2-MS ன் இளமைக்கால நினைவுகள்
MS Reminiscences by GOWRI ( Thamizh translation by Nithya Arun) PART-5..
.ஒருசமயம், திறமைமிக்க ஓர் இளைஞனின் அரங்கேற்றத்தைத் தொடர்ந்து ஒரு புகழ்பெற்ற சங்கீத வித்வானின் கச்சேரி நடக்கவிருந்தது. அந்த இளைஞன் மிக அற்புதமாகப் பாடினான். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த வித்துவான், கண்களில் நீர் மழ்க அவனை மனதார வாழ்த்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைச் சந்தித்த அவர், "இச்சிறுவனின் அமுத இசை மழையில் நனைந்து மனம் நெகிழ்ந்து போனேன். இப்பொழுது நான் படும் நிலையில் இல்லை. நான் நாளை வந்து எனது கச்சேரியைத் தொடர விரும்புகிறேன்." என்றுரைத்துத் திரும்பிச் சென்றார். அவரின் பெருந்தன்மையையும், தாழ்மையையும் உங்களால் உணர முடிகிறதா? இசையின்மீது அவருக்கிருந்த ஈடுபாடு தன்னிலை மறக்கச் செய்தது.
எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சங்கீத வித்வான்கள் அவ்வப்பொழுது பாடுவதும், அவர்களது வாத்தியங்களை வாசிப்பதும் வழக்கமான ஒன்று. அவர்கள் என் தாய் தலையசைத்து ரசிப்பதைப் பெரும் கௌரவமாகக் கருதினர். என் தாயின் வீணை வாசிப்பில் அவர்கள் லயித்துப் போகும் சம்பவங்களும் அவ்வப்பொழுது நிகழ்வதுண்டு. சில சமயங்களில், வரும் இசைமேதைகள் எனைப் பாடச் சொல்லிக் கேட்பதோடு ஒருசில பாடல்களைக் கற்றும் தருவார்கள். அந்நாட்களில் பாராட்டுக்கள் என்பது எளிதில் கிடைக்கப் பெறுவதன்று. அவர்கள் சற்றேனும் தலையசைத்தால், அது ஒப்பிலா பாராட்டுதலையே குறிக்கும். 'இன்னும் சிறப்பாகச் செய் ' எனும் ஒற்றைவரி உயர் தரநிலையை நாம் அடைந்து விட்டதையேக் குறிக்கும்.
உள்ளூர் இசைப்பிரியர்களும் மரியாதை நிமித்தம் அம்மாவை அடிக்கடிப் பார்த்துச் செல்வார்கள். கோவிலில் இருந்து உட்சவமூர்த்தி வீதிஉலா வரும்போதெல்லாம், முன்வரிசையில் நாயனம் வாசித்து வருபவர்கள் எங்கள் வீடிருக்கும் சிறுதெரு பிரியுமிடத்தில் சற்றுநேரம் நின்று, தங்களின் சிறப்பான வாசிப்பை நிகழ்த்தத் தவறுவதில்லை. நான் ஓடிச்சென்று ஆர்வமுடன் பார்த்த அந்தக் காட்சிகளும் இசையும் எனை மெய் மறக்கச் செய்வன. சொக்கநாதரும் மீனாட்சியும் பட்டுடித்தி பொன்னாலும், பூவாலும் அலங்கரித்திருப்பதைக் காணக் கண்கோடி வேண்டும். கம்பீரமான மெல்லிய நாதஸ்வர இசையும் தனித் தவிலும் ஒருங்கே முழங்க ஓங்கி ஓதப்படும் வேத ஒலி உள்ளம் முழுவதும் வியாபித்து நிறையும். அத்தகு இசையனுபவங்கள் எல்லாம் காலத்தின் பெருங்கடலில் கரைந்து போய்விட்டதென்றே நான் உணர்கிறேன்.
வீணை வாசிப்பாளர்கள் பலரும் அம்மாவின் கவனத்தை ஈர்ப்பதில் பெரும் முனைப்பு காட்டினார்கள். ஒருமுறை அவ்வாறு வாசித்துக் காட்ட ஒரு நபர் வந்திருந்தார். எவ்வாறென்று அறியவில்லை, ஆனால் நானும் சக்தியும் அவர் வாசிப்பு மோசமாக இருக்கப் போகிறது என்று நினைத்தோம். எங்களின் யூகிப்பு தப்பாகவில்லை. வீணை மிகவும் மென்மையானதொரு வாத்தியக் கருவி. அதை மீட்டும்பொழுது மிருதுவாகக் கையாள வேண்டும். ஆனால் அவரோ அதை மிகக் கொடூரமாகக் கையாண்டார். எல்லாவற்றிற்கும் உச்சமாக இருந்தது அவர் தேர்வு செய்திருந்த ராகம். மிகவும் பழமையான உயிரோட்டமிக்க சஹானா ராகத்தில் 'ராக்ஷஸ பீமா' எனும் வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப வாசித்துக் கொண்டிருந்தார். நீங்களே கற்பனை செய்து பாருங்கள், வீணை வாசிக்கத் தெரியாத ஒருவர் கணக்கொடூரமாய் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் வாசிப்பாராயின் எவ்வாறு இருந்திருக்குமென்று. நான் பெரும் முயற்சி எடுத்து வந்த சிரிப்பைத் தொண்டைக் குழியில் அடக்கி நின்றேன். வடிவா மற்றும் சக்தியின் நிலைமையோ இன்னும் மோசமாய் இருந்தது. அம்மா எங்கள் மூவரையும் செய்வதறியாது வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார்.
ஆனால் வீணையின் நாண் கீச்சிட்டு, அறுபட்டு சுருண்ட கணம் எவ்வாறு எங்கள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியும். நாங்கள் அனைவரும் வெடித்து வயிறு வலிக்க சிரிக்கத் தொடங்க, அம்மா ஒருவழியாக நிலைமையை சமாளித்து அவரை வழியனுப்பி வைத்தார்.
மற்றொரு சமயத்தில் வேறொருவர் எங்களுக்காக ஜலதரங்கம் வாசித்துக் காட்ட வந்திருந்தார். ('ஜலம்' என்றால் தண்ணீர், 'தரங்கம்' என்றால் அலை) வெவ்வேறு அளவுகளில் தண்ணீர் நிரப்பப்பட்டச் சீனப் பீங்கான் கிண்ணங்கள் வாத்தியக் கருவியாகப் பயன்படுத்தப் பட்டன. அவர் இரு குச்சிகளால் அக்கிண்ணங்களைத் தட்டத் தொடங்க அருமையான தண்ணீர் இசை சிறு மணிகளின் சிணுங்களாக சிதறி எழும்பியது.
இவையல்லாது வானொலி இசையையும் நான் பரிட்சயப் படுத்திக் கொண்டேன். நாங்கள் எங்களுக்கென வானொலி ஏதும் பெற்றிருக்கவில்லை. ஆனால் எங்கள் வீட்டு மாடிப் படிக்கட்டுகளின் மத்தியில் இருந்த ஜன்னலின் அருகில் அமர்ந்தால் அண்டை வீட்டு வானொலியைத் தெளிவாகக் கேட்கலாம். அதன்வழியே தான் ஹிந்துஸ்தானி இசை எனக்கு அறிமுகமானது. அப்துல் கரீம் கான், அமீர் கான் மற்றும் பாலுஸ்கர் ஆகியோரின் இனிய குரல் ஹிந்துஸ்தானி இசையில் அவ்விரவுகளின் அமைதியில் மோகனமாய் ஒலிக்கும். தெற்கத்தியவர்களுக்கு ஹிந்துஸ்தானி இசையொன்றும் அனுபவப் படாததன்று. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் அதன் சுவையை இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலப் படுத்தி இருந்தார்கள். நான் ஹிந்துஸ்தானி இசையை பண்டிட் நாராயண ராவ் வியாஸ் என்பவரிடம் இருந்து சிறிது காலம் கற்றறிந்தேன். நான் வளர்ந்த பிறகு மீரா திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இது மிகவும் உபயோகமாய் இருந்தது. மேலும் மீராபாய் பாடல்களைப் பாடும் வாய்ப்பையும் பெற்று தந்தது. 'ஷ்யாம சுந்தர மதன மோஹனா' எனும் பாடல் பண்டிட் வியாஸ் கற்பித்தப் பாடல்களில் ஒன்று. பிற்காலத்தில் முன்ஷி ப்ரேம்சந்த் என்பவர் இயற்றிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட சேவ சதன் எனும் திரைப்படத்தில் நான் இப்பாடலைப் பாடியபொழுது மக்களிடையே அது பெரும் வரவேற்பைப் பெற்றது.
to be continuesd