பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து சியோனின் மீட்பு

ஏசாயா 52ம் அதிகாரம் சீயோனைக் குறித்துதெளிவாக வெளிப்படுத்துகிறது.

 

"எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

 

தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு" இயேசுவின் ரத்தத்தின் மூலம் பாவ அடிமை தேசமாகிய எகிப்து நாட்டிலிருந்து மீட்கப்பட்டும், மறுபடியும் கள்ள போதகர்களால் பாபிலோனிய மதத்திற்கு அடிமைப்பட்டு சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்திகளுக்காக எழுதப்பட்ட அதிகாரம் இது. எழும்பு, எழும்பு, சீயோனே, உன்னிடம் இப்போது சாத்தானை ஜெயிக்கும்படி வல்லமை இல்லை. ஏனென்றால் அந்திக்கிறிஸ்துவின் ஆவியால் நடத்தப்பட்டு வருகிறாய். எழும்பு என்று இரண்டுதரம் எழுதப்பட்டிருக்கிறது. வல்லமையைத் தரித்துக்கொள்ள மறுபடியும் கல்வாரியின் அண்டை போ. நீ இன்னும் பரிசுத்த நகரமாகிய எருசலேம் தான். உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள். உன்னை ஏமாற்றும்படி விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் வருவதில்லை. கிறிஸ்துவின் சிலுவை உபதேசத்தால் இருதயத்தில் விருத்தசேதனம் செய்யாத எந்த பிரசங்கியும் உன்னிடம் வர இடம்கொடாதே. உலகத்தை தகாத முறையில் அனுபவிக்கும் எந்த ஊழியரின் செய்திக்கும் இடம் கொடுத்து உன்னிடம் எந்த அசுத்தனும் வரவிடாதே. துர் உபதேசமான தூசியை உதறிவிட்டு எழுந்திரு. கிறிஸ்துவோடு உன்னதத்தில் வீற்றிரு.


சீயோனின் குமாரத்திகள் என்று ஏன் எழுதப்பட்டிருக்கிறது? சீயோனின் குமாரர்கள் என்று எழுதப்படவில்லை. குமாரத்திகள் என்று கூறும்போது ஒரு அடக்கமாக, அமைதியாக வாழும் மக்கள் என்ற அர்த்தத்தில் அறியவேண்டும். சீயோனின் வாசம் செய்யும் மக்கள் இவ்வித பெண்களின் பண்புகளை கொண்டவர்கள்.


"விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" பாபிலோனிய மதத்தின் உபதேசத்தால் நீங்கள் விலையின்றி விற்கப்பட்டீர்கள். பாபிலோனிய மதத்தின் அடித்தளம் புகழ்/கீர்த்தி, அகந்தை/ஆணவம், பணம்/செல்வாக்கு, போன்றவைகளாகும். நீங்கள் சத்தியத்தை அறியும்போது பணமின்றி மீட்கப்படுவீர்கள்.

 

"இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" . நீங்கள் உங்களுக்கு தேவன் அருளிய வேதத்தை தியானியாமலும், உங்களில் வாசமாயிருக்கும் பரிசுத்தாவியானவரின் மெல்லிய குரலை கேட்க மனதில்லாமல். எங்கேயோ ஓடிப்போயோ, அல்லது உங்கள் சபையின் போதகத்தை  நிதானித்து  அறியாததினாலோ  விருதாவாய் பாபிலோனுக்குக்  கொண்டுபோகப்பட்டீர்கள். உங்களை ஆளும் கள்ள தீர்க்கத்தரசிகள் உங்களை அலறப்பண்ணுகிறார்கள். சுவிஷேத்தில் அறிவிக்கப்பட்ட யேசுகிறிஸ்துவை தவிர, வேறு ஒரு போலிக் கிறிஸ்துவை நீங்கள் ஏற்றுக்கொண்டு அலறிவருகிறீர்கள். உங்களின் ஜெபம் கேட்கப்படவில்லை. எதெற்கெடுத்தாலும் உங்களின் போதகரிடம் குறி கேட்க ஓடிப் போய், உங்களிடம் வாசமாயிருக்கும் பரிசுத்தாவியானவரை அவித்துப்  போடாதிருங்கள். இந்த கள்ள போதகர்களால் வேதத்திற்கு புறம்பாக உங்களுக்கு கிடைக்கும் "பரலோக" தரிசனங்கள் உங்களை விருதாவாய் பாபிலோனுக்கு கொண்டுச் செல்கிறது. தேவனின் உண்மையான நாமத்தை அறிந்துக்கொள்ளவேண்டும். "இதைச் சொல்லுகிறவர் நானே என்று" ஒரு காலத்திலே நீங்கள் அறிவீர்கள்.  அப்போது உங்கள் கண்கள் திறக்கப்பட்டு, "இதோ, இங்கே இருக்கிறேன்" என்று கர்த்தர் சொல்லுவதை உங்கள் காதுகளால் கேட்பீர்கள்.

 

"சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன". சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகம் என்றால் என்ன? சீயோனின் மக்கள் தங்களுக்கு கிடைத்த இரட்சிப்பை மறந்துவிடக்கூடாது. தேவன் செய்துவரும் அநேக நற்காரியங்களை வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தில் நடக்கும் காரியங்களை கேட்டு தேவமக்கள் தங்கள் சமாதானத்தை இழக்கக்கூடும். இஸ்ரவேலின் தேவன் தேவமக்களை எச்சரித்து நடத்திவந்த நற்காரியங்களை போதகர்கள் தேவமக்களுக்கு அறிவித்து அவர்களின் பயத்தை போக்கி, இரட்சிப்பை உறுதிப்படுத்தவேண்டும். "உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று" அவர்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டும். அவர்களின் ராஜாவாகிய  இஸ்ரவேலின் தேவன் தான் இந்த உலகில் ராஜரிகம் செய்துவருகிறார். இந்த சத்தியத்தை அநேக தேவமக்கள் அறியாமல் இருப்பதினால், மனிதர்களை நம்பி, அநேக ஆசீர்வாதங்களை இழந்துவிடுகிறார்கள். இந்த சுவிசேஷத்தை அறிவித்துவரும் நற்செய்தி போதகர்களின் பாதங்கள் மலைகளின் மேல் அழகாக இருக்கிறது. தேவன் இவர்களின் பாதங்களை உன்னதமான இடங்களில் வைத்து கனம் பண்ணுகிறார்.

 

"உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள்". பாபிலோனிய மதத்தில் சிறைபட்டுப்போன மக்களை மீட்டு அவர்களை சீயோனுக்கு திரும்பிவரப்பண்ணும்போது, எச்சரிக்கும் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கும். இந்த ஜாமக்காரர்களாகிய தீர்க்கத்தரசிகளின் செய்தியின் மூலம் பாபிலோனிய அரசனின் சிறையிருப்பிலிருந்து சீயோனின் மக்கள் மீட்கப்படுகிறார்கள். அந்திக்கிறிஸ்துவின் ஆளுகையிலிருந்து மீட்கப்படும் தேவமக்கள். இவர்கள் தான் சீயோனுக்கு நற்செய்தி அறிவிக்கும் சுவிஷேகர்கள். பாபிலோனிய அரசனால் ஆளப்படும்போது தேவனை நன்றாக அறிந்துகொள்ளாமல் இருந்தார்கள். ராஜரீகம் பண்ணும் தேவகுமாரனை நன்றாக அறிந்துகொள்ளாமல் இருந்தார்கள். இப்போது அவர்களின் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு உண்மையான சீயோனை கண்ணாரக்காண்பார்கள். அப்போது சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்.

 

"எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்". கர்த்தர் தம்முடைய ஜனங்களை பாபிலோனிய ராஜாவாகிய அந்திகிறிஸ்துவின் ஆளுகையிலிருந்து ஆறுதல்செய்து மீட்டுக்கொள்கிறார். உங்களுடைய தீர்க்கதரிசன கண்கள் இந்த பாபிலோனிய அரசனைக் காணவேண்டும். வேதத்தை ஒரு கோணத்திலிருந்து போதித்து நம்மை வஞ்சித்துவரும் ஒரு பொல்லாத ஆவிகளின் கூட்டத்திற்கு இவன் தலைவன். இப்போது இவன் மாமிசத்தில் வெளியாகவில்லை. 

 

"எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்". கர்த்தராகிய இயேசுவின் பரிசுத்த புயத்தை பிதாவாகிய தேவன் எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்திவருகிறார். பாவத்தை நீக்கி மக்களை இரட்சிக்கும் கிறிஸ்துவின் பரிசுத்த கரத்தின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பை எல்லோரும் காணும்படி சுவிசேஷம் எல்லா இடங்களிலும் பிரசிங்கப்படுகிறது.

 

"புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்". கர்த்தரின் பரிசுத்த பாத்திரங்களைச் சுமந்து சுவிசேஷம் அறிவிப்பவர்களே, பாபிலோனிய நாட்டை விட்டுப் புறப்படுங்கள். புறப்படுங்கள் என்று இரண்டு தரம் எழுதப்பட்டிருக்கிறது. அசுத்தமானதைத் தொடாதிருங்கள். உங்களுடைய வேலை அல்லது தொழில் பார்க்கும் இடங்களிலுள்ள அசுத்தமானதைத் தொடாதிருங்கள். போதகர்கள் ஜனங்களை ஏமாற்றி சம்பாதிக்கும் வழிகளை கைவிடுங்கள். அவைகள் கர்த்தரின் பார்வையில் அசுத்தமானவைகள். உல்லாசமாக வாழும் ஆடம்பர வாழ்க்கையை வெறுத்துவிடுங்கள்.


"நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்". உங்களை பாபிலோனிய நாட்டிலிருந்து மீட்டுக்கொண்டு கர்த்தர் உங்கள் முன்னே போகிறார். நீங்கள் தீவிரித்துப் புறப்பட்டு ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போக அவசியமில்லை. கிறிஸ்துதாமே உங்கள் முன் சென்று சீயோனுக்கு அழைத்து செல்கிறார்.

 

"இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்". பிதாவாகிய தேவன் தன் குமாரனைக்குறித்து சாட்சி சொல்வதாக தீர்க்கதரிசி கூறுகிறார். யேசுகிறிஸ்து சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் ஞானமாய் நடந்தார். அவர் சிலுவையில் உயர்த்தப்பட்டு, இப்போது மேன்மையும் மகா உன்னதமுமாயிருக்கிறார். இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறிவிட்டது.

 

"மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்". சிலுவையின் பாடுகளை கிறிஸ்து அனுபவித்த சம்பவத்தையும் கூறிய இந்த தீர்க்கதரிசனமும் நிறைவேறிவிட்டது. கிறிஸ்து தன் பாடுகளினால் சிந்தின இரத்தத்தால் கிடைத்த விலைமதிக்கப்படாத இரட்சிப்பினால் நாம் சீயோனின் குடிமகன்களாக ஆக்கப்படுகிறோம். 

 

"அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்". இந்த தீர்க்கதரிசனமும் கிறிஸ்துவின் ஊழியத்தைக் குறிக்கிறது. தன் இரட்சிப்பை  அநேகம் ஜாதிகள்மேல் தெளித்துவருகிறார். இந்த உலகத்தின் ராஜாக்கள் தங்கள் வாயை மூடிக்கொள்கிறார்கள். ஒரு பயம் அவர்களை ஆட்கொள்கிறது. தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்கிறார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.