வேலி எடுக்கப்படும் நேசரின் தோட்டங்கள்

Previous ...Isaiah4


ஏசாயா 5 அதிகாரம் வசனங்கள் 1 10 வரை தியானிப்போம். நேசரின் திராட்சத்தோட்டத்தைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் என்பது தேவன் நேசராக தெரிந்துக்கொள்ளப்பட்ட இஸ்ரவேலின் வம்சமே. தீர்க்கதரிசன புத்தகமாவது இப்போது புதிய ஏற்பாட்டின் படி, கிறிஸ்து நேசிக்கும் தன் சரீரமே.

தீர்க்கதரிசனத்தை சரித்திரத்திலிருந்து பிரித்து எடுத்து, அதை நமது சபைகளுக்கும் சுவிசேஷ ஊழியங்களுக்கும் (apply) பிரயோகிக்கலாம். சரித்திரம் நிறைவேறினாலும், தீர்க்கதரிசனம் இந்த உலகம் முடியும்வரை நிலைநிற்கும்.

நேசரின் ஒரு திராட்சத்தோட்டம் தோட்டம் மகா செழிப்பான மேட்டிலே உண்டு.

தேவனுடைய பிள்ளைகளை தேவன் இந்த திராட்ச தோட்டத்தில் (கிறிஸ்துவாகிய சரீரத்தில்) நடுகிறார். அவர் நம்மை "வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருக்கிறார்.

நமது ஜீவன்களிலுள்ள பாவங்களை சுற்றிக்கரித்து பரிசுத்த ஆவியானவரைக்கொடுத்து நம்மை நற்குல திராட்சச்செடிகளாக நடுகிறார். நமக்கென்று ஒரு சபையைக் கொடுத்து நம்மை தேவ பணியில் ஈடுபடும்படி ஒரு ஊழியத்தையும் கொடுக்கிறார். பின்பு நாம் நல்ல திராட்சப்பழங்களைத் கொடுக்கும்படி காத்திருக்கிறார்.

நமது வாழ்க்கையின் மூலம் கிறிஸ்துவின் கனிகள் வெளிப்படும்படி அநேக ஆண்டுகள் காத்திருக்கிறார். பின்பு நமது பணிகளின் மூலமாக நல்ல திராட்சப்பழங்களைத் தேடி வருகிறார்.

கிறிஸ்துவுக்கு சீடராக்குவது தான் தேவனின் முக்கியமான தரிசனம். இந்த தரிசனத்தை நிறைவேற்ற நாம் பலவிதமான பணிகளை செய்கின்றோம். இந்த பணிகளை அவரின் சித்தத்தின்படி செய்யும்போது நாம் அநேக ஆத்துமாக்களை நல்ல திராட்சப்பழங்களாக கொடுக்கிறோம். இன்று நாம் இதுபோல நல்ல திராட்சப்பழங்களைக் நமது வாழ்க்கையின் மூலமாகவும் , பணிகளின் மூலமாகவும் ஆண்டவருக்கு கொண்டுவருகிறோமா?

இன்று ஆண்டவர்களுக்கு சீடர்களை உருவாக்காமல் அநேக ஊழியர்கள் தங்களை பின்பற்றி அவர்களுக்கே சீடர்களாக மாற்றிவிடுகிறார்கள். அவர்களே ஆண்டவருக்கும் மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தர்களாக விளங்கி ஆண்டவருக்கென்று நல்ல திராட்சப்பழங்களைக் கொடுக்காமலிருக்கிறார்கள்.

நமது தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்துவின் கனிகளை வெளிப்படுத்தாமல் ஜீவிக்கும்போது, நமது ஊழியங்கள் மூலம் நல்ல திராட்சப்பழங்களை உருவாக்க முடியாது.

"அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது". இன்று ஆண்டவருக்கென்று சீடர்களை உருவாக்கி ஜான் வெஸ்லி, வில்லியம் கேரி, ஜட்ஸன், சாது சுந்தர் சிங், போன்ற நல்ல நல்ல திராட்சப்பழங்களை உருவாக்காமல் ஆராதிக்கும் விசுவாசிகளை உருவாக்கி நமது சபைகளை நிறைத்திருக்கிறோம். ஆராதனை வீரர்கள், ஜெப வீரர்கள் என்று பட்டங்கள் கொடுத்து அவர்களை அப்போஸ்தலர்களாகவோ, தீர்க்கதரிசிகளாகவோ, சுவிசேடர்களாவோ உருவாக்கவில்லை. நமது கூட்டங்களுக்கு வந்து தலையாட்டும் பொம்மைகளாகவே மாற்றியிருக்கிறோம். வேதத்தை படிக்க வைத்து அவர்களை சிந்திக்க வைத்து போதகர்களாக மாற்றாமல் நாமே எல்லா ஓய்வு நாட்களிலும் போதகர், டாக்டர் என்ற பட்டங்களில் செய்திகள் கொடுக்க விரும்புகிறோம்.

"நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?"

கசப்பான பழங்களை நாம் உண்டுபண்ணி ஆண்டவரின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறோம்.

இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.

இன்று கோடிக்கோடியாக திராட்சத்தோட்டங்கள் ஆண்டவரின் மெகா தோட்டத்தில் நடப்பட்டிருக்கிறது. அந்த திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை முன்னமே தோட்டக்காரர் அறிவிக்கிறார். அதின் வேலியை எடுத்துப்போடுகிறார், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்த்தெறிகிறார், அது மிதியுண்டுபோம். அதைப் பாழாக்கிவிடுவார்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவார்.

இன்று "எழுப்புதல் தாரும் தேவா" என்று உச்சக்கட்டத்தில் கத்தி வருகிறோம். ஆனால் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் ஆண்டவர் கட்டளையிடுகிறார். இன்று நமது ஊழியங்களின் மேல் மழை பெய்யாமலிருக்கிறது. ஜெபிக்கிறோம். ஆனால் எழுப்புதல் வரவில்லை.

நமது செடிகளின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் இருக்கிறது. நமது தோட்டம் நல்ல கனிகள் கொடுக்கவேண்டுமானால், செடிகளின் கிளைகள் நறுக்கப்படவேண்டும். இன்று கிளைகள் நறுக்கப்படாத பெரிய ஊழியங்களை ஆண்டவர் நியாயம் விசாரித்து வருகின்றார். ஊழியங்களிலும் தனிப்பட்ட வாழ்க்கைகளிலும் களைகள் பெருகிவிட்டன. களைகளை எடுக்கும் தீர்க்கத்தரசிகளை கல்லெறிகின்றோம்.

ஜாக்கிரதை! கர்த்தர் வேலியை எடுத்துப்போட்டால், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்த்தால் , அது மிதியுண்டுபோம்.

சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவின் சரீரமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று இந்த சரீரத்தில் அங்கமாகயிருக்கும் தேவ மக்களே!

"அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு".

"தாங்கள்மாத்திரம் தேசத்தின்நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!"

கிராமத்திலும் கிறிஸ்துவை அறியாத இடங்களில் பலவிதமான இன்னல்களுடன் ஊழியம் செய்துவரும் ஊழியர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், இன்று அநேக தேவ ஊழியர்கள் கிறிஸ்தவ உலகத்தில் தங்களுக்கென்று சாம்ராஜ்ஜியங்களை கட்டி வருகிறார்கள். இன்று தேவமக்கள் தங்களது பொருளுதவிகளை இந்த பிரபலமான ஊழியங்களுத்தான் அதிகம் கொடுத்துவருகிறார்கள். அந்த பிரபலமான ஊழியர்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகள்தான் லாசரு போன்ற ஊழியர்கள் உண்டுவருகிறார்கள். Marketing மூலம் இந்த பிரபலமான ஊழியர்கள் வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்கள். இவர்களுக்கு ஐயோ!

"சேனைகளின் கர்த்தர் என் செவிகேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்". இதுதான் பரிசுத்தாவியானவர் கொடுக்கும் எச்சரிப்பு!

இன்று அநேக ஊழியங்களின் நிலங்கள் தேவன் விரும்புமளவு பலனை கொடுக்காமலிருக்கிறது. ஆவிக்குரிய தேவ வசனத்தின் பஞ்சம் உண்டாகியிருக்கிறது. ஆண்டவரின் சித்தத்தின்படி செய்யாத ஊழியங்கள் தேவன் எதிர்பார்த்த படி பலன்கள் கொடுக்காமலிருக்கிறது. மக்கள் சத்தியங்களை அறிந்துக்கொள்ளாமல் அற்புதங்களையும் தெய்வீக சுகத்தை மாத்திரம் பெற்று செல்கின்றனர்.


Next...எழுப்புதலின் விளைவுகள்...Isaiah part1