தேவனின் நகரமும் துன்மார்க்கரும் 


 

 

 

தேவன் பாதுகாக்கும் நகரம்

 

இந்த காலத்திலே தேவ மக்கள் எங்கே கூடி வசிக்கிறார்களோ அந்த  இடத்தில் நாம் பாடும் பாட்டாவது "பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார். சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்". நாம் வசிக்கும் நகரத்தையோ தேசத்தையோ குறித்த அக்கறை உள்ளவர்களாக நாம் ஆண்டவரின் தினமும் வேண்டுதல் செய்யவேண்டும். அப்போது தேவன் நம்மை காப்பாற்றும்படி நமது இருப்பிடங்களை பெலனான நகரமாக மாற்றி ஆபத்தோ கொள்ளைநோயோ நம்மை தாக்காதபடி தமது செட்டைகளின் கீழே வைக்கிறார். இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார். இந்த நகரத்தின் திறவுகோல்கள் நமது கைகளில் இருக்கிறது. கிறிஸ்துவின் சத்தியமான சுவிசேஷத்தை பிரசங்கித்து அதை ஏற்றுக்கொண்டு கைக்கொள்ளும் நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களை நாம் தான் திறக்கவேண்டும். வெறும் தலையளவில் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் போதாது. அதை கைக்கொள்ளும் நீதியுள்ள ஜாதியாக மாறவேண்டும். அப்படி மாறி நகரத்திற்குள்ளே பிரவேசிக்கும்போது ஆண்டவர் அவர்களுக்கு இரட்சிப்பையே மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்(1-2)

 

வாயின் அறிக்கையும் ஜெப விண்ணப்பமும்

 

"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்". ஆண்டவரை உறுதியாய்ப்  பற்றிக்கொள்ளும்படியும் நம்பிக்கொள்ளும்படியும் மக்களை வழி நடத்துவோமாக. ஆண்டவரின் குணாதிசயங்களை எடுத்துக்கூறி அவர்மேல் முற்றிலும் நம்பிக்கை வைக்க புத்தி சொல்லவேண்டும். பின்பு நாம் அறிவுரை கூறின மனிதனுக்காக ஆண்டவரை நோக்கி  "நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" என்று ஜெபவிண்ணப்பத்தை ஏறெடுப்போம் (3).

 

"கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்" என்று அறிவுரை கூறவேண்டும். இன்று நம்மையும் நமது சபையும் நமது ஊழியத்தையும் நமது பிரசங்கத்தையும் நம்பும்படி அறிவுரை கூறிவருகிறோம்.

 

அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார், உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார். கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்" என்று அறிவிப்போமாக. பணத்தினாலும், அதிகாரத்தினாலும் இறுமாப்பு அடைந்து உயரத்தில் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் அவர்களது உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார். தங்களையும் தங்களுடைய ஊழியங்களையும் வானத்திற்கு மேலாக உயர்த்தி காட்டும் ஊழியர்களையும் இந்த காலத்தில் கீழே தள்ளுகிறார் (4-6).

 

நீதிமானுடைய பாதையும் தேவனின் நியாயத்தீர்ப்பும் 

 

"நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்". இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்ட நீதிமானின் பாதையை தேவன் செம்மைப்படுத்துகிறார். நாமே நமது பாதையை சுயநீதியாலும் சுய முயற்சியாலும் செம்மைப்படுத்தவே முடியாது. நம்மில் வாசம் செய்யும் நீதிபரராகிய கிறிஸ்துவால் வழி நடத்தப்படவேண்டும்.

 

"கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது".  வேதத்தை, முக்கியமாக தீர்க்கதரிசன ஆகமங்களை  தியானித்து தேவனின் நியாயத்தீர்ப்புகளின் வழியை அறியலாம். நாம் யாராக இருந்தாலும்  ஆண்டவரின் நியாயதீர்ப்பிலிருந்து தப்பமுடியாது. நாம் தைரியமாக அவரின் நியாயத்தீர்ப்புகளின் வழியிலே காத்திருக்கவேண்டும். அவரது நாமமும் அவரை நினைக்கும் நினைவும் நமது ஆத்தும வாஞ்சையாயிருக்கவேண்டும். இந்த புதிய ஏற்பாட்டின் காலத்தில் அவரின் நாமம் நமக்கு ஒரு மறைந்த புதிராக இருக்கவில்லை. அவரை பற்றிய நினைவோ நமக்கு அவரை நன்றாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. 

 

"என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்" நமது   ஆத்துமா அவருடன் எப்போதும் ஐக்கியத்தில் இருக்கின்றது. ஏனென்றால் ஆவியானவர் நம்மில் வாசம் பண்ணுகிறார். ஆண்டவரின் நியாயத்தீர்ப்புகள் தீமை செய்துவரும் மக்கள் மேலும் கொடுங்கோல் ஆட்சி செய்து வரும் நாட்டின் தலைவர்களின் மேல் வெளிப்படும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் (7-9).

 

துன்மார்க்கனின் வழி

 

"துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்". இன்று துன்மார்க்கர்களுக்கு நாமோ அதிகாரிகளோ தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். நீதியை நிலை நாட்டும் இடங்களிலும் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறார்கள்.

 

"கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்". தேவ மக்களான நமக்கு விரோதமாக அவர்கள் தீமை செய்யும்போது தேவன் நம்மேல் வைத்திருக்கும் வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அவர்கள் தேவனுடைய சத்துருக்களாக மாறிவிடுகிறார்கள். தேவனின் அக்கினி  அந்த சத்துருக்களைப் பட்சிக்கும் (10-11)

 

தாழ்மையான இருதயத்தின் விண்ணப்பம் 


"கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே".

 

நமக்கு இந்த உலகம் கொடுக்காத சமாதானத்தைக் கட்டளையிடுகிறார். நாம் கர்த்தரை நம்பி தினமும் வாழும்போது நமது கைகளின் கிரியைகளை நமக்காக நடத்திவருகிறார்.

 

"எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்.

 

அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்".

 

கர்த்தர் அல்லாமல் வேறே ஆண்டவன்மார் யார்? ஆள், பண, அரசியல் செல்வாக்குகள் நம்மை ஆண்டுக்கொண்டு வந்ததா? விக்கிரம் போல பாவித்து வந்த ஊழியர்கள்  நம்மை ஆண்டுக்கொண்டு வந்தார்களா?

 

இந்த ஆண்டவர்கள் நாம் வாசம் பண்ணும் சீயோனில்  "செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்" ஆண்டவர் அவர்களை .சங்கரித்து அழித்துவிட்டார்.

 

"இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தீர்". நம்மை பெருகப்பண்ணினதில் ஆண்டவர் மகிமைப்பட்டார். நமது ஆசிர்வாதத்தின் எல்லையை பெரிதாக்கி ஆசிர்வதித்திருக்கிறார்.  ஆனால் நாம் எப்பொது அவரின் வழிகளை விட்டு போகிறமோ அவர் நம்மை சிறுமைப்படுத்த துவங்குவார்.

 

"கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள்மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள்".  இன்று நடப்பது என்ன? ஆண்டவரின் தண்டனை நம்மேலிருக்கும்போது அவரை வேண்டி நாம் நெருக்கத்தில் அந்தரங்க வேண்டுதல் செய்தோம், ஆனால் அவர் நமது வேண்டுதலைக்  கேட்டு பதிலளித்தபோது அவரை மறந்துவிடுகிறோம்.

 

"கர்த்தாவே, பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு, தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.

 

நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு ரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை". நாம் கர்ப்பவதியைப்போல பேறுகாலம் சமீபித்திருக்கையில் துன்புற்று பிள்ளை பெறாமல் வெறும் காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம். மற்ற மக்களுக்கு தேவன் மூலம் ரட்சிப்பு அடையாமல் நாம் தடுக்கல்லாக இருந்துவருகிறோம் . ஆனால் தேவனது மகா இரக்கத்தால் பூமியின் குடிகள் விழாமல் இருந்து வருகிறார்கள். கிறிஸ்துவின் சபை உலக மக்களின் இரட்சிப்பிற்காக தேவன் விரும்பும் வழியில் செயல்படாமல் போனாலும் தேவன் இந்த உலக மக்களை நேசித்தும் பராமரித்தும் வருகிறார். அநேக மக்களுக்கு ஆண்டவர் இந்த கடைசி காலத்தில் தன்னை அற்புதமான வழிகளில் வெளிப்படுத்திவருகிறார் (12-18).

 

உயிர்த்தெழுதலின் நம்பிக்கையும், தேவனின் நியாயத்தீர்ப்பும்


"மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்". இந்த வாக்குத்தத்தம் ஆண்டவரின் இரண்டாம் வருகையில் நடக்கும். ஏசாயா தீர்க்கன் யேசுவில் மரித்த பரிசுத்தவான்களும் பழைய ஏற்பாட்டின் கீழே தன்னோடு மரித்தவர்களும் ஒன்றாக உயிர்த்தெழுதல் பெறுவார்கள் என கூறுகிறான்

 

"என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்".  ஆண்டவரின் வருகைக்கு முன்பு ஆண்டவரின் கோபம் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மேலும், பின்வாங்கின தேவ மக்கள் மேலும் வரும். இப்போதே வந்துகொண்டிருக்கிறது. கொரானா தோற்று வியாதி வெளியில் உலாவி வந்த மக்களை கொன்றது. இயற்கை சீற்றம், கொடிய விபத்து, கொள்ளை நோய் போன்றவைகள் வந்துகொண்டே இருக்கும். நாம் நமது அறைகளின்  அந்தரங்கத்தில் கதவுகளைப் பூட்டி கொஞ்சநேரம் ஒளித்துக்கொண்டு ஜெபம் பண்ணவேண்டும். இது தேவ மக்களுக்கு கொஞ்சநேரம் தான்இந்த உலக மக்களுக்கு ஒரு நீண்டிய காலமாக இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சநேரம் தான். உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு இடைவெளி உண்டு. நமது பாதுகாப்பு நம்மை ஒளித்துக்கொள்வதின் மூலம் தான்  சுவிசேஷத்தை பிரசிங்கிக்காமல் ஒளிந்து கொள்வது அல்ல.


தனி அந்தரங்க ஜெபங்களில் நேரம் செலவழித்து ஆண்டவரோடு ஐக்கியம் வைத்துக்கொள்ளவேண்டும்.

 

"இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்".  இந்த உலக மக்களை  "அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்". ஆண்டவரின் பிள்ளைகளான நம்மில் ஆண்டவர் பரிசுத்தாவியானவர் மூலமாக நம்மில் திரியேக தேவனாக குடியேறி விட்டார்இப்போதே அவரின் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது கடைசி காலங்களில் அவரின் நியாயத்தீர்ப்பு அதிகரித்துக்கொண்டேயிருக்கும். இரண்டாம் வருகைக்குப்பின்பு இந்த நியாயத்தீர்ப்பு முடிவு பெறும் (19-21).