சீயோனின் குமாரத்திகளும், எருசலேமின் தேவமக்களும் 

ஏசாயா 62ம் அதிகாரத்தில் தேவன் நம்மேல் எவ்வளவு அன்பும் கரிசனையும் வைத்திருக்கிறார் என்பதை அறியலாம்.

 

"சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்".  சீயோனில் உள்ளவர்கள் ஆண்டவரின் அன்பை ருசித்து, ஆண்டவருக்கென்று பணிபுரிந்து தங்கள் அழைப்பில் நிலைத்திருப்பவர்கள். எருசலேமில் வாசம் பண்ணுகிறவர்கள் ஆண்டவரின் அன்பை ருசித்து ஆண்டவருக்கென்று தங்களால் முடிந்தவரை ஏதாவது பணி புரிந்து இந்த உலகத்தில் வாழ்கிற தேவ மக்கள். இந்த இரண்டுவிதமான மக்களையும் தேவன் பட்சபாதம் காண்பிக்காமல் நேசிக்கிறார். துன்ப நாட்களிலே அவர்களுக்காக தேவன் மவுனமாயிருக்கமாட்டார். அவர்களின் நீதியை உலகத்தில் வெளிப்படுத்தி பிரகாசிக்கப்பண்ணுகிறார். நீங்கள் எங்கே பணிபுரிகிறீர்களோ அங்கே உங்களின் நீதி வெளிப்படும். உங்களின் பாதுகாப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படும். அப்படி நீதியும் பாதுகாப்பும் வெளிப்படும்வரை தேவன் அமைதியாக இருக்கமாட்டார். நாம் வணங்கி ஆராதிப்பது எப்போதும் உயிரோடு இருப்பவரைத்தான். உங்களுக்கு ஆபத்து, நோய்களிலிருந்து பாதுகாப்பவர். அவரை முற்றிலும் நம்பவேண்டும். மனிதரை நம்பவேண்டாம்.

 

"ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்". உங்கள் நீதியையும், உங்கள் மூலம் வெளிப்படும் தேவமகிமையை இந்த உலகத்தாரும், சகல ராஜாக்களும் காண்பார்கள். உங்களை தேவன் புழிதியிலிருந்து உயர்த்தும்போது உங்களை எல்லோரும் ஒரு புது நாமத்தால் அழைப்பார்கள். இந்த புதிய நாமத்தை  கர்த்தருடைய வாய் சொல்லும். என்ன பெரிய பாக்கியம்.

 

மேலே கூறியதுபோல தேவன் உங்களை உயர்த்தி புதிய பெயரில் நீங்கள் அழைக்கப்படும்போது நீங்கள் (உங்களைத்தான்) "கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், தேவனுடைய கரத்தில்" ராஜமுடியுமாயிருப்பீர்கள். உங்களுக்கு வேண்டிய ஞானத்தை ஆண்டவர் தருவார். மனிதர்களின் கைகளில் அல்ல, தேவனுடைய கையில் அலங்காரமான கிரீடமாக இருப்பீர்கள். ஆளுவதற்கு வேண்டிய அதிகாரத்தை நீங்கள் உபயோகித்து தேவனின் ராஜமுடியுமாயிருப்பீர்கள். "நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்". இவ்வளவு வருடங்கள் நீங்கள் துன்பம் அனுபவித்து எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டு பாழான தேசம் என்று அழைக்கப்பட்டு ஒரு மூலையில் இருந்தீர்கள். இனி நீங்கள்  எப்சிபா என்றும், உங்கள்  தேசம் பியூலா என்றும் சொல்லப்படும். கர்த்தர் பிரியமாயிருப்பதால் உங்கள்  தேசம் வாழ்க்கைப்படும். உங்களின் பெயரை ஆண்டவர் பிரஸ்தாபம் பண்ணுவார்.

 

"வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்". உங்களுக்கென்று ஆவிக்குரிய மக்களின் சிறு கூட்டம் இருக்கும். அவர்கள் உங்களுடன் இணைந்து உங்களுக்கு உத்தமாகவும் உற்சாகத்துடனும் உதவி பணிபுரிவார்கள். மணவாளனான கிறிஸ்து உங்கள் மேல் மகிழ்ச்சியாயிருப்பார். ஆகவே அவருக்கு விரும்பாத எந்த காரியத்தையும் செய்யவேண்டாம்.

 

"எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது".  எருசலேமில் வாசம் பண்ணும் தேவமக்கள் தங்களது தேவராஜ்யத்தின் மதில்கள் மேல் தங்களின் தீர்க்கதரிசன கண்களை வைத்து ஜாமக்காரராக விழிப்புடன் இருந்து அந்திகிறிஸ்துவின் போதனைகள் உள்ளே நுழையாதபடி பகல்முழுதும், இராமுழுதும் விழிப்புடன் இருந்து கர்த்தரின் நாமத்தை பிரஸ்தாபம் பண்ணவேண்டும். கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்றும் அவரின் குணாதிசயங்கள் எப்படியென்றும் நீங்கள் தேவவசனத்தின் படி போதிக்கவேண்டும். இந்த காலத்தில் நாம் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். வெறும் அற்புதம் செய்யும் கிறிஸ்து அல்லாத அநேக கள்ள கிறிஸ்துக்கள் நம் மத்தியில் உலாவி வருகின்றார்கள். நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது. அப்படியிருந்தால் கள்ள கிறிஸ்துக்கள் தேவராஜ்யத்தினுள்ளே பிரவேசித்து தேவமக்களை வஞ்சிக்க முயற்சி செய்வார்கள்.

 

"அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்". எருசலேமானது பூமியிலே ஸ்திரப்படுத்தப்பட்ட வேண்டும். கிறிஸ்துவாகிய சரீரத்தில் அநேக குறைகள் இருக்கிறது. அவைகள் நிவர்த்தியாகவேண்டும். சபை பரிபூரணப்பட தேவவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் தேவனை அமர்ந்திருக்கவிடாதிருங்கள். தேவனுக்கு ஏறெடுக்கும் ஜெபங்கள், தேவமக்களுக்கு போதிக்கும் உண்மைகள் மூலம் தான் தேவன் நமது மத்தியில் கிரியை செய்வார். இடைவிடாமல் நாம் இந்த இரண்டு காரியங்களையும் செய்யவேண்டும். இப்போது வெறும் ஜெபங்கள் மாத்திரம் ஏறெடுக்கப்படுகிறது. தேவ வசனத்தின் சத்தியங்கள் பிரசிங்கப்படுவதில்லை. தேவமக்களுக்கு எப்படி சத்தியத்தை பகுத்தறிவது என்று ஆலோசனைகளை பிரசங்கிக்கப்படவேண்டும். 

 

"இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்". நீங்கள்  நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் அழைக்கப்பட்டபின்பு உங்களது கைகளின் ஆசீர்வாதங்களை உங்களது சத்துருக்கள், அந்நிய புத்திரர்கள் இவைகளை அபகரித்துக்கொள்ளமாட்டார்கள். தேவன் தாமே உங்களை எல்லா தீங்குகளிலிருந்தும்  தமது வலதுகரத்தின் மூலம் காப்பாற்றி வழிநடத்துவார். 

 

"அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்". உங்களின் கைகளின் பிரயாசங்களை நீங்களே புசித்து கர்த்தரை துதிப்பீர்கள். எந்த அசுத்தமமும் இல்லாமல் அவரின் பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்து   இதைக் குடிப்பீர்கள். உங்களின் குடும்பத்தார் உங்களை சேர்ந்தவர்கள் உங்களோடு பகிர்ந்து இந்த ஆசிர்வாதத்தை பெறுவார்கள்.

 

"வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்; ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்". தேவனுடைய வசனத்தின் படிதான் உங்கள் ஊழியங்கள் இருக்கவேண்டும். அவரின் வழிகளை அவரது வார்த்தையின் மூலமாகத்தான் அறிந்துகொள்ளமுடியும். உலகத்தின் மக்களின் வழியை செவ்வைப்படுத்துவது நீங்கள் தான். அரசியல்வாதிகள் அல்ல. அவர்களை பாதையை காண்பித்துக்கொடுங்கள். உயர்த்திக்காண்பிக்கவேண்டும். அவர்கள் நடக்கமுடியாமல் தடுக்கும் கற்களைப் பொறுக்கிப்போடுங்கள். மக்களுக்கு உங்களது பொருட்களால் உதவி செய்யுங்கள். அவர்கள் தேவனை அறிந்துகொள்ளாமல் இருப்பது கற்கள் தான். வறுமை ஒரு கல். கல்வியறிவு இல்லாமை ஒரு கல். ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்காக போராடி கொடியை ஏற்றுங்கள்.

 

"நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது, இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடையாந்தரம் வரைக்கும் கூறுகிறார்".   சீயோன் குமாரத்திகளுக்கு உங்களது தீர்க்கதரிசன ஊழியம் மிகவும் அவசியம். அவர்களை தேற்றி உற்சாகப்படுத்தி வாழ்க்கையிலும் ஊழியப்பாதையிலும் நிலை நிறுத்தவேண்டும். "இதோ, உன் இரட்சிப்பு வருகிறது, இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று சொல்லவேண்டும். பூமியின் கடையாந்தரம் வரைக்கும் உள்ள  சீயோன் குமாரத்திகளுக்கு உங்களின் தீர்க்கதரிசன வார்த்தைகள் போய் சேரவேண்டும்.

 

சீயோனின் குமாரத்திகளையும், எருசலேமில் வாசம் செய்யும் தேவமக்களையும் "பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்"

 

நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்". உங்களைக்  குறித்து தேவன் கூறும் சாட்சி இதுதான்.