தேவனின் நியாயத்தீர்ப்பும், இரட்சிப்பும்

ஏசாயா 63ம் புத்தகம் தேவனின் நியாயத்தீர்ப்பைக்குறித்து வெளிப்படுத்துகின்றது.  நியாயத்தீர்ப்பிலிருந்து எப்படி தப்பி மறுபடியும் அவரின் இரக்கத்தையும் தயவையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறியலாம்.

 

"ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே".


ஏதோம் என்ற தேசம் தேவனால் வெறுக்கப்பட்டு நியாயத்தீர்ப்பிற்காக நியமிக்கப்பட்ட இடம். போஸ்றா பட்டணம் அந்த தேசத்தின் தலைநகரம். இந்த நியாயத்தீர்ப்பை செய்பவர் குமாரனாகிய இயேசுக் கிறிஸ்து. அக்கிரம், அநீதி, பாவம் செய்துவரும் தேவமக்கள், மனம் திரும்பாமல் இருக்கும்போது, குமாரன் அவர்களை தண்டிக்க மகத்தான வல்லமையிலே எழுந்தருளுகிறார்.  இவர் யார் என்று தீர்க்கன் நம்மிடம் கேட்கிறார். கருணை வடிவமான கிருபையால் நிறைந்த இயேசு நம்மை நியாயம் தீர்ப்பாரா? ஆமாம்.

 

"உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்ன?

 

நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.

 

நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது". நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன் என்று குமாரன் உரைக்கிறார். திராட்ச தோட்டத்தின் ஆலையை மிதிக்கும்போது  திராட்சை ரசம் உருவாக்கப்படுகிறது. "என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு". "அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது....நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?

 

இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம் (ஏசாயா 5:5).  திராட்சத்தோட்டம் என்பது தேவமக்களின் கூடாரம். "என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்". சரீர பிரகாரம் தேவன் தனது மக்களை கொன்று குவிக்கிறார் என்று நாம் எண்ணக்கூடாது. தேவனது கோபம், கல்வாரி அன்பை விட்டு விலகிப்போய் ஒரு கட்டுக்குள் கட்டப்பட்டு தங்களை அழித்துக்கொள்ளும் மக்களின் மேல் வெளிப்படுகின்றது. ஆகவே இந்த கடைசி காலத்தில் எச்சரிப்புடன் இருந்து எந்தவிதமான தேவ வார்த்தைக்கு விரோதமாக செயல்படும் சபையுடனோ, ஐக்கியத்துடனோ இணைந்து இருக்கக்கூடாது. குமாரன் நம்மை நியாயம் தீர்க்கும்போது ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு மரணம் உண்டாகும். அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, “என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்”. தீர்க்கதரிசன புத்தகத்தில் இந்தவிதமான ஆவிக்குரிய மரணத்தை இவ்விதம் தீர்க்கதரிசி பயங்கரமான வார்த்தைகளால் வர்ணிக்கிறார். இதுதான் தீர்க்கதரிசன புத்தகத்தின் அருமை. 

 

"நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது". குமாரன் நாம் செய்யும் பாவங்களை நிவர்த்தி செய்து நீதியைச் சரிக்கட்டும் ஒரு நாளை குறித்துவைத்திருக்கிறார். நாம் அவருடைய சொந்த ஜனங்கள். நம்மை மீட்கும் படி ஒரு காலத்தை குறித்துவைத்திருக்கிறார். நம்மை பாவத்திலே கைவிட்டுவிட்டு போகும் தேவன் அல்ல அவர். நம்மை இரட்சிக்கும் தேவன்.

 

"நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று". நம்மைக்  காணும் தேவன். நமக்கு இந்த உலகத்தில் துணைசெய்வார் ஒருவருமில்லை. தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்படுகிறார். ஆசாரியர்களோ, தீர்க்கத்தரசிகளோ உங்களை கைவிட்டுவிடுவார்கள். இன்று நடப்பது என்ன. தேவமக்கள் போதகர்கள், தீர்க்கத்தரசிகள் உங்களை வழிநடத்துவார்கள் என்று தேவனை முழு இருதயத்துடன் தேடாமல் இருக்கும்போது தேவனே உங்களைத் தேடி வந்து இரட்சிக்கிறார். அவரின் கரம் உங்களை இரட்சிக்கும். சாத்தானின் மேலேயுள்ள அவரின் சினம் உங்களை அவனுடைய கைகளிலிருந்து இரட்சிக்கிறது.

 

"நான் என் கோபத்திலே ஜனங்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கப்பண்ணினேன்". நாம் பாவம் செய்து அவரைவிட்டு வழிவிலகும்போது தேவன் தனது கோபத்தினால் மேலே கூறியபடி நம்மை தண்டிக்கிறார்.

 

"கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.

 

அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனைசெய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி அவர்களுக்கு இரட்சகரானார்". நமக்கு தேவன் செய்யும் மகா நன்மைகள் கொஞ்சநஞ்சம் அல்ல. அவரின் திரளான தயவுகளிள் திரளானது. நாம் அவருடைய  கிரியைகளையும், துதிகளையும் சாட்சியாக அறிவிக்கவேண்டும். அவர் செய்த பழைய நன்மைகளை எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

 

"அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.

 

அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்". இஸ்ரவேல் மக்கள் பார்வோனால் நெருக்கப்படும்போது குமாரன் நெருக்கப்பட்டார். குமாரன் பிதாவின் சமுகத்தின் தூதனானாக மாறி இஸ்ரவேல் ஜனங்களை இரட்சித்தார். இன்றும் நாம் இந்த உலகத்தின் சத்துருக்களால் நெருக்கும்படும்போது கிறிஸ்துதானே நெருக்கப்படுகிறார். நம்மை காப்பாற்றும்படி ஒரு வல்லமையுள்ள தேவதூதன் போல செயல்படுகிறார். தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் நம்மை மீட்டு, பூர்வநாட்கல் முதல் இந்நாள்வரை நம்மைத் தூக்கிச் சுமந்துவருகிறார். இன்றும் உங்களை தூக்கிச் சுமந்துவருகிறார். அவரின் தோள்களின் மேல் நீங்கள் சவாரி செய்து வருவதை நீங்கள் தீர்க்கதரிசன கண்களின் மூலம் காணலாம். இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்திலே கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினதுபோல நீங்களும் கலகம் பண்ணினால் அவர்உங்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே உங்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவார். இன்று உங்களது  வாழ்க்கையில் நோய், துன்பங்கள், தோல்விகள் வருவதின் காரணம் நீங்கள் அவரை வனாந்தரத்தில் சோதித்து, அவரை முழு இதயத்தோடு விசுவாசியாமல், இச்சைகளுக்கு அடிமைகளாகி பரிசுத்த ஆவியானவரை  விசனப்படுத்திவருகிறீர்கள். அவர்உங்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே உங்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணிவருகிறார். ஜாக்கிரதை.

 

"ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?.

 

அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக்கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,

 

ஒரு குதிரை வனாந்தரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே?.

 

கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறப்பண்ணினார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள கீர்த்தியை உண்டாக்கும்படி உம்முடைய ஜனத்தை நடத்தினீர்.

 

தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?

 

தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.

 

கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.

 

பரிசுத்தமுள்ள உமது ஜனங்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் சத்துருக்கள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள்.

 

நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை".


மேல்கண்ட வசனங்களில் எப்படி இஸ்ரவேல் மக்கள் தேவனின் மகத்துவத்தை சாட்சியாக கூறி தேவனை தங்கள் மேல் கிருபை கூர்ந்து "தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?

 

தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.

 

கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்" என்று நீங்கள் வேண்டும்போது தேவன் உங்கள் சிறையிருப்பை மாற்றுவார்.