புதிய பூமி, புதிய எருசலேம் ஆசீர்வாதங்கள்

ஏசாயா 65ம் அதிகாரம் புதிய பூமியை பற்றியும் புதிய எருசலேமைப் பற்றியும் அறிவிக்கிறது.

 

"என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்". கிறிஸ்துவை குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்கள், அவரைத் தேடாதிருந்தவர்கள் இப்போது கண்டறிகிறார்கள். அவர்களுக்கு இதோ, இங்கே இருக்கிறேன் என்று வெளிப்படுத்துகிறார்.

 

"நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன். அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து. நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்". கிறிஸ்தவர்கள் என்றும் இரட்சிக்கப்பட்டவர்கள் என்றும் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் என்றும் கூறிக்கொண்டு "நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன்" என்று பரிசுத்தாவியானவர் அங்கலாய்க்கிறார்.

 

அந்த ஜனங்கள் தேவனின்  சந்நிதியிலே நித்தம் அவருக்குக்  கோபமுண்டாக்கி, அவருக்கே  அல்லாமல் மனிதர்களுக்கு பலி செலுத்தி, ஆவிக்குரிய வாழ்க்கையில் செத்துப்போய், ஆண்டவரின் வார்த்தைக்கு/சித்தத்திற்கு விரோதமான கூட்டங்களோடு ஐக்கியம் வைத்து, இச்சையைத் தூண்டும் கூட்டங்களில் இராத்தங்கி, தங்களின் சரீரமான பாத்திரத்தை கெடுத்து தங்களை பரிசுத்தவான்கள் என்று காண்பித்துக்கொள்வபவர்கள் தேவனின் "கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்".

 

"இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்". நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும் அக்கிரமும் அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

 

"உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுவேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்". ஆண்டவர் நாம் செய்த அக்கிரமங்கள், பரிசுத்த சரீரத்தை பாவத்தால் தீட்டுப்படுத்தி செய்த காரியங்களை நமது  மடியிலே அளப்பார். நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமலிருந்தால் நமது பிதாக்களின் பாவங்களையும் நம்மிடம் விசாரிப்பார்.

 

"கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்". ஒரு சபையாகிய திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது பொறாமையால் அதை அழிக்கக்கூடாது. அதில் ஆண்டவரின் ஆசீர்வாதம் இருக்கிறது.

 

"யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள்". கர்த்தர் தனக்கு சித்தமான ஊழியரை தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் கூட்டத்திலிருந்து எழும்பப்பண்ணுகிறார். அந்த ஊழியரை ஒரு வித்தையை போல எழுப்புகிறார். அந்த வித்து ஒரு பெரிய ஆல மரமாகும். அந்த ஊழியர் கடினமான இடங்களில் ஊழியம் செய்து அதைச் சுதந்தரித்துக்கொண்டு அந்த இடங்களில் ஊழியங்களை நிறுவி வாசம் பண்ணுவார்கள்.

 

"என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும்". தேவனை தேடும் ஜனங்கள் தேவனின் ராஜ்யத்திலுள்ள  சாரோன் ஆட்டுத்தொழுவதில் ஆவிக்குரிய ஆகாரத்தால் போஷிக்கப்படுவார்கள். பாதுகாப்பான  ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடை அவர்களுக்கு புகலிடம் கொடுக்கிறது. இந்த இடத்தில் ஓநாய்கள் போன்ற கள்ள ஊழியர்கள் பிரவேசிக்கமுடியாது.

 

"ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறைய வார்க்கிறவர்களே". எல்லா பாதுகாப்பும், ஆவிக்குரிய உணவும் கிடைத்த இடங்களை விட்டுவிட்டு அந்திக்கிறிஸ்துவின் பந்திக்குப் போய் ஆகாரம் உண்டு பலி செலுத்தும் மக்களை நோக்கி தேவன் உரைப்பது,

 

"உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுஉத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்". தேவனை விட்டு வழிவிலகிப்போகும் தேவமக்களை ஆண்டவர் அந்திக்கிறிஸ்துவின் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பார். அவர்கள் தேவனின்  பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவருக்குப்  பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டவர்கள். அவர்கள் ஆவிக்குரிய மரணம் அடைவார்கள்.

 

"ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

 

இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்பி, மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவார்கள் ".  உண்மையான ஊழியக்காரர் ஆசிர்வதிக்கப்படுவார்கள். அவர்கள் குறைவு படமாட்டார்கள். ஆனால் தேவனின் சித்தத்தை செய்யாத தேவமக்களோ குறைவு பட்டு தங்களின் தேவைக்காக தட்டுகளை வைத்து பிட்சை எடுப்பார்கள்.  "எனக்குத்  தாருங்கள்" என்று மக்களிடம் விண்ணப்பம் செய்வார்கள். உண்மையான ஊழியர்கள் சந்தோஷப்படுவார்கள். ஆனால் கள்ள ஊழியர்களோ வெட்கப்பட்டு மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்பி, மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவார்கள்.  

 

"நான் தெரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப்போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்". அந்த பொல்லாத ஊழியர்கள் தேவனை தெரிந்துகொண்டவர்களுக்கு ஆசீர்வாத வார்த்தையை கொடுக்காமல் சாபவார்த்தையை கொடுக்கிறார்கள். அவர்கள் என்னதான் செய்திகளை கொடுத்தாலும் அது ஆசீர்வாதமாக மாறாது. உண்மையான ஊழியருக்கு தேவன் "வேறே நாமத்தைத் தரிப்பார்".

 

"அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறந்துபோயின". பூமியில் தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான். ஒரு உண்மையான தேவ ஊழியன் இயேசுவின் நாமத்தில் தன்னை ஆசீர்வதிக்கிறான். அப்போது முந்தின இடுக்கண்கள் தேவனால் மறக்கப்பட்டு, அவைகள் அவரின் கண்களுக்கு மறந்துபோயின.

 

ஏனன்றால் "இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

 

நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்".

 

ஒரு உண்மையான ஊழியனுக்கு ஒரு புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறார்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

 

"நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.

 

நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை". இந்த புதிய சிருஷ்டிப்பு தேவனின் தீர்க்கதரிசனத்தால் உருவாகுகிறது. அந்த புதிய எருசலேமின்மேல் அவர்கள் களிகூர்வார்கள். அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. கடந்த காலத்தின் அழுகையை மறந்து புதிய எருசலேமில் சந்தோஷத்தின் குரலை கேட்கலாம்.

 

"அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்". அந்த புதிய எருசலேமில் விசுவாசத்துடன் பிரவேசிப்பவர்கள் நீண்ட காலமாக வாழ்வார்கள். பூரணமான வயது என்றால் ஒரு எண்ணினால் மதிப்பிட முடியாது. ஒரு நிறைவான வாழ்வுடன் தேவனுக்கு சேவை செய்து சந்தோஷத்துடன் "முடிந்தது" என்று கூறி இந்த உலக ஓட்டத்தை நிறைவேற்றுவது. நீடிய ஆயுசு நாட்களை தேவன் கூட்டிக்கொடுப்பது. நமது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரபிள்ளைகள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட  ஆயுசுள்ளவர்களாகவும் இருப்பார்கள். "அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்...நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்" (சங்கீதம் 91:15-16). நாம் நோய்வாய்ப்பட்டு அவரை நோக்கி கூப்பிடும்போது சரீர நோயை குணமாக்கி நீடித்த நாட்களால் நம்மைத் திருப்தியாக்குகிறார்.

 

"நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்". பாவியாக வெறும் நூறு வயசு வரை வாழும் பாவியோ சபிக்கப்படுவான். பரிசுத்தமாக வாழும் வாழ்க்கையை தேவன் ஆசீர்வதிக்கிறார்.

 

"வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்". நாம் நமது சொந்த உழைப்பினால் வீடுகளைக் கட்டி குடியேறும்போது எல்லா பாதுகாப்பும் நமக்கு கிடைக்கும். நமது தொழில்களை, வேலைகளை தேவனுக்குப்  பயந்து நீதி, நேர்மையோடு செய்யும்போது அதன் கனியைப் புசிப்போம்.

 

"அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்". நமது ஆதாயத்தை வேறு யாரும் அபகரிக்கமுடியாது. நமது பணத்தையும், சொத்தையும் தேவன் தனது தூதர்களின் மூலம் பாதுகாப்பார். நமது கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்போம்.

 

"அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்". நமது உழைப்பை தேவன் ஆசீர்வதிக்கிறார். நமது பிறக்கும் அல்லது பிறந்த பிள்ளைகள், பேரபிள்ளைகள் எல்லோரும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.

 

"அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்". இந்த புதிய எருசலேமில் பிரவேசித்து, பாவத்தை மேற்கொண்டு, தேவனின் சித்தத்தின்படி வாழும்போது, நாம்  கூப்பிடுகிறதற்குமுன்னே தேவன்  மறுஉத்தரவு கொடுப்பார்; நாம் நமது குடும்பத்தில் ஒரு காரியத்தை பேசும்போது தேவன் கேட்பார். நீண்ட ஜெபம் பண்ணும்போது அல்ல, நாம் பேசும்போதே தேவன் கேட்பார்.

 

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் வாழ்கை தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்". நாம் வாழும் இந்த புதிய எருசலேமில் ஒரு நிம்மதியான வாழ்க்கையை காணலாம் . அதாவது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து வாழும்போது ஒரு வன்முறை இல்லாத அமைதியைக் காண்போம். சிங்கம் மற்ற மிருகங்களை வேட்டையாடி இரை உண்ணாமல் புல்லை தின்னும்போது கொடுமை, வன்முறை நடைமுறையில் இருக்காது. அதேபோல நிம்மதியான  வாழ்க்கை. தீங்கு செய்வார் யாரும் இருக்கமாட்டார்கள். சாத்தானின் தலையை முறிக்கப்பட்டு, அவனின் செயல்கள் வலுவிழந்துக் காணப்படும் ஒரு தேவனின் பிரசன்னம்.

 

நாம் எல்லோரும் இந்த புதிய பூமியில் நமக்காக சிருஷ்டிக்கப்பட்ட புதிய எருசலேமில் பிரவேசிப்போமாக. இதுதான் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேனும் பாலும் ஓடும் தேசம். பியூலா தேசம். நாம் வாழ்க்கைப்படும் தேசம். கைவிடப்படாதவர்களாக வாழும் தேசம்.

 

எபிரெயர் 3, 4 ம் அதிகாரங்களில் தேவனுடைய இளைப்பாறுதலை பற்றிப்  படிக்கிறோம். இந்த இளைப்பாறுதலில் நாமும் விசுவாசத்தில் பிரவேசிக்கவேண்டும். "ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.... ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை".