஆவலாக இருக்கிறார் என்பதை அறியாமல் அவருக்கு பயப்படாதிருக்கிறாய்.

 

"நீ கூப்பிடும்போது, உன் கணங்கள் உன்னைத் தப்புவிக்கட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோம்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சுதந்தரித்து, என் பரிசுத்த பர்வதத்திலே காணியாட்சிக்காரனாயிருப்பான்". ஆண்டவரை நம்பாமல் நீ மனிதர்களை நம்பும்போது உன் கணங்கள் உன்னைத் தப்புவிக்காது. காத்திருந்த கணங்களை மறந்துவிடு. ஆண்டவரை மாத்திரம் நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சுதந்தரித்து, அவரின் பரிசுத்த பர்வதத்திலே காணியாட்சிக்காரனாயிருப்பான். ஆண்டவர் உனக்கு வைத்திருக்கும் தேசம் ஒரு தனி தேசம். யாருமே பிரவேசிக்காத தேசம். அவரின் பரிசுத்த பர்வதத்திலே இந்த தேசம் இருக்கிறது. அதை பராமரிப்பது நீ தான்.

 

"வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, ஊழியங்களிலும் இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்". நீ உன் வழியை இந்த உலகத்திலிருந்து உயர்த்தி தேவனுக்கு நேராக வைத்து அதைச் செம்மைப்படுத்தி தேவ மக்களின் இடறல்களை நீ அகற்றிப் போட்டு அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். உன்னை தேவன் ஆசிர்வதிப்பது அவரின் மக்களின் இடறல்களை அப்புறப்படுத்தும்படி உதவவேண்டும். தேவமக்கள் இடறும்படி அநேக காரியங்கள் நமது சபைகளிலும் இருந்து வருகிறது.

 

"நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்". ஆண்டவர் எங்கே வாசம் பண்ணுகிறார்? எந்த கட்டிடங்களிலோ எந்த ஊழியர் தொடும்போதோ தன்னை வெளிப்படுத்தும் தேவன் அல்ல அவர். பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறார். இந்த சத்தியத்தை அறியாமல் ஆண்டவர் அந்த சபையில் இருக்கிறார், அந்த ஊழியர் ஜெபிக்கும்போது தன்னை வெளிப்படுத்துகிறார் என்று நம்பவேண்டாம். பழைய ஏற்பாட்டின் கீழேயே தேவன் தான்  எப்படி வெளிப்படுத்துகிறார் என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

 

"நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே". ஆண்டவர் நம்மோடு எப்போதும் வழக்காடி கோபமாக இருப்பதில்லை. நாம் சோர்ந்துபோவோம் என்று அங்கலாய்க்கிறார்.

 

"நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே". நாம் பொருளாசை உடையவர்களாக இருந்ததினாலும், அக்கிரமங்கள் செய்ததினாலும்   மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நாம் நடந்ததினாலும் அவருக்கு கோபத்தை உண்டாக்கினதால் அவர் நம்மை அடித்தார். 

 

"அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்". நமது வழிகள் செம்மையாக இருக்கும்போது நம்மை மன்னித்து குணமாக்கி துக்கப்படும் நம்மை ஆண்டவர் நம்மை ஆறுதல் அளிப்பார்.

 

"தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்". ஆண்டவர் தனக்கு தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் நாம் சமாதானம் என்ற நற்செய்தியை கூறும்போது பாவத்தால் நித்திய ஜீவனை இழந்தவர்களை ஆண்டவர் குணமாக்குவார். அவர்களின் ஆத்துமாவையும் சரீரத்தையும் குணமாக்குவார்.

 

"துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.

 

"துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்". ஆண்டவரினிடம் திரும்பாமல் துன்மார்க்க ஜீவியத்தில் ஜீவிக்கும் மக்களுக்கு சமாதானம் இல்லாமல் கொந்தளிக்கும் கடலைப்போலிருந்து அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. அதன் விளைவாக உலக மக்கள் சேற்றையும் அழுக்கையும் பற்றிக்கொண்டு அழிந்துபோகிறார்கள். துன்மார்க்கம் இந்த உலகத்தை அழித்துவிடும் . ஆகவே தேவமக்கள் துன்மார்க்க வழிகளை விட்டுவிட வேண்டும்.