பின்மாறிய தேவமக்களுக்கு எச்சரிப்பு 

எரேமியா 2 ம் அதிகாரம் பின்வாங்கிப்போன இஸ்ரவேல் மக்களை எச்சரித்து தீர்க்கதரிசி எழுதுகிறார். இன்று இந்த தீர்க்கதரிசன புத்தகத்தை பின்வாங்கிப்போன சபைகளுக்கும் ஊழியங்களுக்கும் பொருந்தும். தேவ மக்களை வழிநடத்தும் தலைவர்கள் கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் கொடுத்த ஆலோசனைகளையும், சட்டங்களையும் போதியாமல் அவர்களின் சொந்த வழிகளில் தேவ மக்களை வழிநடத்தி வருகிறார்கள். அதன் நிமித்தமாக அவர்கள் பிரவேசித்த புதிய ஏற்பாட்டின்  செழிப்பான கானான் தேசத்தின் கனியையும் நன்மையையும் புசியாமல் தேவனை விட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, தேசத்தைத் தீட்டுப்படுத்தி, தேவனின் சுதந்தரத்தை அருவருப்பாக்கிவருகிறார்கள்.

 

"கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்".  ஆதலால் இன்னும் கர்த்தர்  நம்மோடும்  நமது பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடிவருகிறார்.

 

"எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்". இன்று நாம் தேவர்களல்லாத மனிதர்களைப்  பின்பற்றி தேவன் கிறிஸ்துவின் மூலமாக நமக்குக் கொடுத்த மகிமையை இழந்து அந்த மனிதர்களின் மகிமைகளை ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே கிறிஸ்துவின் மகிமை நம்மில் வெளிப்படாமல் அந்த மனிதர்களின் மகிமையை நாம் வெளிப்படுத்திவருகிறோம். இதனால் தான் நமது சபைகளில் உயிர்மீட்சி வராமலிருக்கிறது. மனிதரின் மகிமை வீணானவைகள். "வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்".

 

எரேமியா 2ம் அதிகாரத்தில் தேவமக்களாகிய நாம்  பின்மாறிப்போய்  இரண்டு முக்கியமான தீமைகளைச் செய்கிறார்கள் என்பதை காணலாம்.

 

"என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்".

 

"என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்". ஜீவத்தண்ணீரான கிறிஸ்துவை விட்டுவிட்டோம். அவரை பின்பற்றாமல் மனித கட்டளைகளை பின்பற்றிவருகிறோம். இன்று அநேக கள்ள போதனைகள் நம்மை கிறிஸ்துவை விட்டு பிரிக்கிறது. அந்நிய பாஷையில் பேசி கிறிஸ்துவை அழைக்கவேண்டும். காணிக்கை கொடுத்து கிறிஸ்துவின் பிரசன்னத்தைப்  பெறவேண்டும். உங்களில் வாசம் செய்யும் கிறிஸ்துவை வேறு எங்கேயோ ஓடிப்போய் அவரை தரிசிப்பது. இவைகளெல்லாம் சில கள்ள போதனைகள். ஆண்டவரின் ஆசீர்வாதம் தங்கி நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளைத் தொட்டிகளைத் நமக்கு வெட்டிக்கொண்டுவிட்டோம் . கிறிஸ்துவை நமது வாழ்கையின் மூலம் காண்பிக்கமுடியாத நிலைமை. தனி ஜெபம் செய்து ஆண்டவரோடு பேசுவது கிடையாது. வேதத்தை வாசித்து தியானிப்பது கிடையாது.

 

"உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு இதை நேரிடப்பண்ணினாய்?". இஸ்ரவேல் மக்களை தேவன் மோசேயின் மூலம் நடத்திக்கொண்டுபோகும்போது அவர்கள் தேவனை விட்டுப்போனதுபோல நீங்கள் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விட்டு வழிவிலகிப் போகிறீர்களா?

 

"ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் உன்னோடே வழக்காடுவேன்". யேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டபின்பும் பாவம் செய்தால் குற்றமுள்ளவர்களாக மாறிவிடுகிறோம். "நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

 

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

 

நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது" (1 யோ 1:8-10). ஆண்டவர் நம்மோடு வழக்காடுவார்.

 

"நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.

 

நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது". நீங்கள் கிறிஸ்துவின் பாதையிலிருந்து வழிவிலகி போகும்போது புறஜாதியார் உங்களை வெட்கப்பட செய்வார்கள். நீங்கள் இப்போது வாழ்ந்து வரும் வாழ்க்கையை விட்டுவிட்டு தேவனை நோக்கி திரும்பவேண்டும்.