எரேமியாவின் நான்காம் அதிகாரத்தை தியானிப்போம். இது மனம்திரும்புதலின் அதிகாரம்.
"இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை".
சபைகளுக்கு பரிசுத்தாவியானவர் கொடுக்கும் கட்டளை "மனதாயிருந்தால் மனம்திரும்பு". மனம்திரும்ப நமக்கு மனம் இருக்கவேண்டும். உலக ஆசீர்வாதங்களை கொள்ளையிட நமக்கு மனமிருக்கிறது ஆனால் மனம்திரும்ப மனதில்லாமல் போகிறது.
கர்த்தரின் பார்வையினின்று நீ உன் அருவருப்புகளை உடனே பார்வையினின்று அகற்றிவிடவேண்டும். இதை செய்தால் நீ இனி அலைந்து திரிவதில்லை. இன்று நாம் நமது அருவருப்புகளை அகற்றாமல் அங்கேயும் இங்கேயும் அலைந்து ஆசிர்வாதம் பெற அலைந்து திரிகிறோம்.
"நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்". உண்மையாக மனம்திரும்பும்போதுதான் நாம் கர்த்தரின் ஜீவனை கொண்டு ஆணையிட முடியும்". வெறுமனே மனம் திரும்பாமல் யாருக்கும் ஜெபித்து சரீர சுகமடைய கட்டளை கொடுக்கமுடியாது. ஆண்டவரின் கண்களில் அருவருப்புகள் பயங்கரமான பாவங்கள் மாத்திரம் இல்லை. இயேசுவின் கட்டளைகளை பின்பற்றாமல் எந்த ஊழியமும் செய்தால் அந்த ஊழியங்கள் அவர்களின் அருவருப்புகள் ஆகும். அந்நிய ஜாதி மக்கள் நம்மை கிறிஸ்துவுக்குள் மேன்மை பாராட்டாமல் இருப்பதின் காரணம் இதுதான்.
"யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்".
உண்மையான மனம்திரும்புதலின் போது உங்கள் உள்ளத்தில் சத்தியத்தை விதைக்கப்பட அனுமதிக்கவேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கை மாறாமல் பழைய வாழ்க்கைக்குப் போய்விடுவோம் . இன்று தேவவசனத்தை படிக்கிறோம், ஆனால் அதிலுள்ள சத்தியத்தை நமது உள்ளத்தில் விதைக்கப்பட விரும்பாமல் முட்கள் இருக்க விரும்புகிறோம். முட்களை எடுத்துத்தான் தரிசு நிலத்தை பண்படுத்த முடியும்.
அப்போஸ்தலர் நடபடிக்கை என்ற புத்தகத்தை படிக்கும்போது ஆவியானவர் சபைக்கு எவ்வாறு தந்தருளப்பட்டார் என்ற சத்தியத்தை அறியாமல், தப்பான உபதேசத்தை நமது போதகர்களின் மூலம் கேட்டு, ஆவியானவர் ஒரு வல்லமை என்றும் அந்த வல்லமை அந்த காலத்தில் சீடர்களை நிரப்பியது என்றும், அவர் ஒரு ஆள்தத்துவம் உள்ளவர் என்ற சத்தியத்தை அறியாமலே நமது உள்ளமாகிய நிலத்தை சத்தியம் என்ற விதையை விதைத்து பண்படுத்தாமல் இருக்கிறோம். அபிஷேகம் என்பது ஆவியானவர் ஒரு தனி மனிதனை கிறிஸ்துவின் மூலமாக ஆட்கொள்வது என்ற சத்தியத்தை அறியாமல், அறியாமை என்ற முள்ளை உள்ளத்திலிருந்து அகற்றாமல் அந்த முள்ளின் மேலே தேவ வசனத்தை விதைக்கிறோம்.
இயேசு என்கிற தேவ குமாரன் ஆவியானவரை விட்டு வேறானவர் என்றும், ஆவியானவர் தனியாக வந்து நம்மை நிரப்புகிறார் என்ற தப்பான உபதேசத்தை நமது உள்ளத்தில் விதைக்கப்பட்டுசத்தியத்தை அறியாமலே போய்விடுகிறோம். இன்று சத்தியம் இல்லாமல் தரிசு நிலமாகவே நமது உள்ளம் இருந்து வருகிறது. புதிய ஏற்பாட்டின் அடிப்படை உபதேசமே ஆவியானவரை பற்றி அறிந்துக்கொள்வது தான். இந்த அடிப்படை சத்தியம் நமது உள்ளத்தில் விதைக்கப்படாமலிருந்தால் நாம் கிறிஸ்துவை போல அவரின் சாயலில் வளரமுடியாது. பரிசுத்தாவியானவர் உங்கள் மேலே வந்தும், போய்க்கொண்டும் இருக்கமாட்டார். அவர் உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாக வாசம் பண்ணி எல்லா சத்தியத்திற்குள்ளும் வழி நடத்துகிறார். கிறிஸ்துவை உங்கள் உள்ளத்தில் வெளிப்படுத்தி உங்களை கிறிஸ்துவின் சாயலில் மாற்றுகிறார்.
இன்று ஆவியானவரை யார் என்றும் அறியாமலிருக்கும்போது நாம் கிறிஸ்துவின் மூலம் உண்மையாகவே மனம்திரும்ப முடியாது. உணர்ச்சி வசப்பட்டு மனம்திரும்பியது போல உணர்கிறோம். ஆவியானவரின் கிரியை இல்லாமல் மனம்திரும்பினால் அது உண்மையான மனம்திரும்புதல் கிடையாது.
"..........உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்". உண்மையான மனம்திரும்புதலில்,அறியாமை என்ற இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடவேண்டும். வேதத்தை ஆவியானவரின் உதவியோடு அறியவேண்டும். விருத்தசேதனம் செய்யப்படாத இருதயத்தை வைத்து சத்தியத்தை அறிந்துக்கொள்ளமுடியாது. கள்ள உபதேசத்தால் கடினப்பட்டு போன இருதயத்தை இருபுறம் கறுக்குள்ள வேதவசனத்தை வைத்து நுனித்தோலை நீக்கவேண்டும். கள்ள உபதேசத்தின் மூலம் தேவ வசனத்தை ஒரு கோணத்திலிருந்துதான் அறிந்திருக்கிறோம். மற்ற கோணத்திலிருந்து வேத வசனத்தை ஆராய்ந்து படிக்கும்போது முழு சத்தியத்தை அறிந்துக்கொள்கிறோம். சாத்தான் இயேசுவை வேதவசனத்தை ஒரு கோணத்தில் போதித்து சோதித்தான். ஆனால் யேசுவோ அதே சத்தியத்தை சாத்தான் மறைக்கப்பட்ட வேத வசனத்தைக் காண்பித்து சாத்தானை தோற்கடித்தார். "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது"(எபிரேயர் 4:12).
"தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்......சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள், நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன்".
தேவமக்கள் வஞ்சிக்கப்பட்டு ஏமாந்து போகாமலிருக்க தேவ சபைகளில் எக்காளம் ஊதவேண்டும். தேவ வசனத்தின் சத்தியத்தால் கட்டப்பட்ட அரணான ஆவிக்குரிய இடங்களில் குடியேற வேண்டும். நமக்கு பாதுகாப்பு தேவவசனத்தின் சத்தியத்தின் கீழே தான். சிறு குழுக்களாக கூடி தேவவசனத்தை ஆராய்ந்து சத்தியத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு round table bible study குழு. ஒரு பிரசங்க பீடத்திலிருந்து வரும் செய்தியை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. Berean சபையைப்போல வேத ஆராய்வு செய்து சத்தியத்தை கற்றுக்கொள்ளவேண்டும்.
"சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள், நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன்.
உன் தேசத்தைப் பாழாக்கிவிடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.
அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் மடிந்துபோம்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
தனது சொந்த மக்களின் மேலேதான் தேவனின் நியாயத்தீர்ப்பு ஆரம்பிக்கிறது. மகா சங்காரம் வந்து தேவ வசனத்திற்கு கீழ்ப்படியாத மக்களின் மேலே வருகிறது.அந்திக்கிறிஸ்துவாகிய ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் நமது சபைகளையும், குடும்பங்களையும் அழிக்க வருகிறான். அவனின் ஆவி ஏற்கனவே நமது சபைகளிலும், ஊழியங்களிலும் செயல்பட்டு வருகிறது. நாம் வஞ்சிக்கப்பட்ட பூமியில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். மோட்ச பயணத்தின் கதையில் enchanted land என்று கூறப்படுகிறது. இந்த கடைசி நாட்களில் நமது சபை தலைவர்களின் இருதயங்கள் ஏமாற்றப்பட்டு மடிந்துபோம். தீர்க்கதரிசிகள் முன்கூட்டி அறியாத பயங்கரமான காரியங்கள் நடக்கும்போது அவர்களே திகைப்பார்கள்.
தீர்க்கதரிசன புத்தகத்தில் ஆவியானவர் நம்மை எச்சரிக்கும்படி கடினமானதும் பயங்கரனமானதுமான வார்த்தைகளை உபயோக்கிறார். அழிவைக்குறித்து உவமானங்கள் நமது உள்ளத்தில் தேவபயத்தை உருவாக்குவதற்காகத்தான். நம்மை இவ்விதமாக அழித்துப்போடுவார் என்று அநேக உவமானங்கள் கூறி எச்சரிக்கிறார். சிறு பிள்ளைகளை எச்சரிப்பதற்கு பெற்றோர் அநேக உவமானங்களை கூறி வருகிறார்கள்.
பொல்லாத காலத்தில், கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படி நாம் இரட்டைக் கட்டிக்கொண்டு; புலம்பி அலறவேண்டும்.
"அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.
வனாந்தரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிக்கும் என்று அக்காலத்திலே இந்த ஜனத்தோடும் எருசலேமோடும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
இதைப்பார்க்கிலும் பலமான காற்று என் காரியமாய் வரும்; இப்பொழுது நானும் அவர்களோடே நியாயம் பேசுவேன்.
இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போலிருக்கிறது; அவன் குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ! நாம் பாழாக்கப்படுகிறோமே".
நமக்கு சமாதானமும் ஆசிர்வாதமும் வருமென்று சொன்ன தீர்க்கத்தரசிகளின் கண்களின் முன்னாலே மிகுதியான மோசத்தையும் பட்டயத்தையும் வரப்பண்ணுவார். தீக்காற்று, பலமான காற்று போல தேவக்கோபம் வெளிப்படும். அந்திக்கிறிஸ்து மேகங்களைப்போல எழும்பிவருவான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போலிருக்கும்.
"எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்".
நமது இருதயத்தில் பொல்லாப்பு இருக்குமானால் நாம் இரட்சிக்கப்படமுடியாது. உண்மையான மனம்திரும்புதலில், பொல்லாப்பை கழுவி இருதயத்தை சுத்திகரிக்கவேண்டும்.
"தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்பண்ணுகிறது. ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள்;
இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்தசத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்."
நாம் செய்யும் தீங்கை மறைக்கமுடியாது. அது அம்பட்டம் ஆகி எல்லோரும் காணும்படி பிரசித்தம் பண்ணப்படுகிறது. நமக்கு விரோதமாக குரல்கள் எழுப்பப்படும். நாம் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தோம் என்று எங்கும் அறிவிக்கப்படும்.
உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.
" என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.
நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்",
உண்மையான தீர்க்கத்தரசிகள் தேவ மக்கள் தண்டிக்கப்படும்போது எக்காள சத்தத்தைக்கேட்டு உள்ளத்தில் வேதனையடைந்து மேலே கூறியுள்ளதைப்போல அங்கலாய்ப்பார்கள்.
"பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.
தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
எப்போது தேவமக்கள் பாவம் செய்து தேவனிடமிருந்து விலகிப் போகிறார்களோ தேவனுடைய பார்வையில் பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருக்கிறது. வானங்கள் ஒளி கொடுக்காமலிலுக்கிறது. பர்வதங்கள், படைத்த படைப்புக்கள் போன்றவைகள் குறைவு படுகின்றன. ஆகிலும் தயவு காண்பிக்கும் சர்வசங்காரம் செய்ய தயங்குகிறார்.
"இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.
பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள்.
கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்".
பூமியும் வானங்களும் பாதிக்கப்படும். ஆண்டவரின் நியாயத்தீர்ப்பின் காலத்தில் எவ்வளவு வல்லமை பெற்ற தேவ மனிதர்களாக இருந்தாலும், மனம்திரும்பாத பட்சத்தில் தண்டிக்கப்படுவார்கள். அந்நிய ஜாதி மக்கள் சீயோன் குமாரத்திகளாகிய, தேவ பிள்ளைகளை தண்டிக்க எழும்புவார்கள்.