Jeremiah 9th chapter
" ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்".
ஒரு உண்மையான ஊழியன் அல்லது தீர்க்கதரிசன ஊழியன் பின்மாறிப்போகும் தேவமக்களுக்காக அழுது ஜெபிக்கவேண்டும். சீயோன் குமாரத்தி தேவ கோபத்தால் அழிக்கப்படாமல் இரவும்பகலும் அழவேண்டும். எரேமியா தேவமக்களை விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள் என கூறுகிறான். அவர்களை விட்டு விலகிப்போவது நலமாயிருக்கும் எனவும் கூறுகிறான். இன்று அநியாயமாக சம்பாதிக்கும் மக்களிடமிருந்து தீர்க்கத்தரசிகள் காணிக்கை வாங்கிக்கொண்டு அவர்களை ஆசிர்வதிக்கிறார்களா? காணிக்கை வாங்க மறுத்து அவர்களுக்காக தனி அறையில் கண்ணீர் வடித்து ஜெபிக்கிறார்களா? இன்று வியாபாரிகள் கொடுத்த கோடிகணக்கான கறுப்பு பணம் ஊழியர்களிடம் இருக்கிறதா? அந்த பணத்தை வைத்து கட்டிடம் கட்டி தேவனின் பெயரில் ஊழியம் செய்துவருகிறீர்களா? அவர்களுக்கு ஐயோ.
"அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்த தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
கள்ள தீர்க்கதரிசனம் உரைக்கும் அல்லது தேவவசனத்தை திரித்து தங்கள் நாவாகிய வில்லைபோல வளைத்து பொய்யை பிரசங்கிக்கும் போதகர்கள் தேவனை அறியாதிருக்கிறார்கள்.
"நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்.
கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்"
.
இன்று நமது மத்தியில் வசிக்கும் மோசம் பண்ணுகிற எந்த மனிதனையும் நம்பவேண்டாம். அவர்கள் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள். இப்படிப்பட்ட மாறுபாடான மக்களை விட்டு விலகவேண்டும். கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறார்கள். இவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் அல்லது அபிஷேகப்பட்டவர்கள் இல்லை. வாழ்க்கையில் உண்மை, நீதி இல்லாதவர்களை தேவன் அறியார்.
"ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?
அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப்பதிவிடை வைக்கிறான்.
இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்".
கர்த்தர் தனக்கு கீழ்ப்படியாத மக்களையும் அவர்களின் தலைவர்களையும் அக்கினியில் உருக்கி புடமிடுகிறார். இப்படி நடத்தாமல் தேவனுக்கு வேற வழியில்லை. அவர்களின் கபடம் பேசும் கூர்மையாக்கப்பட்ட அம்பு. வாயினாலே அயலாரோடு சமாதானமாய்ப் பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் இருக்கிறது. உள்ளங்களை அறியும் ஆண்டவரை ஏமாற்றமுடியாது. இவைகளினிமித்தம் அவர்களை தேவன் விசாரிக்கிறார். நீதியைச் சரிக்கட்டுகிறார்.
"மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாய் அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.
நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.
இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?"
தேவன் தான் நேசிக்கும் மக்களை தண்டிக்கும் முன்பு மனதுருகிறார். எப்படி அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று மேலேகூறிய வசனங்களில் வெளிப்படுத்துகிறார். கீழ்ப்படியாத பிள்ளைகளை பெற்றோர் எப்படி தண்டனை கொடுப்போம் என்று உவமானங்களோடு கூறி பிள்ளைகளின் உள்ளங்களில் ஒருவிதமான பயத்தை உண்டுபண்ணுகிறார்கள். தேவபயத்தை உணராதவர்கள் ஞானமுள்ளவர்கள் அல்ல.
"நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும்,
தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,
அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்".
இன்று கிறிஸ்துவின் கட்டளைகளளும் அப்போஸ்தலர்களின் கட்டளைகளளும் தான் நமக்கு நியாயப்பிரமாணம். நாம் அவரின் சத்தத்திற்கு கீழ்ப்படியாமல் என்னதான் ஆராதனை நடத்தி ஜெபம் பண்ணினாலும் அவரை பின்பற்றுபவர்கள் அல்ல. கள்ள போதர்களைத் தேடி அவர்களின் கூடாரத்தில் உட்காருவோமானால் நாம் பாகால்களைத் தான் பின்பற்றிவருகிறோம். நமக்கு புசிக்க கிடைப்பது பரலோக மன்னா கிடையாது. குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீர் தான். ஜீவத் தண்ணீர் கிடையாது. தேவனின் வசனத்தை கலப்படம் பண்ணி கொடுக்கிற பிரசங்கத்தை கேட்கும்போது நம்மில் வசாமையிருக்கும் பரிசுத்தாவியானவர் ஜீவத் தண்ணீர் கொடுக்கமாட்டார். பிச்சுக்கலந்த தண்ணீரைத்தை தான் தேவன் குடிக்கக்கொடுப்பார். ஆகவே "தேவ" செய்தி பிரசங்கிக்கபடும் எல்லா இடங்களிலும் போய் உட்கார்ந்து அந்த செய்தியை பரிசோதிக்காமல் அப்படியே நம்புவோமானால் தேவன் நம்மை புல்லுள்ள இடங்களிலிருந்து நீக்கி சிதறடிப்பார். அவரின் பட்டயம் நம்மை நிர்மூலமாக்கும். ஜாக்கிரதை! கடைசி காலத்தில் வஞ்சிக்கப்படாமலிருப்போமாக. ஜீவனை தப்ப மலையுட்சியில் ஓடிப்போய் கிறிஸ்துவோடு தனியாக வேதத்தை கையில் வைத்து ஐக்கியபடவேண்டும்.
"நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரி சொல்லக்கடவர்கள்.
எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்".
தேவனிடத்தில் நாம் நீதிமான்கள் என்று எண்ணிக்கொண்டு அவரின் பிரசன்னத்தில் பிரவேசிக்கக்கூடாது. நம்மில் வாசம் செய்யும் "ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்....ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்". (ரோமர் 8:26-27). நமக்கு பழைய ஏற்பாட்டின் புலம்பற்காரிகளை அழைக்கவேண்டாம். நீங்கள் தான் தனி அறையில் யாரும் காணாதபடி ஆவியானவரின் உதவியுடன் அழுது ஜெபிக்கவேண்டும்.
கள்ள உபதேசத்தால் சீயோனின் குமாரத்தி எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டுவிட்டாள். அவள் கலங்கியிருக்கிறாள்; கானான் தேசத்தை தேசத்தை விட்டுப்போகிறாள், அவளின் வாசஸ்தலங்கள் ளை கவிழ்த்துப்போடப்பட்டு என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தத்தை நாம் கேட்கவேண்டும்.
"ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது".
நாம் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கவேண்டும். நமது செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும். நமது ஆவிக்குரிய பிள்ளைகளுக்கு எப்படி ஜெபம் பண்ணவேண்டும் என்று இயேசுவின் மாதிரி ஜெபத்தையும் கற்றுக்கொடுக்கவேண்டும். அப்போஸ்தலர் நடப்படிக்கைகளில் அப்போஸ்தலர்கள் ஜெபித்த விதத்தையும் கற்றுக்கொடுக்கவேண்டும். ஆவியானவர் எப்படி ஜெபத்தில் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்ய வழி நடத்துகிறார் என்பதையும் கற்றுக்கொடுக்கவேண்டும்.
"மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தாரென்று சொல்.
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
தேவனின் நியாத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறது. நமது வேத அறிவோ, ஞானமோ, பராக்கிரமோ, ஐசுவரியமோ நம்மை காக்காது. இன்று தேவபிள்ளைகள் ஆவிக்குரிய ஜீவியத்தில் செத்த சவங்களை போல இருக்கிறார்கள்".
"மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
இன்று நாம் நமது ஊழியத்தை குறித்தும், நமது தாலந்துகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறோம். மேலே கூறியுள்ள தேவ வசனத்தை மனதில் பதித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
"இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,
எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்".
தேவனது நியாத்தீர்ப்பு பின்மாறிப்போன தேவமக்களின் மேலே பட்சபாதம் இல்லாமல் வருகிறது. எந்த ஆவிக்குரிய அனுபவம் பெற்றவர்களாக இருக்கட்டும். எல்லோர் மேலும் வருகிறது.