தீர்க்கதரிசன ஆறுதலின் புத்தகம்

ஏசாயா 54ம் அதிகாரம் ஒரு தீர்க்கதரிசன ஆறுதலின் புத்தகம். ஒரு சோர்ந்துபோய் நம்பிக்கையிழந்து நிற்கும் ஒரு தேவபிள்ளையிடம் தேவன் நேரிடையாக பேசி வாக்குத்தத்தை உறுதி படுத்துகிறார்.

 

"பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்". "பிள்ளைபெறாத மலடியே" என்றால் வாழ்க்கையில் அநேக வருடங்களாக ஆண்டவரின் வாக்குத்தத்தத்திற்காக காத்து நின்று எதுவும் நடக்காமல், அவமானப்பட்டு, தன்னை யாருக்கும் காட்டிக்கொள்ளாமல்  வனாந்தரமான வாழ்க்கையில் ஒளிந்துகொண்டிருக்கும், தேவனை நேசிக்கும்  ஒரு தேவ மனிதன்.  "கர்ப்பவேதனைப்படாதவளே" என்றால் தனக்கு வரும் ஏமாற்றங்கள், அவமானங்களை சகித்துக்கொண்டு, யாரிடமுமே சொல்லிமுறையிடாமல் ஆண்டவரை மாத்திரம் நம்பிக்கொண்டிருக்கும், தேவனை நேசிக்கும்  ஒரு தேவ மனிதன். "வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்". அநாத ஸ்திரீயைப்போல இருக்கிற உன்னை தேவன் வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும் அதிகம் ஆசீர்வதிப்பார். உனக்கு தேவன் அளிக்கும் ஆசீர்வாதம் இதற்கு முன்பே யாருக்கும் அளித்ததது கிடையாது. "இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்" (யாத் 34:10). ஆகவே, மகிழ்ந்துபாடு, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்த சத்தமிடு!

 

"உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து". விசுவாசத்தில் நீ இப்போது இருக்கும் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு. ஆண்டவர் உன்னை ஆசிர்வதித்துவிட்டார் என்று நினைத்து உன் மனதில் கற்பனை செய்து தயாராக இரு. அந்த ஆசீர்வாதத்தைப் பெற எந்தெந்த காரியங்களை செய்யவேண்டுமோ அவைகளை செய்துகொள். உன்னை பைத்தியக்காரன் என்று யார்வேண்டுமானாலும் கூறட்டும்.

 

"நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்". உனக்கு கிடைக்கும் ஆசீர்வாதம் ஒரு சாட்சியாக உன் சந்ததியாருக்கு இருக்கும்படி அவைகளை எழுதிவைக்கவேண்டும். உன் சந்ததியார் அநேக மக்களை சுதந்தரித்துக்கொண்டு, அவர்களின் வாழ்க்கையில் பாழாய்க்கிடந்த இடங்களை செப்பனிட்டு, இழந்துபோயிருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரம் கொடுப்பார்கள்.

 

"பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்". நீ வாலிபனாக இருக்கும்போது அநேக தடவைகள் வெட்கமடைந்திருக்கக்கூடும். நீவிதவையைப்போல கைவிடப்பட்ட  ஆசீர்வதிக்கப்படாத நாட்களை இனி நினையாதிருப்பாய். பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை. என்ன ஆறுதலின் தேவன் நம்மோடு இருந்து பயங்கரமான காரியங்களை செய்வதற்கு!

 

"உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்". உன் சிருஷ்டிகரே உன் நாயகர். உன்னை கிறிஸ்துவின் மூலமாக சிருஷ்டிகரே உன் நாயகர். வேறு ஒரு நாயகரும் உனக்கு உண்டாயிருக்கவேண்டாம். அவரின் நாமத்தை சேனைகளின் கர்த்தர் என்று உச்சரிக்கும்போது உன்னை சுற்றிலும் ஒரு தூதர் சேனை கூட்டமே வந்து உனக்கு உதவும்.  இஸ்ரவேலின் பரிசுத்தர் உன்னை பாவத்திலிருந்தும், நோய்களிலிருந்தும், பொல்லாத மனிதர்களிடமிருந்தும் மீட்டு எடுக்கிறார். அவர் இஸ்ரவேலின் தேவன் மாத்திரம் அல்ல. சர்வபூமியின் தேவன்!

 

"கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்". உனது வாழ்க்கையில் இதே போல சூழ்நிலைகள் இருந்தாலும் உன்னைக் கர்த்தர் தம்மிடம் அழைக்கிறார்.

 

"இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்". உனது  வாழ்க்கையில் இமைப்பொழுது தேவன் கைவிடப்பட்ட நேரங்கள் இருக்கலாம். ஆனால் உருக்கமான இரக்கங்களால் உன்னை தம்மிடம் சேர்த்துக்கொண்டிருக்கிறார். மறந்துவிடாதே!

 

"அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்". நீ செய்த பாவத்தினால் உன்மேல் அற்பகாலம் கோபம் கொண்டு தன் முகத்தை இமைப்பொழுது மறைத்துக்கொண்டார். ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குகிறார்.

 

"இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்". உன் வாழ்க்கையில் ஒரு தடவை தான் நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போல வந்திருக்கக்கூடும். ஆனால் இனி உன்மேல் திரும்பி புரண்டுவருவதில்லை என்று தேவன் ஆணையிடுகிறார்.

 

"மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்". இந்த வாக்குத்தத்தை மனப்பாடம் செய்துகொள்.

 

"இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.

 

இதோ, கரிநெருப்பை ஊதி, தன் கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்.

 

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்". உனக்கு விரோதமாக எந்த ஆயுதமோ எந்த மனிதனோ எழும்பி வரமுடியாது .நீ ஆண்டவருக்கு சாட்சியாக வாழும்போது உன்னை யாரும் நீ வேலை பார்க்கும் இடத்தில் நியாயத்தில் எழும்பினால் நீ அவர்களை குற்றப்படுத்துவாய்.