சீயோனில் தேவமக்களுக்கான மகத்தான ஆசிர்வாதங்கள் 

ஏசாயா 55ம் அதிகாரம் தேவமக்களுக்கான விசேஷ ஆசீர்வாதங்களை வெளிப்படுத்துகிறது.

 

"ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.

 

நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்". பணம், மனித செல்வாக்கு இல்லாத நமக்கு பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் ஆண்டவரிடமிருந்து தாராளமாகப்பெறலாம். நமது இருதயத்தின் வாஞ்சைகளையும், ஏக்கங்களையும் தேவன் நன்கு அறிவார். நமது தேவையான உலகப்பிரகானமான ஆசீர்வாதங்களை காத்திருந்து தேவனை முற்றிலும் நம்பி பெறலாம். அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிக்கவேண்டாம். அப்பம் என்றால் நமது சரீரத்திற்கு வேண்டிய காரியங்கள். ஆடம்பர, உல்லாச வாழ்க்கையை தவிர நமக்கு இந்த உலகத்தில் ஆண்டவர் அநேக ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். வேலையில் உயர்வு, அரசாங்க ஆளுமையில் நமக்குரிய பங்கு போன்ற ஆசீர்வாதங்களை நாம் தேவன் மூலம் பெறலாம். ஆண்டவருக்கு கவனமாய்ச் செவிகொடுத்து உங்களுக்கு என்ன ஆசீர்வாதத்தை கொடுக்க சித்தமாயிருக்கிறார் என்பதை உறுதிசெய்துகொள்ளவும். உங்களின் திறனுக்கு ஏற்ற உயர்ந்த, நலமான பதவியை ஆண்டவர் தருவார். காத்திருந்து பெற்றுக்கொள்ளவும். அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.

 

"உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உஙகள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்". தாவீதை ராஜாவாக்கிய இஸ்ரவேலின் தேவன் நம்மோடு இருக்கிறார். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை குப்பையிலிருந்து தூக்கியெடுத்து ராஜாக்களோடும் பிரபுக்களோடும் உட்கார செய்தார். நாம் தாவீதின் வம்சத்திலிருந்து வந்தவர்கள். உங்கள் செவியைச் சாய்த்து ஆண்டவரிடம் வாருங்கள், கேளுங்கள். கேளுங்கள் கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். உங்களை தேவன் ஆசீர்வதிக்கும்போது உஙகள் ஆத்துமா செழிக்கும்.

 

"இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்". தாவீதை எப்படி ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினாரோ அப்படியே நம்மையும் ஆசீர்வதிப்பார்.

 

"இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைபடுத்தியிருக்கிறார்". நாம் அறியாத மக்கள் நமக்கு சேவை செய்வார்கள். தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் அவர்கள் நம்மிடம் ஓடிவருவார்கள். யேசு கிறிஸ்துவின் நாமத்தை தரித்த மக்களாகிய நம்மை தேவன் "மேன்மைபடுத்தியிருக்கிறார்". தீர்க்கதரிசனத்தில் இது முடிந்துபோன காரியம்.

 

"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்". புதிய ஏற்பாட்டில் தேவன் நமக்கு சமீபமாயிருக்கிறார். அவரிடம் நமது உள்ளத்தை ஊற்றிவிடவேண்டும்.

 

"துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்".  யேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு துன்மார்க்கமாக வாழும் மக்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டு திரும்பவேண்டும். அவர்கள் அக்கிரமக்கார சிந்தனைகளோடு இருந்தால் மனம்திரும்பி கர்த்தரிடத்தில் திரும்பக்கடவார்கள். மனதுருகுவார். பழைய ஏற்பாட்டின் காலத்திலே மனதுருகும் தேவன் இப்போது புதிய ஏற்பாட்டின் கீழே இயேசுவின் ரத்தத்தின் மூலம் நமக்கு எப்படி மனதுருகுவார்! 

 

"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது". ஆண்டவரின் திட்டமும் நம்மைக்குறித்த நினைவுகள், பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே நமது  வழிகளைப்பார்க்கிலும், நினைவுகளைப்பார்க்கிலும் உயர்ந்திருக்கிறது. நாம் நினைப்பதைப்பார்க்கிலும் ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். நாம் போக நினைக்கும் வழியைப்பார்க்கிலும் அவர் நமக்கு ஆயத்தம் பண்ணிவைத்திருக்கும் வழிகள் மகத்தானவைகள். காத்திருந்து அவரின் திட்டங்களையும் வழிகளையும் அறிந்துக்கொள்வோம்.

 

"மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்". ஆண்டவரின் வாயிலிருந்து வந்த தீர்க்கதரிசன வசனங்கள் வெறுமையாய் தேவனிடத்தில் திரும்பாமல், அவர் விரும்புகிறதைச்செய்து, அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். உதாரணமாக, மழை வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்கிறது. மழை பெய்யும்போது இந்த தீர்க்கதரிசன வாக்கை நினைத்துக்கொள்ளவும்.

 

"நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.

 

முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்".  உங்களுக்கு ஆண்டவர் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும்போது நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும். உங்கள் வாழ்க்கையிலுள்ள முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும். ஆண்டவரின் ஆசிர்வாதம் இயற்கையோடு இணைந்து நிற்கிறது. இயற்கையே பூரித்து நிற்கும். இதை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது.